-
- சமயற்காரர், “மகாராஜனே அந்தப் பணத்தை நான் என் கையாலும் தொடுவேனா? தொட்டிருந்தால் சட்டப்படி அது குற்றமாய் விடாதா? பிறருடைய பொருளை எவனொருவன் சுய நலங்கருதி அபகரிக்கிறானோ அவன் சட்டப்படி குற்றவாளியா கிறான் அல்லவா? ஆகையால், நான் என் சுய நலத்தைக் கருதவே இல்லை. நான் அன்று முதல் இந்தப் பத்துவருஷ காலமாய் இந்த திவானுடைய பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மூடும் சேவக உத்தியோகத்தை விடாமல் வகித்து ஒரு சாதாரணச் சேவகனுக்குக் கிடைக்கும் எட்டு ரூபாய் சம்பளத்தைப் பெற்று வந்திருக்கிறேன், வேண்டுமானால் எல்லோரும் என்னுடைய வீட்டுக்குப் போய்ப் பாருங்கள். என் சம்சாரமும் குழந்தைகளும் மெலிந்து பிணம் போல இருக்கிறார்கள். அவர்களுடைய உடம்பில் கந்தைகளைத் தவிர முழு வஸ்திரத்தை நீங்கள் காணமுடியாது. நானும் அவர்களும் குடிப்பது கஞ்சிதான். எங்கள் வீட்டிலிருப்பது மண் பாத்திரங்களே. எனக்குக் கிடைக்கும் எட்டு ரூபாய்க்குச் சரியான காலஷேபந்தானே நாங்கள் செய்யவேண்டும்’’என்றார்.
-
- அதைக் கேட்ட மகாராஜனும், மற்ற சகலமான ஜனங்களும் நெடுமூச்செறிந்து, “ஆகாகா இவரே உண்மையான உத்தம புருஷர் இவரே உண்மையான மகான் இவரைப் போன்ற மகா சிரேஷ்டமான சீல புருஷர்கள் ஏதோ ஒரு கற்பகாலத்தில் ஒருவர் தான் தோன்றுகிறார்கள்’’ என்று ஒருவருக்கொருவர் கூறி ஆர்ப்பரித்து வெகுநேரம் வரையில் வாய் மூடாது அவரைப் பலவாறு புகழ்ந்தனர்.
-
- உடனே நமது சமயற்காரர் முறையே அரசனையும் ஜனங்களையும் பார்த்து, “மகாராஜனே! என்னை நீங்களெல்லோரும் புகழ வேண்டுமென்ற கருத்தோடு நான் இவ்விதமான தந்திரங் களைச் செய்யவில்லை. முக்கியமாக நம்முடைய சமஸ்தானத்தில் இராஜாங்க நிர்வாகம் திருந்தி செம்மைப்பட வேண்டுமென்ற கருத்துடனேயே நான் இப்படிச் செய்தது. சட்டங்களின் ஆதிக்க மொன்றே போதுமானதன்று. சாட்சியமிருக்கும் வழக்கெல்லாம்உண்மையாகிவிடாது; அது இல்லாவிடில், வழக்கு பொய்யாகி விடாது. சட்டத்தோடு நீதி என்ற முக்கியமான அம்சத்தையும் தாங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாட்சியின் மூலமாகவும், போலீசார் மூலமாகவும் வெளிப்படாத குற்றங்கள் எத்தனையோ செய்யப்படுகின்றன. அவைகளை நிறுத்துவதும் இராஜாங்கத்தாரின் தலைமையான கடமையே. முக்கியமாய்த் திருட்டு, கொள்ளை, மோசம் முதலிய குற்றங்கள் இல்லாக் கொடுமை யினாலும், ஏழ்மைத்தனத்தினாலும் செய்யப்படுகின்றன. ஆதலால், நம் தேசத்தில ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வர்த்தகமோ, அல்லது, உத்தியோகமோ வகிக்கும்படி செய்ய வேண்டுவதும் துரைத்தனத்தாரின் அடிப்படையான கடமை. அதுவுமன்றி, ஒவ்வொருவனுக்குத் தத்தம் ஜாதிக்கேற்ற சமய நூல்களும், ஆசார வொழுக்கங்களைப் போதிக்கும் நூல்களும் போதிக்கப்பட வேண்டும். மனிதர் சிறு பிராயத்திலிருந்தே சன்மார்க்க நெறிகள் போதிக்கப்பட்டு, வயது காலத்தில், கண்ணியமான ஒரு துறையில் இறங்கி ஜீவனம் செய்யும்படியான வசதிகளை இராஜாங்கத்தார் கண்டு பிடித்து எல்லா ஜனங்களும் நல் வழியில் நடக்க ஒரு முக்கியமான தூண்டு கோலாக இருக்கவேண்டும். மனிதர்கள் அவரவர்களுடைய இச்சைப்படி நடக்கவிட்டு, அவர்கள் பல வகைப்பட்ட குற்றங்களைச் செய்யத்தக்க மனப்போக்கை உண்டாக்கி, அதன் பிறகு சட்டங்களைக் கொண்டு அவர்களைத் திருத்துவதென்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் சங்கதியே அன்றி வேறல்ல. ஆகையால் நம்முடைய இராஜ்யம் இனியாவது, வஸ்துவைவிட்டு அதன் நிழலைப் பிடிக்கிற முறைகளை விலக்கி, நல்வழிப்பட்டுச் செழித்தோங்க எல்லாம் வல்ல கடவுள் அநுக்கிரகிப்பாராக’’ என்றார்.
-
- உடனே மகாராஜன் எழுந்து நின்று ஜனங்களை நோக்கி, “மகா ஜனங்களே! இந்த மகான் இப்போது நமக்குக் காட்டிக் கொடுத்த புத்தி மதியை நாம் பொன்போலப் போற்றிப் பாராட்ட வேண்டும். ஆனால் அவ்வளவு மேலான கொள்கைகளும் தத்து வங்களும் நம்முடைய தேசத்தில் நிலைத்து வேரூன்றும்படி செய்யத்தகுந்த யோக்கியதை வாய்ந்த திவான் வேறே யாருமில்லை. ஆதலால், அந்த ஸ்தானத்திற்கு இந்த நிமிஷம் முதல் இந்தமகானையே நியமித்திருக்கிறேன். நமது வேண்டுகோளை உல்லங்கனம் செய்யாமல் அதை இவர்கள் ஏற்று நமக்கு நல்வழி காட்டி அருளுமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்’ என்று கூறி முடித்தான். உடனே ஜனங்களெல்லோரும் கரகோஷம் செய்து ஆரவாரித்து அந்த வேண்டுகோளை முழுமனதோடு ஆமோதித் தனர். முதலில் நமது சமயற்காரர் சில உபசார வார்த்தைகள் கூறி மறுத்து, பிறகு பூலோகவிந்தை என்ற சமஸ்தானத்தின் திவான் வேலையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் தாம் அந்தப் பத்து வருஷகாலத்தில் செய்த தந்திரங்கள் யாவற்றையும் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினார். தாம் தாசில்தார் முதலியோரை நியமித்ததுபோலவே, வேறு பல சேவகர்களையும் நியமித்து, அவர்கள் தமக்குக்கீழ் வேலை செய்யவேண்டுமென்று திவான் உத்தரவு செய்ததுபோல, உத்தரவுகள் பிறப்பித்து, அவர்களைக் கொண்டு தந்திரமாய்ப் பல காரியங்களை முடித்ததாகவும், அவர்களும் அரண்மனைச் சேவகர்களுக்குள் கலந்து கொண்டிருந்து வந்ததாகவும் கூறினார். மகாராஜன்பேரில் வாங்கப்பட்டிருந்த பத்திரங்களைக் கடைசிவரையில் தாமே வைத்திருந்ததாகவும், விஷயங்கள் வெளியானபிறகு ஒருநாள் இரவில் தாம் மகாராஜனது கொலுமண்டபத்தில் எவருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து கைப் பெட்டிக்கு மறுதிறவுகோல் போட்டுத் திறந்து தஸ்தாவேஜிகளை அதற்குள் வைத்துப் பூட்டியதாயும் கூறினார். அவரது அதியாச்சரியகரமான செயல்களைக் கேட்டு அரசனும், மற்றவர்களும் அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் வியப்பும் அடைந்து, அவரது அற்புத சாமர்த்தியத்தை மெய்ச்சிப் புகழ்ந்து அவரைப் பெரிதும் கொண்டாடினர். அதுவரையில் வேலை பார்த்த திவான் உண்மையில் யோக்கியதா பக்ஷமும், வாய்ந்தவரென்றும், அவர் நிரபராதிஎன்றும் நமது சமயற்காரரே கூறி அவரையும் தமக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு பெருத்த உத்தியோகத்தில் அமர்த் தினார். மேலக்கோட்டை வாசலிற்கருகிலிருந்த தமது கச்சேரியில் வேலை பார்த்த எல்லோருக்கும் பற்பல அபிவிர்த்தித் துறைகளில் உத்தியோகங்கள் கொடுத்தார்; அதுவுமன்றி, அந்த நகரத்தில் உத்தியோகமோ, வார்த்தகமோ, வேறு எவ்விதமான தொழிலோ இல்லாத சோம்பேறி மனிதரே இல்லாதபடி ஒவ்வொருமனிதருக்கும் ஒவ்வொருவித அலுவலை ஏற்படுத்தினார். அவர் மேற்படி பத்து வருஷகாலத்தில் தேடிக் குவித்த கோடிக்கணக்கான திரவியங்கள் முழுதையும் ஜனங்களின் பொது நன்மைக்காவே செலவிட்டு ஏராளமான குளங்கள், கிணறுகள், ரஸ்தாக்கள், நந்தவனங்கள் முதலியவற்றை உண்டாக்கினார். அந்த ஊரில் பிறக்கும் ஆண் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் பத்துவயது வரையில் தருமக் கல்வி கற்பிக்க ஏராளமான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி, அவைகளில் சமய நூல்கள், சன்மார்க்க நூல்கள் முதலியவற்றைக் கட்டாய பாடங்களாக வைத்து, ஒவ்வொருவரது குணவொழுக்கங்களையும் சீர்திருத்துவதையே உபாத்தியாயர்கள் தமது பிரதமக் கடமையாக மதிக்கும்படி உத்தரவுகள் பிறப்பித்தார்; அவ்வூரிலுள்ள பெரியவர்கள் எல்லோரும் கண்ணியமான ஒவ்வொரு துறையிலும் இறங்கித் தமது ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ளுவதற்கான எண்ணிறந்த வசதிகளைத் தேடி வைத்தார்.
-
- இவ்வாறு நமது சமயற்கார திவான் தமக்கு மிஞ்சிய திறமை சாலியும் புத்திசாலியும் நீதிமானும் இந்த உலகத்தில் இல்லை என்று எல்லோரும் எப்போதும் ஓயாமல் புகழ்ந்து தம்மைக் கொண்டாடும்படி செய்து இன்னமும் நமது பூலோக விந்தையை ஆண்டுவருகிறார். அவருடைய ஆட்சியில் ஜனங்கள் எல்லோரும் மங்களகராமாகவும் சந்தோஷமாகவும் சுபீக்ஷகரமாகவும் இருந்து அமோகமாய் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவருடைய மனத்தில் ஒரே ஒரு சிறிய குறை இருந்துவருகிறது. ஆதியில் அவர் விநாயகரைத் தரிசித்துவிட்டுவந்த காலத்தில் வழியில் கண்டெடுத்த ரூபாயின் சொந்தக்காரர் இன்னார் என்பதை மாத்திரம் எவ்வளவு அபார சாமத்தியசாலியான அவரால் கண்டுபிடிக்க இன்னமும் இயலவில்லை. அந்த ரூபாய் வட்டியும் முதலமாக வளர்ந்து வருகிறது. அதன் சொந்தக்காரர் வந்து அதைப் பெற்றுக் கொள்ளுகிற வரையில் அதை அவர் தர்மத்திற்கு உபயோகித்து வருகிறதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
-
- நமது சமயற்கார திவான் பத்து வருஷத்திற்குமுன் ஒருநாள் இரவில், அரிசி முதலிய சாமான்களைக் கொணர்ந்து கொடுத்து தமது குடும்பத்தினரின் உயிர்களைக் காத்து இரக்ஷித்த தயாளகுணபுருஷரான பாராக்காரரையும், அவரது மனைவியையும் மறந்தவரேயன்று, குசேலர் எடுத்துச்சென்ற அவலை கிருஷ்ணபகவான் ஆசையோடு வாயில் போட்டுக்கொண்டவுடனே, முன்னவருது குடும்பத்தினர் இருந்த இடத்தில் எப்படி மாடமாளிகைகளும் குபேர சம்பத்தும் மாயமாகத் தோன்றினவோ, அதுபோல, நமது சமயற்காரருக்கு திவான் உத்திய கோம் கிடைத்தவுடன் அவர் தமது மாதச்சம்பளமாகிய ஐயாயிரம் ரூபாயில் அந்தப் பாராக் காரருக்கு மாதா மாதம் இரண்டாயரம் ரூபாய் நிரந்தரமாகக் கொடுக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பித்து விட்டார். அதுவு மன்றி, அவர் அந்த நகரத்திலுள்ள சகலமான ஜனங்களிடத்திலும் அந்தப் பாராக்காரருடைய மேலான குணங்கள் இருக்கும்படி தமது நன்றி விசுவாசத்தைத் தக்கபடி காட்டியதாகுமென்று நினைத்து, ஒரு குடும்பத்தில் தகப்பன் தனது குழந்தைகள் எல்லோரையும் எப்படி சன்மார்க்கத்தில் பழக்க முயன்று, எல்லோருக்கும் சமமான செல்வமும் உரிமைகளும் அளிப்பானோ, அதுபோல, அரசன் தனது பிரஜைகள் எல்லோரையும் நடத்தவேண்டுமென்பதை அநுஷ்டானத்தில் செய்து நிரூபித்துக்காட்டினார்.
-
- “வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
-
- கோல்நோக்கி வாழும் குடி,”
-
- சுபம் சுபம்! சுபம்!!!
-
- ———————–
மதிப்புரை
-
- > ஆநந்த குணபோதினி தனது கமலம் 1 இதழ் 11-ல் அடியில் வருமாறு எழுதுகிறது:-
-
- செளந்தர கோகிலம்
-
- ஸ்ரீமான் வடுவூர் – கே. துரைசாமி ஐயங்காரவர்கள் பி.ஏ. இயற்றியது.
-
- ஒரு குடும்பத்தலைவரின் காலத்துக்குப் பிறகு அவரை நம்பிய மனைவியும், அவரது புத்திரிகளும் ஆண் திக்கற்றுப் படும் பாடுகளையும் நேரும் சோதனைகளையும் இந்நூல் வெகு நன்றாக எடுத்துரைக்கின்றது. கண்ணபிரானின் உத்தம குணங்களும், உயிருக்குத் துணிந்து அபாயத்திலிருந்து பிறரை விடுவிக்கும் திறனும், தன் கடமையைச் செய்த அளவோடு திருப்தியேற்குந் தகைமையும் அவன்றன் காதல் நலமும், அவனுக்கு நேரும் இன்னல்களும், இதே விதமாகக் கோகிலாம்பாளின் தூய நடத்தைகளும், நிதான விவேகமும், அவளது காதலும், பிறகு நேரும் ஸம்பவங்களும், செளந்தரவல்லியின் உலகியலுணராத மெல்லிய தன்மையும், பிறரது வஞ்சனை வலையிலாழ்ந்து மயக்குறும் பான்மையும் வாசகர்களின் மனத்தை வசீகரிக்கச் செய்கின்றன. போலீஸ் அதிகாரிகளின் அநீதங்களும் சுந்தரமூர்த்தியின் காமப்பேயும் அவனது துஷ்கிருத்தியங்களும் முனியன் முத்துசாமி போன்ற வேலையாட்களின் மோசச் செயல்களும் உலக சுபாவத்தை நன்றாக நினைப்பூட்டுகின்றன. கற்பக வல்லி, பூஞ்சோலையம்மாள் இவர்களின் கஷ்டங்களும், அவர்கள் படும் ஸஞ்சலங்களும் மிக்க சோகபாகமாகும். உத்தம வேலையாட்களுக்கு உதாரணமாய் முருகேசனையும் கந்தனையும் குறிப்பிடலாம். வக்கீல் ராமராவ் ஆபத் ஸகாயரான உத்தம புருஷராயினும் அத்தகையோருக்குத்தான் தொழிலுக்குத் தக்க வருமானத்தைக் காணோம்.
-
- இந்த நாவலின் இடையிலே இதற்குச் சம்பந்தமில்லாததாய்த் தோன்றுகின்ற திவானின் சரித்திரம் அமிர்தபானம் போன்று அத்யந்த ஸ்வாரஸ்யமாய் ருசிக்கின்றது. அவரது பெருந்தகைமையும் எளியோர் மாட்டு அவர் பாராட்டும் அன்பும், செய்யும் அரிய உதவிகளும், தமது கையெழுத்து போன்று மோசக் கையொப்பமிட்டோனை ஆதரிக்கும் பான்மையும், போலீஸ் இன்ஸ்பெக்டரை வெகு சாதுர்யமாய் ஆழங்கண்டு அந்த அக்கிரமியை சிக்ஷித்து நிரபாரதிகளைக் காக்கும் பரிவும், அவரது பத்தினியின் கற்பிலக்கணமும், அந்தோ! இறுதியில் அம் மகாநுபாவரதுவாழ்க்கை பாழ்பட்டு அவர் துறவியாதலும், முடிவில் மறைந்த தமது தந்தையைக் காண்பதுமான பாகங்களால் இந்நாவலின் மதிப்பு வெகு சிலாக்கினையான உச்சிக்கு உயர்ந்து வாசகர்களைத் திடுக்கிட்டுப் போகும்படி செய்விக்கின்றது. விருத்த விவாகத்தின் கோரமும், விவாகம் செய்து கொண்ட ஆடவர்க்கு அதனால் ஸஞ்சலப் பெருக்கேயன்றி ஒரு துளி இன்பமுமில்லையென்பதும் குஞ்சிதபாத முதலியாரால் இனிது புலனாகும்.
-
- இந்நாவலின் மற்ற பகுதிகள் இனி வெளிவரும் மூன்றாம் பாகத்தில் பூர்த்தி அடையுமென்று தெரிகிறது. ஆயினும் இவ்விரு பாகங்களினின்றே காலயூகங்கள் தோன்றுகின்றன. கோகிலாவை மணத்தற்காகக் கண்ணபிரானைத் தபாற்களவிற் சேர்த்த சுந்தரமூர்த்தியே அக்களவின் காரணஸ்தனாகலாம். செளந்தரவல்லி தனது மெல்லிய தன்மையில் சுந்தரமூர்த்தியால் கற்பழிந்தும் கெடலாம்? கோகிலா தன் நற்கணவனான கண்ணபிரானை மணந்து இன்புறுதலும் கைகூடலாம். திவானின் மனைவி தன் புத்திரனைக் கண்டித்து நடத்தும் பான்மைக் குறிப்புக்கும் (இரண்டாம் பாகம் பக்கம் 122) கற்பக வல்லி கண்ணபிரானைக் கடிந்துரைக்கும் குறிப்புக்கும் (முதற் பாகம் பக்கம் 51 – 52) உள்ள ஒற்றுமையைக் கொண்டு திவானின் காணாமற்போன மனைவியும் குமாரனுமே கற்பக வல்லியும் கண்ணபிரானுமென்றும் நினைக்கலாம். இக்கண்ணபிரானுக்கும் சுந்தரமூர்த்திக்கும் கூட ஒரு உறவு நேர்ந்து கொள்ளுமோவெனவும் ஐயம். எவ்விதமோ இந்நாவலின் மூன்றாம் பாகம் மிக்க சமத்காரமாய் எழுதப் பட்டிருக்குமென்பது திண்ணமாதலின் ஆத்யந்த ஸ்வாரஸ்யமான இந் நாவலின் முடிவுக்காக அம்மூன்றாம் பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம். ஆசிரியர்க்கு நமது வாழ்த்து.
-
- ———————
புதுவை செந்தமிழ் வாசக சாலையாரால் கொடுக்கப்பட்ட நற்சாஷிப் பத்திரமும்
தங்கப்பதக்கப் பரிசும்
-
- கனம் வடுவூர்: கே. துரைசாமி ஐயங்கார் அவர்களுக்கு
-
- அநேக வந்தனம்; உபயக்ஷேமம்
-
- கற்றோர் மணியே!
-
- நீவிர் தற்கால நவீனகமுறையில் ஜனானுகூலத்திற்கு உடந்தையான நீதிகளைப் புகுத்தியுள்ள மேனகா,”திகம்பர சாமியார் என்னும் நாவல்களை வெகு பிரியத்துடன் வாசித்து இன்பெய்தினோம். தங்களால் எழுதப்படும் நாவல்களை யாம் வாசிக்க ஆரம்பித்துவிடின் வேறெவ்விதமான அவசர வேலைகளிருப்பினும் அவைகளையும் மறந்து அந்நாவலிற் செறிந்துள்ள சொற்சுவை பொற்சுவைகளால் வசியமாக்கப்பட்டு அது வாசித்து முடி வெய்திய பின்னரே அவைகளைக் கவனிக்கும்படியாய் விடுகின்றது. இதை நோக்க தாங்கள் நாவல் எழுதும் ஆற்றலில் அதிகத் தேர்ச்சியடைந்திருப்பதன்றி ஜனங்களது கவர்ச்சியை முழுதும் கிரகிக்கத் தகுந்த அரிய விஷயங்களை தாங்கள் திரட்டித் தீட்டிவிடும். நவீனகமான முறையானது என்போன்றாரெல்லோரும் மிகுதியாய் மெச்சத் தகுந்ததாகவொளிர்கின்றது. அதில் ஒவ்வொரு பக்கத்திலுங் காணப்படும் பல நன்னீதிகளை அவசியம் கவனிப்போர்கள் நிச்சயமாக நல்லவர்களாவார்கள் என்பது உறுதி. தங்களது நவீனகமுறையில் சிறந்த பேராற்றலை நோக்கித் தங்கட்குப் பலரும் பல நற்சாக்ஷிப் பத்திரங்களும், தங்க வெள்ளிப் பதக்கப் பரிசுகளும் தந்து தங்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். யாமும் எமது செந்தமிழ் வாசகசாலையாரும் தங்களது ஆற்றலையும் திறமையையும் வியந்து இப் பொற் பதக்கப் பரிசை மனப்பூர்வமான வந்தனத்துடன் அளிக்கின்றோம். இதைக் காணும் பல மேதாவிகளும் இன்னும் இதுபோன்ற பதக்கங்களும் நற்சாக்ஷிப் பத்திரங்களும் தந்துதவி தங்கட்கு உற்சாகமுண்டு பண்ணி இன்னும் இதுபோன்ற பல நவீனகத்தை வரையத் தகுந்த பேராற்றலை அதிகப்படுத்துவார்களென்று நம்புகிறோம்; ஆண்டவன் துணை செய்க.
-
- செந்தமிழ் வாசகசாலை, இங்ஙனம்
-
- நெ. 86, காளத்தீஸ்வரன் கோவில் தெரு, அ.ந. நரசிங்க முதலி
- புதுவை, 30.3.1921 அக்கிராசனன்