அத்தியாயம் – 5
“காலைலதான் நெய்து வந்தது ஸார்” என்று சொன்னார் கடைக்காரர்.
அந்தப் பெண்ணிற்கும் அந்தப் புடவை மிகவும் பிடித்துவிட்டது போல, “ஜரிகைல வரிசையா யாழி போட்டிருக்கிங்க. முந்தானைல வித்யாசமா கிளிகள் படம்… இருந்தாலும் நல்லாருக்கு” என்றாள்.
“காஞ்சீபுரத்தில் புடவையும் முந்தானையும் தனித்தனியா நெய்வோம் பாப்பா. அப்பறம் பொருத்தமா இருக்குற ரெண்டையும் இணைச்சுச்சுருவோம் அதுக்கு பிட்னினு பேரு” என்றார்.
“இந்தப் புடவைக்கு இலைப் பச்சை பார்டர் தானே இருக்கு. இதுக்கு இலைப்பச்சை தலைப்புத்தானே சரிவரும்” என்றான் பாரி அவரிடம்.
“ஆமாம் சார் சொல்ற மாதிரி இலைப்பச்சைதானே போட்டிருக்கணும்” ஆமோதித்தாள் அந்த மங்கை.
“அதுதான்மா சில சமயம் நினைச்சே பார்க்காத சில நிறக்கலவைகள் கூட அற்புதமான சேலையைத் தரும். உதாரணத்துக்கு கிரே அதாவது சாம்பல் நிறத்தில் ஒரு புடவை இருந்தால் அதுக்கு என்ன பார்டர் போடலாம்”
“சாம்பலுக்கு ஒட்டின நிறம் கருப்பு. சில்வர், காப்பி பிரவுன் நிறம் கூட சரிவரும்”
“அப்படியா இந்த சேலையைப் பாருங்க” என்றபடி ஒரு சேலையை எடுத்துப் போட சாம்பல் நிறத்தில் ஒரு ஜொலி ஜொலிப்போடு ஒளிர்ந்த அந்த சேலையின் பார்டரும் முந்தானையும் நல்ல கத்திரிக்காய் வைலட். அதில் சில்வர் நிறத்தில் ஜரிகைகள் ஓடின.
“சூப்பரா இருக்கு” கண்கள் விரிய சொன்னாள் அந்தப் பெண். பாரியும் “ஆமாங்க இது சூப்பர் புடவை”
“இது எங்க அம்மாவுக்கு” என்று இருவரும் கோரசாக சொல்ல, விற்பனையாளர் சிரித்துவிட்டார்.
“உங்க ரெண்டு பேர் அம்மாவுக்கும் ஒரே மாதிரி புடவையா. பய்யா இந்த நிறத்தில் ரெண்டு புடவை ஸ்டாக் இருக்கான்னு பாரு” கடைப்பையனை எடுத்து வர சொல்லிவிட்டு அவர்களிடம் “சில சமயம் ரெண்டு மூணு புடவை வர்றதுண்டு. உங்க நேரம் எப்படி இருக்குன்னு பாக்கலாம்” என்றார்.
அவர்கள் அதிர்ஷ்டம் இரண்டு புடவைகள் ஒரே மாதிரி இருக்க, பாரிக்கும் அவளுக்கும் பிடித்த மஞ்சள் புடவையோ ஒன்றுதான் இருந்தது.
“நீங்கதான் முதலில் ஆசைப்பட்டு எடுத்திங்க நீங்களே எடுத்துக்கோங்க நான் அதே மாதிரி வேற ஆர்டர் தந்துடுறேன்” என்றான் அவள் உடலைத் தழுவி முதல் பார்வையிலேயே பிரமாதம் என்று தன்னியுமரியாமல் சொல்லியிருந்தானே. அவளைத் தவிர வேறு யாருக்கு இந்தப் புடவை பொருந்தும்.
“இல்லைங்க நீங்க எடுத்துக்கோங்க. நான் இப்ப புடவை பாத்துட்டு முன்பணம் தந்துட்டுப் போகத்தான் வந்தேன். எனக்கு வேணும்னுற புடவையை எங்கம்மா அப்பா கூட இன்னொரு நாள் வந்து வாங்கிப்பேன். இதே மாதிரி ஒரு புடவை ஆர்டர் இப்பயே தந்துடுவேன்” என்றாள்.
“நிஜம்மாவே நான் எடுத்துக்கட்டுமா”
“நிஜம்மா எடுத்துக்கோங்க” என முத்துப் பல் தெரிய சிரித்தாள்.
“அப்ப இன்னும் ரெண்டு மூணு சேலை வாங்கணும். எனக்கு ஹெல்ப் பண்றிங்களா”
அவன் அவள் உதவியோடு இன்னும் இரண்டு சேலைகள் எடுத்துக் கொண்டு பணம் தந்துவிட்டு அவளிடமும் மற்றவர்களிடமும் நன்றி கூறி விட்டு செல்ல, அவள் மேலும் சில சேலைகள் ஆர்டர் தந்துவிட்டுக் கிளம்பினாள்.
வெளியே வந்த லலிதாவை வானம் கருத்து, சோவென குழாயைத் திறந்துவிட்டார்போலக் கொட்டிய மழை வரவேற்றது.