Tamil Madhura

உள்ளம் குழையுதடி கிளியே -4

UKK 3,4 | உள்ளம் குழையுதடி கிளியே -3,4 | Tamil Madhura | Tamil novels | Tamil stories

ஹாய் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு தந்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களைப் போல நானும் பண்டிகைக் கால வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். கிடைக்கும் இடைவேளைகளில் அப்டேட்ஸ் தந்து விடுகிறேன்.

இன்று ஹிமாவின் கடந்தகாலம் சரத்துக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சிறு ஆச்சிரியத்தைத் தரலாம். படிங்க படித்துவிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.

உள்ளம் குழையுதடி கிளியே – 4

அன்புடன்,

தமிழ் மதுரா

 

அத்யாயம் – 4 

ரத்தின் வோல்ஸ்வேகனில் கிறிஸ்டியும், ஹிமாவும் சென்னை வெயிலின் சூட்டை மறக்கடிக்கும் ஏசியின் சில்லிப்பை அனுபவித்தபடியே அமர்ந்திருந்தனர். 

“கிறிஸ்டி ஆண்களோட ட்ரெஸ்ஸிங் பத்தி எனக்கு தெரிஞ்சதே சரத்தாலதான்… இவரோட பிஏவா வொர்க் பண்ணும்போது ஷாப்பிங் கூட பண்ணுவேன். சார் அவ்வளவு பிஸியான ஆள்”

“நாட் ரியலி. என்னோட சோம்பேறித்தனத்துக்கு வேலையை காரணமா சொல்ல வேண்டியதுதான். அதைத்தவிர ஓயாம காதுட்ட லொட லொடன்னு பேசுறவ தொல்லை இல்லாம இருக்கணும்னா எங்காவது இப்படி துரத்தி விட வேண்டியதுதான். ஹிமாவை வெளிய அனுப்பிவிட்டா ஒரு நாள் ஃபுல்லா அங்க இங்கன்னு ஊர்சுத்திட்டே ஓட்டிடுவா. “

“ச்ச… நீங்க என்னோட தேர்வில் நம்பிக்கை வச்சுத்தான் அனுப்புறிங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்” 

கார் முழுவதும் சிரிப்பொலி. தோழியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி மகிழ்ச்சியைத் தந்தது கிறிஸ்டிக்கு. 

ட்ரைவ் செய்தபடி ஹிமாவிடம் வினவினான் சரத் “நம்ம மீட் பண்ணி ஒரு அஞ்சு வருஷம் இருக்குமா?” 

““இருக்கும் இருக்கும்…”

“திருவனந்தபுரம் போனதுக்கு அப்பறம் எனக்கு வாய்ச்ச பிஏக்கள் எல்லாரும் ஐம்பது வயது ஆண்கள். அதனால் டிரஸ் செலெக்ஷனில் நீதான் முதலும் கடைசியும். ஆமாம், உன் வேலை என்னாச்சு… கடைல சேல்ஸ் கர்ளா உன்னைப் பார்த்ததும் எனக்கு பயங்கர ஷாக்”

“நீங்க வேற நான் எதோ மெட்டார்னிட்டியைக் கவர் பண்ண ஒரு வருஷம் உங்ககிட்ட பிஏவா வேலை பார்த்தேன். அப்பறம் வேலைக்கு போகல. பொருளாதார சூழ்நிலையால் மறுபடியும் வேலைக்கு செல்லும் நிர்பந்தம் வந்த சமயத்தில் நான் பெருசா ஒண்ணும் என் தகுதிகளை வளர்த்துக்கல. கிறிஸ்டி என் பிரெண்ட். அவ வேலை பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவும் வந்துட்டேன்”

“ம்ம்…” 

ஒரு திறமையான அழகான துறுதுறுப்பான பெண் மறைந்து ஒரு பொறுப்பான பெண்ணைக் கண்டது அவனுள் எதோ ஏமாற்றத்தை விதைத்தது. 

“வீட்டில் அம்மா அப்பா மத்த எல்லாரும் நலமா?” 

“அப்பா இப்ப இல்லை. அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க”

அம்மாவைப் பற்றிய விவரம் கேட்டான். அவரது நோயை நினைத்து வருத்தப்பட்டான். 

“அவங்களுக்கு சிகிச்சை”

“பாத்துட்டே இருக்கேன். வீட்டில் வச்சுப் பாத்துக்க முடியாததால் ஹோம் ஒண்ணில் சேர்த்திருக்கேன். அங்கேயே நர்சஸ் எல்லாரும் இருக்காங்க”

“கிறிஸ்டி ஒரு உதவி பண்றிங்களா?” என்றான் சரத். 

“சொல்லுங்க”

“நான் க்ரோம்பேட்ல லெதர் லாப்டாப் பேக் மொத்தமா கம்பெனிக்கு வாங்கணும்னு பொய் சொல்லித்தான் உங்க மேனேஜர்ட்ட அனுமதி வாங்கினேன்”

“எனக்குத் தெரியும் சார்” என்றாள் கிறிஸ்டி. 

“தேந்தெடுக்க உதவியா ஹிமாவை அழைச்சுட்டுப் போறேன்னு சொன்னதாலதான் ரெண்டு பேரையும் அனுப்பினார்”

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நான் கம்பெனில உங்க சார்பா ஆர்டர் கொடுத்துட்டு வந்துடுறேன்”

“தாங்க்ஸ். ஐந்து மாடலில் பாக் வாங்கிட்டு பில்லை கம்பெனி நேம்ல போட்டுடுங்க. கம்பெனி லோகோ போட முடியுமான்னு கேளுங்க. இந்த விசிட்டிங் கார்டில் நிறுவனத்தின் பேர் இருக்கு”

பொருட்களை வாங்க பணம் கொடுத்து, அவளை இறக்கிவிட்டுவிட்டு ஹிமாவுடன் அவள் தாயை அட்மிட் செய்த ஹோமுக்கு விட்டான். அவர்கள் தாயார் சௌந்திரவள்ளியை சந்தித்தான். அவர் கண்களில் பொல பொலவென நீர். 

“என் பொண்ணு நிலைமை இப்படி ஆயிடுச்சு பாருங்க தம்பி. இப்படித் தனியா நிக்கிறாளே, இவ எதிர்காலத்தை நினைச்சா…”

“அம்மா… சரத்தே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கார். நீ வேற பொலம்பாதே” என்று எச்சரித்து அடக்கினாள் ஹிமா. 

“ச்சு… ஹிமா நீ பேசாம இரு. நீங்க வருத்தப்படாதிங்கம்மா. நாங்கல்லாம் இருக்கோம்ல…”

“ஹிமா… அம்மாவோட மெடிகல் ரிப்போர்ட் காப்பி கேட்டேனே” அவளுக்கு நினைவூட்டினான் சரத். 

“சொல்லிருக்கேன் சரத். செராக்ஸ் எடுத்து வச்சிருப்பாங்க. போகும்போது வாங்கிக்கலாம்”

“இப்ப வாங்கிட்டு வர முடியுமா… ஏதாவது மிஸ் ஆயிருந்தாலும் இப்பவே கையோட வாங்கிக்கலாம்”

சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள். 

“என்னமோ சொல்லணும்னு நினைக்கிறிங்க, ஆனால் தயங்குறிங்க. என்னை உங்க மகனா நினைச்சுட்டு சொல்லுங்க”

“அவளுக்கு நல்ல வேலை மட்டும் ஏற்பாடு பண்ண முடியுமா தம்பி. இப்போதைக்கு என் வைத்தியத்துக்காக நிறைய லீவ் எடுத்திருக்கா. இன்னும் சில மாதங்களுக்கு அடிக்கடி லீவ் எடுக்க வேண்டி வரலாம். அப்பறம் ப்ரீ ஆயிடுவா” 

அவரது குரலில் ஒரு மன்றாடல் தெரிந்தது. 

“ஹிமாவைப் பார்த்ததும் அவளுக்கு வேற வேலை ஏற்பாடு பண்றதா தீர்மானம் செய்துட்டேன். சீக்கிரம் நல்ல பதிலா சொல்றேன்மா. 

ஆனால் உங்க உடல்நிலையைப் பத்தி நீங்களே நம்பிக்கையில்லாம பேசினால் உங்க பொண்ணு உடைஞ்சுட மாட்டாளா? இனிமே பழைய உற்சாகத்தோட உங்களைப் பார்க்கணும். சீக்கிரம் குணமாகி வீட்டுக்குப் போய் எனக்காக மஷ்ரூம் பிரியாணி செஞ்சு தரணும். சரியா…” என்று அவர் முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்துவிட்டுக் கிளம்பினான். 

அவரை சந்தித்துவிட்டு வந்தவனின் மனதில் பாரம். அவன் தாயை விட பத்து வயதாவது குறைவாகத்தான் இருக்கும் இவருக்கு. ஆனால் நோய் எப்படி உடலை உருக்குலைத்து விட்டது. அவன் கண்முன்னே பார்த்து ரசித்த அழகான குடும்பம் இப்படி ஆனதில் அவனுக்கு வருத்தம் நிறையவே இருந்தது. 

ஹிமா இவனிடம் வேலை பார்த்தபோது தினமும் தன் தந்தையுடன் ஸ்கூட்டரில் வந்து இறங்குவாள். 

“சரத், ஆறு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட ஆபிஸ்ல இருக்க எங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க. பை” என்றபடி பாதி வேலையில் அம்போ என்று விட்டுவிட்டு கிளம்புபவளை மறுநாள் திட்டித் தீர்ப்பான். காதிலேயே வாங்க மாட்டாள். 

“அடுத்த வருஷம் என் மாமா பையனோட எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. அதுவரைக்கும் பொழுது போகத்தான் இந்த வேலைக்கு வரேன். ரொம்ப திட்டுனிங்கன்னா நின்னுடுவேன். நீங்க மறுபடியும் இன்டர்வியூ வச்சு வேற ஆளைத் தேடணும். எப்படி வசதி?” 

தன்னிடம் பயமறியாமல் பேசும் அந்த இருபது வயது இளம்கன்றை அனுப்பி விட மனமில்லை. அதைவிட அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு புரிதல் இருந்தது. அது எதர்ச்சையாக அவர்கள் குடும்பத்துடன் ரெஸ்டாரண்ட் சந்திப்பு, வீட்டில் டின்னர் என்று விரிந்தது. ஹிமா வேலையை விட்டதும், இவன் திருவனந்தபுரத்தில் அவனது கம்பெனியின் புதிய கிளையைத் திறந்து பொறுப்பேற்றுக் கொண்டதும் தொடர்பே விட்டுப் போயிற்று. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சந்திப்பு. 

“அடையாறில் நல்ல மருத்துவமனை இருக்கு அதில் சேர்க்கலாமே. நான் வேணும்னா சேர்த்து விடட்டுமா”

“வேண்டாம் சரத் இதுதான் எனக்குக் கட்டுப்படியாகும்”

அவளது பொருளாதார நிலமையை அது தெள்ளென சொன்னது. அவன் யோசனையுடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தபோது. 

“ஓரமா நிறுத்துங்க சரத் நான் இறங்கிக்கிறேன்” 

இங்கே ஏன் இறங்குகிறாள் என்று அவன் எண்ணியபடி நிறுத்தினான். அவள் இறங்கியவுடன் கிறிஸ்டியிடம் அழைப்பு வர காரை ஓரம் கட்டினான். ஆர்டர் சம்பந்தமான அவளது கேள்விகளுக்கு பதில் அளித்தான். காரை ஸ்டார்ட் செய்யப் போகும் நேரத்தில் அந்த சிறிய தெருவிலிருந்து ஹிமா வந்தாள். அவளை திகைப்புடன் பார்த்தான் சரத். 

ஏனென்றால் அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஆர்ப்பரிக்கும் அருவியைப் போல சந்தோசம் குமிழிட பேசிக் கொண்டே வந்தான் அந்த மூன்று வயது மதிக்கத் தக்க சிறுவன். அவனது சந்தோஷத்தின் எதிரொலி அவன் தாயின் முகத்தில் சிறிதுமில்லை. சக்தி எல்லாம் வற்றி விட்டதைப் போல் நடைப்பிணம் போல நடந்தாள் அவள். சரத் எதிரே நிற்பதைக் கூட உணர முடியாமல் நடப்பவளின் கையைப் பிடித்து நிறுத்தினான். 

“ஹிமா… ஹிமா…” என்று அவன் உலுக்கியதும்தான் நினைவுலகத்துக்கு வந்தாள். 

“சரத்… நான்… துருவ் எங்கே…” தேடினாள். 

“அம்மா…” என்றவனைத் தூக்கிக் கொண்டாள். 

“இது துருவ், என் மகன்” 

“ஹாய்…” என்றபடி அவனது கைகளைக் குலுக்கினான். 

“அங்கிள்… நான் ரொம்ப ஹாப்பி”

“அப்படியா… டீச்சர் குட் சொன்னாங்களா”

“அதைவிட பெருசு… இனிமே ஸ்கூலுக்கு வரவேணாம்னு சொல்லிட்டாங்க”

“ஓ… அப்படியா… அது சந்தோஷப்படவேண்டிய விஷயம்தான்” என்றான் அங்கிருந்து ரோட்டுக்கு ஓட முயன்ற சிறுவனை லாவகமாகத் தடுத்தபடி. 

“உன்னை முதன் முதலில் பாக்குறதால நம்ம மூணு பேரும் ஏதாவது சுவீட் சாப்பிடுவோமாம்” என்றபடி அவனை காரில் அமரவைத்தான். அமர்ந்தவுடன் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து ஹார்னை அடித்து, ஸ்டியரிங்கை வளைத்து, கார் சாவியை பிடித்து இழுக்க முயன்ற துருவ்விடம் கடிந்து கொண்டாள் ஹிமா 

“துருவ் இப்படி எல்லாம் சேட்டை பண்ணா நம்ம பஸ்ஸில் போகலாம் இறங்கு”

“ஒகே மா நான் குட்டா இருக்கேன்” 

அதன்பின் அமைதியாய் வந்தான். இருந்தாலும் உணவகத்தில் அவனைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. ஹை எனர்ஜியுடன் இருக்கும் இவனை ஹிமா எப்படித்தான் சமாளிக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டான். 

“தப்பா எடுத்துக்காதே ஹிமா. பொருளாதார நிலமை நல்லா இருக்குற மாதிரி தெரியலையே. துருவ்வின் அப்பா… எங்கிருக்கார்”

“இறைவனிடம்… சத்யாவை அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சாம். அதுதான் சீக்கிரம் கூட்டிக்கிட்டார்”

“ஓ மை காட்… எப்ப நடந்தது இது…”

“ரெண்டரை வருஷமாச்சு. அப்பாவும் சத்யாவும் ஒரே பைக் ஆக்சிடென்ட்ல”

“காம்பென்சேஷன் ஏதாவது?” 

“ரெண்டு பேரும் தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்த்தாங்க. அப்பாவுக்கு கொஞ்சம் பணம் வந்தது. சத்யாவுக்கு தந்த பணத்தை அவர் வீட்டில் எடுத்துகிட்டாங்க. நடுவில் நான் வேலை தேடுற வரை செலவு, அம்மா வைத்தியம்னு அப்பாவோட பணமெல்லாம் கரைஞ்சு இப்ப கொஞ்சம் இருக்கு. அதை வச்சுதான் சமாளிச்சுட்டு இருக்கேன்”

அவர்கள் இருவருக்கும் உணவு உண்ணவே பிடிக்கவில்லை. ஸ்பூனால் கிண்ணத்திலிருக்கும் உணவை அளைந்து கொண்டிருந்தார்கள். 

“ஸாரி… கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதே… துருவ் ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனையா… நான் பேசிப் பாக்கட்டுமா…”

“என்னென்னவோ சொல்றாங்க சரத். ஆங்கர் ப்ராப்ளம், வயலென்ட் பிஹேவியர், லேர்னிங் ப்ராபளம், மற்ற பிள்ளைகள் கூட கோப் அப் பண்ண முடியல, டிக்ஸ்லெக்சியா, ஏடிஹச்டி இப்படி எனக்கு புரியாத பாஷைல பேசுறாங்க. 

முடிவா இவனை ஸ்பெஷல் எஜிகேஷன் தரும் பள்ளியில்தான் சேர்க்கணும்னு சொல்லிட்டாங்க. அங்க வருஷத்துக்கு ரெண்டு மூணு லக்ஷம் பீஸாகும் போலிருக்கு. அவ்வளவு பணம் செலவளிக்க என்னால முடியாது. அதனால எந்த ஸ்கூல்ல இடம் கிடைக்குதோ அங்க சேர்க்கணும்”

இருவரும் என்ன பேசுவதென்றே தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

“பிளாக் அண்ட் வைட் படம் மாதிரி அழுது வடியும் என் கதையைப் பேசி உங்க மூடை ஸ்பாயில் பண்ணிட்டேனா. சரி விடுங்க… நீங்க எங்க சென்னை பக்கம். கல்யாணம் ஆயிடுச்சா”

“இன்னும் இல்லை. சீக்கிரம் பண்ணிக்கணும்”

“உங்களுக்கு ஒரு காதலி இருக்காங்கன்னு அப்பயே ஆபிஸ்ல ரூமர் இருந்தது. நிஜம்தானே”

புன்னகைத்தான். 

“எத்தனை வருஷம் லவ் பண்ணிட்டே இருப்பிங்க. பேசாம கல்யாணத்தை முடிச்சுட்டு செட்டில் ஆகுங்க பாஸ். உங்கம்மாவும் சந்தோஷப்படுவாங்க”

வீட்டில் அவளை இறக்கி விட்டான். பக்கத்து வீட்டில் க்றிஸ்டியை சந்தித்து அவள் வாங்கி வந்திருந்த பொருட்களை பெற்றுக் கொண்டான். 

அவனுக்கும் சேர்த்து உணவு சமைத்துக் கொண்டிருந்தவளைத் தடுத்து மறுநாள் வருவதாக வாக்களித்து சென்றான். 

மறுநாள் ஹிமாவை சந்தித்தவன் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டான்.