Tamil Madhura

புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே!

நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். 

இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி. 

அன்புடன்,

தமிழ் மதுரா

 

 

புன்னகையே பதிலாய்

 

என்னவனே

என் அன்பு காதலனே..

 

கடற்கரை மணலில் உன் பெயர் எழுதி

உன்னை அலைகளுக்குள் தொலைத்துவிட எண்ணவில்லை..

 

என் நெஞ்சில் உன் பெயரை பச்சை குத்திக்கொண்டு

பெயரோடு மட்டும் பெருமை கொள்ள விரும்பவில்லை..

 

பரிசுகளில் உன்னை மூழ்கடித்து வெற்றுப் பொருட்களால்

என் விருப்பம் சொல்ல விழையவில்லை..

 

முத்தங்களால் உன் கன்னம் சிவக்க செய்து

என் காதல் சொல்லி தீர்க்க தெரியவில்லை..

 

ஆனால்…..

 

உன் கை கோர்த்து வாழ்க்கைப் பாதைதனைக்

கடக்கும் கனவு காண்கிறேன்..

 

விழி முழுதும் உன் பிம்பம் தேக்கி

உன்னை எனக்குள் சிறை வைக்க வேண்டுகிறேன்..

 

உன் வித்தை என் வயிற்றில் சுமந்து

உனக்காக உயிர் வலி பொறுத்து

உன் சாயல் கொண்ட நம் சிசுவை கையிலேந்த விழைகிறேன்..

 

ஒன்றென கலந்து ஓருயிர் ஆகும் நமக்கு பிரிவென்பது வரும்போது

உன் மடியில் என் இறுதி உறக்கமும்

உன் இறுதி மூச்சு என் இரு நாசித்துவாரங்களிலுமே வேண்டும்..

 

யோசித்து சொல்..

உன் இரு விழி பார்வைக்காய் ஏங்கும் என் இதயத்திற்கு

நல்லதொரு பதில்

உன் சிறு புன்னகையில்..

 

— சுரபி மூர்த்தி