Tamil Madhura

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12

இதயம் தழுவும் உறவே – 12

விசாரிக்கும் தொனியில் கணவன் அமர்ந்திருக்க, யசோதாவிற்கு சற்று பதற்றம் வந்தது. அமர்ந்திருந்தவாக்கிலேயே மாறாதிருந்தான், அவள் கரங்களோடு கோர்த்திருந்த கரங்களையும் பிரிக்கவில்லை. அவளுக்கு மூச்சு விடுவதே சிரமம் போல பரிதவித்து போனாள்.

சிறிது நேர மௌனத்தின்பின், எதுவும் பேசாமல் கவியரசன் எழுந்து செல்ல, அவளுக்கு அப்பொழுது தான் நன்றாக மூச்சே விடமுடிந்தது. ஆசுவாசமாய் எண்ணியவள், மீண்டும் படுக்கையில் தலை சரிக்க, எழுந்து சென்றவனோ கதவினை அடைத்துவிட்டு திரும்பி வந்தான். படுக்கையில் சரிந்தவள், மீண்டும் எழுந்தமர்ந்து விட்டாள்.

அவன் ஒரு ஆசிரியர் என்பதை நிரூபிக்கும் வகையில், தவறு செய்த பிள்ளைகளிடம் விசாரணை நடத்தும் தொனியில் அருகில் வந்தவனை பார்க்க அவளுக்குள் மெலிதாக உதறல் எடுத்தது.

இருந்தும் வெளியில் எதையும் காட்டாமல் இருக்க முயற்சி செய்தபடி தலை கவிழ்ந்து அவள் அமர்ந்திருக்க, மீண்டும் அருகில் அமர்ந்தவன், அவனது ஒற்றை விரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்தி, “அண்ணி என்ன சொன்னாங்க?” என்றான் நேரடியாக.

இதை சற்றும் எதிர்பார்க்காத யசோதாவின் விழிகள் மிரட்சியை வெளிப்படுத்த, அதுவே அவனுக்கு காட்டி கொடுத்துவிட்டது, அவளது சோர்விற்கான காரணத்தை. திருதிருவென விழித்தவள், “அவங்க என்ன சொல்லிடப்போறாங்க?” என்று முகத்தை வேறுபுறமாக திருப்பி அவசரமாக கூறினாள்.

மீண்டும் முகத்தை அவன்புறம் திருப்பியவன், “நீ எவ்வளவு தைரியம், எவ்வளவு பேசுவேன்னு எனக்கு தெரியும். ஆனா, அவங்க என்ன சொன்னாலும் ஏன் அமைதியா போயிடற?” அவளை நன்கு புரிந்தவனாய் கேட்டக, கணவன் தன்னை சரியாக கண்டுகொண்டதில் அதிர்ந்தாள்.

கவியரசனுக்குமே வித்யாவின் பேச்சு அதிர்ச்சி தான். யசோதா திருமணமான இத்தனை மாதங்களில், அவளது பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அவள் கேட்டுக்கொண்டதே இல்லை. திடீரென கேட்டதோடல்லாமல் தொடர்ந்து சில நாட்கள் அங்கேயே இருக்கவும் அவனுக்கு சந்தேகம் வந்தது. இங்கு என்ன பிரச்சனை அவளுக்கு? என சிந்திக்கலானான்.

கவியரசன் அதிகம் எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லையே! யசோதாவிற்கான பிரச்சனை வித்யாவாகத்தான் இருக்கும் என விரைவிலேயே ஊகித்து விட்டான். அதன்பிறகு யசோதா தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்ததும் இருவரையும் கண்காணிக்கலானான்.

அப்படி கண்காணித்ததில் தான் வித்யா யசோதாவிடம் பேசியதை கேட்டிருந்தான். அதிலும் யசோ எதுவும் பேசாமல் கடந்து போனது, ‘இது தான் வழக்கம்’ என அவனுக்கு சொல்லாமல் சொல்லியது. அதன்பிறகு அவர்கள் இருவரையும் நன்கு கவனிக்க, வித்யாவின் கொடுநாக்கு அடிக்கடி சுழல்கிறது என்பது புரிந்தது.

வித்யாவின் பேச்சு தாளாமல், சோர்ந்து போகும் யசோதா, தன்னிடம் கூறுவாளோ என கவியரசன் எதிர்பார்த்திருக்க, அப்படி எதுவும் நடக்கவே இல்லை. அது அவனுக்கு சற்று சினத்தையும் தந்தது.

யசோதாவும் வித்யாவிற்கு பதில் தராமல் அமைதி காக்க, இவனிடமும் சொல்லாமல் இருக்க… என்ன தான் எண்ணுகிறாள் என்று தெரிந்து கொள்ள தான் இன்று இந்த விசாரணை.

கவியரசனின் பேச்சிலேயே, அவன் கண்டுபிடித்து விட்டான் என யசோதாவிற்கு புரிந்தது. இப்பொழுது என்ன செய்ய, எப்படி சமாளிக்க என அதிதீவிரமாக சிந்தித்தாள்.

யசோதாவின் முகம் சிந்தனை வயப்பட்டிருப்பதை பார்க்கவும், கவியரசனின் சினம் மேலும் அதிகமானது. “பொறுமையா கேக்கிறேன். அது உனக்கு பிடிக்கலை போல” குரலை கடினமாக்கி அவன் பேச, நிமிர்ந்து அவன் விழிகளைப் பார்த்தாள். அவன் கோபமாய் இருப்பது புரிந்தது.

எதுவும் பதில் கூறாமல் அவன் தோளில் வாகாக சாய்ந்தவள், “டையர்டா இருக்கு. அப்பறமா பேசலாமா?” என சோர்வாக கேட்டாள். இப்போதைக்கு இந்த பேச்சை ஒத்திப்போட வேண்டும் என்று மட்டும் தான் அவளது எண்ணவோட்டம்.

அவள் தன் தோளில் சாய்ந்ததை நம்பமுடியாமல் திகைத்தவன், அவளது நெற்றியெல்லாம் சூடாக இருப்பதை உணர்ந்து, “சரி எதையும் யோசிக்காமா படு” என்றான் ஆதரவாக.

தலையை சரியென அசைத்தவள் எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டாள். பிறகு இரவு உணவினை முடித்து ஒரு மாத்திரையையும் எடுத்துக் கொண்டவள், உடலின் சோர்வால் நன்கு உறங்கி விட்டாள். நாளை இதைப்பற்றி பேச வேண்டும் என்று கவியரசன் தீர்மானித்துக் கொண்டான்.

மறுநாள் மாலையில் கல்லூரியை விட்டு தோழிகளோடு வெளியே வந்தவளை கவியரசன் எதிர்கொண்டான். ஆச்சர்யமாய் விழி விரித்தவள், “எப்போ வந்தீங்க?” என கேட்க, “பத்து நிமிஷம் ஆச்சு” என்றான் புன்னகையோடு.

சிறிது வெட்கம் கலந்து தோழிகளுக்கு தன்னவனை அறிமுகம் செய்ய, அவர்கள் அனைவரும் கேலி பார்வையும், பேச்சுமாய் தம்பதிகளிடமிருந்து விடைபெற்றனர்.

கவியரசன் யசோதாவை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்றான். வழிபாடு முடிந்ததும், பிராகாரத்திலேயே அமர சொன்னான். ‘மாஸ்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காரே!’ என எண்ணியபடியே அமர்ந்திருந்தவளிடம், எதுவும் கேட்காமல் கூர்ப்பார்வை பார்த்திருந்தான்.

நேற்றைய கேள்விகளுக்கான பதிலை கேட்பதற்கு தான் இந்த பார்வை என அவளுக்கு புரியாமல் இல்லை.

எப்படி சமாளிக்க என்று எண்ணியபடியே, “அது… வந்து…” என திணறியவள், “ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் அவனிடம் கேள்வியாக.

முறைத்தவன், “கண்டிப்பா நீ சொல்லி இல்லை” என்று சூடாக சொல்லவும், ‘அது எனக்கு தெரியாதா?’ என மனதில் நினைத்தவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது அவனது குரலின் பேதம்.

‘நான் அவரிடம் சொல்லவில்லை’ என்னும் கோபமா? என சரியாக புரிந்து கொண்டவள், “நீங்க எதுவும் சண்டை போட்டுட்டா அதுக்காத்தான்…” என்றாள் தவிப்பாக. அவன் முகத்தில் எரிச்சல் மறையாதிருக்கவும், அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கரங்களை பிடித்தவள், “நானே சமாளிச்சுக்கலாம்ன்னு நினைச்சேன்” என்றும் சேர்த்து சொல்ல,

“ஓ… ரொம்ப நல்லா… சமாளிக்கிறியே! பயந்துட்டு அம்மா வீடு போறது, எதுவும் பதில் பேசாம இருக்கிறது, மனசு கஷ்டப்பட்டு தலைவலியில படுத்துகிறது…” என நக்கல் தொனியில் அவன் அடுக்க,

“எனக்கு பிரச்சனையை வளர்க்க இஷ்டம் இல்லை. புரிஞ்சுக்கங்களேன்” என்றாள் தவிப்பாக. “ஏன் தியாகி பட்டம் வாங்க போறியாக்கும்?” என்றவன் எந்த பாவனையுமின்றி கேட்க, கிளுக்கி சிரித்து விட்டாள்.

அவன் கேள்வியாக நோக்கவும், “அப்ப முதல்ல அந்த பட்டத்தை உங்களுக்கு தான் தருவாங்க” என்றாள் சிவந்த முகத்துடன். அவனுக்கு அவள் சொல்லாமல் விட்ட உள்ளர்த்தம் விளங்கவே, “ஹ்ம்ம்ம்… அதை இன்னைக்கு ராத்திரி முடிவு பண்ணிக்கலாம்” என்று கூறினான். அதை சொல்லும்போதே அவள் மிரண்டு விழிக்கவும், அவள் மிரட்சியை ரடித்தபடியே, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று தன் பிடியிலேயே நின்றான் காரியக்காரனாய்.

“நான் எதிர்த்து பேசி இருக்க மாட்டேன்னு நினைக்கறீங்களா?” என யசோதா எதிர்கேள்வி கேட்கவும், அவன் யோசனையாக இவளைப் பார்த்தான். அவனுக்கும் அந்த சந்தேகம் தானே, இந்த பட்டாசு ஏன் பொரியவில்லை என்று.

அவனது குழப்பமான பார்வையில் யசோதாவே தொடர்ந்தாள். “ஒருமுறை அக்கா அதிகமா பேசிட்டாங்க. அப்போ அவங்க அம்மாவும் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. அன்னைக்கு நானும் கூட கூட பேசிட்டேன். ரெண்டுபேர் கிட்டயும். ஆனா, அதுக்கப்பறம் வித்தியக்காவோட அம்மா நம்ம வீட்டுக்கே வரதில்லை. அதுனால, அக்கா கோபம் அதிகமாகி, இப்பவெல்லாம் பேச்சும் அதிகமாயிடுச்சு” என்று நடந்ததை மேலோட்டமாக விளக்கினாள்.

“அதுக்கு ஏன் நீ இப்போ பதில் பேசாம இருக்க? அப்போ எதிர்த்து பேசின மாதிரி இப்பவும் பேச வேண்டியது தானே?” என்றான் குழப்பமாக.

“அவங்களை மேல மேல சீண்டி என்ன லாபம்? அதான் இந்தமுறை கவனமா நடந்துக்கணும்ன்னு பார்க்கிறேன். இந்த பிரச்சனையை வளர்க்கிறத விட தீர்க்க முடிஞ்சா நல்லா இருக்கும்ன்னு யோசிச்சேன்” என்றாள் மென்மையாக.

பட்டாசாய் பொரிந்தவள் இப்படி அமைதியாய் மாறிவிட்டாளே என ஆச்சர்யமாக எண்ணியபடியே, “அவங்ககிட்ட எல்லாம் இது வேலைக்கே ஆகாது” என கவியரசன் கூறினான்.

“அதெல்லாம் நான் பாத்துப்பேன்” என்றாள் ரோஷத்துடன். “எப்படி அம்மா வீட்டிக்கு ஓடிப்போனியே அந்த மாதிரியா?” என மீண்டும் அவன் நக்கல் செய்ய,

“ஏன் போனா என்ன? எக்ஸாம்க்கு படிக்க போனேன். அதோட போனதுனால தானே நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று கவியரசனை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்திருந்தான். கூடவே, தன்னருகே அவள் அமர்ந்திருந்த தோரணையையும், தன் கரங்களை உரிமையோடு பற்றியிருந்த விதத்தையும். இந்த மாற்றங்கள் சமீபத்தியது. இது எதனால் என்பதும் இப்பொழுது விளங்கியது. சரி அவளாகவே சொல்லட்டும் என்று அவளையே பார்த்திருந்தான்.