Tamil Madhura

ஸ்வன்னமச்சா

ThaiPainting1

என் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும் பக்தர்களையும் மற்றவர்களையும், அந்த ஊரின் சிறப்பை ஒரு கைடிடம் சொல்லச் சொல்லிக்  கச்சிதமாகக் கவர்  செய்தேன். இந்த கைடை குறிப்பாகப் பிடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது அவனது பூர்வீகம். அவனது பெயர் நமக்கு அந்நியம் என்பதால் கைட் என்றே குறிப்பிடுகிறேன்.
“நீங்க சினிமாவா” கைட் ஆர்வமாய் கேட்டான்.
“இல்ல டிவி”
“எந்த டிவி?”
“சாட்ரன் டிவி. அதில் ‘ஊர் சுற்றலாம் உலகம் பார்க்கலாம்னு’ ஒரு நிகழ்ச்சி. அதில் உங்க ஊர் அங்கே நடக்குற சுவாரஸ்யமான விஷயங்களை கவர் செய்றோம்”
“உங்க ஊரை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க”
“எங்க ஊர் தெரு முதற்கொண்டு சுத்திக் காமிச்சாச்சு. இனிமே புதுசா காமிக்கணும்னா வீடு வீடாத்தான் காமிக்கணும். அதையும் சில கலையுள்ளம் கொண்ட ஆண்கள் காமிராவை வீட்டாளுங்களுக்கே  தெரியாம வச்சு உலகத்துக்கே  காமிக்கிறாங்க. அதனால எங்களுக்கெல்லாம் பெருசா வேலையில்லை”
அவன் விழித்தான்.
“அது கிடக்குது… நீ  இந்த ஊரிலோ இல்ல சுற்றுப் புறத்திலோ நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லு. நிறைய பணம் தரேன்”
பையைத் திறந்து ஒரு கற்றை நோட்டை அவன் கைகளில் திணித்தேன். கைட் விழிகள் பிதுங்கி வெளியில் தெறித்து விழாத குறை.
“உனக்கு ஏதாவது தெரியுமா? நல்ல தகவலா இருந்தா இதைப் போல இன்னொரு மடங்கு தரேன். புதையல், அமானுஷ்யம் இந்த மாதிரி…. ” தூண்டில் போட்டேன் .
அவன் முகத்தில் யோசனை.
“உனக்கு எதுவும் பிரச்சனை வராம பார்த்துக்கிறேன்… இங்க ஏதாவது அந்த மாதிரி சுவாரஸ்யமான விஷயம் இருக்கா?”
“இருக்கு… இங்க பக்கத்தில் ஒரு கிராமம் இருக்கு. அங்க வீடுங்க எல்லாம் ஆத்து மேல கட்டிருப்பாங்க… அந்த ஆறோட கரையில் ஒரு கோவில் இருக்கு. அங்க பெரும் புதையலைப்  புதைச்சு வச்சிருக்காங்களாம். அது என்னன்னு யாருக்குமே தெரியாது”
“இது உண்மையா”
“சத்தியம்…. எங்க ஊர் பக்கமிருக்கும் ஆளுங்க எல்லாருக்கும் அது தெரியும்”
“தோடா…. இதானே வேண்டாம்னு சொல்றது. புதையலை நீங்க இத்தனை நேரம் விட்டா வச்சிருப்பீங்க?”
“நிறைய பேர் முயற்சி பண்ணாங்க. ஆனால் பேயடிச்சு செத்துட்டாங்க. அந்த பயத்தில் யாருமே கிட்ட போறதில்லை.”
“பேயாவது பிசாசாவது. அந்த பேரை சொல்லிட்டு மனுஷன் அடிச்சுருப்பான்”
“இல்ல நிஜம்மாவே பேய்தான். செத்தவங்க எல்லாருக்கும் தலைல அடி. எதோ பெரிய ஆயுதத்தை வச்சு அடிச்ச மாதிரி முகமே சிதறி இருக்கு. ஆனால் அந்த ஆயுதம் என்னென்ன கண்டு பிடிக்க முடியல”
“சரி… இன்னைக்கு சாயந்தரம் என்னை அங்க கூட்டிட்டு போற”
“நானா… “
“வந்தா இதை மாதிரி இன்னும் மூணு கட்டு பணம் தருவேன்”
“சரி.. ஆனால் தூரத்தில் காமிச்சுட்டு வந்துடுவேன்”
ஒத்துக் கொண்டேன்…
நான் வந்த காரியம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று நினைக்கவே இல்லை. அந்த புதையலைத் தேடித்தான் வந்தேன். யாரும் வாயைத்திறக்க முன்வராத போது  தானாய் மாட்டிக் கொண்ட ஆடு. அவனை சமாதனப் படுத்த ஒரு சாமியாரிடம் பேய் தடுக்கும் தாயத்து என்று அவன் சொன்ன ஒன்றை வாங்கி கட்டிக் கொண்டோம்.
அதன் பின்னரே வற்றாத ஜீவநதி ஓடும் ஆற்றையும், அதில் படகு வீட்டில் தங்கியிருக்கும் மக்களையும் அறிமுகப் படுத்தினான். போட்ட வேஷத்துக்காக அவர்களை சில வீடியோகளையும், புகைப்படத்தையும் எடுத்தேன். அதற்கு  அவர்கள் மட்டும் காரணமில்லை. அந்தக் கும்பலில் தென்பட்ட அழகான பொம்மைப் பெண்களையும் படம்பிடித்துக் கொண்டேன். வாவ் இவளுங்களை எல்லாம் கண்ணாடியில் செஞ்சாங்களா… இப்படிப் பளபளக்கும் பட்டுமேனியா… என் மனது சபலப்பட்டது. புதையலுடன் சேர்த்து யாராவது ஒரு பெண்ணையும் கடத்திவிட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் விழுந்தது.
தனியாக மாட்டிக் கொண்ட ஒருத்தியை மடக்கி பெயரைக் கேட்டேன் “ஸ்வன்னா” என்றாள். அவள் கண்களில் என் மேலிருந்த மயக்கத்தைக் கண்டறிந்தேன்.
“ராத்திரி இந்த ஊரை விட்டுப் போறேன். என் கூட வந்துடுறியா… டவுனில் பணக்கார வாழ்க்கைன்னா என்னன்னு காமிக்கிறேன்”
ஒரு வினாடி யோசித்தவள் “அந்தப் பெரிய மரத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி ஆறு இருக்கும். அங்க உனக்காகக் காத்திருப்பேன்” என்றாள்.
இரவு கைடும் நானும் அந்த கோவிலை வந்தடைந்தோம்.
தூரத்தில் காண்பித்தான் அவன். “இங்க பாரு இப்ப கூட மோசமில்லை… நீ எனக்குப் பணம் கூடத்  தர வேண்டாம். இப்படியே வா நம்ம ரெண்டு பேரும்  ஓடிப் போயிடலாம்”
“போகலாமே… இந்த புதையலை ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துட்டு போகலாம்”
“ஐயோ நான் வரல”
ஆசை காட்டி, பயம் காட்டி அவனை சம்மதிக்க வைத்தேன். பெரிய மரத்தை சுற்றியிருந்த புதரை இருவரும் சேர்ந்து வெட்டினோம். கொத்துக் கொத்தாய் வேரோடு வேராய் ஊர்ந்த  பாம்புகளை நான் சுட்டுக் கொன்றேன். அப்படியும் தப்பிய ஒரு பாம்பு கைடைக் கடிக்க, உயிருக்கு பயந்து கத்தினான். சாகட்டும் ஒரு புல்லட் எனக்கு மிச்சம்.
மரத்தில் வேரோடு வேறாய் ஒன்று டார்ச் ஒளி பட்டு மின்னியது. மண்வெட்டியால் ஈர மண்ணை வெட்டி, உள்ளே தென்பட்ட பொருளை துடைத்துவிட்டு டார்ச் வெளிச்சத்தில் பார்த்தேன்.வாவ்! மரகத ராமர் அனுமர் சிலை. கிரீடம் தங்கத்தில் வைரம் பதித்திருந்தது.
ராமா! இந்த முட்டாள்களுக்கு அருள் புரிந்தது போதும். இனி எனக்கு மட்டும் அருள் புரி.
இறக்கும் தருவாயிலிருந்த கைடிடம் சிலையைக் காட்டினேன்.
“இந்த சிலையை எடுத்துட்டேன். இப்ப என்ன செத்தா போயிட்டேன். இந்த மாதிரி மூட நம்பிக்கையாலதான் காசெல்லாம் புதைஞ்சே கிடக்கு”
“சிலையை எடுக்கலாம். ஆனால் நீ இந்த எல்லையைத் தாண்ட முடியுதான்னு பாரு” என்றபடி மூச்சை நிறுத்தினான். சிலையை எடுத்து எனது பையில் போட்டுக் கொண்டேன்.
இதை மாதிரி எத்தனை சாபத்தைப் பாத்திருப்பேன். இதெல்லாம் நினைச்சு பயப்படுற ஆள் நானில்லை.
கிளம்பும்போது சபலம் தட்ட… ஸ்வன்னா  காத்திருக்கிறேன் என்று சொன்ன நதிக்கரை பக்கமாக நடந்தேன். அவளைக் காணவில்லை. பச்… எதிர்பார்த்ததுதான்.
கிளம்ப நினைத்தபோது யாரோ நதியிலிருந்து  கையை ஆட்டியது போலிருந்தது. அருகில் சென்றால் ஸ்வன்னாதான்.
“நட்ட நடு ராத்திரி ஆத்து தண்ணில நிக்கிறாயே… குளிரல”
“இந்த நேரத்தில் ஆறு சூடா இருக்கும். இறங்கித்தான் பாரேன்”
பெண்கள் எனது மிகப் பெரிய பலவீனம். இந்த அழகி பட்டு இதழ்களால் குளிக்க அழைக்கும்போது மறுத்தால் நான் ஒரு ஆண்மகனா?
உடனே இறங்கினேன்.
“உனது காரியத்தை முடித்துவிட்டாயா” நிதானமாகக் கேட்டாள்.
“என்ன காரியம்”
“ராமர் சிலையைத் திருடும் வேலையைத்தான் சொல்கிறேன்”
“கனா கண்டாயா… ராமர் சிலை இங்கு ஏது”
“உன்னை பயமூர்த்த விரும்பவில்லை. ஆனால் ஹனுமானின் தோழமை ஒன்று ராமர் சிலையை இங்கு கொண்டு வந்து பாதுகாத்து வருவதாக ஐதீகம். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு”
“அந்த தோழி பாம்புகளை எல்லாம் கொன்னுட்டேன். நான் எத்தனையோ தவறு செஞ்சிருக்கேன். அதுக்கெல்லாம் தண்டிக்காத இந்த சாமி சின்ன சிலையை திருடினதுக்கா  கொல்லப் போகுது?
அதுவும் பேய் வந்து கொல்லும்னு அந்த கைட் சொன்னான். அதனாலதான் இந்த கயிறு எல்லாம் கட்டிட்டு வந்தோம். நீ என்னடான்னா சாமியோட பிரென்ட்னு சொல்ற” சிரித்தேன்.
“அது பேய் இல்லை… ” என் அவள் என் அருகில் அந்த ஆற்று நீரில் நின்றபடியே உடலை அசைத்தாள் பின்னாலிருந்து எழுந்த ஒன்று ஓங்கி என் தலையில் அடித்த வேகத்தில் என் மண்டை ரெண்டாகப் பிளந்தது.
தண்ணீரிலிருந்து ஜம்ப் பண்ணிக் கரையில் அமர்ந்தவள் உடல் இடுப்புக்குக் கீழே மீனாக இருந்தது.
“நான்தான் அனுமன் பூஜித்த இந்த ராமர் சிலையை பாதுகாத்து வர்றேன். தவறுகளின் எண்ணிக்கை அதிகமாகி மரணம் சம்பவிக்கும் நேரம் வருபவர்கள் மட்டுமே இந்த இடத்தைக் கண்டுபிடித்து வருவார்கள்.
என் முழு பெயர் சொர்ணமச்சை. கடற்கன்னி”
என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக சென்றுக் கொண்டிருந்தது. கடைசியாக நான் கண்ட காட்சியில் சொர்ணமச்சையின் இடுப்புக்குக் கீழே மறுபடியும் கால்கள் வந்திருக்க மெதுவே அந்த சிலையை எடுத்துச் சென்று மரத்தினடியில் வைத்தாள். வினாடியில் அந்த மரத்தை சுற்றி புதர் மண்டியது மரத்திலிருந்து கொத்துக் கொத்தாய் பாம்புகள் அந்தப் புதரில் விழுந்தன.
பொக்கிஷத்தை மச்சக்கன்னி கூட பாதுகாப்பாளா? புதையலை பாம்பும் பூதமும் மட்டும் தான் பாதுகாக்கும்னு சொன்ன மடையன் தலையில் இடி விழ.