அத்தியாயம் 1
” பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை!
புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!”
காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல்.
அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் ரெடி ஆகிக் கொண்டு இருந்தாள். விரிந்து கிடந்த கூந்தலை ஒரு சிறிய கிளிப் கொண்டு அடக்கியவள் ஒரு பொட்டை நெற்றியில் ஒட்டிவிட்டு கண்ணாடியை பார்த்து திருப்தியுடன் சிரித்தாள். அவ்வளவு தான் அவளது அலங்காரம். முகப்பூச்சில் சிறிதும் ஆர்வம் காட்டாதவள் அவள்.
” பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோச சங்கீதம்!” இந்த வரி வந்ததும் அவள் ரூமை விட்டு வெளியே வந்து அங்கு சமைத்து கொண்டிருந்த அந்த 5.5 தேவதையை பார்த்து ” யோகா!! இன்னிக்கு என்ன சமையல்?” என்று ராகமாக கேட்டாள்.
” இன்னிக்கு உப்புமா தான் மை டியர் கீத்து” என்று பதிலளித்தவள் ” இந்த ரியா இன்னும் எழுந்திருக்கலையா? நைட் ஃபுல்லா ஃபோன்ல அவினாஷ் கூட சண்டை. இது இப்படியே போனா சரி வராது கீத்து” கவலையாக கூறினாள்.
இது அனைத்தையும் பொறுமையாக கேட்ட அவள் தான் கீதா. நம்முடைய கதாநாயகி. மிகவும் எளிமையானவள். அவளுக்கு என்று இருப்பவர்கள் 4 அழகான நண்பர்கள். ஒன்று யோகா., இரண்டாவது ஆள் தான் இப்போது தூங்கி கொண்டு இருக்கும் ரியா.
மூன்றாவது ஆள் மதுரையில் ஒரு இன்ஜினியரிங்க் காலேஜ் இறுதியாண்டு வகுப்பில் உட்கார்ந்து பாடம் கவனித்து கொண்டிருந்தான். அவன் தான் ஜெயசந்திரன். சுருக்கமாக ஜேஸி.
முக்கியமான விஷயம் இவர்கள் எல்லாரும் முகப்புத்தகம் (facebook) மூலமாக நண்பர்கள் ஆனவர்கள். கீதா சென்னையிலே வளர்ந்திருந்தாலும், யோகாவும் ரியாவும் தவிர அவளுக்கென்று இங்கிருக்கும் ஒரே தோழி ஸ்ரீதேவி. அவளும் இப்போது தான் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள். வார இறுதியில் 4 பேரும் ஏதாவது ரெஸ்டாரண்டில் சந்தித்து அந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்….
சி.ஏ இண்டர்மீடியட் முடித்த கையுடன் ஒரு பெரிய ஆடிட்டரிடம் ஆடிட் அஸிஸ்டெண்டாக சேர்ந்தாள் கீதா. அந்த நேரத்தில் யோகாவுக்கும் சென்னையிலுள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை கிடைக்கவும், அவள் கீதாவிடம் தனக்கு ஹாஸ்டல் பார்த்து தருமாறு கேட்கவும் அவள் தன்னுடைய வீட்டில் தன்னுடனே தங்கி கொள்ளுமாறு கூற அவளுக்கும் சந்தோசமே. இனிமே 24 மணி நேரமும் கீதா கூடவே இருக்கலாம்….
ரியாவுக்கும் பிரபல ஐ.டி கம்பெனியில் வேலை கிடைக்கவும் அவளும் இவர்களுடனே வந்து விட்டாள்.
ஸ்ரீதேவி இளம்வயதில் தாயை இழந்தவள். அவளுக்கு கீதா மேல் தனி பாசம். அவளுடைய சீனியர் வாழ்க்கையில் தனியாளாக நின்று ஜெயிப்பது பார்த்து ஆச்சரியப்பட்டு அவளிடம் தோழியாக இணைந்தவள்…
இந்த 4 நண்பர்களை பொறுத்த வரை கீதா மிகவும் திறமையான அன்பான பெண். ஆனால் உலகத்தை அவள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது அவர்கள் நால்வரின் கருத்து. அதனால் எந்த ஒரு சின்ன விஷயத்திற்குமே கீதா அவர்களின் ஒப்புதலை கேட்பது வழக்கமாகி விட்டது.
நேரே ரூமுக்குள் நுழைந்தவள் ரியாவை பார்த்து புன்னகைத்து விட்டு நேராக தன்னுடைய குடும்பத்தினரின் புகைப்படத்திற்கு பக்கத்தில் நின்றாள்.
ஆம்! அவளுடைய 12வது வயதில் ஒரு மோசமான விபத்தில் அவளுடைய முழு குடும்பமும் பலியானது. சாலையோரம் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்காக நிறுத்திவைத்திருந்த காரில் லாரி வந்து மோதியதால் அனைவரும் அந்த இடத்திலேயே அவள் கண் முன்னே இறந்தது இன்று நடந்த மாதிரியே அவளுக்கு தோன்றியது.
ஐஸ் க்ரீம் வாங்க அவளுடன் வந்ததால் அவளுடைய அப்பாவின் தோழர் கண்ணனும், அவருடைய மனைவி அபிராமியும் தப்பித்தனர்.
குடும்பத்தை இழந்த அதிர்ச்சியில் இருந்த அவளை அப்படியே விட்டு செல்ல அபிராமிக்கு மனமில்லை. அவளை தங்களுடனே சென்னை அழைத்து வந்து சொந்த மகளாக வளர்த்தனர்,
அவள் சி.ஏ சேரும் நேரம் கண்ணனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் சேர அழைப்பு வரவும், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் கீதா. தினமும் ஸ்கைப்பில் கீதாவுடன் பேசாவிட்டால் அபிராமிக்கு தலையே வெடித்து விடும்.
அவர்களை பற்றி யோசித்து கொண்டு கண்ணில் நிரம்பிய கண்ணீரை விழுங்கிக் கொண்டு இருக்கும் போதே அவளுக்கு போனில் கால் வந்தது.
” ஹலோ! பாக்கியநாதன் அங்கிள், நீங்க ஸ்டேஷன் ரீச் ஆயிட்டிங்களா?? நான் இதோ கிளம்பிட்டேன்” என்று அவசரமாக ஹேண்ட்பேக்கை மாட்டி கொண்டு கிளம்பினாள்.
பாக்கியநாதனும் அவளுடைய முகப்புத்தக நண்பர் தான். சமீபத்தில் அவருடைய மனைவியை இழந்தவர் சொந்த ஊரான திருநெல்வேலியில் தனித்திருப்பது சரியல்ல என்று தோன்றவும் சென்னையிலுள்ள மகன் தன்னுடனே வந்து விடுமாறு கூற அவர் சென்னை வந்து சேர்ந்தார்.
அவருடைய மகன் அலுவலக வேலையாக சென்றதால் அவரை வீட்டில் சென்று விடும் பொறுப்பை கீதா ஏற்றுக்கொண்டாள். இதோ அவரை அழைத்து வர கிளம்பி விட்டாள்….