சில நாட்கள் கழித்து ஒரு இனிய மாலைப் பொழுது, சரத் பள்ளிக்கு ஹிமாவையும் துருவையும் அழைக்க சென்றான். முன்பு இருந்த தாடிக் கோலம் மாறி நீட் ஷேவ் செய்து ட்ரிம்மாய் வந்தவனைக் கண்டு
“நீங்க யாரு ஸார் புதுசா இருக்கீங்க” என்று கிண்டலுடன் எதிர்கொண்டார் சாரதா.
“நான் துருவ்வின் அப்பா… என் மகனைக் கூட்டிட்டு போக வந்தேன்” என்றான் அதே சிரிப்புடன்.
“வெல்டன்… முதல் முதலில் நான் உங்களைப் பார்த்தப்ப வந்த பதில் உங்களுக்கும் ஹிமாவுக்குமான உறவைப் பத்தி சில கேள்விகளை எழுப்புச்சு. இந்த மாற்றம் இவ்வளவு விரைவில் நடந்தது சந்தோஷமா இருக்கு” என்றார் மனநிறைவுடன்.
“ஹிமா எங்க மேடம்”
“இன்னும் சில நாட்களில் ஒரு ப்ரோக்ராம் நடக்குது. அதுக்கு பைனல் ரிஹர்சல்ல ஹிமா பிஸியா இருக்கா. நீங்க பாக்க வர்றதுன்னா வாங்களேன்”
“ஸ்யூர்… துருவ்வை வீட்டில் விட்டுட்டு வரேன்”
சரத் திரும்பி வந்த சமயம் ஹிமா நடன உடையில் ஸ்டேஜில் அபிநயம் பிடிக்க ஆரம்பித்திருந்தாள்.
இயல்பாய் திரும்பிப் பார்த்தவள் கண்களில் குறுநகையுடன் முன்னிருக்கையில் சரத் தென்பட அவளது கண்களில் ஆச்சிரியம் மின்னல் கீற்றாய் தெரிந்தது
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி
முருகன் குறுநகை போதுமடி
மாலை வடிவேலவர்க்கு வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே -கிளியே உள்ளம் கிறுக்காச்சுதே
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே ஊணும் உருகுதடி
அவளது அபிநயங்களில் தெரிந்த காதல் பாவனைகளால் வேறோர் உலகத்துக்கே சென்றான் சரத். தான் தேடியவள் உரிமையுடையவளாய் தன்னருகே இருந்தும் ஏன் இத்தனை நாளும் பிரிவு என்று அவனது இதயம் கேள்வி கேட்டது.
நடன ஒத்திகை முடிந்ததும் அவசர அவசரமாய் நாட்டிய உடையைக் களைந்துவிட்டு, புடவையை கட்டிக் கொண்டு ஹிமா கிளம்பினாள். கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் சாரதா.
அவரது ஆலோசனைப்படிதான் அந்த பாட்டுக்கு நடனம் அமைத்திருந்தாள் ஹிமா.
“துள்ளல் நடையில் காவடிச்சிந்து பிரமாதமா அமைஞ்சிருந்தது. ஆனாலும் ஹிமாவதி இன்னைக்கு டான்ஸில் ஸ்ருங்காரம் சிறப்பாவே இருந்தது… ஒருவேளை பார்வையாளர் பகுதியிலிருந்த யாராவது காரணமா இருப்பாங்களோ “ என்றார் சாரதா கிண்டலாக
“அப்படியெல்லாம் இல்லை மேடம்”
அவளருகே வந்தவர் “அதில் தப்பில்லை… மாற்றம் ஒன்றே மாறாதது… ஒரு காலத்தில் கணவன் இறந்ததும் மனைவி உயிரோட இருக்குறதே பெரிய குத்தம். இப்ப அந்த மாதிரியா இருக்கு”
“சமூகத்தைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என் மனசில் ஒரு சின்ன உறுத்தல் அவ்வளவுதான்”
“உறுத்தலும் கடந்து போகும். வாழ்க்கையை வாழத் தயாராகுங்க… சீக்கிரம் உன் மாமியாரின் மனக்குறையை தீர்த்து வை”
“உங்களுக்கு எப்படித் தெரியும்…”
“நான் தினமும் ஒரு தரம் உங்கம்மாவைப் பார்த்துட்டுத்தான் வரேன். அப்பத்தான் இதையெல்லாம் கேள்விப் பட்டேன்.
இன்னொரு விஷயம் தெரியுமோ… நாங்க எல்லாரும் ஸ்வெட்டர் பின்ன ப்ளூ கலர், பிங்க் கலர் உல்லன் நூலெல்லாம் வாங்கியாச்சு. சீக்கிரம் அதை உபயோகிக்க நீயும் சரத்தும்தான் மனசு வைக்கணும்”
“மேடம்… நீங்களா இப்படி பேசுறது. நான் உங்களை என்னவோ நினைச்சேன்”
“இப்படித்தான் நீ தப்புத் தப்பா நிறைய நினைச்சுட்டு இருக்க. அங்க உன் வீட்டுக்காரன் கனவுலகில் மிதந்துட்டு இருக்கான். எழுப்பி வீட்டுக்குக் கூட்டிட்டு போ” என்று அனுப்பி வைத்தார்.
ஹிமா வந்து உலுக்கியதும்தான் நினைவுக்கு வந்தான் சரத்.
“சரத் என்ன உக்காந்துட்டே தூங்குறிங்க. வாங்க வீட்டுக்குப் போலாம்” இருவரும் காரை அடைந்தனர்.
“பர்ஸ்ட் ரோல உங்களைப் பார்த்ததும் ஒரே ஷாக்காயிட்டேன். டான்ஸ் எப்படி இருந்தது”
“எனக்காகவே நீ ஆடின மாதிரி இருந்தது” அவன் சொல்லி முடித்தபோது வீடு வந்திருந்தது.
அவர்கள் வருவதற்கு முன் துருவ் உணவு உண்டுவிட்டு தெய்வானையின் மடியில் உறங்கியிருந்தான். இரவு உணவு முடிந்ததும் தாயிடம் சற்று நேரம் பேசிவிட்டு மாடிக்குக் கிளம்பினாள் ஹிமா.
“துருவ் ரொம்ப அடம் பிடிக்கிறான் சரத். எல்லாம் நீங்க தர்ற செல்லம்தான் காரணம்” சொல்லிவிட்டுத் திரும்பியவள் மோதுவது போல அத்தனை அருகில் நின்ற சரத்தை எதிர்பார்க்காமல் திகைத்துவிட்டாள்.
“சரத்…”
“உன்கிட்ட பேசணும் ஹிமா” அவள் கரங்களைப் பற்றி தன்னருகே அமரவைத்தான்.
தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினான்.
“சத்யா உன் பாஸ்ட்… அந்த பாஸ்ட்டை நான் மதிக்கிறேன். உன்னை இத்தனை நாள் நினைச்சு நினைச்சு உருக வைக்கிறவன் எந்த அளவுக்கு உன்னை காதலிச்சிருப்பான்னு ஐ கேன் பீல். ஆனால் அந்த கற்பனைக் காவியத்திலேயே உன்னைப் புதைக்க நான் தயாராயில்லை.
எனக்கு ராஜியும், உனக்கு சத்யாவும் மறக்க முடியாதவங்க. ஒதுக்க முடியாதவங்க. நம்மோட நல்ல பொழுதுகளைப் பகிர்ந்துக்கிட்டவங்க. ராஜி வேற ஒருத்தரைக் கல்யாணம் செய்துக்கிட்டாலும் அவளை நான் வெறுக்க முடியாது. அவ மேல அன்பு செலுத்தியது நிஜம். ஆனால் அது பொய்த்துப் போனது என் துரதிர்ஷ்டம்.
சத்யா உனக்கு அன்பை மட்டுமே தந்திருக்கார். ஆனால் அவரை விதி உன்கிட்டஇருந்து பிரிச்சது வருத்தமான விஷயம்தான். ஆனால் நம்ம ரெண்டு பேரும் அவங்களோட கனவிலேயே வாழ்ந்துட்டு இருக்குறது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது.
எனக்கு நீ வேணும் ஹிமா… நம்ம துருவ் வேணும்… I want this family… நம்ம குழந்தைகள் எல்லாரும் காச்சு மூச்சுன்னு கத்திட்டே என்னை சுத்தி சுத்தி வரணும். என்னைக்காவது பார்ட்டிக்கு போயிட்டு லேட்டா வந்தா எங்கம்மாவும் உங்கம்மாவும் முகத்தைத் தூக்கி வச்சுக்கணும்.
என் எக்ஸ் கேர்ள் பிரெண்ட் கூடக் கம்பேர் பண்ணி நீ என் கூட சண்டை போடணும். பெரிய ஊடலுக்குப் பின்னர் உன் கூட அழகான கூடல் வேணும். நம்ம கைக்குழந்தையை வளர்க்க ராத்திரி முழுக்க தூக்கம் விழிக்கணும். I want the stress… I want the celebration… Most of all I want you in each and every moment of my life… Please Hima…”
அவளிடமிருந்து பதிலே இல்லாதிருக்கவும் இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்ற விரக்தியுடன் எழ எத்தனிக்க, அவனது முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து,
“சரத்… நீங்க மட்டும் நல்லவர். நான் கெட்டவளா…”
ஆச்சிரியத்துடன் அவளருகே அமர்ந்தான். “அப்படி யாரு சொன்னது”
“சொன்னாத்தானா… என் மனசு உங்களுக்குப் புரியாதா…”
பொய்பூட்டு கழன்று அவனது கரங்கள் அவளது கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது.
“புரியாம ப்ரபோஸ் பண்ண நான் என்ன முட்டாளா… உன் மனசு என்கிட்டே வந்ததை உன்னை விட பாஸ்ட்டா கண்டுபிடிச்சதே நான்தானே”
“உண்மையாவா…”
“நீ இந்த லவ் எப்ப ஸ்டார்ட் ஆனதுன்னு சொல்லு பாக்கலாம்”
“நீங்க துருவ்வை குளிப்பாட்டினப்பவா “
“அதுக்கும் முன்னே…”
“அதுக்கும் முன்னாடியேவா…” ஆச்சிரியபட்டவாரே யோசித்தாள்
“தெரியலையே” என்று உதடுகளைப் பிதுக்கியவளை அள்ளி அணைத்துக் கொள்ள சரத்துக்கு ஆவல் பெருகியது.
“ஆனால் வேலை பார்த்துட்டு இருந்தப்பன்னு சொல்லிடாதிங்க… ஏன்னா எனக்கு அப்ப கல்யாணம் நிச்சயமாயிருந்துச்சு”
“நம்ம ரெண்டு பேருக்கும் இயல்பாவே ஒரு அன்பு இருந்தது ஹிமா. அந்த அன்பு நட்பின் உருவில் இருந்தது. பின்னர் இயல்பாகவே காதலா கணிஞ்சது. இதில் குற்ற உணர்வு ஏற்பட அவசியமே இல்லை.
மண்ணில் விதைகள் நிறைய விழுது ஆனால் சிலது மட்டும்தானே துளிர்க்குது. முதலில் துளிர்க்கும் விதைகளுக்கு இடம்விட்டுட்டு நல்லா இருக்கும் விதைகள் கூட மண்ணோட மண்ணா மறைஞ்சுடுது. ஆனால் முளைச்ச செடி பட்டு போயிட்டா அந்த மண்ணை தரிசாக்காம சும்மா இருந்த விதை உயிர்தெழுது.
நம்ம உறவு கூட அதுமாதிரிதான். நம்ம ரெண்டு பேரும் ஏற்கனவே கமிட் ஆகாம இருந்திருந்தால் இந்தக் காதல் அப்பவே பிறந்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு”
“கதை போதும்… நான் உங்களை எப்பக் காதலிக்க ஆரம்பிச்சதை முழுமையா உணர்ந்தேன்னு சொல்றேன். நக்ஷத்திரா சண்டை போட்டபோது…
ஊருக்கு வேலை விஷயமா போன உங்களை விடியோ சாட்ல அவளோட பார்த்தப்ப என மனசே வெடிச்சுடுச்சு. என்கிட்டே பொய் சொல்லிட்டு அவளைப் பார்க்கப் போனதா நினைச்சு நைட் முழுசும் அழுதுட்டே இருந்தேன். போனை பக்கத்தில் வச்சுட்டு உங்க கால் வரும்னு ராத்திரி முழுசும் உட்காந்திருந்தேன்” அவள் குரல் தளுதளுத்தது.
“அழாதே கண்ணம்மா… அவ போனைத் தூக்கி போட்டு உடைச்சுட்டா”
“ஏன் அங்க பிரெண்ட்ஸ் இல்லையா… ஆபிஸ்ல ஒரு ஈமெயில் தந்திருக்கலாமே… நான் எதிர்பார்த்துட்டிருப்பேன்னு உங்களுக்குத் தெரியாது” சீறினாள்.
“ஐயோ நீ இவ்வளவு ஏங்கிருப்பன்னு தெரியாம போச்சே. என்னைப் பொறுத்தவரை நான் உன்னைப் பார்த்து உன் மடில படுத்து நடந்தது எல்லாத்தையும் சொல்லணும். நீ ஆறுதலா சொல்றதைக் கேட்டுட்டு அப்படியே நிம்மதியா தூங்கணும். அவ்வளதுதான் தோணுச்சு. அந்த ஒரே நினைப்பில் ஓடி வந்தா இங்க நீ எல்லாத்தையும் போட்டு உடைச்சுட்டு கிளம்பிட்ட”
“அது அவ்வளவு சுலபமா இல்லை. காலைல ஸ்கூலில் ஒரு சுய அலசலில் ஈடுபட்டேன். அதுக்கு சாதகமா சாயந்தரமே அத்தை கேள்வி கேட்கவும் உண்மையை சொல்லிட்டு கிளம்பிட்டேன்”
“ஏன் வீட்டை விட்டுக் கிளம்பின… மெட்ராஸ் போயிட்டா நான் கண்டுபிடிக்க முடியாதா… போயி உன் பிரெண்ட் வீட்டுக்குத் தானே போவ… அடுத்த நாளே உன்னைத் தூக்கிட்டு வந்திருப்பேன்…”
“இது விளையாட்டில்லை சரத். ஒரு அக்ரிமென்ட் போட்டு வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சுட்டு உங்களையே உரிமை கொண்டாட நினைக்கிறது என்னளவில் ரொம்பப் பெரிய தப்பு.
இந்த மாதிரி ஒரு ஒப்பந்தத்தை உங்களைத் தவிர வேற யார் போட்டிருந்தாலும் அவங்க கூட போயிருப்பேனா… சத்தியமா மாட்டேன்
வீட்டை விட்டு வெளிய வந்தன்னைக்கு என் மனசுட்ட உனக்கு என்னதான் வேணும்னு கேட்டா அது சரத் வேணும்னு பதில் சொல்லுது. உங்களைப் பார்த்துட்டே உங்க வீட்டில் ஒரு ஓரமா இருந்தா கூட போதும்னு பிடிவாதம் பிடிக்குது. அதை உணர்ந்ததும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா…”
“உனக்கு எப்படி இருந்ததோ எனக்கு இப்ப உடனே ஒரு டூயட் பாடணும் போலிருக்கு ”
“பாட்டுப் பாடலாமே… நான் கேட்க தயாரா இருக்கேன்”
“என் கட்டை குரலில் டூயட் பாடுறதுன்னா காந்தாராவ் ஸாங்தான் சூட் ஆகும். பாடட்டுமா
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே…
நிலைதடுமாறிட உலவியது
இதுக்கு மேல பாடி நேரத்தை வீண் பண்ண நான் தயாராயில்லை. சாயந்திரம் உள்ளம் கிறுக்கச்சுதேன்னு நீ அபிநயம் பிடிச்சதைப் பார்த்ததிலிருந்து மாமா ரொமான்ஸ் மூடுக்கு போயிட்டேன். அம்மிணிக்கு எப்படியோ” குறும்புக் கொப்பளிக்கக் கேட்டான் சரத்.
அவனது சட்டை பட்டனைத் திருவிய ஹிமா வெட்கச் செம்மை படர பதில் சொன்னாள்.
“சாரதா மேடம் ப்ளூ கலர்லயும் பிங்க் கலர்லயும் ஸ்வெட்டர் பின்னப் போறாங்களாம். அதை வேஸ்ட்டாக்க வேண்டாம் ஒண்ணை அடுத்த வருஷம் யூஸ் பண்ணிடலாம்”
அவள் சொன்னது ஒரு வினாடி கழித்துப் புரிய “ஹுர்ரே…” என்று கத்தினான் சரத்.
“நிஜம்மாவா ஹிமா… ஓ மை காட்… ஓ மை காட்… நான் காண்றது கனவில்லையே” என்றபடி அவளது தாமரைக் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளினான்.
“சரத்… கனவா நினைவான்னு உங்களைத்தான் கிள்ளிப் பார்க்கணும் என்னை இல்லை”
“கனவா இருந்தா இந்தக் கனவு அப்படியே என் வாழ்க்கை முழுவதும் தொடரட்டும்” என்ற அவனது வார்த்தையில் உருகிப் போனாள் ஹிமா.
“ஸ்வெட்டர் பத்தி ஒரு கேள்வி கேட்டல்ல… இதில் எதுக்கு ஹிமா கஞ்சத்தனம். சாராதா மேடம் உழைப்பு வீணாகக் கூடாது, ஒரு பொண்ணு ஒரு பையன் ஓகேயா…” என்று பாடம் சொல்லித்தந்தான் ஹிமாவுக்கு.
“அப்பாடா என்ன ஒரு அக்கறை அவங்க மேல” அவனது கணக்கைப் பார்த்து ஹிமா வியந்தாள்.
சரத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பது போல என்ற பாடல் காற்றில் ஒலிக்க
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள் தானா இவள் தானா இவள் தானா
“உனக்காகவே எழுதினது மாதிரி இருக்கு ஹிமா” என்று நெக்குருகி சரத் சொல்ல
பதிலுக்கு மனம் நிறைந்த சிரிப்புடன்
மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர் தானா இவர் தானா இவர் தானா
என்று மெலிதாக ஹிமா பாடினாள்.
அவளது இதழோரத்தில் தெரிந்த புன்சிரிப்பில் அந்த நிமிடமே தன் வாழ்க்கையை சந்தோஷமாகத் தொலைக்கத் தயாரானான் சரத்.
ஊரே அமைதியாக உறங்கும் வேளையில், தன் உள்ளத்தைக் குழைய வைத்த கிளியுடன் அவனது காதல் வாழ்க்கை இனிதே ஆரம்பித்தது.
சுபம்