Tamil Madhura

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்

வணக்கம் தோழமைகளே!

இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம்.

ஒரு பெண்பார்க்கும் படலத்தை  சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன் ஓடினர். இதை விட வேறென்ன முக்கியமான விஷயம் இருக்க முடியும் என்று உங்களைப் போலவே நானும் எதிர்பார்த்தேன். கடைசியில் பாட்டி போட்டாரே ஒரு போடு….

கதையினைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

தமிழ் மதுரா

 

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்

 

 

லுவலகத்திலிருந்து சற்று சீக்கிரமே கிளம்பிவிட்டான் கோபால். உலகத்திலேயே மிகச் சிறந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய ஐ.டி கம்பெனி ஒன்றில்  பணிபுரியும், சற்றே மிடுக்கான தோற்றத்துடன் வலம் வரும் அழகான இளைஞன்.

வீட்டுக்குள்ளே நுழையும்போதே யாரோ புதிதாக விருந்தினர் தென்படுவது தெரிந்தது. வேறு யார் எல்லாம் நம் வீட்டு ‘நாரதர்’ சுப்புடு மாமாதான்.

“வாங்கோ மாமா… ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?”

“எல்லாரும் சௌக்கியம்… நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போற… பார் அம்மா எவ்வளவு காலமா உனக்கு ஒரு கால்கட்டு போடணும்னு சொல்றா… “

புன்முறுவலுடன் உள்ளே சென்று தப்பிக்க நினைத்தான் கோபால். ஆனால் சுப்புடு நாரதராச்சே. சும்மா கிளம்புவாரா… ஒரு வழியாக கோபாலை உட்கார வைத்து பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். கூடவே சுப்புடு தனது நண்பரும் வங்கி மேனேஜருமான சந்துருவின் காதில் கோபாலைப் பற்றிப் போட்டு வைத்திருப்பதாகவும் கூறினார்.

சந்துருதான் நம் அழகான கதாநாயகி சுபாஷிணியின் அப்பா. ஒரு வழியாக இரு வீட்டாரும் பேசி ஒரு நல்ல நாளில் சொந்தம் சூழ பெண் பார்க்கும் படலம் அரங்கேற ஏற்பாடு செய்தார் சுப்புடு.

அந்த நாளும் வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுது… வழக்கத்தை விட சற்று குளுமையாக… எப்போதுமே சற்று தாமதமாக வரும் அம்புலி இன்று தன்னுடன் சேர்ந்து பெண் பார்க்கவே சீக்கிரமே வந்துவிட்டதாக எண்ணினான் கோபால்.

எல்லோரும் பெண் வீட்டுக்கு வந்தாகிவிட்டது. பெண் வீட்டினர் அனைவரின் முகத்திலும் ஒரே பரபரப்பு. ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று அமரவைத்து, அவர்கள் படிக்க செய்தித்தாள், வாரப்பத்திரிக்கைகளை தந்த பின் மறுபடியும் பெண் வீட்டினரிடம் பரபரப்பு.

மாப்பிள்ளை வீட்டாரிடம் எதிர்பார்ப்பு… “என்ன இந்தப் பெண் வீட்டில், பெண்ணைக் கூடக் கண்ணில் காட்டாமல் அப்படி என்னதான் செய்கிறார்கள்”

பெண்ணைக் காட்டுவார்களா இல்லையான்னு பூவா தலையா போட்டுப் பாத்துடலாமா என்று கூட நினைத்தான் கோபால்.

தனது வீட்டாரிடம் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்து கொண்டவராய் சுப்புடு சந்துருவிடம் “ என்ன நல்ல நேரத்துக்காக காத்திருக்கிங்களா?” என வினவினார்.

“அட போப்பா” இது சுபாஷிணியின் பாட்டி.

“நல்ல நேரத்துக்காக இல்லை நல்ல தண்ணிக்காக”

எல்லாரும் சற்று நேரம் எதுவும் புரியாமல் விழித்தார்கள்.

“ஆ… வந்துடுச்சு… வந்துடுச்சு… “ இது சுபாவின் தம்பி ரகு.

மீண்டும் பரபரப்பு. குடும்பமே தண்ணீர் குடத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். கோபாலின் அம்மாவிற்கோ கோபம்.

ஒரு வழியாக அண்டா குண்டா பானை சட்டி எல்லாம் நல்ல தண்ணீரால் நிரம்பியது. பெண் வீட்டார் முகத்திலும், மனதிலும் ஒரே நிறைவு.

போட்டாரே பாக்கணும் நம்ம பாட்டி

“டேய் சந்துரு… ஒரு மாசமா என்ன பாடு பட்டோம் தண்ணிக்கு… இந்த மாப்பிள்ளை வந்த நேரம் பார்! நம்ம வீடே நிரம்பிடுச்சு. பேசாம இந்த பையனையே பேசி முடிச்சுரு. என் பேத்திக்கு ஏத்த மாப்பிள்ளை”

கோபாலின் அம்மா இதைக் கேட்டு மனம் குளிர்ந்தார்.

பின் என்ன வழக்கமான சொஜ்ஜி, பஜ்ஜி, காப்பி மற்றும் நல்ல தண்ணீருடன் திருமணம் இனிதே நிச்சயம் செய்யப்பட்டது. பார்க்க நடிகர் சுரேஷ் போலவே இருக்கும் கோபாலைப் பார்த்து வெட்கத்தில் நாணி, கோணி கீழே தரையில் சிந்திருந்த தண்ணீரில் தன் பாதங்களால் கோலமிட்டாள் சுபா.

— எழுதியவர்: அருணா சுரேஷ்.