Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 11

அத்தியாயம் – 11

பாரியும் லலிதாவும் வண்டியின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்தில் புதிதாகத் துவங்க ஆரம்பித்திருந்த மழையின் இரைச்சலைத் தவிர வேறில்லை.

பயணம் துவங்கியபோது இருந்த தெளிவான மனநிலை இப்போது இருவருக்கும் சுத்தமாக இல்லை. ஒருவர் பால் மற்றொருவருக்கு ஏற்பட்ட மரியாதை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதைப் போலத் தோன்றியது.  இது சரியா தவறா என்று லலிதாவால் தெளிவாக சொல்ல இயலவில்லை.

சொல்லப்போனால் மனதின் தவறு என்பது எதுவும் இல்லை. பார்க்கும் திசையெங்கும் பறக்க நினைப்பதும், திடீரென்று வேண்டும் என்று அடம் பிடிப்பதும், ஒப்பிட்டுப் பார்ப்பதும் அதன் தப்பில்லை. ஆனால் அப்படியே விட்டுவிட்டால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் என்ன வித்யாசம் இருக்க முடியம். கடிவாளம் இல்லாது அதனைக் கட்டவிழ்த்து விடுவது மனிதனின் தவறுதானே.

 

அதே நினைவாக மனதிற்கு கடிவாளம் போடா முயன்றபடி  காலைத் நகர்த்தி வைத்தவள் வழுவழுப்பான ஏதோ ஒன்று காலை உராச ‘வீல்’லென்று அலறினாள்.

 

“என்னாச்சு லல்லி” பதறினான் பாரி.

 

காலினை உதறியவண்ணம் குதித்து இரண்டு கால்களையும் தூக்கி கார் சீட்டில் வைத்துக் கொண்டவள், “பா… பாம்பு” மூச்சு ஏகமாய் வாங்கியது. பயத்தில் அவளது உடலெல்லாம் எக்கச்சக்கமாக வியர்க்க ஆரம்பித்தது.

 

“பாம்பா…”  என்றவண்ணம் அந்தப்பக்கம் எட்டிப் பார்க்க முயன்றவனிடம்.

“இப்ப காலைக் கீழே வச்சப்ப மேல பட்டுச்சு… ப… பயம்மா இருக்கு பாரி”

 

“பாம்பு எதுவும் பண்ணாது… கதவைத் திறந்து விட்டா அதுபாட்டுக்கு ஓடிடும்”

 

கைகளை கைப்பிடிக்கு அருகில் சென்றவள் அதைவிட வேகமாக உதறியவண்ணம்

 

“பா… ரி… திறக்க முடியல… அ… து க.. க..தவு வரைக்கும் இருக்கு… கொத்திடாதுல்ல… “ திக்கித் திக்கி வார்த்தைகள் வர,  கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

 

“லல்லி…  அழாதம்மா… இங்க இந்தப் பக்கம் வா…” என்று அவளது தோளைத் தொட்டு

 

“அப்படியே என் சீட்டுப் பக்கம் வந்துடு நம்ம ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துக்கலாம். அப்படியே நைசா கதவைத் திறந்து வெளியே போயிடலாம்”

 

“உங்களைக் கொத்திடப் போகுது… நீங்க காலை தூக்கி சமணம் போட்டுக்கோங்க பாரி”

 

“சரி நீ வா…” என்றான்.

 

கிட்டத்தட்ட அவன் சொன்னது போலவே ஏறி வந்தவள் அமர்ந்தது பாதி அவனது மடியாக இருந்தது.

 

“பாரி… உங்க காலு”

 

“உஷ்… என் காலு ஒண்ணும் உடைஞ்சுடாது… அப்படியே உக்காரு… லைட் போட்டுப் பார்க்கலாம்”

 

“பாரி வெளிய போயிடலாம்”

 

“தரை பூரா தண்ணி… “

 

“உங்களுக்கு பயம்மா இல்லையா… செத்துடப் போறோம் பாரி”

 

“எனக்கெல்லாம் ஆசை அதிகம்… ஒரு ரெண்டு பொண்ணு ரெண்டு பையன் பெத்து அதுங்க பண்ற பஞ்சாயத்தை எல்லாம் பாக்காம என் உயிர் போகாது… உனக்கு எப்படி”

 

“இப்பவே உயிர் போயிரும் போலிருக்கு”

 

“அப்படி எதுவும் நடக்காம பாத்துக்குறேன். பாதி பாம்பு விஷமில்லாததுதான்னு சொல்றாங்க. அதனால கடிச்சாலும் நீ பொழைக்க சான்ஸ் இருக்கு”

 

பாரி மெதுவாக சுவாசித்து அவ்விடத்தில் இருக்கும் அரவத்தைக் கண்டறிய முயன்றான்.

 

“என்ன பாரி செய்றிங்க”

 

“ உன் தியானம் இந்த நேரத்துக்கு இங்க ஒரு பாம்பு இருக்கும்னு சொல்லிருக்கணுமே… எப்படி மிஸ் ஆச்சு. நீ கொஞ்சம் தியானம் பண்ணி பாம்பு இருக்கான்னு பாக்குறியா.” நெற்றியைத் தட்டி யோசித்தான்.

 

“என்ன கொழுப்பா…”

 

“முடியாதா… சரி… நானாவது ட்ரை பண்றேன். பாம்போட மூச்சு சீறல் கேக்குதான்னு பாக்குறேன். சிலவகை நாகங்களுக்கு தனியான வாசம் உண்டு. அப்படி ஏதாவது கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்குறேன். நீ கொஞ்சம் அமைதியா இருக்கணும்”

 

அவர்கள் இருவரும் அமைதியாக வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் உள்ளம் இரண்டும் அமைதியாக இல்லை. பெரும் ஆரவாரத்துடன் அது ஆர்ப்பரித்தது.

 

அவளை தன் அருகே இழுத்தவனின் மார்பில் அவள் சாய்ந்திருந்தாள். அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

 

சற்று நேரம் கழித்து “மழை சத்தத்தில் பாம்பு சீறல்  கேக்கல…  அதோட  வாசம் எதுவும் வரல…”

 

அவனது மார்பிலிருந்து தலையை அகற்றாமல் “ம்ம்…” என்றாள்.

 

அவளது தோளில் கைகளைப் போட்டுத் தன்னோடு எதிலிருந்தோ காப்பாற்றும் ரட்சகன் போல அணைத்துக் கொண்டான்.

 

“கதவைத் திறக்காம எப்படி வந்திருக்கும்”

 

“நீங்க பாத்ரூம் போயிருந்தப்ப நான்தான் திறந்து வச்சிருந்தேன்”

 

“எதுக்கு”

 

“டிரைவர் சீட்ல காபி கொட்டிட்டிங்கல்ல அதைத் துடைச்சேன். ட்ரெஸ்ல பட்டா கரை ஆயிடும்ல… ஆனா அஞ்சு நிமிஷம் கூட திறக்கல. அதுக்குள்ளே எப்படி வந்திருக்கும்”

 

அவனது முகத்தில் சிரிப்பு “அதுகிட்ட கேட்கலாம்… சுத்தம் பண்ணினதுக்கு  தாங்க்ஸ்”

 

“என் மேல கோவம் வரலையா பாரி”

 

“என் மேல காட்டின அக்கறைக்கு எதுக்கு கோவப்பட்டா என்னை விடப் பெரிய முட்டாள் வேற யாரு”

 

அப்படியே பேசிக் கொண்டே அவளை நகர்த்திவிட்டு டக்கென எழுந்து கார் லைட்டைப் போட்டான்.

 

எதிர்பாராத இந்த நிகழ்வால் திடுக்கிட்டவள் “பாரி” என்று கத்தியவண்ணம் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

 

“பாரி… உன்னை நம்பிதானே வந்தேன்… பாம்பு கிட்ட சாக விடுறயே… “ ஓவென்று தேம்ப…

குலுங்கிய அவளது முதுகினைத் தடவி சமாதனம் செய்தவாறு…

 

“லல்லி… ஒண்ணும் இல்லடா.. பயப்படாத… இந்த மந்திரக்காரியை அப்படியெல்லாம் விட்டுடுவேனா… ”

 

“பொய் சொல்லாதே அப்பறம் என்னை விட்டு எந்திருச்சு லைட்டைப் போட்டு…”

 

“அதனாலதானே இது என்னன்னு பாக்க முடிஞ்சது… இங்க பாரு” அவளை நன்றாகத் திருப்பிக் கார் விளக்கின் வெளிச்சத்தில் அவள் சொன்ன இடத்தைக்  காட்டினான்.

 

தேம்பல் அடங்காமல் பாரியை இறுக்கப் பற்றிக் கொண்டே தரையைப் பார்த்தவள் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது அழுது சிவந்திருந்த முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொள்ள, அவனைத் திரும்பிப் பார்த்து “பாரி…” என்றாள். சிரிப்பால் பாரியின் உடல் குலுங்கியது.

 

“ஆமாம் இப்ப சொல்லு பாரி… தரைல என்ன”

 

“என் ஹாண்ட்பாக்”

 

“உன் உயரத்துக்கு வார் வச்ச கைப்பை. தரைல விழுந்து கார் கதவில் சிக்கிருக்கு. அதுதான் வழுவழுப்பா பாம்பு மாதிரி இருந்திருக்கு. அடேங்கப்பா… என்ன ஒரு பயம் லல்லிம்மாவுக்கு”

 

“பயமெல்லாம் ஒண்ணும் இல்லை… “

 

“நிஜம்மா பயமில்ல…” அவளது முகத்தினை தனது கரங்களால் ஏந்தியவன் “இந்தக் கோழிமுட்டை கண்ணு வீங்கி, கண்ணிமை போட்டத் தாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கச்சேரியே வச்சிருக்கலாம், முகம் தக்காளியாட்டம் சிவந்து, ரெண்டு கண்ணிலிருந்து வந்த தண்ணீல எங்க வயல்ல ஒரு போகம் விளைச்சல் எடுத்திருக்கலாம் போலிருக்கு”

 

“போங்க.. பாரி” என்றபடி தனது முட்டாள்தனத்தால் ஏற்பட்ட கூச்சத்தால் முகத்தை பாரியின் தோளில் சாய்ந்து மறைத்துக் கொண்டாள் . லலிதாவின் எதார்த்த செயலால் பாரியின் நெஞ்சம் தவிக்க ஆரம்பித்தது. அவளிடம் தானும் தன்னிடம் அவளும் உரிமை எடுத்துக்கொள்ளும் பேராசை எழுந்தது. அப்படியே வேரோடு அவனது மனதைப் பறித்து சூடிக் கொண்டாள் அந்த சுந்தரி.

 

பார்வையில் சில நிமிடம், பயத்தோடு சில நிமிடம்

கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே…

 

என்றபடி அந்த நொடி ஒவ்வொன்றையும் பொக்கிஷமாக அவனது மனது குறித்துக் கொண்டது.