
ஒண்ணுமே புரியல உலகத்திலே…
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல உலகத்திலே…
நில்லுங்க நில்லுங்க வயசான கிழவி என்னமோ உளறுதுன்னு நினைச்சுகிட்டு பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போயிடாதிங்க. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். ஏன்னா இன்னைக்கு நான் எதிர்கொள்ளுற பிரச்சனைகளை நாளைக்கு நீங்களும் எதிர்கொள்ள நேரிடலாம்.
கொல்லைப்புற தோட்டத்துலே ஒரு வேப்ப மரமும் அதுக்கு பக்கத்துல ஒரு சிமிண்ட்டு பெஞ்சும் இருக்கும். அங்க உக்காந்திருங்க நான் வந்துடுறேன்.
அப்படியே அந்தப் பக்கம் என் பேரப் பிள்ளைகள் இருந்தா இழுத்து உக்கார வைங்க. அவங்களைக் கண்ணுல பாத்தே கொள்ளை நாளாகுது. அவங்க ரெண்டு பேரும் என் மக வயத்து பேரப்பிள்ளைகள். பக்கத்துலதான் வீடு. தினமும் என்னைப் பாக்க வந்துடுவாங்க.
ஒரு நிமிஷம்… நிறைய குழந்தைகள் விளையாடிட்டு இருக்குமே… நீங்க கண்டுபிடிக்கிறது கஷ்டமாச்சே… நான் அடையாளம் சொல்லிடுறேன்.
பேத்தி பேரு சீதா. மூணாவது படிக்கிறா. பாப் கட் முடி, குட்டையா பேண்ட்டு போட்டுருப்பா. ஒவ்வொரு இடத்துக்கும் குரங்கு குட்டியாட்டம் தாவுவா. அவளோட தம்பிதான் அஸ்வின். வாலுத்தனத்தில் அக்காவுக்கு கொஞ்சமும் சளைச்சவனில்லை. முன்னாடி ரெண்டு பல்லு இப்பத்தான் விழுந்துச்சு. ஓட்டப்பல்லுன்னு சொன்னா ஓடி ஓடி சண்டை போடுவான்.
ரெண்டும் ரெண்டு சந்தோஷ மூட்டைகள். அவங்களை பாக்குறவங்களுக்கே அவங்களோட துறுதுறுப்பு தொத்திக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் அவங்க ரெண்டு பேரையும் இப்ப காணோம்… அதைவிட அதிர்ச்சியான விஷயம் என் பொண்ணே அந்த மாதிரி குழந்தைகள் இல்லைன்னு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணுறா…
தலை சுத்துதா.. எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. ஒருவேளை வேற்று கிரகவாசிகள் யாராவது குழந்தைகளை எடுத்துட்டு அவர்கள் பத்தின நினைவை எல்லார் மனசிலிருந்தும் அழிச்சுட்டாங் களோ….
ஏன் இப்படி சந்தேகப் படுறேன்னா காணாம போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க யாரும் ஒரு முயற்சியும் எடுக்கல. நானும் கேட்டு கேட்டு அலுத்து போயிட்டேன்.நான் கேள்வி கேட்டு துளைக்கிறது பிடிக்காம என் பொண்ணு வீட்டுக்கு வர்றதையே நிறுத்திட்டா.
பேரப்பிள்ளைக காணாம போனது ஒரு பக்கம்னா நான் பெத்த பொண்ணையும் பார்க்காம தவிச்சு போயிட்டேன். அவளுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போயி என் மகன்கிட்ட அவளைப் பத்தி விசாரிக்க சொன்னேன்.
அதுக்கு அந்தக் கடன்காரன் போட்டானே ஒரு குண்டு. அவன் எனக்கு ஒரே பிள்ளையாம். மகளே கிடையாதாம். அதுக்கு என் மருமகளும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுறா.
அவளுக்கு ஏற்கனவே என் நகையெல்லாம் மகளுக்கு கொடுத்துட்டேன்னு வயித்தெரிச்சல் எங்க வீட்டையும் கொடுத்துடுவேனோன்னு பயம். அதுக்காக எனக்கு மகளே இல்லைன்னு நெஞ்சறிய யாராவது பொய் சொல்லுவாங்களா…
என் மகளோட போட்டோ, அவ கல்யாண ஆல்பம் எல்லாம் மாடில இருக்குற ஷெல்ப்ல நான்தானே எடுத்து வச்சேன். இப்ப அந்த ஷெல்ப் எல்லாத்தையும் பூட்டு போட்டு போட்டிருக்காங்க. எல்லாரும் எப்படிப்பா கும்பலா தொலைவாங்க.
நான் வீட்டில் என் மகளையும் பேரப்பிள்ளைகளை கண்டுபிடிக்கச் சொல்லித் தொந்தரவு தர்றது பிடிக்காம டாக்டரைக் கூப்பிட்டாங்க. வழக்கமா எனக்கு வைத்தியம் பாக்குற டாக்டர் கொஞ்சம் குண்டா, வழுக்கை தலையோட கண்ணாடி போட்டுட்டு இருப்பார். இந்த டாக்டர் என்னடான்னா இப்பத்தான் காலேஜ்ல இருந்து நேரா வந்தவன் மாதிரி இருக்கான்.
அவன்கிட்ட எனக்கு வழக்கமா வைத்தியம் பாக்குற டாக்டரைக் கேட்டா, அவன்தான் வழக்கமா வர்ற டாக்டராம்.. எனக்கு என்னமோ நியாபக மறதி நோய்-ன்னு கதை விடுறான்.
நான் பதிலுக்கு ‘ஏண்டாப்பா என் மக, பேரன் பேத்தி, குண்டு டாக்டர் எல்லாரையும் துல்லியமா நினைவு வச்சிருக்கேன் எனக்குப் போயி நியாபக மறதின்னு சொல்லுறியா நல்லாருக்கா’ன்னு நாக்கைப் பிடிங்கிக்கிறாப்புல கேட்டேன்.
இங்க என்னமோ மர்மமா நடக்குது ஆனால் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியல. எல்லார்கிட்டயும் கேட்டு பார்த்துட்டேன் ஆனால் பதில்தான் கிடைக்கல.
போன திங்கள் கிழமை என் மகன்கிட்ட இதைப்பத்தி தெளிவா பேசிடலாம்னு தேடினேன். ஆனால் எனக்கு குழந்தைகளே இல்லையாம். அப்படின்னு அதோ அங்க இருக்குற அந்தம்மா சொல்லுது.
ஆக இப்ப மகனும் தொலைஞ்சு போயிட்டான். எப்படி என்னை சுத்தி இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் காணாமல் போறாங்கன்னு நினைச்சு நினைச்சு என் தலையே வலிக்குது.
உங்ககிட்ட எதுக்கு இத்தனை கதையையும் சொல்லிட்டு இருக்கேன் தெரியுமா… எனக்கு மட்டும் யாராவது ஹெல்ப் பண்ணா தொலைஞ்ச எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிச்சுடுவேன். நீங்க உதவுவீங்களா… ப்ளீஸ்….
நன்றி நன்றி இவ்வளவு சீக்கிரம் ஹெல்ப் பண்ண ஒத்துக்குவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கல. அப்பாடா… எல்லாரையும் மறுபடியும் பார்த்துடலாம்னு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு.
இன்னொரு விஷயம் ஆட்களோட சேர்த்து ரெண்டு நாளைக்கு முன்னாடி தொலைஞ்சு போன என் நிழலையும் கண்டுபிடிக்கணும்.