Tamil Madhura

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 12

காலங்களின் நிஜமாய் நீ இருக்கும் மட்டும் …

காற்றெல்லாம் உன் வாசமாய் நானிருப்பேன்…

*************************************************************************************************************************

ஜோடியாக நின்றவர்களை வாழ்த்துவதற்காக பரிசு பொருட்களுடன் மேடை ஏறினான் குமார்.

“கொஞ்சம் சிரிச்சா என்ன முத்தா கொட்டிவிடும்!” பிரணவை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

“ஆமாம் முத்து கொட்டிவிடும்! நீ வந்து எடுத்துக் கொண்டால் என்ன செய்வது!” பிரணவ் கடுகடுத்தான்.

குமார் அவர்கள் அருகில் வரவும், இருவரும் புன்னகை முகமாய் அவனைப் பார்த்தனர். ஒரு நொடி கூட அவர்களால் அவன் காயப்படுவதை அவர்கள் இருவரும் விரும்பவில்லை.

அவன் கொடுத்த பரிசை இருவரும் புன்னகை முகமாக வாங்கிக் கொண்டனர்.

“வாழ்த்துக்கள்!” குமார் இருவரையும் மனமார வாழ்த்தினான்.

“நன்றி!” என்பதோடு ஸ்ருதி நிறுத்திக் கொண்டாள். அவனுடன் அவள் வேண்டிய மட்டும் பேசியாகி விட்டது. இதற்கு மேலும் அவன் மனதை வருத்தப்படுத்தக் கூடாது என்று மிக அளவாகவே பேசினாள்.

ஆனால் அவள் பேசாதையும் பிரணவ் ஈடுகட்டினான். அவனை ஆரத்தழுவிக் கொண்டான்.

பிரணவ், ஸ்வேதா, ஸ்ருதி மூவருக்கும் இடையில் பெரிதாக எந்த இரகசியங்களும் கிடையாது!!

ஸ்வேதா பிரணவின் உயிர் காதலி என்றாள், ஸ்ருதி பிரணவின் உயிர் தோழி. ஸ்ருதிக்கும், ஸ்வேதா ஒரு கண் என்றால், பிரணவ் மற்றொரு கண்!!

அவனறியாத அவளின் இரகசியம் என்று எதுவும் அவர்களிடம் கிடையாது!!

மெல்லிய குரலில் குமாரிடம், “எங்களுடைய இருவரின் மணவாழ்க்கையில் உங்களின் ஆசை புதைத்துவிட்டேன், என்ற மன உறுத்தல் … என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் குமார்!” வருத்தம் நிறைந்த குரலில் கூறினான் குமார்.

மெல்ல அவனுடைய கைகளை தட்டிக் கொடுத்த குமார், “இன்னார்க்கு இன்னார் என்று ஆண்டவன் எழுதி வைத்துவிட்டான். அதை மாற்ற முடியாது! “ என்றவன் தொடர்ந்து,

“கவலைப் பாடாதீங்க பாஸ், நான் சந்நியாசம் வாங்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. நிச்சயம் கல்யாணம் செய்து கொள்வேன்!”

குமாரின் குரலில் இருந்த உறுதியில் இருவரின் முகமும் மலர்ந்தது.

“நான் தான் ஒரு பிசாசை கட்டிக் கொண்டேன்! நீங்களாவது நன்றாக இருங்கள்!” பிரணவின் சோக குரலில், குமார் பக்கென்று சிரித்தான்.  

ஸ்ருதியின் பீபி டக் கென்று உயர, பிரணவின் காலில் யாரும் அறியா வண்ணாம் சட்டென்று மிதித்து விட்டு தள்ளி நின்று கொண்டாள். பிரணவின் கண்கள் ஒரு நொடி கலங்கிவிட்டன். குதிகால் காலாணியின் மகிமை..

“பிசாசு , பிசாசு!” மீண்டும் முணகினான் பிரணவ். “பாருங்கள், இதற்கு தான் சொன்னேன்!” குமாரிடம் மீண்டு சொன்னான். ஸ்ருதியோ நெற்றிக் கண்ணை திறந்தாள்.

அதைக் கண்ட குமாரோ “எவ்வளவு விழுப்புண் தான் தாங்குவீங்க, விடுங்க பாஸ்!” என்று சமாதனப் படுத்த

“அதை சொல்லுங்க பாஸ்!” என்று அவன் பெருமூச்சு விட்டான்.

அதற்குள் “இவனை திருத்தவே முடியாது!” என்ற முடிவிற்கு வந்திருந்தாள் ஸ்ருதி.

அவள் மவுனத்தைப் பார்த்து , இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

புகைப் படத்திற்கு சந்தோசமான மனநிலையில் மூவரும் நின்றுவிட்டு அவர்களை நிறைந்த மனதுடன் பார்த்துவிட்டு குமார் கீழே இறங்கினான்.

கீழே இறங்கி சாப்பிட செல்லும் போது அவன் நிறைந்த மனதுடன் இருந்தான்.

ஒரு புகழ்பெற்ற படத்தின் வரிக்கள் தான் அவனுக்கு நியாபகம் வந்தது. ‘நமக்கு மிகவும் பிடித்த பொருளை இன்னொருத்தர் பத்திரமா பத்துவாங்க என்று உணரும் போது வருமே ஒரு நிம்மதி…’ அந்த நிம்மதியான மனநிலையில் இருந்தான் குமார்.

என்னை விட பிரணவ் ஸ்ருதியை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில் அவனின் காதல் தோல்வி பின்னுக்கு தள்ளப்பட்டது!

அந்த நொடியில் பிரணவின் மேல் விழுந்த நம்பிக்கை ஆழமாக வேரூன்றி விருட்சமாய் உயர்ந்து நின்றது!

“நீ அதிர்ஷ்டசாலி ஸ்ருதி!” குமாரின் உதடுகள் மெதுவாய் முணுமுணுத்தன.

மனம் நிறைந்த நிம்மதியுடன், மிக இரசித்து உணவை உண்டு அவர்களிடமிருந்து விடைப் பெற்று கிளம்பினான் குமார்.

குமாரின் காதல் இரணமும் ஆறிவிடும்… காலங்கள் ஆற்றிவிடும்.. அவனை கண்ணில் வைத்துப் பார்த்துக் கொள்ள ஸ்ருதியை விடவும் பன்மடங்கு உயர்ந்த ஒருத்தி வருவாள்.

********************

பிரணவ் ஸ்ருதி ஜோடியை ஏற்றிக் கொண்டு நீலகிரி மலையை நோக்கி அவர்களுடைய கார் பயணப்பட்டது. நீலகிரி மலையின் மீது ஏறும் பயணத்தை ஸ்ருதி எப்பொழுதும் மிகவும் இரசிப்பாள்!

அதிலும் பர்லியாரில் சுடப்படும் கையால் செய்யப்படும் உருளை கிழங்கு சோமாசிற்கு தன் சொத்தையும் எழுதி வைத்துவிடுவாள்.

பெரும்பான்மையானவர்களுக்கு வரும் வாந்தி பிரச்சனை அவளுக்கு கிடையாது. அதனால் பர்லியாரில் கிடைக்கும் உணவு வகைகளை ஒருக்கை பார்த்துவிடுவாள்.

வெள்ளியாய் கொட்டும் அருவிகளை, கொண்டை ஊசி வளைவுகளையும் கண் கொட்டாமல் பார்த்து கொண்டு வந்தாள் ஸ்ருதி. அவளின் இரசிப்பில், பிரணவ் அவளின் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டு வரவில்லை என்பதைக் கூட அவள் உணரவில்லை.

இயற்க்கையுடன் ஒன்றிப் போயிருந்தவளுக்கு பர்லியார் வந்தவுடன் வாய் துறுதுறுத்தது.

இவர்கள் காரில் வர, உறவினர்கள் ஒரு வேனில் இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

பிரணவை மெல்ல திரும்பி பார்த்தாள் ஸ்ருதி. பிரணவ் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

அவனுக்கு மெல்லப் புன்னகைக் கூட வந்தது. ஸ்ருதி கடையையும் அவனையும் திரும்பி திரும்பி பார்த்தாள். இது சரிவராது, நாமே டிரைவரை நிறுத்த சொல்லிவிடலாம் என்று யோசித்த வினாடி, பிரணவ் டிரைவரிடம் சொல்லி வண்டியை நிறுத்தினான்.

ஒரு கணவனாய் ஸ்ருதியின் மீது அவனுக்கு எவ்வளவோ மனத்தாங்கல்கள் இருந்த போதும், ஒரு தோழனாய் ஸ்ருதியின் ஒரு சின்ன ஆசையைக் கூட அவனால் நிராகரிக்க முடியாது!

புதுப் பெண்ணிற்கான மெருகுடன் அமர்ந்திருந்தவளை, வண்டியை விட்டு இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு,டிரைவரும் பிரணவும் இறங்கிச் சென்றனர். அவர்கள் செல்வதை, ‘அய்யோ வடை போச்சே!’ என்பது போல் பார்த்திருந்தாள் ஸ்ருதி.

அவளுக்கு என்ன வேண்டுமென்று பிரணவிற்கு தெரியாதா என்ன… அவள் மிகவும் விரும்பி உண்ணும் சோமாசையும், சூடாக டீயையும் கொண்டு வந்து அவளின் கையில் கொடுத்தவன், மீண்டும் எங்கோ சென்றான்.

“எங்க போகுது இந்த லுசு!” என்று நினைத்தாலும், அவசரமாய் டீயையும் சோமாசையும் காலி செய்தாள் ஸ்ருதி. ஆறிப்போய் விடுமல்லவா!!!

மீண்டும் வந்தவன் கையில் , உப்பும் மிளகாயும் தடவிய கிளிமூக்கு மாங்காய். சப்பு கொட்டி வாங்கிக் கொண்டாள் ஸ்ருதி!

‘இந்த புல்டவுசருக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்தே நான் ஒரு வழியாகி விடுவேன்!’, முணகிக்கொண்டே டீ குடிக்கச் சென்றான் பிரணவ்.

 

உன் வாசமாவாள்!!!