மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது.
பாட்டிகள் எல்லோருமாகச் சேர்ந்து லட்சம் அப்பளங்களை இட்டு முடித்துவிட்டு, கை முறுக்கு, பருப்புத் தேங்காய், தேங்குழல் முதலிய பட்சனங்கள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
மிஸஸ் ராக்ஃபெல்லர், நின்ற இடத்தில் நிற்காமல் ‘ஆச்சா, போச்சா?’என்று பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தாள்.
அய்யாசாமி அய்யர், அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள், மாமா, மூர்த்தி அனைவரும் காலையிலேயே கிணற்றடியில் ஸ்நானத்தை முடித்துவிட்டு அன்றைய ஜோலிக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
பதினைந்து ஏக்கர் விஸ்தீரணமுள்ள சம்மர் ஹவுஸ் காம்பவுண்டுக்குள் பந்தல் போடுவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக முனைந்திருந்தான் பஞ்சு.
இஞ்ச் டேப்பும் கையுமாக தோட்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் அலைந்து, எங்கெங்கே கால்கள் ஊன்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாகச் கண்ணாம்பினால் வெள்ளைக் கோடு போட்டுக் கொண்டிருந்தான். வேலையாட்கள், கையில் கடப்பாரை சகிதம் பஞ்சுவின் பின்னோடு ஒடிக் கொண்டிருந்தனர்.
‘கிச்ச’னுக்குள்ளிருந்து வந்த கம்மென்ற வாசனை உள்ளே ரவா உப்புமா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.
“கறிவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு இந்த ஐந்தும் சேருகிறபோது, ‘அடடா!…” என்று நாக்கில் தண்ணிர் சொட்டக் கூறினார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினுமினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது, அதில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்!” என்றார் அம்மாஞ்சி.
“வாஷிங்டன் நகரத்திலே வாழை இலை போட்டு சாப்பிடறது அதைவிட விசேஷம்!” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“எல்லோரையும் டி.பனுக்கு வரச் சொல்றா ராக்ஃபெல்லர் மாமி!” என்று அழைத்தாள் மிஸஸ் மூர்த்தி.
“இதோ ரெடியாகக் காத்துண்டு இருக்கோம்” என்று. சொல்லியபடியே உள்ளே நுழைந்தனர் எல்லோரும்.
“பஞ்ச் வரவில்லையா? இப்ப என்ன டயம் ஆச்சு?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
“ஸெவனே கால்” என்றார் அம்மாஞ்சி.
“எட்டு மணிக்கு நியூயார்க்கிலிருந்து என் ஹஸ்பெண்ட் வருகிறார். அவர் பத்து மணிக்கெல்லாம் மறுபடியும் திரும்பிப் போய் விடுவார். அதனாலே அவர் இங்கே இருக்கிறபோதே மேரேஜுக்கு டேட் பிக்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்… நீங்க என்ன சொல்றீங்க, அய்யாஸாம்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
“பிள்ளையின் ஃபாதரும் மதரும் வரவில்லையே என்று பார்க்கிறேன்” என்றார் அய்யாசாமி.
“அவர்கள் எல்லோரும் இப்போ எட்டரை மணி ப்ளேன்லே வந்து விடுவார்கள்… ” என்று சொல்லிக் கொண்டே வந்தான் பஞ்சு.
“இன்னும் வேறு யாரெல்லாம் வராங்க பஞ்ச்?” என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்ஃபெல்லர்.
“பத்துப் பாத்திரம் தேய்ப்பவர்களும், சந்தனம் அரைக்கிறவர்களும் வருகிறார்கள். வாழை இலைக் கட்டு, மாவிலைக் கொத்து, பரங்கிக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், தேங்காய், வெற்றிலை, புஷ்பம் இவ்வளவும் இன்னொரு ப்ளேன்லே வருகின்றன.”
“பத்துப் பாத்திரம் தேய்க்கிறவங்கன்னா அது யாரு?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
“டென் வெஸ்ஸல்ஸ் தேய்க்கிறவா” என்று மொழி பெயர்த்துக் கூறினார் அம்மாஞ்சி.
பத்துப் பாத்திரம் என்றால் என்னவென்பதை மிஸஸ் மூர்த்தி விளக்கிச் சொன்ன பிறகு, “ஒ, ஐ ஸீ!” என்று சீமாட்டி ராக்ஃபெல்லர் சிரித்துக் கொண்டாள்.
“பஞ்ச்! பாத்திரம் தேய்க்கிறவங்களை நானே நேரில் போய் ரிஸிவ் செய்யணுமா? எத்தனை மணிக்கு ப்ளேன்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
“வேண்டாம் மேடம்! நாங்கள் இருவரும் போனாலே போதும் ” என்று கூறிய பஞ்சு, லல்லியைக் கடைக் கண்ணால் கவனித்தான்.
“கோல்ட்ஸ்மித்தெல்லாம் எப்ப வரப் போறாங்க? அவங்க செய்யப் போகிற ஜ்வெல்ஸெல்லாம் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு. கழுத்திலே ஒட்டியாண்… காதிலே புல்லக்… அப்புறம் வாட் மிஸ்டர் பஞ்ச்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
“புல்லக் இல்லை மேடம்! புல்லாக்கு! அதைக் காதிலே மாட்டிக்க மாட்டாங்க. மூக்கிலே போட்டுக்குவாங்க. இடுப்பிலே ஒட்டியாணம்!” என்று சிரித்துக் கொண்டே கூறினான் பஞ்சு.
“தோடும் பேசரியும் போட்டுக் கொள்ளணும்னா காது மூக்கு குத்தாமல் எப்படி முடியும்? இந்த வயசிலே காதைக் குத்தினால் வலிக்குமே” என்றாள் லோசனா.
“பரவாயில்லை; குளோரோஃபார்ம் குடுத்துக் குத்திடலாம். லோரிட்டா ஆசைப் பட்டதைச் செய்திடுவோம். அப்புறம் வேறே என்ன நகை வேணும் லோரிட்டா? என்று கேட்டாள் மிலஸ் ராக்ஃபெல்லர்.
“டாலி!” என்றாள் லோரிட்டா.
“தாலியா? அப்படின்னா நீ கூட மேரேஜ் செய்துக்கப் போறயா?” என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் மிஸஸ் மூர்த்தி.
“நோ நோ! டாலிதான் ரொம்ப ஜாலியா இருக்குது. அதை நான் சும்மாவே கட்டிக்கப் போகிறேன்” என்று கூறினாள் லோரிட்டா.
“அசடாயிருக்கே இந்தப் பெண்ணு! தாலி கட்டிக்கப் போறதாமே!” என்று கேலி செய்தார் அம்மாஞ்சி.
“தாலி வேணாக் கட்டிக் கொள்ளட்டும்… தங்கத்தாலே அம்மிக் கல் வேணாலும் செய்து கட்டிக் கொள்ளட்டுமே! – உமக்கெதுக்கய்யா இந்த வம்பெல்லாம்?” என்றார் சாஸ்திரிகள்.
“இலை போட்டாச்சு, எல்லோரும் டிபன் சாப்பிட வாருங்கள்…” என்று அழைத்தார் மாமா,
மிஸஸ் ராக்ஃபெல்லர், கேதரின், லோரிட்டா, மிஸஸ் மூர்த்தி, லல்லி, அமெரிக்க பெண்டுகள் எல்லோரும் ஒரு வரிசையில் உட்கார்ந்து கொண்டனர். அய்யாசாமி, மாமா, அத்தை, பனாரஸ் பாட்டி முதலானோர் இன்னொரு வரிசையில் உட்கார்ந்து கொண்டனர்.
அம்மாஞ்சி வாத்தியாரும், சாஸ்திரிகளும் சந்தடி செய்யாமல் சமையல் கட்டுப் பக்கம் போய் ஆசாரமாக உட்கார்ந்து கொண்டார்கள்.
அப்பளப் பாட்டிமார்களுக்குத் தனிப் பந்தி போடப்பட்டிருந்தது. –
“முகூர்த்தமே வைத்தாகவில்லை. இதற்குள் வேளைக்கு ஐந்நூறு இலை விழுகிறது. இப்பவே இப்படின்னா கல்யாணத்தின் போது கூட்டம் எப்படி இருக்கப் போகிறதோ!” என்று கவலைப்பட்டார் சாஸ்திரிகள்.
“இந்த மாதிரி நாலு கல்யாணம் செய்தால் கோடீசுவரப் பிரபுவாயிருந்தாலும் இன்ஸால்வென்ஸி கொடுக்க வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் செலவழிப்பா. கடைசியிலே வைதிகாளிடம் வரபோது கை இழுத்துக் கொள்ளும்” என்றார் சாஸ்திரிகள்.
“அதெல்லாம் இல்லை. ஆயிரம் வைதிகாள் வந்தாலும் அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஐந்நூறு டாலர் கொடுக்கப் போறாளாம்” என்றார் அம்மாஞ்சி.
“இன்னும் கொஞ்சம் ரவா புட்டிங் போடு” என்று உப்புமாவை ரொம்பவும் ருசித்துச் சாப்பிட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். அதிலுள்ள கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றையும் உப்புமாவுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அவற்றையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தாள்!
“ரவா புட்டிங் எப்படி இருக்கிறது?” என்று மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கேட்டான் பஞ்சு.
“ஹா…ஹா!…” என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
அந்தச் சீமாட்டி “ஹா ஹா என்று கூறியதை நன்றாயிருக்கிறது என்று சொல்வதாக எண்ணிக் கொண்ட அம்மாஞ்சி, “ராக்ஃபெல்லர் மாமிக்கு இன்னும் கொஞ்சம் ரவா புட்டிங் போடுங்கள்” என்றார்.
சரியாக ஒன்பது மணிக்கு ராக்ஃபெல்லர் வந்து சேர்ந்தார். பிள்ளையின் தகப்பனார் தாயார் அவர்களைச் சேர்ந்த வாத்தியார் முதலியவர்களும் குறித்த நேரத்தில் வந்து விட்டனர். மிஸஸ் ராக்ஃபெல்லர், “திஸ் இஸ் மிஸ்டர் அய்யாஸாம் ‘ப்ரைட்’ஸ் ஃபாதர், திஸ் இஸ் மிஸ்டர் கோபாலய்யர் ‘பிரைட் குரூம்’ஸ் ஃபாதர்” என்று ஒவ்வொருவராகத் தன் ஹஸ்பெண்டுக்கு அறிமுகப் படுத்தினாள்.
மிஸ்டர் ராக்ஃபெல்லர் சிரித்த முகத்துடன் அவர்கள் எல்லோரையும் “ஹவ் டுயு டூ – ஹவ் டுயு டூ” என்று குசலம் விசாரித்தபடியே கைகுலுக்கி மகிழ்ந்தார்.
“மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் எப்போது வருகிறார்கள்?” என்று அவர் விசாரித்தபோது, “முகூர்த்தம் வைத்ததும் வந்து விடுவார்கள்” என்றார் மூர்த்தி.
“முகூரட் என்றால்?” என்று கேட்டார் ராக்ஃபெல்லர்.
“முகூரட் என்றால் மேரேஜ் நடக்கிற டைம்” என்று தன் ஹஸ்பெண்டுக்கு விளக்கிச் சொன்னாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
“அதற்குத்தான் அரேஞ்ச்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் டென் மினிட்லிலே ரெடியாகிவிடும். அதற்குள் உக்கிராண அறையைப் பார்த்துவிட்டு வரலாம், வாங்க. இப்பத்தான் இண்டியாவிலேருந்து ஃபிளவர்ஸ், வெஜிடபிள்ஸ் எல்லாம் வந்திருக்குது என்று அழைத்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
உக்கிராண அறையில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த பூசணிக்காய்களையும், புடலங்காய்களையும் கண்ட ராக்ஃபெல்லர், “பூசணிக்காயும், புடலங்காயும் மட்டும் ரொம்ப ஆர்த்தடாக்ஸ் போலிருக்குது. தே லுக் லைக் இண்டியன் சாதூஸ் வித் ஹோலி ஆஷ்!” என்றார்.
“அவற்றின் நேச்சரே அப்படித்தான் என்றான் பஞ்சு
ஒரு பூசணிக்காயைக் கையினால் தூக்கிப் பார்த்தார் ராக்ஃபெல்லர். அதன் காம்பு பிடித்துத் தூக்குவதற்கு வசதியாக இல்லாமல் போகவே கீழே நழுவி விழுந்துவிட்டது. அவ்வளவுதான் உடனே அத்தனை பூசணிக்காய்களுக்கும் பிளாஸ்டிக்கில் கைப்பிடி ஃபிக்ஸ் செய்து விடும்படி உத்தரவு போட்டுவிட்டார் அவர்.
டிராயிங் ஹாலில் பெரிய பெரிய கார்ப்பெட்டுகளை விரித்து, தாம்பூலம், சந்தனம், மஞ்சள், குங்குமம் எல்லாவற்றையும் எடுத்து வைப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர் பஞ்சுவும், லல்லியும்.
“எல்லோரும் ஹாலுக்கு வரலாம்” என்று அழைத்தார் அம்மாஞ்சி.
அப்பளங்கள் ஆகாசத்தில் பறந்த செய்தியைப் பற்றி விசாரித்தார் ராக்ஃபெல்லர். “அது உங்களுக்கு எப்படித் தெரியும் நியூஸ் பேப்பரில் படித்தீர்களா?” என்று வியப்புடன் கேட்டுக் கொண்டே உள்ளே சென்று அப்பளம் ஒன்றைக் கொண்டு வந்து கணவனிடம் காட்டினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
ராக்ஃபெல்லர் அதைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு, “வெரி லைட் திங்! இதனால்தான் பறந்துவிட்டிருக்கிறது!” என்றார்.
“இருபதாயிரம் அப்பளங்கள் பறந்து போய்விட்டன. அப்புறம் பேப்பர் வெயிட்டுகள் வரவழைத்து ஒவ்வொரு அப்பளத்தின் மீதும் ஒவ்வொன்றை வைத்துவிட்டோம்” என்றாள் மிஸஸ் ராக்.
ராக்பெல்லர் தம்பதியர் உட்காருவதற்கு சோபா கொண்டு வந்து போடச் சொன்னான் பஞ்சு.
“வேண்டாம்! நாங்கள் தரையிலேயே உட்காருகிறோம்” என்று கார்ப்பெட் மீது உட்கார்ந்து கொண்டார் ராக்ஃபெல்லர்.
“கோடீசுவரப் பிரபு! கிஞ்சித் கர்வம் உண்டா?” என்று கூறி மகிழ்ந்தார் அம்மாஞ்சி.
பிள்ளை வீட்டு வாத்தியார் அப்பு சாஸ்திரிகள் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துப் பூஜை செய்தார். பிறகு பஞ்சாங்கத்தைப் புரட்டி ஏப்ரல் மாதத்திலுள்ள முகூர்த்த நாட்களையெல்லாம் வரிசையாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.
“அப்படியானால் அன்றைக்கே வைத்துக் கொண்டுவிடலாமே!” என்றார் பிள்ளைக்குத் தகப்பனார்.
“எதற்கும் பெண்டுகளையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள். அவா செளகரியம் எப்படியோ?” என்றார் அம்மாஞ்சி ஓர் அசட்டுச் சிரிப்புடன்.
பெண்ணுக்கு அம்மா, பிள்ளைக்குத் தாயார் இருவரும் தனியாகப் போய் ஏதோ பேசிவிட்டுத் திரும்பி வந்து, “ஏப்ரல் 29-ஆம் தேதியே இருக்கட்டும். அன்றைக்குச் செளகரியம்தான்” என்றனர்.
“எதுக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியாகப் போய் ஏதோ ஸீக்ரெட்டாகப் பேசிட்டு வறீங்க?” என்று கேட்டார் மிஸஸ் ராக். மூர்த்தியின் மனைவி லோசனா, மிஸஸ் ராக்கை உள்ளே அழைத்துச் சென்று அந்தச் சீமாட்டியின் காதோடு ஏதோ ரகசியமாகக் கூறினாள். விஷயத்தைப் புரிந்துகொண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் சிரித்துக் கொண்டே லோசனாவுடன் வெளியே வந்தாள்!
முதலில் ராக்ஃபெல்லர் பிரபுவுக்குச் சந்தனம் கொடுத்தான் பஞ்சு. சந்தனத்தைத் தொட்டு வாசனை பார்த்துவிட்டு கைக்குட்டையில் துடைத்துக் கொண்டே “லிக்விட் ஸாண்டல் எக்ஸ்லெண்ட்!” என்று கூறித் தாம்பூலம் பெற்றுக் கொண்டார் ராக்ஃபெல்லர்.
மிஸஸ் ராக்ஃபெல்லர் அதை வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபோது பெண்டுகள் அனைவரும் சிரித்துக் கொண்டே, “மாமிக்குக் கொசுவம் வைத்துப் புடவையும் கட்டிவிட்டால் சுமங்கலிப் பிரார்த்தனையில் உட்கார வைத்துவிடலாம்” என்றனர்.
முகூர்த்தப் பத்திரிகை எழுதி முடிந்ததும் அதை வெள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு போய்ஒவ்வொருவரிடமும் காட்டினார் அம்மாஞ்சி. எல்லோரும் பத்திரிகையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தனர்.
“மிஸ்டர் பஞ்ச் இன்றைக்கே நீ மெட்ராஸ் போய் அங்கே நமக்காக ஒரு ஏஜெண்டைப் பார்த்துப் பேசி ஏற்பாடு பண்ணி விடு. நமக்கு எந்த டயத்திலே எது வேணுமானாலும் அந்த ஏஜெண்டுதான் வாங்கி அனுப்பணும். உனக்குத் தெரிஞ்ச ஆசாமிங்க யாராவது இருக்காங்களா?”
“ஒ எஸ். பாப்ஜின்னு மெட்ராஸிலே ஒரு பிரண்ட் இருக்காரு. மேரேஜ் காண்ட்ராக்ட்தான் அவருக்குத் தொழில்” என்றான் பஞ்சு,
“வெரி குட்டாப் போச்சு! நீ அவரையே பிக்ஸ் பண்ணிட்டு வந்துடு. அவரோடு டெய்லி டிரங்க்லே பேசி வேண்டியதை அனுப்பச் சொல்லிவிடலாம்.”
பந்தக்கால் போட வேண்டிய இடத்தில் தேங்காய் உடைத்துப் பூஜை செய்தார் அம்மாஞ்சி. ஒரு பந்தக்காலின் நுனியில் மஞ்சள் பூசி மாவிலைக் கொத்தைக் கட்டினார் அப்பு சாஸ்திரிகள்.
ராக்ஃபெல்லர் தமது கையினால் அஸ்திவாரம் போட்டு, பந்தல்காலையும் ஊன்றிவிட்டார். அவ்வளவுதான்; இதற்குள் மணி பத்து ஆகிவிடவே, ராக்ஃபெல்லர் பிரபு எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு நியூயார்க் புறப்பட்டுவிட்டார். அவர் சென்ற சில நிமிஷங்களுக்கெல்லாம் பஞ்சுவும் கிளம்பி விட்டான்.
இரண்டே தினங்களில் சென்னையிலிருந்து கல்யாணப் பத்திரிகைகள் அச்சாகி வந்துவிட்டன. பத்திரிகையின் பின் பக்கத்தில் வாஷிங்டன் நேஷனல் ஏர் போர்ட்டிலிருந்து ஸம்மர் ஹவுஸுக்குப் போகிற மார்க்கத்தையும் படம் போட்டுக் காட்டியிருந்தான் பஞ்சு. அதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் “வெரிகுட் ஐடியா!” என்றாள்.