Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 10

காந்தமான அந்த இரவு வேளையில், பூச்சிகளின் ரீங்கார இசையில், வெட்ட வெளியின் நட்ட நடுவில் காலமாம் வனத்தில் காளியானவள் நின்றதைப் போல நின்றுந்தனர் அந்தப் புதிய சிநேகிதர்கள் இருவரும். வானெங்கும் பறந்து விரிந்த அந்த பிரமாண்டத்தில் தன்னிலை மறந்து வேறு யாரோவாக உருவம் கொண்டு கரைந்து விட்டதைப் போல உணர்ந்தாள் லலிதா.

காரில் பாட்டினை போட்டுவிட்டான் பாரி. இரவு சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி ‘இது காதல் கவிதைகள் படித்திடும் நேரம், இதழோரம்… இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்’ என்று இளையராஜா வேறு சூழ்நிலை புரியாது ஆரம்பித்தார்.

லலிதாவைத் தொந்தரவு தரவேண்டாம் என்றெண்ணி பாட்டினைப் போட்டவனின் நிலைமை பரிதாபமாயிற்று.

ராஜாவின் சிச்சுவேஷன் சாங், மெதுவான தூறல், லேசான சாரல், நல்ல குளிர் இவற்றிற்கு நடுவே பக்கவாட்டில் தெரிந்த அந்த சிலை போன்ற முகத்தைப் பார்த்த பாரிக்கோ மெல்ல மெல்ல என்னவோ அவனிடமிருந்து நழுவிச் செல்வதாக ஒரு எண்ணம்.

சித்தம் கலங்க வைக்கும் உருவமும் பித்துப் பிடிக்க வைக்கும் இதழ்களுமாய் அவனது உள்ளத்து உறுதியை குலைக்க வந்த மோகினி ஒருத்தி கங்கணம் கட்டிக் கொண்டு அவன் முன்னே அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.

எந்த சூழ்நிலையிலும் சலனத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று மனதைக் கண்டித்தான். பேசாமல் அமர்ந்திருந்தால் தானே மனம் அலைபாய்ந்து மயக்கம் கொள்கிறது. இனி அமைதியாய் இருக்கப் போவதில்லை.

“க்கும்…”

இரண்டு மூன்று முறை தொண்டையைச் செருமிய பின்னர் திரும்பி கேள்வியாய் அவனைப் பார்த்தாள் லலிதா

அவளது உள்ளுணர்வு ரகசியத்தை விடாமல் கேட்டுத் தொல்லை செய்தான் பாரி.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது பாரி. ஆனால் எங்க தாத்தா வள்ளலாரைப் பின் பற்றி இயற்கை வழி வாழ்ந்தவர். யோகம், தியானம், இயற்கை உணவுன்னு ஊரார் சொல்படி ஒரு சாமியார் மாதிரி வாழ்ந்துட்டு இருந்தார். அவர் போயிட்டு வரும் யோகப் பயிற்சிக்கு சின்ன வயசிலிருந்து நானும் போவேன். அங்க தான் இயற்கையோடு பேசக் கத்துகிட்டேன்”

“இயற்கையோடு பேசக் கத்துக்கிட்டிங்களா… எனக்கு புரியலையே”

“பயங்கரமான காத்து, மின்னல், இடியோசை, தவளை சத்தம், மண்வாசம் இதெல்லாம் உங்ககிட்ட சொல்றது என்ன?”

“மழை வரப்போறதுக்கான அறிகுறிகள்”

“நம்ம உணர்தல் இத்தோட நின்னுடுது. ஏன்னா நம்ம அடுத்த ஸ்டெப் போக முயற்சியே பண்றதில்லை. அப்படி சொல்ல முடியாது நமக்கு இருக்கும் கடமைகள், வேலைகள் அடுத்த அடி எடுத்து வைக்கவே விடுறதில்லைன்னுறதுதானே நிஜம்”

“ஆமாங்க… சாதாரணமா நடக்கும் போதும் பயணம் செய்யும்போதும் கூட நம்ம ஏதோ சிந்தனைல இருக்கோம். இல்லை செல்லை நோண்டிகிட்டு பிரயாணம் செய்றோம். பக்கத்தில் இருக்குறவங்க கிட்ட பேசுறதே பெரிய விஷயமா இருக்கும் இந்த நேரத்தில் இயற்கையோட பேசுறதைப் பத்திக் கற்பனையே பண்ண முடியல”

“கரக்ட். ஆனால் மிருகங்கள், பறவைகள் எல்லாம் நமக்கு அடுத்த நிலையான உணர்தலைக் கொண்டிருக்கு. நம்ம தாத்தா பாட்டிங்க குருவி கூடு கட்டுற இடத்தை வச்சே இந்த வருஷம் மழை எப்படி இருக்கும்னு சொல்லிடுவாங்க பார்த்திருக்கிங்களா”

வியப்போடு “ஆமாங்க” என்றான்.

“நமக்கு இயற்கையின் நண்பனான பறவைகளை கவனிக்கும்போது கூட பல விஷயங்கள் புரியும். இது மாதிரிதான் என் தாத்தாவும் அவர் நண்பர்களும் இயற்கை சூட்சமமா சொல்ற செய்தியை உணர முயற்சி செய்றவங்க. தாத்தா வெளிய போகும்போது நானும் அடம்பிடிச்சு போயிருவேன். அந்த சின்ன வயசில் அவர்கூட நானும் பயிற்சியில் ஈடுபடுவேன்”

“அப்ப உங்களுக்கு எத்தனை வயசு இருக்கும்”

“ஒரு பத்து வயசுக்குள்ளத்தான் இருக்கும். இருந்தாலும் ஒரு ஆர்வம்தான்”

“பத்து வயசா… அப்ப ஒரு அம்பது வருஷத்துக்கு முன்ன நடந்த விஷயம்னு சொல்லுங்க” என்று அவன் சீரியஸாக சொன்னதிற்கு சம்பந்தமில்லாமல் முகத்தில் ஒரு புன்னகை.

“அம்பது வருஷமா… யோவ் பாரி உடம்பு எப்படி இருக்கு…”

“யோவ்வா…”

“உங்க கணக்குப் பிரகாரம் பார்த்தா நான் டேய் பாரின்னு கூடக் கூப்பிடலாம். என்ன பாரி கூப்பிடவா…”

“அம்பேல் பாட்டிம்மா… என்னை விட்டுடுங்க…” கைகளைத் தூக்கிக் காண்பித்தான்.

“சாரிங்க மிஸ்டர்.பாரி ரொம்ப உரிமை எடுத்துகிட்டேனா…”

“லல்லி பாரின்னே கூப்பிடலாமே…”

“வேள்பாரி நான் பயங்கரமா ரம்பம் போட்டுட்டேனா”

“ரம்பம்னு சொல்ல மாட்டேன். நீங்க சொல்ற எதையும் என்னால நம்ப முடியல லல்லி. உங்களைப் பார்க்கும்போது நம்பாம இருக்கவும் முடியல… “

“அதுக்கு ஒரு எக்ஸ்பரிமென்ட் இருக்கு. உங்களுக்கு செய்ய சம்மதம்னா சொல்லுங்க மேற்கொண்டு விவரம் சொல்றேன்”

“சொல்லுங்க… “

“அதுக்கு முன்னாடி உங்களைப் பத்தி எனக்குத் தெரியணுமே”

“என்ன தெரியணும். வயது இருபத்தி ஏழு, உயரம் அஞ்சடி எட்டு அங்குலம், ரோகிணி நட்சத்திரம்… “

“இங்க என்ன பொண்ணா பாக்குறோம். உங்களைப் பத்தின்னா… உங்களோட விருப்பு வெறுப்பு ஆசைகளைப் பத்தி சொல்லுங்களேன்”

ஆரம்பித்தான். “விருப்பம்னு சொன்னா எங்கம்மா அப்பா குடும்பத்துக்கு அப்பறம் எனக்குப் பிடிச்சது எங்க ஊரு, எங்க ஊர் மண்ணு அது என்னோடவே கலந்திருக்கு”

“பொறந்த ஊரு மேல அவ்வளவு இஷ்டமா. இந்த வயசில் பசங்க வெளிநாட்டில் சம்பாரிச்சுட்டு வரத்தானே பாப்பாங்க. சொல்லப்போனால் பலருக்கு நம்ம ஊருன்னாலே பிடிக்கலையே”

“யாரு சொன்னா. வெளிநாட்டில் இருந்தா நம்ம ஊரை வெறுக்குறாங்கன்னு அர்த்தமா… அவங்கதான் வேற சூழ்நிலையில் இருக்கும்போது கூட சொந்த ஊரைப் பத்தியே நினைச்சுட்டு இருப்பாங்க. ஒரு வெள்ளைக்காரன் அமெரிக்கா போனதும் அமெரிக்கனா மாறுறான், ஆஸ்த்ரேலியா போனால் அப்படியே அந்த ஊருகாரனா தன்னை மாற்றம் செஞ்சுக்குறான். இரண்டாம் தலைமுறையில் அவனோட பூர்வீகமே மறந்துடும்.

ஆனால் நம்ம ஊருக்காரன் மட்டும்தான் எந்த நாட்டில் இருந்தாலும் நம்மை விட அதிகமா தன் பொறந்த இடத்தைப் பத்தியே நினைச்சுட்டு இருப்பான். பிரிட்டன்ல இருக்கும் நாலாம் தலைமுறையினை சேர்ந்த குஜராத்தி இளைஞர்கள் பலர் இன்னமும் இந்திய தேசியக் கொடியை கைல பச்சை குத்திருக்காங்கலாம். இதில் என்ன வியப்பான விஷயம்னா அவங்களோட குடும்பம் கென்யாவிலும் தென்னாப்பிரிக்க நாடுகள்லயும் குடியேறி இரண்டு தலைமுறைகள் இருந்துட்டு அதுக்கப்பறம் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்தவங்க.

இவங்களுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை நம்ம மக்கள். பிறந்த மண்ணின் வாசம் மறக்காதவங்க. நம்ம ஊரில் பர்கர் பீசான்னு இடம் மாறினாலும் இன்னமும் இட்டிலி, தோசைன்னு வாழ்ந்துட்டு இருக்கவங்க. பொங்கலுக்கு பட்டிமன்றமும், நாடகமும், நாட்டியமும் தவறாம நடத்துவாங்க.

சொல்லப்போனால் இவங்க தினமும் செல்லை ஆன் பண்ணதும் முதலில் பாக்குறது நம்ம ஊரு செய்திகள்தான். அதுக்குப் பிறகுதான் வாழுற ஊரில் என்ன நடக்குதுன்னு பாப்பாங்க. இதைத்தான் அட்டாச்மென்ட்னு சொல்றது.

நான் என்ன சொல்றது… நீங்க கல்யாணமாகிப் போனதும் தெரிஞ்சுப்பிங்க. உங்க வீட்டுக்காரர் அங்க சம்பாரிக்கிறதை ஒவ்வொரு காசா சேர்த்து நம்ம ஊரில்தான் முதலீடு செய்வார்”

“பச்… எனக்குத் தெரியல பாரி. அந்த அளவுக்கு அவரும் நானும் எந்த ப்ளானையும் பகிர்ந்து கிட்டதில்லை”

“அதெல்லாம் இப்பவே சொன்னால்தானா… கல்யாணத்துக்கப்பறம் சம்பளப் பணம் உங்க கிட்ட தானே வரப்போகுது”

“நடக்கும்போது பார்க்கலாம். நீங்க அமுதாகிட்டதான் சம்பளப் பணத்தைத் தருவிங்களா… உங்க செலவுக்கு என்ன செய்விங்க”

“என் சம்பளம் என் மனைவிக்குத்தான். ஆனால் நான் விவசாயம் செஞ்சு சம்பாரிக்கிற பணத்தை மீண்டும் விவசாயத்திலேயே முதலீடு பண்ணுவேன்”

“விவசாயம் உங்களுக்கு உயிர் மூச்சோ?”

“பொன்னாட்டம் பயிரைத் தந்து தலைமுறை தலைமுறையா சோறு போட்ட எங்க தாய் இப்ப ரசாயனத்தால கற்பழிக்கப்பட்டு, தண்ணி கொடுக்காம குரவளை நெரிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கா… இல்லை சாகடிச்சுட்டு இருக்கோம்.

அவளைக் கொஞ்சம் கொஞ்சமா மீட்டெடுத்து என் நண்பர்கள் துணையோடு சேர்ந்து இயற்கை விவசாயப் பண்ணை ஒண்ணு ஆரம்பிக்கணும்” கை முஷ்டி இருக்க, கண்கள் சிவக்க அவன் குமுறியதைக் கேட்டு அவன் கைகளைத் தட்டி உணர்வுக்குக் கொண்டு வந்தாள் லலிதா.

“பாரி… பாரி… என்னாச்சு… “

“சாரி லலிதா… ஏதோ நினைவு. எங்க வாழைத் தோட்டத்தில் மரமெல்லாம் இந்தப் புயலில் சாஞ்சிருக்கும். தென்னை மரமெல்லாம் என்னாச்சுன்னு தெரியல.

சோகம் என்னன்னா இவ்வளவு மழை பெய்யுது. ஒரு சொட்டும் சேமிக்க மாட்டோம். இந்தத் தண்ணியை முட்டாத்தனமா வீணாக்கிட்டு வெயில் காலத்தில் வறட்சி நிவாரண நிதி கேட்போம்”

“சிஸ்டம் சரியில்லை பாரி நம்ம என்ன செய்ய முடியும்”

“என்ன செய்ய முடியும்… என்ன செய்ய முடியும்… ஒருத்தர் மாறணும், ஒரு குடும்பம் மாறணும். அதைப் பாத்து ஒரு தெரு மாறணும், அப்படியே ஒரு கிராமம், பல கிராமங்கள், இந்தியாவின் முதுகெலும்பை நேராக்கினால் நம்ம நாடே பிழைச்சுடும்”

அவன் சொன்னதை யோசித்தாள்.

“கனமான சப்ஜெக்ட் பேசி போரடிச்சுட்டேன்”

“அப்படி இல்லை பாரி நான் என் லைபைப் பத்தி யோசிச்சேன். ராஜன்… அவர்தான் எனக்கு அப்பா முடிவு பண்ணருக்க மாப்பிள்ளை… அவருக்கு இந்த மாதிரி எல்லாம் அட்டாச்மென்ட் இருக்குற மாதிரி தோணலை. அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகுறதுதான் லட்சியம்னு சொன்னார். அவருக்கு கனடால நிரந்தர குடியுரிமை வாங்கணுமாம். அதுக்கு நான் எஞ்சினியர் படிச்சிருந்தால் நல்லாருக்கும்னு கொஞ்சம் பீல் பண்ணார்”

“ஓ… நீங்க என்ன படிச்சிருக்கிங்க?”

“நான் பிஎப்ஏ படிச்சேன். அதில் மேற்படிப்பு படிக்கணும்னு கேட்டேன். வீட்டில் மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“பைனான்ஸ் பாச்சிலர்ஸ் படிச்சிங்களா… அதுக்கு கூட நல்ல வேலை கிடைக்குமே”

லலிதாவின் முகம் வாடி சிறுத்து போனது அந்த நிலவொளியில் கூடத் தெரிந்தது.

“நீங்களும் ராஜனை மாதிரியே பேசுறிங்களே… நான் படிச்சது பைன் ஆர்ட்ஸ். ராஜன் கூட முதலில் பைனான்ஸ்னு நினைச்சுத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பார் போலிருக்கு.

எங்க முதல் சந்திப்பில் அக்கவுண்டன்சி பத்தின பரீட்சை எழுத புத்தகம் வாங்கித் தந்து கல்யாணத்துக்கு முன்னாடியே படிச்சு பாஸ் பண்ண சொன்னார்.ஆனால் நான் படிச்சது ஆர்ட்ஸ்னு தெரிஞ்சப்ப… “

லலிதாவின் கண்முன் அப்பொழுதும் கூட ராஜனின் ஏமாற்றம் நிறைந்த முகம் நிழலாடியது. சிறிது நேரம் கையில் இருந்த செல்லை நோண்டினான். பின்னர் சமாதனப் படுத்திக் கொண்டு கஷ்டப்பட்டு புன்னகைத்தான்

“பைன் ஆர்ட்ஸா… பரவால்ல டான்ஸ், பாட்டு கூட வீட்டிலேயே சொல்லித் தந்து பொம்பளைங்க வெளிநாட்டில் சம்பாதிக்கிறாங்க. என்ன வீட்டில் நான் இருக்கும் நேரம் கிளாஸ் எடுக்கணும். மேனேஜ் பண்ணிக்கலாம்” என்றான்.

“நான் அது பண்ணலையே…”

“அப்ப இன்ஸ்ட்ருமெண்ட் எதுவுமா… கிடார் மாதிரி இருக்குமே மடியில் வச்சுப்பாங்களே… ஹாங் வீணை இது மாதிரியா”

“இல்லை இது ஆர்ட்ஸ், கிராப்ட்…”

“நீ ப்ளஸ் டூல எத்தானவது அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ண”

முகம் கருக்க “ஆயிரத்தி பன்னெண்டு மார்க்கு” என்றாள்

“ஓ மை காட். உங்க அப்பா ஒரு வாத்தியாரா இருந்தும் எப்படி ஒரு சையன்ஸ் டிகிரி கூட சேர்த்து விடாம இருந்திருக்கார்…” எரிச்சல் பட்டவன் “வேற சம்பாரிக்கிற மாதிரி கோர்ஸ் ஏதாவது படிச்சிருக்கியா.”

யோசித்துவிட்டு தயக்கத்துடன் “சின்ன வயசில் ரெண்டு வருஷம் வயலின் கத்துகிட்டேன்”

ஷ்.. அப்பாடா… என்று பெருமூச்சு விட்டான் “சரி அது சம்பந்தமா மேற்கொண்டு ஏதாவது படிக்க முடியுமான்னு பாக்குறேன். நீயும் விசாரிச்சு ஏதாவது செர்டிபிகேட் எதுவும் கிடைக்குற மாதிரி பரீட்சை எழுதி வை. சிடி, ஆன்லைன் கோர்ஸ் எல்லாம் சேர்ந்து தினமும் 4 மணி நேரமாவது ப்ராக்டிஸ் பண்ணு. அம்மாகிட்ட சொல்லி கல்யாணத்தை ஆறு மாசம் கல்யாணத்தைத் தள்ளிப் போடுறேன். அதுக்குள்ளே ஏதாவது பணம் சம்பாதிக்கிற மாதிரி உன் தகுதியை வளர்த்துக்கோ” என்று கறார் குரலில் சொன்னான்.

அவளிடம் பேசத்தொடங்கியபோது இருந்த மரியாதை அப்படியே மரித்து அவனது பேச்சுத் தொனியில் ஒருமையும் அதிகாரமும் குடி கொண்டிருப்பதைக் கண்டு அவளது மனம் வேதனைப் பட்டது.

அதற்கு மேல் ராஜன் அன்று எல்லாரிடமும் பேசிவிட்டு நகர்ந்தாலும் அவன் முகத்தில் சுரத்தே இல்லை. அவன் விடைபெற்றதும் மகளைக் கேள்விகளால் துளைத்தெடுத்த அன்னையிடம் விவரத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

“நான் அப்பவே சொன்னேன். பிஎஸ்சி சேர்த்துவிடலாம் ஒரு டீச்சர் வேலையாவது கிடைக்கும்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். அப்பாவும் பொண்ணும் மதிச்சாத்தானே. பேப்பர் வெட்டுறது கூடை செய்றது இதெல்லாம் வச்சு பணம் பண்ண முடியுமா?

எங்க காலத்தில் கைத்தொழில் வகுப்புன்னு தையல் வேலை, வயர் கூடை பின்றது, கலைப் பொருட்கள் செய்றது ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கூடத்திலும் கத்துத் தருவாங்க. ஏழைப் பிள்ளைகள் இதையாவது செஞ்சு பொழைக்கட்டும்னு ஒரு நல்ல நோக்கத்தில் ஏற்பாடு செஞ்சது. இப்ப அந்தக் கல்வியை அரசாங்கமே தேவைன்னு நினைக்கிறதில்லை. உபயோகமில்லாத படிப்பைப் படிச்சால் உனக்கு என்னடி வேலை கிடைக்கும். இது போதாதுன்னு தியானம், யோகாசனம்னு அவ கேக்குறதுக்கெல்லாம் ஆடுனிங்க… எல்லாம் வீணாப் போச்சு”

“ஏம்மா பணம்தான் வாழ்க்கையா…”

“உனக்கு சம்பாரிக்கிற மாதிரி தானே மாப்பிள்ளை பாக்குறோம். உன்னை மாதிரியே மாப்பிள்ளை படிச்சிருந்தா பொண்ணு தருவோமா. பணமே வாழ்க்கையில்லை ஆனால் பணம் இல்லாம வாழ்க்கையே இல்லை”

தன் தாயே தன்னிடம் வாதிட்டு ராஜன் நினைப்பது சரிதான் என்று தோன்ற வைத்துவிட்டார். அப்பொழுது எழுந்த சந்தேகத்துக்கு இப்போது பாரியிடம் விளக்கம் கேட்டாள்

“ஏன் பாரி கலை எல்லாம் படிப்பில்லையா… டாக்டர், எஞ்சினியர், ஆடிட்டர் இதெல்லாம்தான் கௌரவமான படிப்பா…”

“ஐயோ… நான் அப்படி நினைக்கவே இல்லைங்க. நீங்க சொல்றவங்க எல்லாம் நடப்பு வாழ்க்கையை மனிதன் வாழ பேருதவி செய்றவங்க ஆனால் கலைகள் தானே இன்னமும் மனிதனை மனிதனா வாழ வச்சுட்டு இருக்கு”

“என்னை சமாதனப் படுத்தத்தானே சொல்றிங்க…”

“நிஜம்மா இல்ல லல்லி. கலைகள் இல்லைன்னா மனிதனுக்கு உயிர்ப்பு எங்கிருக்கு. . நடுத்தரக் குடும்பத்து மக்களுக்கு பணம் செலவழிச்சா அதுக்குப் பலன் கிடைக்கணும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு. இங்க அறிவியலும் கணக்கும் தர வேலை வாய்ப்பை கலைப் படிப்புகள் தர்றதில்லையே. அதனாலதானே நடுத்தர மக்கள் ஆர்வம் காட்டாம இருக்காங்க”

“நிஜமா இருக்கலாம்… நீங்க பொய்யே சொன்னாலும் கூட பரவால்ல. மனசுக்கு இதம்மா இருக்கு”

“பொய் இல்லை. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வாரே. பாட்டுக் கத்துகிட்டவனுக்கு பாடுறது ஈஸி. தெரியாதவனுக்கு கொலையே பண்ணாலும் பாட வராது. அது மாதிரிதான் கலைகளும்.

எனக்கே கிராமியப் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். வயல்ல அறுவடை முடிஞ்சதும் பம்புசெட்டுல குளிக்கும்போது பிச்சுகிட்டு பாட்டு வரும் பாருங்க… “

ஆச்சிரியமாகப் பார்த்தாள் “உங்களுக்கு கிராமியப் பாட்டு பாட வருமா…”

“என்னங்க இப்படிக் கேட்டுட்டிங்க. நாங்க விவசாய ரத்தங்க… பாட்டு எங்க உணர்வோட கலந்தது”

“நாத்து நடும்போது, களையெடுக்கும்போது பொண்ணுங்க பாட்டு பாடி என்ஜாய் பண்றதைப் பாத்திருக்கேன்”

“அது என்ஜாய்மென்ட் இல்லைங்க வலி நிவாரணி. காலைல சூரியன் உதிக்கும் போதிலிருந்து மறையுற வரைக்கும், கதிர் அருவாளை வச்சு குனிஞ்சு அறுத்துட்டே இருந்தால் எப்படி உடம்பெல்லாம் நோகும்னு கற்பனைப் பண்ணிப் பாருங்க… “

“ஹப்பா… முதுகெல்லாம் விட்டுப் போயிடும்ல. நீங்களும் கதிர் அறுப்பிங்களா”

“எங்க வீட்டில் எல்லாருமே விவசாய வேலை செய்வோம். தக்காளி நடவு பண்ணிட்டு கூலி ஆள் கிடைக்கலைன்னா என்ன செய்றது. அப்படியே விட்டா ஒரே நாளில் பழுத்து எல்லாமே வீணாயிடுமே. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் எங்க வீட்டாளுங்களே அறுவடை செஞ்சு கூடைல ஏத்தி சந்தைக்கு அனுப்பிடுவோம்”

“உடலுழைப்பு அதிகம்தான்ல ”

“ஆமாம். நம்ம வீட்டு வேலை அலுப்பு பார்த்தா முடியுமா? ஆனால் இதுவே நல்ல உடற்பயிற்சி தானே… ஒவ்வொருத்தரும் வீட்டு பின்னாடியோ இல்லை மாடிலையோ ஒரு காய்கறித் தோட்டம் போட்டால் எக்சர்சைஸ் யோகா செஞ்சமாதிரிதான்”

“டயர்ட் ஆனால் என்ன செய்விங்க”

“அதுக்குத்தான் களைப்புத் தெரியாம இருக்க நடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டுன்னு பாடுவோம்”

சற்று மழை குறைந்திருந்தாலும் இன்னும் நான் ஓயவில்லை என்று கருமேகங்கள் பூச்சி காமித்துக் கொண்டிருந்தன. காரையும் ஓட்ட முடியாது. இந்தக் காட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பது என்று யோசித்தவளுக்கு ஒரு பிடி கிடைத்தது போலிருந்தது.

“போர் அடிக்குது கிராமியப் பாட்டு ஒண்ணு பாடுங்களேன்” என்றவளிடம் மறுக்க முடியாமல்

“என் குரல் கட்டையாத்தான் இருக்கும் பொறுத்துக்கோங்க…

காளை வயசுக் காளை கண்ணாடி மயிலக்காளை

நெனைப்பை எல்லாம் மேயவிட்டு சொக்கி நிக்கும் சூரக்காளை

அரவப்பட்டி ஓரத்திலே ஆத்தோரத் தோப்புக்குள்ள

பரிசம் போடப் போனப் பொண்ணு உன் மனசுக்குள்ள நிக்கிறாளா

உன் மனசுக்குள்ள நிக்கிறாளா…

அவள் கண்மூடி அவனது பாடலை ரசிக்க ஆரம்பிக்க அவளை அறியாமல் அவளது கொலுசு ஜதி பாடியது.

கடைசி வரி பாடும்போது அப்படியே பாரியின் கண்கள் லலிதாவின் கண்களுடன் மோத புடவை வாங்க சென்ற இரு உள்ளங்கள் நெசவு செய்யப்பட்டு அன்பு என்ற வண்ணமயமான ஒரு ஆடை நெய்யப்பட்டது.