Tamil Madhura

தேய்ந்துபோன கனவுகள் – கவிதை

Related image

 

தேய்ந்துபோன கனவுகள்

வானவில்லை ரசித்திருந்தேன்

வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு..

வயிற்றுப்பசியார விழைந்தேன்

பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..

 

நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது

கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்..

அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை

அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன் தீக்குச்சிகளை..

 

சிலேட்டைத் துடைக்க வேண்டிய கரங்கள் எனது

தண்ணீர் ஊற்றி துடைப்பதோ உணவக மேசையை..

முதுகுச்சுமையின் அனுபவம் உணர வேண்டினேன்

வந்தமர்ந்தன தலையில் பாரமாய் செங்கற்கள்..

 

புத்தகங்கள் கையில் எடுத்தேன் – படிப்பதற்கா?

தூசி தட்டி அலமாரியில் அடுக்குவதற்கு..

கணக்கில் பெருக்கல் எப்படியென்றேன்

குப்பைகளின் கூட்டல் கற்றுக் கொண்டேன்..

 

பளிங்காகும்படி துடைத்த தரையில்

என் பிம்பம் கண்டேன்

தோய்ந்து போன என் உருவில் நான் கண்டது

தேய்ந்து போன என் கனவுகளையே..

 

வறுமையின் நிறம் சிவப்பாம் – எனில்

வறுமையின் சின்னம் கண்ணீர்த்துளிகளோ?

பணத்தின் வாசனையும் அறிய முடிந்தது

துயரமும் சற்று தீர்ந்தது –

கரும்பலகையினுடனான எனது நட்பு முறிக்கப்பட்டதால்..

 

 

— சுரபி மூர்த்தி