Tamil Madhura

பிக் பாஸ்

kamal-haasan_640x480_71493808262
சென்னையின் புகை மூடிய தார் ரோட்டின் நடுவே, அந்த ஷேர் ஆட்டோ தனது பயணத்தைக் தொடர்ந்தது. நிறைமாசமான கர்ப்பிணிப் பெண் ஒருத்தி  மூச்சு வாங்க நடப்பதைப்  போல, பிதுங்கி வழிந்தோடும் பயணிகளை சுமந்து கொண்டு, திணறித் திணறி மறைமலைநகருக்கு அருகே நெருங்கியது.

வாரக் கடைசியில் காணாமல்  தவறவிட்ட பிக்பாசில் உலகநாயகனைக் கண் இமைக்காமல் ஆர்வத்தோடு பார்த்தவண்ணமிருந்த திரிபுரசுந்தரியை நாலாபுறமிருந்தும் ஆட்கள் நெருங்கினார்கள். சுந்தரி தன்னைக் கத்தியால் குத்தியவர்களைக் கூட மன்னித்து விடுவார் ஆனால் கமலைப் பார்க்க இடையூறு செய்தவர்களை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டார்.

இதை நம்பவில்லை என்றால் அவரது கணவர் கேசவனைக் கேளுங்கள். அவர் தெரியாமல் செய்துவிட்ட ஒரு பிழைக்காக இன்றும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அது என்ன தவறு என்று விரைவில் சொல்கிறேன்.

வெற்றிலை வாடை, பவுடர் வாடை, திருநீற்றின் மணம், வியர்வை நாற்றம், சென்ட்டின் மணம் என்று கலந்து கட்டி வீசிய மணங்களால் திருபுரசுந்தரிக்குக் குமட்டியது. ஆட்டோ
ஓட்டுனரிடம் பாய்ந்தார்

“டேய் தங்கராசு… இத்தனை ஆளுங்களை ஏத்தாதேன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன். நீ கேட்கமாட்டிங்கிற… இன்னொருத்தரம் இது மாதிரி நடந்தது கவர்ன்மென்ட்டுக்கு எழுதிப் போட்டுருவேன் பாத்துக்கோ”
சோடாபுட்டிக் கண்ணாடியை சரி செய்தவாறு மிரட்டினாள் .

“மினி பஸ் உடுறேன்னு அஞ்சு வருஷமா டபாய்ச்சுட்டு இருக்காங்களே… முதல்ல அத்தைக் கேளு… அப்பறம் என்னைக் கேட்கலாம்” தெனாவெட்டாய் பதில் சொன்னான் தங்கராசு.

கொல்லென்று சிரிப்பொலி எழுந்தது அங்கு. எரிச்சல் மேலும் அதிகமாகியது திருப்புரசுந்தரிக்கு.

“அது இல்லாத பாவத்துக்குத் தானே உன்கிட்ட தண்டம் அழுதுட்டு தினமும் உயிரைக் கைல பிடிச்சுட்டு வர்றோம். அவன் விடுறப்ப விடட்டும்… ஆனால் உன் பணத்தாசைல இப்படி வழிய வழிய ஏத்தி எங்க எல்லாரையும் ஒரேடியா சொர்க்கத்துக்கு அனுப்பிடாதே” சுட சுட தந்துவிட்டு தனது ஸ்டாப்பில் இறங்கினார்.

காகிதத்தை சாலையில் வைத்தால் நெருப்பில்லாமலேயே பற்றிக் கொள்ளும் போல வெயில் கொளுத்தியது. சுற்றிலும் பொட்டல் காடு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டிடங்கள். அதில் சற்று அதிநவீனமான இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று “பரமு ரிசர்ச் லேப்” என்று பெயர்ப்பலகை பெரிதாகப் பளிச்சிட்டது. ஆசுவாச மூச்சு விட்டபடி கட்டிடத்தினுள் சென்றார்.
வெங்கடேஸ்வரன் ஐஐடி ரிசர்ச் பிரிவின் ஆராய்ச்சியிலேயே தனது இளமையைத் தொலைத்துவிட்ட விஞ்ஞானி. முப்பது வருடங்களாக என்னவோ ஆராய்ச்சி செய்து வருகிறார்.

தான் வேலைசெய்த தனியார் நிறுவனத்தை மூடிவிட்டதால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த ரிசர்ச் லேபில் குமாஸ்த்தா வேலைக்கு சேர்ந்திருந்தார் சுந்தரி.

“மேடம்… நாளைக்கு வெங்கடேஸ்வரன் சாரோட ப்ரேசெண்டேஷன் இருக்கு. அவரோட பிஏவுக்கு ஆக்சிடென்ட் ஆனதால மெடிக்கல் லீவ் போட்டிருக்காங்க. அதனால நீங்க இந்த வேலைகளை செஞ்சுடுங்க” என்றபடி லிஸ்டை நீட்டினார் மேனேஜர்.

‘ஒரு ரூபா கொடுத்துட்டு பத்து ரூபாவுக்கு வேலை வாங்குவானுங்க’ மனதினுள் திட்டியபடி “டாக்குமெண்ட் எல்லாம் தாங்க பவர் பாயிண்ட்டில் போட்டுத் தரேன்” என்றார்.

“எல்லாம் கான்பிடென்க்ஷயல் விஷயம். சாரோட ஆபிஸ் ரூமில் எல்லாம் இருக்கும். அங்க போய் உங்க வேலைகளைத் தொடருங்க” என்றதும் ஆடி அசைந்து அங்கு சென்றார்.

‘சே… இன்னும் பிக் பாஸ் முழுசும் பாக்கல. கமல் அந்த சூலியை வாங்கு வாங்குன்னு வாங்குறார். அதைப் பாக்க முடியாமல் இங்க வந்து மாட்டிகிட்டேனே. என் தலையெழுத்து. அன்னைக்கு மட்டும் எங்க அப்பாவை எதிர்த்துட்டு ராஜ்கமல் ஆபிஸ் போயிருந்தா என் நிலமை இப்படியா இருந்திருக்கும்’ பெருமூச்சு விட்டபடி கம்பியூட்டரை உயிர்ப்பித்தார்.

1985ஆம் வருடம். சென்னை ஏர்போர்ட். திருமணம் முடிந்து சிங்கப்பூர் செல்லும் மணப்பெண்ணை வழியனுப்ப பெரிய உறவினர் கும்பல் ஒன்றுதிரண்டு ஏர்போர்ட்டை ஆக்கிரமித்திருந்தது. அதில் ஒரு ஓரமாக சிகப்பாக, நீட்டு முடியுடன், கண்ணாடிக்குள் தெரிந்த பெரிய கண்களுடன், நீல நிறப் புடவையில் விமான நிலையத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் திரிபுரசுந்தரி. அந்தக் கூட்டத்தில் பளிச்சென்று அழகாகத் தெரிந்த அவரை மறுமுறை திரும்பிப் பார்க்காமல் சென்றவர் குறைவு.

“கமல் வர்றாரு, கமல் வர்றாரு’ என்று சத்தம் கேட்க, ஆர்வத்தோடு தேடினாள் திரிப்புரசுந்தரி. தங்கம் போல நிறத்தில், குறும்புப் பார்வையுடன் தன்னிடம் கை குலுக்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு கை கொடுத்தபடி வேக நடை போட்ட உலக நாயகனைக் கண்ட கணம் அப்படியே உறைந்தாள். தன்னை அறியாமல் அவர் கையைப் பிடித்து குலுக்கி “சார் சார், நான் உங்க பரம ரசிகை சார். உங்க படம் ஒவ்வொண்ணும் மூணு தரமாச்சும் பாத்துடுவேன். எங்கப்பாகிட்ட சினிமா பைத்தியம்ன்னு அடி கூட வாங்கியிருக்கேன். ஜப்பானில் கல்யாணராமன் படத்தை சீக்கிரம் முடிங்க ஸார் ” என்றாள்.

“அப்படியா…” என்று சில வினாடிகள் பார்த்துவிட்டு தனது உதவியாளரிடம் ஏதோ சொன்னார். பின்னர் கண்ணிலிருந்து மறைந்துவிட்டார்.

அவர் உதவியாளர் அவளை அழைத்து “கமல் சார் விக்ரம்னு புது படம் ஒண்ணு எடுக்கப் போறார். அதில் மூணு ஹீரோயின். ஜப்பானில் கல்யாணராமன் ராதா நடிக்கிறதால, விக்ரம்ல அம்பிகா. அதுதவிர இன்னும் ரெண்டு புதுமுகம் புக் பண்ணலாம்னு இருக்கோம். உனக்கு நடிக்க விருப்பம் இருந்தா புதன்கிழமை ஆபிஸ் வந்து பாரும்மா. மேக்கப் டெஸ்ட் எடுத்துடலாம்” என்று சொன்னதும் ஜிவ்வென்று பறப்பதை போலிருந்தது.

ஆனால் விதிவசமாய் அதே புதன்கிழமை கேசவன் வீட்டில் சுந்தரியைப் பெண்பார்த்து, திருமணம் நிச்சயம் செய்துவிட்டு சென்றார்கள். தன்னைத் திருமணம் என்ற சிறையில் தள்ளி வாழ்க்கையைப் பாழாக்கிய கணவரிடம் மஹா கோபத்தில் இருந்தார் சுந்தரி.

இத்துடன் பிளாஷ்பேக் முடிந்தது. ஆராய்ச்சிக் கட்டுரையை ஸ்பெல் செக் பண்ணியவள் அதில் இருந்த விஷயங்களைக் கண்டு நம்பமுடியாமல் திகைத்தாள். அதன் சாராம்சமாவது

‘இது நான் சமர்ப்பிக்கும் ‘இறந்த காலப்பயணம்’ பற்றிய கட்டுரை. இப்போது கம்பியூட்டர் யுகத்தில் ஸ்னாப்ஷாட் எடுப்பதை போல நானும் முப்பது வருடங்களுக்கு முன்னர் சில நிகழ்வுகளை ஸ்நாப்ஷாட் எடுத்து வைத்துள்ளேன். இந்த மெஷினில் அமர்ந்து கதவை மூடிக் கொண்டு, அந்த ஸ்நாப்ஷாட்டைத் திரையில் போட்டுவிட்டால் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றுவிடலாம்.’

உதாரணமாக ஒரு வீடியோ ஒன்றை இணைத்திருந்தார். அதில் இருந்தது நடிகர் கமலின் ஆபிஸ் முன்பு முப்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஸ்நாப்ஷாட். சரியாக சொன்னால் திரிபுரசுந்தரியை மேக்கப் டெஸ்ட்டுக்கு அழைத்திருந்த தினம். அதைக் கண்டதும் இழந்த அதிர்ஷ்டம் மீண்டும் கிடைத்ததை போல சந்தோஷத்தில் குதித்தாள்.

வேகமாய் அந்த மெஷின் இருக்கும் அறைக்கு சென்று குறிப்பிட்ட வீடியோவைப் பிளே செய்து ஸ்நாப்ஷாட்டை ஓடவிட்டு கடந்தகாலத்துக்கு சென்று அந்த இடத்தை அடைத்தாள்.

வாசலில் காவல்காரன் “யாரும்மா நீ என்ன வேணும்…” அலட்சியமாய் கேட்டான்.

“பிக் பாஸைப் பாக்கணும்”

“பாஸா… என்னமோ கொள்ளைக் கூட்டத் தலைவன் மாதிரி சொல்ற. இது கமல் சார் ஆபிஸ்”

“தெரியும். 2017லில் அவர்தான் தமிழ்நாட்டுக்கே பிக் பாஸ். உனக்கெங்கே தெரியப்போகுது.
அவர்தான் என்னை ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு வர சொல்லிருக்கார். அதை மட்டும் சொல்லு போ” என்றார் அதிகாரமாக. பின் பந்தாவாக வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.

திகைப்போடு பார்த்தவண்ணம் உள்ளே சென்று “சார் புது படத்தில் அம்மா வேஷம் எதுவும் இருக்கா சார். ஒரு அம்மா உங்களை பாக்க வந்திருக்கு” என்றான் குழப்பத்தோடு.

அவன் சொன்னது காதில் விழ, ‘அம்மா வேஷமா’ திகைத்தபடி ஆபிசில் தெரிந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள் திருப்புரசுந்தரி. அவளை சுற்றிலும் 1980களில் இருக்க தன் உருவம் மட்டும் 2017லேயே இருப்பதைக் கண்டு அவளது கண்கள் இருட்ட ஆரம்பித்தது.

“ஹலோ என்னாச்சு ஆன்ட்டி… இந்த பெரியம்மா மயக்கம் போட்டுட்டாங்க. டாக்டரைக் கூப்பிடுங்க” என்று கமல் சொன்னதைக் காதில் கேட்டவாறே மயங்கி விழுந்தாள்.

அதே நேரம், 2017லில் தன் ஆராய்ச்சி மாணவர்களிடம் வெங்கடேஸ்வரன் ‘ஸ்னாப்ஷாட்னுறது போட்டோ மாதிரிதான் அதில் பழைய விஷயங்கள் தெரிஞ்சாலும் அதைப் பாக்குற, இயக்குற நமக்கு வயசாறதில்லையா… அதனால நம்ம அதே வயசில்தான் இருப்போம்.

என்ன சொல்ல வரேன்னா … எனக்கு இப்ப எழுவது வயசாறது. நான் அம்பது வருஷத்துக்குப் பிந்தி பயணம் செய்தாலும் இதே எழுவது வயசில்தான் இருப்பேன். என் வயசு மாறாது, குறையாது. இதை மறக்காமல் அந்த டாக்குமெண்ட்டில் சேர்த்துடுங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.