Tamil Madhura

How to guide

Image result for happy lovers photo
How to guide நல்ல ஆவியை  பழி வாங்கும் பிசாசாக்குவது எப்படி

நானும்  ரூபாவும் அந்த வீட்டை சுற்றியிருந்த தாழ்வாரத்தில் அமைதியாக சீட்டுக்கட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

அந்த வீடு சற்று பழங்கால வீடுதான். பராமரிப்பு சுத்தமாக இல்லை. அவ்வளவு பெரிய வீட்டையும் தோட்டத்தையும்  பராமரிக்கவே குறைந்தபட்சம் இருபது  பேர் தேவை. ரியல் எஸ்டேட் மக்களின் கவனத்தைக் கவராத, விலை பெறாத இந்த வீட்டுக்கு செலவழித்து என்ன பயன் என்று சொந்தக்காரர் நினைத்ததால் என்றாவது ஒரு நாள் மேலோட்டமாக வீட்டை சுத்தம் செய்து பார்வையிடுவதோடு சரி. ஹான்டட்  மேன்ஷன் போல விளங்குவதால் ஆள் நடமாட்டம் கூட ரொம்பக்  குறைவு.

அதனால் எங்கள் இருவருக்கும் அந்த வீடு சொர்க்க பூமியாய் விளங்கியது. வீட்டிற்குத் தெரியாமல்  இருவரும் சந்திக்கும் ஸ்பாட்டே  இதுதான். பார்க் பீச் என்றால் தெரிந்தவர்கள் தொல்லை. அம்மா அப்பாவிடம் அடி வாங்கவேண்டும். அதனால் ராகுல்  கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுத்ததுதான் இந்த வீடு.

இங்கு இருவரும் விளையாடுவோம், சத்தமாக  காதல் டூயட் பாடுவோம், பயங்கரமாக ஆர்கியு பண்ணுவோம்,  சமாதான ஒப்பந்தம்  செய்துக்கொள்வோம். எல்லாம் அந்த வீட்டில்தான். யாரும் எட்டிக்  கூட பார்க்கமாட்டார்களே. சோ.. அடுத்தவர்களின் பயம் உங்களது பலம்.

சில நாட்களாய் கேட்பதைப் போல அன்றும் மாடியிலிருந்து யாரோ பொருட்களை நகர்த்தும் ஓசை, காலடி ஓசை கேட்டது.
“ராகுல் யாரது… பயம்மா இருக்கு”

“யாரும் இங்க வர மாட்டாங்க… வழக்கம் போல முன்னாடி அறையில் இருந்துட்டு ஓடிடுவாங்க”

“இருந்தாலும்…. நம்ம எங்கேயாவது சேஃப்பான  இடத்துக்குப் போயிடலாமே…”

“மாடிப்படிக்குக் கீழ இருக்குற ரூம்ல கொஞ்ச நேரம் ஒளிஞ்சுக்கலாம். அவங்க போனதும் மறுபடியும் வரலாம்”

இருவரும் மாடிப்படியில் கீழிருந்த ரூமில் ஒளிந்து கொண்டோம். நண்பகல் கடந்து மாலை முடிந்து இரவும் ஆரம்பித்து விட்டது. இன்னும் அந்த சத்தம் மறையவில்லை. ஆனால் இரவு நெருங்க நெருங்க அந்த நடமாட்டம் அதிகமானது. பார்த்து பார்த்து எங்கள் காதுகளில் விழுந்து விடக்கூடாது என்று மெதுவாக பூனை நடை நடந்தனர்.

“எனக்கு பயமா இருக்கு ராகுல்.. நம்மால இந்த அறையை விட்டு வெளியவே போக முடியாதா”

அவனுக்கும் காற்றுக்கு கூட புகை முடியாத  அந்த சிறிய அறையில் இருப்பது எரிச்சலாய்  இருந்தது.

“ஏன் முடியாது… இப்ப நான் போகப் போறேன். அந்த மாடில யார்தான் இருக்காங்கன்னு பார்த்தே ஆகணும். நான் மெதுவா எட்டிப் பார்த்துட்டு வந்துடுறேன்  நீ இங்கேயே இரு”

“வேண்டாம்… ” நான் சொல்லி முடிப்பதற்குள் அவன் வெளியே ஓடிவிட்டான்.

இந்த ராகுலுக்கு எல்லாத்திலும் அவசரம்தான்.. பதினெட்டு   வயதில் என்னைக் காதலித்ததாகட்டும், இருபத்தி ரெண்டு வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து என்னைக் கல்யாணம் செய்ததாகட்டும்.  எல்லாவற்றிலும் ரொம்ப ரொம்ப அவசரம்தான்…

ஏதோ  தடபுடவென உருட்டும் சத்தம் கேட்டது.. மிகப் பெரிய அலறல் வேறு…. அது ராகுலின் குரல்…  ஒரே ஒரு முறைதான் அவனிடமிருந்து இவ்வளவு வேதனையான அலறலைக் கேட்டிருக்கிறேன்.

வேகமாய் வெளியே வந்தேன்.. மாடி அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அங்கே வெள்ளைக் கோட் போட்ட சிலர் கையில் ஒரு கண்ணாடி ஜாடி  மற்றும் பெரிய பெரிய  மெஷினுடன் நின்றுக் கொண்டிருந்தனர்.

“வாவ்.. நம்ம பாராநார்மல் ரிசர்ச் சக்ஸஸ்… கடைசியா ஒரு பேயை பிடிச்சுட்டோம்.. உலகத்தில் நம்ம பெயரும் புகழும் எங்கேயோ போகப் போகுது பாரு…”

சோடா புட்டிக் கண்ணாடி போட்ட ஒருவன் இன்னும் தீவிரமாக சொன்னான் “அன்னைக்கு இந்த வீட்டில்  கொலை செய்யப்பட்ட ஜோடியில் ஒரு பேயைத்தான் பிடிச்சிருக்கோம். இன்னொரு பேய் இங்கதான் இன்னமும் சுத்திட்டு இருக்கு… இதைப் பிடிச்ச மாதிரியே அதையும் பிடிச்சுட்டு நம்ம ஆராய்ச்சி முடிவை உலகத்துக்கு அறிவிக்கலாம்”

“லூசு இந்த பேய் பிடிக்கிற மெஷின் அஞ்சு  மணிநேரம்தான் தாங்கும்னு தெரியாதா… நாளைக்கு சார்ஜ் பண்ணிட்டு மறுபடியும் இங்க வந்து அந்தப் பேயைப் பிடிக்கலாம்”

“இந்தப் பேயை என்ன செய்றது. ”

“நம்ம ரிசர்ச் லேபுக்கு எடுத்துட்டு போய்டலாம்.. எல்லா டெஸ்ட்டும் பண்ண ஆரம்பிக்கலாம். இதுக்கு ஏதாவது ஆனாலும் புது பேய் பேக்அப்பா இருக்கே”

“குட் ஐடியா”

அவர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அடைக்கப்பட்ட ஜாடியிலிருந்து  ராகுல் நான் மட்டும் புரிந்து கொள்ளும்  மொழியில் கத்தினான் “ரூபா பக்கத்தில்இருக்கும்  ஏதாவது மரம் குட்டைக்கு ஓடிப் போயிடு.. இங்கிருக்காதே…”

நானும் அவனும் கொலை செய்யப்பட்டதே  இந்த வீட்டில்தான். செத்ததிலிருந்து இங்குதான் இருக்கிறோம். நாங்கள் இருவர் மட்டும்தான் இங்கு வசிப்பது. இப்போது வேறு இடம் போனால் எங்களுக்கு என்னாகும். தெரியவில்லை…. அதற்கு நாங்கள் முயற்சித்ததும் இல்லை. என் ஒரே துணையை பறித்துக் கொள்ளப் போகிறார்களா…

இப்பப்  பேய் பிடிக்கும் மெஷின் வேலை செய்யாதுன்னு சொன்னாங்கள்ல… தீவிரத்துடன் அவர்களைப்  பார்த்தேன். என் கண்கள் ஆக்ரோஷத்தில் சிவந்து  வெறியேறியது… சாந்தமான ஆவி  முகம் கோர பற்களுடன் பிசாசுக் களை காட்டியது. இடி இடி என சிரித்தபடி அவர்களின் கழுத்தை நோக்கி என் கோர ரத்தம் தோய்ந்த விரல்களை நீட்டினேன்.

நாளையிலிருந்து இந்த வீட்டில் நானும் ராகுலும் மட்டுமில்லை.  எங்களுக்குத் துணையாக  இன்னும் நான்கு பேர் இணையப் போகிறார்கள்,  வெள்ளைக் கோட்டுடன்….