Tamil Madhura

சிறைப்பறவை

 

ந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித்  தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன்.

போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும் இந்த வெயில் கூட உறைக்காத அளவுக்குத்  கிரிக்கெட் கிரவுண்டில் ஆட்டம் போட்டோம். ஒரே வருடத்தில்தான் எத்தனை மாற்றம். கடமை, கட்டுப்பாடு போன்ற தளைகள் என்னை இந்த அளவுக்கு ஆட்டுவிக்கும் என்று எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.

அந்த அறையில் தனது இறுதி நாட்களில் இருந்த காற்றாடி ஒன்று மிக மிக மெதுவாய் சுற்றிக் கொண்டிருந்தது. புழுக்கம் தாங்காமல் எனது நெற்றியில் வியர்வைக் கோடுகள். தண்ணீர் தாகத்தில் தொண்டை வறண்டது.

அறையின் ஓரத்தில் ஒரு பழைய பச்சை பிளாஸ்டிக் குடத்தில் நீர். குடத்தில் படர்ந்திருந்த தூசியைப் பார்த்தால் தண்ணீர் குடத்தில் நீர் நிரப்பி ஒரு மாமாங்கமாயிருக்கும் போலிருக்கிறது. இதைக் குடித்து சாவதற்கு தண்ணீர் தாகத்திலேயே செத்துவிடலாம்.

நான் அறையை சுற்றிலும் இருந்த பொருட்களை விடுத்து,  மனிதர்களின் மேல் கண்ணைத் திருப்பினேன். அப்பொழுதுதான் அங்கிருக்கும் சில நபர்களின் பார்வை ஊசி போலத் துளைத்ததை  கவனித்தேன். கடவுளே நான் என்ன தப்பு செய்தேன். ஏன் இத்தனை சந்தேகப் பார்வை என்மேல்.

இந்த சோதனையிலிருந்து என்னால் தப்பிக்க முடியுமா? இத்தனை நாள் நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதையும் அடியோடு அழித்துவிடக் கூடிய வல்லமை இன்றைய நாளுக்கு உண்டு. இன்றைய நாளின் முடிவு என்னை மனதளவில் நொறுக்கி செயல்பட முடியாமல் செய்துவிடும்சாத்தியக்கூறு இருக்கிறது.

அழுத்தமான ஷூ அணிந்த கால்கள் என்னை நெருங்கின. என் முன்னே கத்தைக் காகிதங்களை நீட்டின.

“இந்தா… ” என்றது அந்த அதிகாரக் குரல்.

கைநடுங்க அந்தக் காகிதங்களை  வாங்கிக்  கொண்டேன். அதில் அச்சடித்த வார்த்தைகள் எனக்கு வசந்தத்தைத் தருமா இல்லை வருத்தத்தைத் தருமா?

‘முருகா! இன்னைக்கு முழுவதும் என் அம்மா சாப்பிடாமல் விரதமிருப்பாள். எனக்காக இல்லாட்டினாலும் எங்கம்மா அப்பாவுக்காக, அவங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்காக இந்த ஒரு தடவை காப்பாத்திடு’

காதைக் கிழித்துவிடும்போல மணிச்சத்தம் ஒலித்தது.

“பரீட்சையை எழுத ஆரம்பிக்கலாம்” தேர்வுக் கண்காணிப்பாளர் உரக்கச்  சொன்னார். நானும் என் நண்பர்களும் பதட்டத்துடன் வினாத்தாளில் இருந்த கேள்விகளைப் படிக்க ஆரம்பித்தோம். ப்ளஸ் டூ பரிட்சைன்னா சும்மாவா?