Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 12

அத்தியாயம் – 12

 

யார் மனதில் என்னவென்று யாருக்குத் தெரியும்

எந்தக் கதையில் என்ன திருப்பமோ யாருக்குத் தெரியும்

இந்தப் பயணம் எங்கு முடியுமென்று யாருக்குத் தெரியும்

இது பாட்டா பேச்சா என்று இதழ்களுக்குத் தெரியுமா?

இல்லை கிடைக்கப் போவது உறக்கமா கண்ணீரா என்று கண்களுக்குத்தான்  தெரியுமா?

 

பாரியின் கண்கள் லல்லியின் பார்வையைக் கவ்வியிருந்தது.

மனசு தடுமாறும், அது நெனைச்சா நிறம் மாறும் என்பது இவர்கள் விஷயத்தில் சரிதான். மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போட்டது. அந்தத் தயக்கத்தை  உடைக்க இருவருக்கும் தயக்கம்.

 

“பாரி… “ கண்களை அவனிடமிருந்து விலக்க முடியாது திணறியவண்ணம் அழைத்தாள்.

 

“சொல்லு லல்லி…” குளிர் காற்றைப் பொருட்படுத்தாமல், பார்வையை அவளிடமிருந்து விலக்காமல் கேட்டான்.

 

“உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன் என்னைத் தப்பா நினைக்காம உண்மையை சொல்லணும்”

 

“இந்த நிமிஷம் நீ என்ன சொன்னாலும் கேட்பேன்… என்ன கேட்டாலும் தருவேன்”

 

அவனது கண்களைப் பார்த்தவாறே காரில் சாய்ந்து கொண்டாள் மெதுவாகக் கண்களை மூடினாள்.  சற்றே நகர்ந்தவனிடம்

 

“தள்ளிப் போகாதிங்க பாரி. முடிஞ்சா இன்னும் பக்கத்தில் வாங்க” என்றாள்.

 

முன்பு செய்ததைப் போன்றே தனது சுற்றுப்புறத்தை அப்படியே உள்வாங்கத் துவங்கினாள்.

 

முதலில் தடுமாறிய அவளது உணர்வுகள் பின்னர் சீரானத்தை அவளது மூச்சுக் காற்று உணர்த்தியது. தன்னை ஒரு சக்திவாய்ந்த காந்தமாக மனதில் உருவகித்துக் கொண்டாள். அவளுள்ளிருந்து பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் அலைகள் சுற்றிலும் பரவி அருகிலிருந்த பாரியின் மனதை ஊடுருவி அவனே அறியாத அவனை சுற்றிப் படர்ந்திருந்த எண்ணக் குவியலில் குதித்தாள். பாண்டிய நாட்டில் கொற்கை முத்தினை தேடி துறைமுகத்தில் முத்துக் குளிப்பவனைப் போன்ற லாவகத்துடன் அவளது மனப் பயணம் இருந்தது.

 

அவளது எண்ணம் பற்றி அறியாத பாரி தடை ஏதுமின்றி அவளை தைரியமாக உற்றுப் பார்க்கத் தொடங்கியிருந்தான்.

 

வச்ச கண்ணு வாங்காம பார்ப்பது என்று கிராமத்தில் சொல்வதைப் போல இமைக்க மறந்து அவளையே பார்த்தான். ஆசை படத்து நாயகியைப் போல ஒரு வட்டமான குழந்தைத்தனமான முகம். அமைதி என்று சொன்னாலும் கேலியாகப் பேசும்போது உதட்டோர வளைவில் தெரிந்த சிரிப்பு, கண்களை விரித்துக் கொண்டு அவள் பேசும்போது அப்படியே உள்ளத்தில் இருந்த ஜன்னலைத் திறந்து தென்றல் காற்றாய் நுழைத்து விட்டது அவள் உணர்ந்தாளோ இல்லையோ அவனால் உணர முடிந்தது.

 

ஒத்த சிந்தனை உடைய இனிய பெண்ணாளை, தனது தனிமையை போக்க வந்த புது வரவை இனிமையாக வரவேற்றான். அவனது இதயம் ‘லப்டப்’ என்ற சத்தத்தை மறந்து ‘தம்தன தம்தன’ என்று இனிய கவி இசைத்தது. அவளது விழிகளிலே தனது இரவை முடித்து விடியலைத் தொடங்கும் பேராவல் அவன் மனதில் எழுந்தது.

 

அவனது கள்ளத்தனத்தைக் கண்டறிந்ததைப் போல லல்லியின் இதழ்கள் வெட்கப் புன்னகையை சிந்தின. அவளது முகம் இப்போது வெட்கத்தால் சிவந்தது. அதற்கு மேலும் அதைத் தொடர விரும்பாதவள் போல டக்கென்று கண்களைத் திறந்தாள்.

 

என்ன என்று பார்வையால் கேள்வி கேட்டவனிடம் “சொல்லலாம்… ஆனால் நீங்க ஒத்துக்கணுமே” என்றால் மெதுவான குரலில்.

 

“முதலில் சொல்லு அப்பறம் நான் ஒத்துக்குறேன்னான்னு பாக்கலாம்”

 

ஒரு நிமிடம் தாமத்தித்து என்ன சொல்வது என்று மனதைத் தயார் செய்து கொண்டாள். பின்னர்

“பாரி… “

“உங்களுக்கு உடம்பில் இருக்கும் சக்கரங்கள், எனர்ஜி லெவல் பத்தி என்ன ஐடியா இருக்கும்னு தெரியல. இந்தக் கல்வியில் நான் இன்னும் பாலபாடத்தில்தான் இருக்கேன். ஆனால் நான் எனக்குத் தெரிஞ்சதை  வச்சு சொல்லப்போனால்…

நம்ம உடம்பில் எல்லா நேரமும் அந்த சக்தி அலைகள் வெளிபட்டுகிட்டே இருக்கும். ஆனால் வெளிப்படும் எல்லா அலைகளிலும் வேறுபாடு இருக்கும். கோவம், சந்தோஷம், துக்கம், அன்பு இப்படி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொண்ணு. ஹீலிங்ல பக்கத்தில் இருக்கும் நபர்களின் சக்தி அலைகளின் ப்ரீக்குயன்சியை ஊடுருவிப் பார்க்க முடியும். இதை பேஸ் பண்ணி அவர்களுக்கு இருக்கும் எமோஷன்சை கணிச்சு ட்ரீட் பண்ணுவாங்க”

 

“சரி”

 

“மன்னிச்சுக்கோங்க அதே மாதிரி முயற்சி ஒண்ணை இப்போ உங்ககிட்ட பண்ணிப்பார்த்ததில்”

 

“அப்படின்னா என்னோட மனசில் இருக்கும் உணர்வுகளை நீ என் அனுமதி இல்லாம ஊடுருவிப் பார்த்திருக்க…” என்றான் கூர்மையான பார்வையுடன்

 

“மன்னிச்சுக்கோங்க” என்றாள் பார்வையைத் தாழ்த்தியபடி.

 

“அப்பறம்… நான் ஒரு காமுகன், சண்டியர் இதெல்லாம் தெரிஞ்சதா”

 

“அதெல்லாம் தெரியல… ஆனால் உங்களுக்கு ஒரு ஈடுபாடு வந்ததுன்னு புரிஞ்சுகிட்டேன்”

 

“ஈடுபாடா… “ என்றான் ஆச்சிரியமாக.

 

“ஆமாம் பாரி… முன்னாடி உங்களுக்கு இந்த மாதிரியான உணர்வுகள் இல்லை. ஆனால் சில நிமிடங்களாக உங்களில் தெரிந்த மாறுபாடு கண்டிப்பா உங்களுக்கு என் மேல் ஒரு நாட்டம் வந்திருக்குன்னு சொல்லுது. இத்தனை வருடம் நான் செஞ்ச பயிற்சி தப்பா சொல்லாதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அசராமல்.

ஒரு வினாடி அதிர்ந்துதான் போனான் பாரி.

 

“சரியா தப்பா….”

 

“இதைப் பொய்ன்னு மறுக்குறதுதான் பச்சைப் பொய். ஒரு பொண்ணு பக்கத்தில்  நான் நெருக்கமா உக்கார்ந்து இருப்பது இதுதான் முதல் தடவை. அதனால இயற்கை தனது வேலையை செய்ய ஆரம்பிச்சிருச்சுன்னு நினைக்கிறேன். அதே சமயத்தில் இது போல எண்ணம் ஏற்பட்டது என் தப்புத்தான். மன்னிச்சுக்கோ… “

 

“அப்ப நான் சொன்னது உண்மைதானா…”

 

“கார்ல பாம்புதான் இல்லைன்னு தெரிஞ்சிடுச்சே கொஞ்சம் தள்ளி உக்காந்துக்கோ… இல்லைன்னா உன்கிட்ட  என் பேரு கெட்டுப் போயிடும்”

 

“சாரி” என்றபடி நகர்ந்து உட்கார்ந்தாள்.

 

“உன்னைப் பார்த்தாலே மந்திரவாதி மாதிரி இருக்கு. நீ பக்கத்தில் இருக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போலிருக்கே… ஆனால் இதெல்லாம் எப்படி சாத்தியம்…” என்றான் ஆச்சிரியமாக.

 

“சாத்தியம்தான் பாரி. ஆனால் அந்த யோகப் பயிற்சிகளை நம்ம பண்றதில்லை”

 

“அதைக் கத்துகிட்டா பெண்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே. தேவை இல்லாத எல்லா ஆட்களையும் கிட்ட சேர்க்காம இருந்துடலாமே”

 

“பெண்களுக்கு இயற்கையாகவே கணிக்கும் உணர்வு அதிகம். இவன் சரியில்லை தள்ளி நில்லுன்னு அவங்க மனசே எச்சரிக்கும். ஆனால் சரியான பயற்சி இல்லாததால கோவம், காமம் இப்படிப் பிரிச்சுப் பார்க்க தெரியல”

 

“நானும் இதை கவனிச்சிருக்கேன். ஆனாலும் மறுபடியும் சொல்றேன்  நீ சொல்ற மனசு அலை இதெல்லாம் நம்பவும் முடியல உன்னைப் பாக்கும் போது நம்பாம இருக்கவும் முடியல”

 

“ஒரு டெஸ்ட் வச்சுக்கலாமா”

 

“என்ன டெஸ்ட்”

 

“வீட்டுக்குப் போனதும் நான் சொல்றமாதிரி செய்ங்க. தினமும் ஒருதரம் ஒரு பத்து நிமிஷம் நோட்டு பேனா ஒண்ணோட யாரும் தொந்தரவு தராத ஒரு இடத்தில உக்காந்துக்கோங்க.

 

அடுத்ததா உங்களுக்கு ரொம்ப இஷ்டமான ஒரு விஷயம் உதாரணத்துக்கு நீங்க ஒரு தென்னந்தோப்பு வாங்க நினைக்கிறிங்கன்னு வச்சுக்கோங்க…  அந்தத் தென்னந்தோப்பை உங்க கண்ணு முன்னாடி கற்பனை பண்ணிக்கோங்க. அதுக்கு நடுவில் நிக்கிறிங்க, தேங்கா எல்லாத்தையும் பறிச்சு வேலையாட்கள் போட்டிருக்காங்க… ‘ஜில்லுன்னு இளநி கொண்டுவந்திருக்கேன் தம்பி குடிங்க’ன்னு ஒரு அம்மா உங்க கைல திணிச்சுட்டுப் போறாங்க… இப்படி அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு சுகமான  கற்பனை.

கடைசியான முக்கியமான விஷயம் அதைப் பத்தி அந்த நோட்டு புத்தகத்தில் எழுதுங்க. எழுத வரலைன்னா கூட தென்னந்தோப்பு வாங்கணும் அப்படின்னு ஒரு வரி எழுதினால் கூட போதும்.

இப்படியே ஒரு மண்டலம் எழுதிட்டு வாங்க அதுக்கப்பறம் அந்தத் தோப்பே உங்க கிட்ட வந்து சேர்ந்துடும்”

 

“லல்லி இதுக்குப் பெயர்தான் சூனியம் வைக்கிறதா”

 

“ச்சே ஒருத்தரை ஒண்ணுமில்லாம அழிக்கிறதுதான் சூனியம். அது கூட ஒரு சைன்ஸ்தான் பாரி. அதைப்பற்றிய என் அபிப்பிராயத்தை அப்பறம் சொல்றேன்.

உங்களை ஒரு மண்டலம் எழுத சொல்லியிருந்தேன்ல. நம்ம ஊரில் சித்த மருந்து, நாட்டு வைத்தியம் எல்லாத்திலும் ஒரு மண்டலம் மருந்து எடுத்துக்க சொல்லுவாங்க. அந்த மருந்து உடம்பில் ஊடுருவி முழு பலன் தர அந்த நேரம் எடுக்கும்னு ஒரு கணக்கு. அதே மாதிரிதான் மனசும். நீங்க சொல்ற அந்த மந்திரம் அதைக் கொஞ்சம் கொஞ்சமா தாக்க மனமும் இயற்கையோட பேசி அதை அடையறதுக்கான வழிமுறைகளை சிந்திக்க ஆரம்பிக்கும்.

ஒரு கட்டத்தில் மனதின் அலைவரிசை இயற்கையின் அலைவரிசையோட கலந்து இயற்கை தன்னாலே நீங்க நினைச்சதை அடைய வைக்கும்”

 

“அப்படி வைக்கலைன்னா…”

 

“நீங்க ஆசைப்பட்டது பொருத்தமில்லாததுன்னு அர்த்தம். நீங்க பாட்டுக்கு ரிசர்வ் பேங்க் நோட்டு எல்லாம் எனக்கே வேணும். என் வீட்டுக்குப் பின்னாடி தங்க வயல் வேணும், காவிரி பிரச்சனை இன்னும் ஒரு மண்டலத்தில் முடிவுக்கு வரணும்னு சாத்தியமில்லாததை கேட்டா…”

 

“தங்க வயலும், காவிரி தண்ணியும் உனக்கு ஒண்ணாயிடுச்சு… நேரம்தான்… “

 

“இது நிஜம் பாரி… கண்டிப்பா நடக்கும்… எனக்காக ட்ரை பண்ணிப் பாருங்களேன்”

 

“சரி”

 

“முழு மனசோட எழுதணும். எழுதிட்டு என்கிட்டே  பலன் கிடைச்சதான்னு சொல்லணும்”

 

“நான் எந்த ஒரு காரியத்திலும் முழு மனசில்லாம இறங்க மாட்டேன். மனசில் ஒரு சதவிகிதம் நெருடல்  இருந்தாலும்  மறுத்துடுவேன்”

 

“அப்ப இன்னைல இருந்து மூணு மாசம் கழிச்சு என்னாச்சுன்னு என்கிட்டே சொல்லணும். சரியா…”

 

“இப்ப டிசம்பர் மாசம் அஞ்சாம் தேதி பிறந்துடுச்சு. ஒரு மண்டலம் நீ சொன்னதை செஞ்சுட்டு, சரியா மார்ச் மாசம் அஞ்சாம் தேதி உன்கிட்ட பலனை சொல்லுவேன்”

 

அவனது வாக்கில் மனமகிழ்ந்தாள்

“சூனியம் வைக்கிறது பத்தி உன் கருத்தை சொல்றேன்னு சொன்னியே” நினைவு படுத்தினான்

 

“பாஸிடிவ் எண்ணங்கள் இருக்கும் போது முன்னேற்றப் பாதைக்கு உங்க மனசும் இயற்கையும் கூட்டிட்டுப் போகும். நீங்க வேண்டியதை அடையவும் வைக்கும்.

 

மாறா ஒருத்தன் கெட்டுப் போகணும், நாசமா போகணும்னு சாபம் தரதும், தூத்துறதும்,  சூனியம் வைக்கறேன்னு கிளம்புறதும் அந்த செயலில் ஈடுபடும் நபரை நெகடிவ் எண்ணங்களை வளர்க்க செய்யும். சதா தீய அலைகளில் இருந்தா என்னவாகும்… நெகடிவ் எண்ணங்கள் கெடுதல் நினைச்சவங்களின் ஆரோக்கியத்தையே  கொஞ்சம் கொஞ்சமா தின்னத் தொடங்கும். கெடுவான் கேடு நினைப்பான் கதைதான். என் பாலிஸி நல்லதே நினையுங்க நல்லதே நடக்கும்”

 

“சரி பாட்டிம்மா” கைகளைக் கட்டிக் கொண்டு பணிவாக சொன்னான் பாரி.