அதற்குள் ஜிஷ்ணுவிடம் பேசியபடியே பாஸ்கெட்பால் கோர்ட்டை அடைந்திருந்தனர். அவனது வீட்டின் பின்னே அமைந்திருந்த அழகான சிறிய கோர்ட். அங்கிருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வீட்டினுள் நுழைந்து பக்கத்திலிருக்கும் மாடிப்படி வழியாக அவனது அறைக்கு சென்றுவிடலாம். அவன் அறை பால்கனியிலிருந்தும் அவ்விடத்தைக் காணலாம். இரவிலும் விளையாட ஏதுவாக விளக்குகள் போடப்பட்டிருந்தன.
ஜிஷ்ணு பேசும் டாப்பிக்கே சரயுவுக்குப் பிடிக்கவில்லை. அவன் பயங்கர புளுகுமூட்டையாய் மாறிவிட்டதாய் நினைத்தாள். பேச்சை மாற்ற எண்ணியவளின் கண்களில் பாஸ்கெட்பால் கோர்ட்டின் அழகு பட்டது.
“வாவ் ஜிஷ்ணு இந்த கோர்ட் அழகாயிருக்கு… நிஜம்மாவே நீங்க பாஸ்கெட் பால் விளையாடுவிங்களா…?”
“கத்துக்கிட்டேன் சரயு… ” என்றான் ஆர்வத்துடன்.
‘எனக்குப் பிடிச்ச விளையாட்டைக் கூடக் கத்துகிட்டவனுக்கு என் மேல ஆசை மட்டும்தானாம். காதல் இல்லையாம்’ சரயு இவ்வாறு நினைக்க,
‘இவ இன்னமும் விளையாட்டுப் பொண்ணு. இந்த விளையாட்டிலையே அவளை மனசு மாற வைக்க வேண்டியதுதான்’ இது ஜிஷ்ணுவின் எண்ணம்.
“சரி ஒரு பேஸ்கெட்பால் போட்டி வைக்கலாம். ஜெய்சவங்க தோத்தவங்க சொல்லுறதை ஏத்துக்கணும்” தீர்ப்பு சொன்னான். சரயுவுக்கு இந்த யோசனை ரொம்பப் பிடித்துவிட்டது.
“சரி ஆரம்பிப்போமா…” புடவையை இழுத்து செருகிக் கொண்டு ஆரஞ்சு வண்ண பந்தைக் கையிலெடுத்தபடி வினவினாள் சரயு.
“ஓகே… நிபந்தனையை சொல்லிடுறேன். பந்தை பாஸ்கெட்ல போடணும். மொத்தம் அஞ்சு டர்ன். நான் ஜெயிச்சா நீ விஷ்ணுவை மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கணும் ஓகேயா” என்றான்.
“சரி நான் ஜெயிச்சுட்டா…” என்றாள் சரயு.
“அது நடக்காது… நடக்கக் கூடாது… நடக்கவும் விடமாட்டேன். விஷ்ணுவைக் கல்யாணம் செய்யணும்னுறதைத் தவிர வேற ஏதாவது கேளு”. ‘அதுதான் நீ கேட்காமலேயே ஏற்கனவே நடந்துடுச்சே’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.
“நீங்க பயங்கர பார்ஷியல் ஜிஷ்ணு. பட் இதுக்கு ஒத்துக்குறேன். நான் ஜெயிச்சா… விஷ்ணுவைப் பாத்து ரொம்ப வருஷமாச்சு… ஒரே ஒரு தடவை அவனைப் பாக்கணும். எனக்கு அது போதும்பா” என்றாள்.
‘வாடா வா… என்னய்யா ஜெய்க்கப் போற, நீ என்ன எனக்கு அறிவுரை சொல்லுறது. விஷ்ணு வரட்டும் அவனும் இதையே சொன்னா நான் கேட்டுக்குறேன்’
தான் ஜிஷ்ணு விஷ்ணு என இரட்டை வேஷங்களை மனதுக்குள் போடுவதையே அவள் பிரதிபலிப்பதை மீண்டும் ஒருமுறை வியந்தபடி, “விஷ்ணுவேதான் வேணுமா? அப்ப நான் யாரு? அதே கண்ணு, அதே மூக்கு, அதே ஆள்தானே நான்”
“நீங்க அதே ஆளா இருக்கலாம்… ஆனா நீங்க கண்டிப்பா என் விஷ்ணு இல்ல” என்றவாறு லாவகமாய் பந்தினைத் தரையில் தட்டிப் பிடிக்க ஆரம்பித்தாள்.
திருமணம் முடித்த கையோடு காதல் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டியவர்கள், அவரவர் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வெறியுடன் அனல் பறக்கும் கூடைப்பந்தாட்டத்துக்குத் தயாராயினர். விளையாட்டு ஆரம்பமானது.
சரயுவை விட இரண்டு பிடி அதிகம் உயரமாயிருந்ததாலும், இவனுக்கெங்கே பாஸ்கெட்பால் விளையாட்டு பற்றித் தெரியும் என்று சரயு அஜாக்கிரதையாய் விளையாடியதாலும், அசால்ட்டாய் கூடையில் பந்தினைப் போட்டு முதல் வெற்றியைத் தனதாக்கினான் ஜிஷ்ணு.
சேலை கால்களைத் தட்டுமே என்று நினைத்து தயங்கித் தயங்கி விளையாடியவளின் மனதிலிருக்கும் விளையாட்டு வீராங்கனை சிலிர்த்தெழுந்தாள்.
“முதன் முதல்ல விளையாடுற, பாவம் குழந்தப் புள்ள ஏமாந்து போயிடக் கூடாதேன்னு விட்டுக் கொடுத்தேன்” கேலியாய் சிரித்தவனிடம் நக்கலாய் பதில் சொன்னாள்.
“அவுனா… நம்பிட்டேன். இனிமே விட்டுத்தராம ஒழுங்கா விளையாடு.” என்று அதே நக்கலுடன் ஜிஷ்ணுவும் பதிலளித்தான்.
விளையாட வாகாக சேலையை மேலும் நன்றாக உயர்த்திக் கட்டியவள், முந்தானையை நன்றாக இறுக்கிச் செருகினாள். அவளது மனம் முழுவதும் இலக்கை நோக்கியே முன்னேறியது. ஜிஷ்ணு அசந்த நேரம் அவனிடமிருந்து பாலினைப் பிடுங்கி தனக்கு அடுத்த வெற்றியைத் தேடிக் கொண்டாள். ஜிஷ்ணுவுக்கு எதிரி சுதாரித்து விட்டது புரிந்தது.
“ஏண்டி சரவெடி… என்னையவா தோக்கடிக்குற… அடுத்த பாயிண்ட்ட எப்படி எடுக்குறேன் பாரு” அவன் அவள் கையிலிருக்கும் பந்தினைப் பிடுங்க முயல, அவள் போக்குக் காட்டாமல் ஓட, அவளை ஒரு வழியாக கார்னர் செய்து அடுத்ததை அவன் வசமாக்கிக் கொண்டான்.
வெற்றியைக் கொண்டாட “ஹுரே… ” என்று கத்தியவனிடம்,
காதைத் திருகி, “இன்னும் ரெண்டு சான்ஸ் இருக்கு. ரெண்டும் எனக்குத்தான்” என்றாள்.
இன்னும் இரண்டு முறைதான். இரண்டு முறையும் வெற்றி அவளுக்கே வேண்டும்.
“இப்ப பாருடா” என அவனிடமிருக்கும் பந்தினை லாவகமாய் பிடிங்கிக் கொண்டு முன்னேற, ஜிஷ்ணு அவளைத் துரத்தியபடியே ஓட, தூரத்திலிருந்து சரியாகக் கூடையில் குறிபார்த்து எறிந்தாள். மனோரமா டீச்சரின் பயிற்சி சோடை போகுமா. சரியாக கூடையில் பந்து விழுந்தது.
பனமரத்துல வவ்வாலா
சரயுகிட்ட சவாலா?
ஜிஷ்ணுவைக் கேள்வி கேட்டு வெற்றியைக் கொண்டாடினாள்.
“என்ன ஜிஷ்ணு, என்கிட்டயா உன் கத்துக்குட்டி விளையாட்டைக் காமிக்குற…” இடுப்பில் கை வைத்தபடி மூச்சு வாங்க கேட்ட சரயுவைத் திரும்பிப் பார்த்த ஜிஷ்ணு திகைத்துப் போனான்.
விளையாட்டு மும்முரத்தில் சரயுவுக்கு ஆடையைப் பற்றின கவனம் சிதறியிருக்க, அந்த அரக்கு நிற சேலை அவள் ஓடும்போது முட்டி வரை உயர்ந்து, அவளது கால்கள் வெயில் பட்டு வெண்ணையில் செய்த சிலையைப் போல மின்னியது. அதை பார்த்த ஜிஷ்ணுவின் உறுதி உருக ஆரம்பித்தது.
அவள் மேலாடை அரைகுறையாய் தனது பணியை செய்து கொண்டிருந்தது. அதுவே அலாதிக் கவர்ச்சியாய் அவனது விழிகளை சுண்டி இழுத்தது.
‘சரயு… நீ இவ்வளவு அழகா’ என்று மூச்சு விடவும் மறந்து பார்த்தான்.
புடவையை இழுத்து செருகியதால் இடை தனது அழகான சாண்ட்கிளாக் வளைவை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மாசு மறுவின்றி சந்தனக் கட்டையால் இழைத்த சிலை போல் நின்றாள். மூச்சிரைக்க, நெற்றியில் வைரக் கற்களாய் வியர்வை மின்ன, அந்த வைரக்கற்கள் மஞ்சள் அழகியின் சொக்கத் தங்க இடையிலும் சிறிது தெளித்துப் பதிந்திருக்க, அவள் பந்தினைத் தரையில் தட்டியபடி நின்றது, தகிக்கும் தனது உணர்வுகளுடன் விளையாடியதைப் போலவே ஜிஷ்ணுவுக்குப் பட்டது. இப்படி ஒரு கோலத்தில் முதன் முதலில் தன் மனம் கவர்ந்தவளைப் பார்த்ததும், ‘குபீல் குபீல்’ என குண்டு வெடிப்பதைப் போல ஜிஷ்ணுவின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.
‘சரயு… ஒழுங்கா சேலையைக் கட்டு… ஐயோ என்னால பார்வையைத் திருப்ப முடியல… மனசு எங்கெங்கையோ போகுது… எனக்கு உரிமையானதை உன்கிட்ட கேட்டுக் குரங்காட்டம் போடுது. என்னைக் கெட்டவனாக்காதடி’ ஜிஷ்ணுவின் இதயம் கதறியது.
அவன் பெண்ணை அறியாதவனில்லை. ஆனால் சரயு அவனது தேவதை. இவளைத் தவிர வேறு யாராவது அந்த இடத்திலிருந்திருந்தால் ஏன் அது ஜமுனாவாகவே இருந்திருந்தாலும் ஜிஷ்ணுவை அது துளி கூட பாதித்திருக்காது. ஆனால் இப்போது அவன் கண்கள் பார்த்ததை மனம் தனக்கே வேண்டும் வேண்டும் என்று கேட்டது. அவள் கழுத்திலிருந்த தாலி வேறு ‘இனி உன்னைத் தடுக்கும் சக்தி சரயுவுக்குக் கூட இல்லை ஜிஷ்ணு’ என்று மந்தகாசமாய் அவனைப் பார்த்துப் புன்னகைத்தது. அவளைப் பார்ப்பதை விடுத்து வேறு பக்கம் பார்வையைத் திருப்ப முயன்றான்.
அடுத்த பாலை எடுத்துக் கொண்டு அவள் முன்னேறத் தொடங்கியதைப் பார்த்தான். முயன்று மனதுக்குக் கடிவாளம் போட்டபடியே,
‘ஏடு கொண்டலவாடா, இவ தெரியாம உளருறாளே… ஜிஷ்ணுவாவது கொஞ்சம் யோசிப்பான். சரயு பித்துப் பிடிச்ச விஷ்ணு மட்டும் இப்ப வெளிய வந்தான், இவளை இந்தக் கோலத்துல பாத்துட்டு சும்மாவா விடுவான். தன்னோடவளா ஆக்காம போக மாட்டானே. இப்பயே இவளோட ஒவ்வொரு அசைவுக்கும் என் மனசை உடைச்சுட்டு வெளிய வரப் பாக்குறானே… நோ விஷ்ணு நீ வரக்கூடாது… அதுக்காகவாவது நான்தான் ஜெய்க்கணும்.’ தனக்குள்ளே கூறிக் கொண்டான்.
இப்போது சரயு விஷ்ணுவின் சார்பாய் விளையாடுவதாகவே அவனுக்குப் பட்டது. “ஏய் உன்னை ஜெயிக்கிறேன் பாருடி” என்றவாறு பாய்ந்து சென்று பந்தினைப் பிடுங்க முயன்றான்.
கடைசி பந்து யார் வெல்கிறார்கள் என்ற போட்டியில் இருவருமே வெறித்தனமாய் விளையாடினர்… கண்மண் தெரியாத விளையாட்டில் ஜிஷ்ணுவின் கைகள் அவளது வெல்வெட் இடுப்பை அழுத்தமாக உரசிவிட, சரயு திக்கென உடையைக் குனிந்து பார்த்தாள். ஒரு ஆணின் முன்பு தான் நின்றுருந்த கோலம் அவளுக்கு அதிர்வளிக்க, ஏன் ஜிஷ்ணு தன்னைப் பார்ப்பதை விடுத்து வேறொங்கோ பார்த்தான் என்பது புரிய, அவமானத்தால் கூனிப் போனாள். ஏற்கனவே பெண்ணை போகப் பொருளாய் பார்க்கும் ஜிஷ்ணு என்ற வியாபாரி தன்னைப் பற்றி என்ன நினைப்பான்? தனக்கு எத்தனை லட்சத்தை விலையாகக் கூறுவான் என்ற எண்ணத்திலேயே கூசிப் போனாள். பந்தினை சட்டென்று கீழே நழுவவிட்டு விட்டு விறுவிறுவென சில நொடிகளில் சேலையை ஒழுங்காகக் கட்டினாள்.
அவளது செயலைப் பார்த்ததும் புன்னகைத்தபடியே ஜிஷ்ணு அவள் நழுவவிட்ட பந்தினைக் கைப்பற்றினான். இறுதியில் அவன் கைகளில் பந்து சென்றதும் சரயுவின் முகத்தில் கலக்கம் தோன்ற, ஜிஷ்ணு கூடையில் அவளைப் பார்த்துக் கொண்டே பந்தைத் தூக்கிப் போட முயன்றான். இனிமேல் விஷ்ணுவைப் பார்க்கவே முடியாதோ என்ற எண்ணத்தில் சரயுவின் கண்கள் கலங்க, பேய் மழையால் சடுதியில் நிரம்பிய குளத்தைப் போல வினாடியில் கண்ணீரால் அவளது கண்கள் நிறைந்தது.
“நோ… விஷ்ணுவப் பாக்கணும்… ஐ மிஸ் யு விஷ்ணு…” என்று சற்று உரக்கவே குரல் உடைய முணுமுணுத்த அவளது செவிதழ்கள் வேதனையில் அதற்கு மேல் பேச முடியாமல் துடிக்க ஆரம்பித்தது. ஏமாற்றத்தால் சிவந்த முகத்தை அவனுக்குக் காண்பிக்க விருப்பமில்லாமல் கைகளால் மூடிக் கொண்டு விம்மினாள். அழுவதே பிடிக்காத சரயு அப்போதும் அந்த வேதனையை மறைக்கவே முயன்றாள். இருந்தாலும் தன்னிடமே அவள் முதன் முறையாய் தோற்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜிஷ்ணுவின் மனம் கலங்கியது. இதுவரை அவள் உணர்ச்சிகளை வெளிக் காட்டியதே இல்லை. அவளது ஒரு சில செயல்கள் மூலம் ஜிஷ்ணுவே அவளது எண்ணத்தைப் புரிந்து கொள்வான். இப்போது வேதனையைப் பிரதிபலிக்கும் அந்த அழகு வதனத்தை அவனால் கண் கொண்டு காண முடியவில்லை. முதன் முறையாக அவள் விம்மி அழுகிறாள்.
சில நாழிகைகளுக்கு முன்னர் கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்கு முன் அவன் மனைவி சரயுவின் கண்களில் நீர். அதுவும் அவனை விட்டுப் பிரிய முடியாமல். இதற்காகவா இவ்வளவு பாடுபட்டான். அவளது ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அவன் இதயத்தில் ரத்தமே வழிந்தது.
‘போதும் இந்த கஷ்டம். இனிமே என் பங்காரத்தை அழ விடமாட்டேன்’
கையிலிருந்த பந்தினை வெளியே தூக்கி எறிந்தவன் ஓடி வந்து சரயுவைக் காற்று கூடப் புகாதவண்ணம் இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
“அம்மாயி… நா பங்காரம்… விஷ்ணு வந்துட்டேன்ரா… இந்தப் பாவி மேல நீக்கு அந்த்த இஷ்டமாரா… விஷ்ணுவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா… அவனுக்கு உன் மேல இருக்குற ஆசையைவிட அதிகமா அவன்மேல அன்பு வச்சிருக்கியா…
அம்மோ… என் சரவெடி எதுக்குமே கலங்க மாட்டாளே… அவ கண்ணுல நான் தண்ணியே பாத்தது இல்லையே… எனக்காகவா இந்தக் கண்ணீர்… வேண்டாம்ரா… இந்தக் கண்ணுல தண்ணியே வரக்கூடாது…” என்றபடி கண்களில் நீர்வழிய அவளை அழுத்தமாய் முத்தமிட்டான்.
இருவரும் இவ்வளவு நாள் விளையாடிய கண்ணாமூச்சி முடிவுக்கு வர, அணைபோட்டு வைத்திருந்த வேதனை வெளிவந்தது. மதகைத் திறந்தவுடன் பெருக்கெடுக்கும் வெள்ளமாய் அடக்கப்பட்ட உணர்வுகள் சீறிப் பாய்ந்தது.
அழவே கூடாது என்று தனக்குத் தானே போட்டுக் கொண்ட சட்டம் தவிடுபொடியாக, ஓவென வெடித்துக் கதறிய சரயு, “விஷ்ணு எங்க போயிருந்த விஷ்ணு… என்னை விட்டுட்டு இவ்வளவு நாளா எங்க போயிருந்த… உன்னப் பாக்காம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பினாள்.
“டார்லிங்… உன் கண்ணுல தண்ணியே வராதேரா… இப்ப நீ அழ நான் காரணமாயிட்டேனே… நீதானேரா கடமையை செய்வோம்ன்னு சொன்ன… நீ அப்பவே ஒரு வார்த்தை சொல்லிருந்தா எங்கயாவது போயிருக்கலாமே… நம்மளாவது சந்தோஷமா இருந்திருப்போம்.” எனக் கதறியபடி மாறி மாறி முகம் முழுவதும் ஒரு இடம் பாக்கியில்லாமல் முத்தமிட்டான்.
அவன் முகத்தை நிமிர்த்திய சரயு அவளது விஷ்ணுவின் இதழ்களில் ஆவேசமாய்த் தனது இதழ்களைப் பதித்தாள். அவள் தொடங்கியதை அவன் எளிதில் கைப்பற்றினான். அதன் பின் நீண்ட நேரம் அவளால் அந்த இதழ்களை விடுவிக்க முடியாமலேயே போயிற்று.
அவளது விஷ்ணுவின் ஆவேசமான இதழ் தாக்குதலை சமாளிக்க முடியாது ரத்தம் கசிந்த இதழ்களை அவள் விடுவித்து நிமிர்ந்தவுடன், சற்று நேரம் முன்பு கண்களால் ரசித்த இடங்களின் சுவையை விஷ்ணுவின் இதழ்கள் வேக வேகமாய் அறிய முற்பட்டது.
அவனது கைகளின் மீறலைக் கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்தாள் சரயு. ஜிஷ்ணுவின் ஆசை தீயாய் கொழுந்துவிட்டு எரிய, அவன் பார்வை சென்ற இடத்தைக் கண்டு வெட்கத்துடன் அவன் கண்களைப் பொத்தினாள்.
“விஷ்ணு… ப்ளீஸ்” எனக் கெஞ்ச,
அனாயாசமாய் அவளது கைகளை விலக்கிய ஜிஷ்ணுவின் கைகள் அவளது வாயை அழுத்தமாக மூடின.
“ப்ளீஸ் நோ சொல்லிடாதரா… நாக்கு இப்புடே, இக்கடே, நா பங்காரம் காவாலி”
தனது பிரிவுக்கும் இழப்புக்கும் ஓரளவாவது ஈடு செய்யும் விதமாக சரயுவிடம் ஏதாவது இருக்கிறதா என்றறிய தனது தேடுதல் வேட்டையைத் துவங்கினான்.
ஜமுனாவுடனிருக்கும் போது ஒரு கடமையாக இருந்த செயலில் இவ்வளவு இன்பமா என்று திகைத்துப் போனான் ஜிஷ்ணு. அவ்வப்போது மறுத்து சிணுங்கிய சரயுவின் குரலை அவளது கொலுசு சத்தமாக எண்ணிப் புறக்கணித்தான்.
இரு உடல்களின் சங்கமமே கூடலென்றால் அவனுக்கு எத்தனையோ இரவுகளில் அதுவும் ஒன்று. இரு மனங்களின் இணைவே தாம்பத்தியம் என்றால் இருவரும் முதன் முறையாக சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்தனர்.
நீல வானம்… நீயும் நானும் கண்களே பாஷையாய்… கைகளே ஆசையாய்…
வையமே கோயிலாய், வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நானென்று இருவேறு ஆளில்லையே…
ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தனை
செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி
நீலமேகவண்ணனின் நிறம் கொண்ட வானமே கூரையாக, பூதேவியின் மடியே பாயாக, தம்பதியினருக்கு குளிர்ந்த காற்று வெண்சாமரம் வீச, மங்கையவள் கூச்சத்தை போக்க வெயில் காலத்திலும் சூரியனை மேகம் திரையாய் மாறி இருட்டாக்க, மன்னவன் மனம் குளிர பன்னீராய் மழை தூவ, நல்லவர்களின் பிரார்த்தனைகளுடனும், தேவர்களின் ஆசியுடனும், ஒரு காவியக் காதலுக்கு சாட்சியாக சரயுவின் மணிவயிற்றில் அபிமன்யு உதித்தான்