Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 7

டந்தது கனவா நினைவா என்று இன்னமும் நம்ப முடியவில்லை லலிதாவால். தானா ஊர் பெயர் தெரியாத ஒரு இளைஞனுடன் அவனது வண்டியில் தனியாகப் பயணம் செய்வது என்று தன்னைத் தானே மறுபடியும் கேட்டுக் கொண்டாள்.

 

புடவை தேர்ந்தெடுக்கும் போது தான் சந்தித்த அதே நபர்தான். அவளது ரசனை பிடித்திருப்பதாக சொல்லி “எனக்கு பெண்கள் டேஸ்ட் தெரியாதுங்க. இதே மாதிரி இன்னும் ரெண்டு சேலை செலெக்ட் பண்ணித் தர முடியுமா” என்று அவன் கேட்ட விதமே அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை. புடவை தேர்ந்தெடுக்கக் கசக்குமா என்ன. அவள் மனதிற்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தந்தாள்.  அதற்குக் கை மேல் பலனாக அவள் பேருந்து நடுரோட்டில் நின்றவுடன்  செய்வதறியாது நின்ற பொழுது பக்கத்தில் அவனது வண்டியை நிறுத்தினான்.

 

“பஸ் போகாதுங்க. நீங்க ஏறினால் நீங்க சேர வேண்டிய இடத்தில் பத்திரமாய் கொண்டு போய் சேர்கிறேன். ப்ராமிஸா என்னை நம்பி நீங்க ஏறலாம்” என்றான்.

 

“ப்ராமிஸ் எல்லாம் இல்லாமலேயே உங்களை நம்புறேன்” என்றவண்ணம் ஒரு ஆசுவாசப் பெருமூச்சோடு வண்டியில் ஏறிக் கொண்டாள் லலிதா.

 

அவன் தீவிரமாக சாலையை கவனித்தபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

 

“ஊருக்குள்ள போக முடியாதுங்க. வழியெல்லாம் வெள்ளம். உங்க வீடு எங்கிருக்கு சொல்லுங்க பக்கத்தில் பாதுகாப்பா இறக்கி விடுறேன்”

 

“நானும் ஊருக்குள்ள போக வேண்டாம். திருவண்ணாமலைக்குப் போகணும். அந்த பஸ் நிக்கும் வழியில் எங்கயாவது இறக்கிவிட்டால் கூடப் போதும் ஏறிப் போயிருவேன்”

 

“அப்படிங்களா… நான் சிதம்பரம்” என்றான்.

 

“நன்றி  மிஸ்டர் சிதம்பரம்”

 

“சாரி… என் பெயர் பாரி. ஊரு சிதம்பரம். உங்க பெயர்”

 

“என் பெயர் லலிதா. ஊரு திருவண்ணாமலை. உங்க உதவிக்கு நன்றி மிஸ்டர். பாரி”

 

“திருவண்ணாமலைக்கு சிதம்பரம் உதவலைன்னா எப்படி. இந்த மிஸ்டரை விட்டுருங்களேன். கொஞ்சம் சங்கோஜமா இருக்கு”

 

“சரி” என்றால் பாவனையாகக் கூட மறுக்காமல்.

 

அதன்பின் பேச்சைத் தொடராமல்  வெளியே தெரிந்த காட்சிகளை கவலையோடு பார்க்கத் தொடங்கினாள். ஆள் நடமாட்டமில்லாத வீதிகள். ஓங்கி சுழன்றடித்த காற்று. ரெண்டு இன்ச் உயரத்தில் தண்ணீர் நிறைந்த சாலை.

 

“மழை இந்தத் தடவை ரொம்ப மோசமா இருக்கு போலிருக்கே. என் பிரெண்ட் கிளம்பினப்பயே கிளம்பிருந்தால் இந்நேரம் பாதி தூரம் போயிருப்பேன்”

 

“புயல் சின்னம்னு இங்க வந்ததும்தான் சொன்னாங்க. ஆனாலும் இந்த அளவுக்கு மோசமாகும்னு நானும் நினைக்கல. சாரி மிஸ். லலிதா நான் வேற புடவை செலக்ட் பண்ண சொல்லி மேலும் தாமதமாக்கிட்டேன்”.

 

“அதென்னங்க ஒரு கால்மணி நேரம். அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை”

 

அவளது சுடிதார், முகம், தலைமுடி  எல்லாம் மழையில் நனைந்திருப்பதையும், வேகமாய் வீசும் காற்றில் அவள் குளிரில் நடுங்குவதையும் பார்த்தவன் வண்டியை ஓரமாக நிறுத்தி  “காலைல கடைத்தெருல ஒரு ஊனமுற்றவர் வித்தாருன்னு  ரெண்டு மூணு கைத்தறி துண்டு வாங்கினேன். இந்தாங்க உடம்பைத் துவட்டிக்கோங்க. இல்லைன்னா காய்ச்சல் வரும்” என்று எடுத்துத் தந்தான்.

 

லலிதாவிற்கும் அது மிகவும் தேவையாக இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக் கொண்டாள் “தேங்க்ஸ்”.

 

சற்று நேரம் இருப்புக் கொள்ளாமல் தவித்தவன் “வந்து… லலிதா எனக்கு ரொம்ப பசிக்குதுங்க. வழில கடை இருந்தால் நிறுத்தி சாப்பிட ஏதாவது கிடைக்குதான்னு பாக்கட்டுமா. உங்களுக்குத் தாமதமாயிடாதே”

 

“அச்சோ நிறுத்துங்க இதெல்லாம் என்கிட்டே கேட்டுட்டு”

 

“முன்னாடி கூட பசிலதான் டீக்கடைல நிறுத்தினேன். ஆனால் அங்க ஒண்ணும் கிடைக்கல. அதுகூட  நல்லதாப் போச்சு. வெளில வந்தப்பத்தான் பஸ் நடுவில் நிறுத்தி எல்லாரையும் இறக்கிவிட்டதைப்  பார்த்தேன்”

 

மற்றொரு டீக்கடை தெரிய அங்கு தேநீரைத் தவிர பிஸ்கட் பாக்கெட்டுகள்தான் தொங்கியது. அவற்றை வாங்கிக் கொண்ட லலிதா அந்தக் கடைக்காரரிடம். “இங்க பக்கத்தில் நல்ல சாப்பாடு எங்க கிடைக்கும்” என்றாள்.

 

“இந்த மழைல எங்கம்மா கடைங்க தொறந்திருக்கப் போகுது. ஆனால் அங்க ஒரு பாட்டி காஞ்சீபுரம் இட்லி செஞ்சு விக்கும். வேணும்னா அங்க போயி கேட்டுப் பாருங்க” என்றார்.

அவரிடம் வழி விசாரித்து சென்றார்கள்.

 

“பாரி சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்தான்”

 

“இட்லி தானே ஊத்தித் தர மாட்டாங்களா”

 

“இது காஞ்சீபுரம் இட்லி”

 

“அதனால”

 

“இது செய்றது கஷ்டம். இட்லி மாவு அரைச்சதும் செய்யணும். அதுக்குன்னே செஞ்ச இட்லி பாத்திரத்தில் போட்டு ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் வேக விடணும். இன்னும் சரியா சொல்லப்போனா மூங்கில் குடலைல மந்தார இலை போட்டு, புளிக்காத இட்லி மாவை அதில் ஊத்தி வேக வச்சு எடுப்பாங்க”

 

“ஒரு இட்லி ஊத்துறது இவ்வளவு கஷ்டமா?”

 

“ஆமாம் இந்த ஊர் ஸ்பெஷல் அது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்”

 

பாரிக்கு அன்று அதிர்ஷ்டம் இருந்தது. அவர்கள் கண்டுபிடித்த மெஸ்ஸில் குழாய் புட்டு போன்ற வடிவத்தில் இருந்த மூன்று இட்லிகளை சட்னியுடன் அந்தப் பாட்டி தர நன்றி கூறி உண்டார்கள். கூடவே ஆளுக்கு ஒரு பில்ட்டர் காப்பியும்.

 

அதை மெஸ் என்று கூட சொல்ல முடியாது. ஒரு சிறிய வீட்டின் திண்ணையில் இரண்டு பெஞ்சு போட்டு உணவகம் போல மாற்றியிருந்தனர். ஒரு வயதான தம்பதியினர் வயிற்றுப் பிழைப்புக்காக அந்த உணவகத்தை நடத்தி வந்தார்கள். கடையை மூடும் நேரத்தில் வாடிக்கையாளர்களாக வந்தவர்களை அன்புடன் வரவேற்று உணவளித்தனர் இருவரும்.

 

அவர்கள் சென்றிருந்த நேரத்தில் ஊரில் மழை காரணமாக மின்சாரத்தை நிறுத்தி இருந்தனர். காடா விளக்கொளியில் மந்தாரை இலையில் இட்டிலி அமிர்தமாக ருசித்தது பாரிக்கு.

அவர்கள் சென்றிருந்த நேரத்தில் ஊரில் மழை காரணமாக மின்சாரத்தை நிறுத்தி இருந்தனர். காடா விளக்கொளியில் மந்தாரை இலையில் இட்டிலி அமிர்தமாக ருசித்தது பாரிக்கு.

“ஹப்பா சுக்கும் மிளகும் இந்த குளிருக்கு அமிர்தமா இருக்கு. தாங்க்ஸ் பாட்டி”

அவர்கள் கிளம்பும் முன் பாட்டி ஒரு ஜாக்கெட் பிட் மற்றும் மஞ்சளுடன் வந்தார்.

“இன்னைக்கு பூஜை முடிஞ்சதும் அஞ்சு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தரணும். நாலு பேருதான் வந்தாங்க. ஒரு ஆள் குறையுதேன்னு கவலைல இருந்தேன். அந்தக் காமாட்சி உன்னை அனுப்பிட்டா பாரேன்” என்று சிலாகித்த வண்ணம் தர, மறுக்காமல் பெற்றுக் கொண்டாள் லலிதா.

“வெளிய புயல், மழைன்னு சொல்லிக்கிறாங்க. நீயும் உன் வீட்டுக்காரரும் பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க.நானும் அம்பாளை வேண்டிக்கிறேன் ” என்று வழியனுப்பி வைத்தார்.

வண்டியில் ஏறியதும் பேசாமல் ஓட்டிய பாரி “லலிதா, அந்தப் பாட்டிகிட்ட… “ என்று தயங்கினான்.

“சிலசமயம் சிலருக்கு நல்லது செய்ய சின்ன சின்ன உண்மையை மறைக்கிறது தப்பில்லை.

அவங்க நம்ம ரெண்டு பேரையும் தப்பாய் புரிஞ்சிருக்காங்கன்னு தெரிச்சுக்கிட்டேன். இருந்தும் உண்மையை சொல்லல. ஏன் தெரியுமா…

அந்தப் பாட்டி இந்தத் தள்ளாத வயசிலும் அஞ்சு சுமங்கலிங்களுக்கு தாம்பூலம் தராம சாப்பிடக்கூடாதுன்னு காத்திருக்காங்க பாரி. அவங்களுக்கு எடுத்து வச்சருந்த  உணவையும் பாத்தேன்.

இப்ப அவங்ககிட்ட உண்மையை சொல்லி அவங்களைக் கஷ்டப்படுத்த மனசு வரல. இந்த நேரத்துக்கு மேல யாரும் வருவாங்கன்னு தோணல. அப்படி யாரும் வரலைன்னா பாவம் பட்டினியால்ல தூங்குவாங்க” என்றவளை ஒரு வினாடி பார்த்தவன்

“சாரி லலிதா” என்று மன்னிப்பு கேட்டான்.

“மன்னித்தேன். ஆனாலும் நீங்க செய்த உதவிக்கு முன்னாடி இந்த பொய் சிறுபிள்ளைத்தனமா தோணுது.

ம்ம்… பாரி… நல்ல தமிழ் பெயர். முல்லைக்குத் தேர் தந்த பாரிவேந்தன்  இன்னைக்கு ஊர் பேர் தெரியாத பெண்ணுக்கு அடைக்கலம் தந்தது ஆச்சிரியமில்லை” என்றாள்

“முல்லைக்குத் தேர் தரும் அளவுக்கு எனக்கு செல்வநிலை இல்லை. ஆனால் தனியா இருக்குற ஒரு பெண்ணை பாதுகாக்கிற அளவுக்கு மனசிலும் உடம்பிலும் தெம்பிருக்க”.

“நல்லா பேசுறிங்க”

“நான் பதில் மட்டும்தான் சொன்னேன்”.

“அதுவே நச்சுன்னு இருக்கே. உங்க முழு பேரு பாரிவேந்தனா”

“இல்லை வேள்பாரி. பாரிவேந்தனோட உண்மையான பெயர் அதுதான்”

அவளது வியப்பினை  படம் பிடித்தபடி சொன்னான் “அப்பா தமிழ் பற்றாளர்…. என் தம்பி பேரு  நலங்கிள்ளி”

“உங்கப்பா பெயர் “

“கபிலர்.”

“தமிழ் டீச்சரோ”

“என் அப்பா விவசாயி. தமிழைக் காதலிக்க தமிழாசிரியராதான் இருக்கணும்னு அவசியமில்லையே … “

“உண்மைதான். நீங்களும் அப்படித்தானா…”

“அப்பா அளவுக்கு இல்லை. ஆனாலும் அவளைக் காதலிக்கத் தொடங்கியிருக்கேன் “

“பாட்டனும், பூட்டனும், தந்தையும், மகனும் காதலிக்கும் ஒரே பெண்… வியப்பில்லை”.

“இனி வருங்காலத்தில் என் மகனும் பேரனும், கொள்ளுபேரனும் கூட காதலிப்பாங்க. அதுவும்  அம்மா, மனைவி இவங்க யாரோட மறுப்பும் இல்லாம …..”

களுக்கென  நகைத்தாள்.

“மெல்லத் தமிழினி சாகும்னு உலகமே சொல்லிட்டு இருக்கு… நீங்க கொள்ளுப் பேரனோட காதலி வரை திட்டம் போட்டுட்டு இருக்கிங்களே …”

பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான். “நம்ம மாநில மக்களுக்கு தமிழ் படிக்கும் ஆர்வம் குறைஞ்சிருக்குத் தான்… ஆனால் உலகம் பூரா பரவியிருக்கும் தமிழ் மக்கள் ஏதாவது ஒரு விதத்தில் தமிழை வளர்த்துட்டுத்தான் இருக்காங்க. இந்த உலகத்தில் மனிதன் இருக்கும் வரை அன்பும் தமிழும் எங்கேயாவது வாழ்ந்துட்டுத்தான் இருக்கும்.

ஏனோ அவனிடம் பேசுவது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக உணர்ந்தாள் லலிதா. அவளிடம் பகிர்ந்து கொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் பாக்கி இருப்பதாக உறுதியான எண்ணம் ஒன்று உருவாவதை ஆச்சிரியத்தோடு உணர்ந்தான் பாரி.

இந்தப் பயணம் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது என்று இருவரும் உளமாற நம்பினார்கள்.