Tamil Madhura

வில்லா 666

Image result for lady with child

 

குயில் கொஞ்சும், மரங்கள் அடர்ந்த பாதையில் நடப்பதே சுகானுபவமாக இருந்தது டயானாவுக்கு. எள் விழுந்தால் எண்ணெயாகும் அளவுக்கு ஜன நெருக்கடி மிகுந்த இந்த மாநகருக்கு அருகே  இப்படி பசுமையான சோலைகள் நிறைந்த குடியிருப்பா… பணத்தால் எதையும் வாங்கலாம்….  நீண்ட முயற்சிக்குப் பின் அது இப்போதுதான் அவளுக்குக்  கை  கூடியிருக்கிறது.  குழந்தையை ப்ராமில் வைத்துத் தள்ளிய படியே குடியிருப்பை சேர்த்த தோட்டத்தில் காற்றாட நடந்தாள்.

 “ஏம்மா… கொஞ்சம் நில்லு” என்றபடி  வியர்க்க விறுவிறுக்க அவளருகில் வந்தார் அந்த வயதான பெண்மணி.
“நீதான் புதுசா 666ஆம் நம்பர் வீட்டுக்குக்  குடிவந்தியா”
“ஆமாம் ஆன்ட்டி”
“எங்க யாருகிட்டயாவது விசாரிச்சுட்டு வந்திருக்கப்படாதோ… பாவம் கைக்குழந்தை வேற…”
“அதுக்கென்ன…”
“அந்த வீட்டில் ஒரு பொண்ணு இருந்தா. அவ வீட்டுக்காரன் வெளியூர்ல  வேலை பாத்தான் போல. அவளுக்குக் குழந்தை இல்லை, சொந்தக்காரங்களும்  இல்லை. ஒரு நாள் டிபிஷன்ல முட்டாள்தனமா தற்கொலை பண்ணிக்கிட்டா”
“ம்…” என்றாள்  சுவாரஸியமின்றி.
“உனக்கு முன்னாடியே இதெல்லாம் தெரியுமா…”
“தெரியுமே…. நான்தான் இந்த வீட்டுக்கு வரணும்னு அடம் பிடிச்சு வந்தேன்”
“அப்படியா..” அந்தப் பெண்மணிக்கும்  அவளுடன்  பேச சுவாரஸ்யமில்லை.
“உனக்கு இந்தப் பேய் பிசாசு நம்பிக்கை” தொடர்ந்து கேட்டார்.
“சுத்தமா கிடையாது…” என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தாள்.
“உனக்கு இல்லைன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை அந்த வீட்டில் டக் டக்குன்னு என்னமோ சத்தம் கேட்குதுன்னு சொல்லிக்கிறாங்க”
“நீங்க கேட்கலை இல்லையா”
“நான் கேட்கல இருந்தாலும் ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று எச்சரித்துவிட்டு நடையைக் காட்டினார்.
டயானா அவர் சென்ற திசையைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். ப்ராமில் குழந்தை அஜயை வைத்துத் தள்ளியபடியே அவளது வீட்டை நோக்கி நடந்தாள்.
“என்ன ஒரு அழகான, அம்சமான வில்லா. இதை வாங்க பல நபர்கள் போட்டி போட்டு முடியாமல் கிளப்பி விட்டதே பேய் நாடகம். இந்தப் பொம்பளை இது மாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லுச்சோ” என்று புலம்பிய வண்ணம் வீட்டை அடைந்தாள்.
கதவைத் திறந்து உள்ளே வந்ததும் அந்த சத்தம் கேட்டது ‘டக் டக்’ என்னவாயிருக்கும் என்றபடி ஒவ்வொரு அறையாகப் பார்த்தவள் வீட்டின் பின் கதவு சரியாகத் தாள் போடாமல் காற்றில் அடிப்பதைக் கண்டு அதனை இழுத்துத் தாள் போட்டபின் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“பேயாவது பிசாசாவது… அந்தம்மாவுக்கு ஒரு விஷயம் தெரியல… அவ தற்கொலை செஞ்சு செத்து போனதே எனக்கும் அவ கணவனுக்கும் குழந்தை பிறக்கப் போகுதுன்னு தெரிஞ்சப்பறம் தான். இன்னொரு விஷயம் இந்த ரகசிய உறவை அவ கிட்ட போட்டுக் கொடுத்ததே நான்தான். அவ செத்ததும் கல்யாணம் செய்துட்டு இந்த பங்களாவுக்கே குடிவர அவரை போர்ஸ் பண்ணதும் நான்தான்.
இது புரியாம என்னை எச்சரிச்சுட்டுப் போறா…
பேய் வந்து கதவைத் தட்டுதாம்… நல்ல கட்டுக்கதை…  இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்துட்டு வில்லாவைக்  காலி பண்ணிடுவேனா”
மீண்டும் அடக்கமாட்டாத சிரிப்பு அவளைத் தொற்றிக் கொண்டது.
அப்போது மறுபடியும் அந்த சப்தம் கேட்டது ‘டக்  டக்’.
இன்று அதன் மூலகாரணத்தைக்  கண்டறிந்துவிடும் நோக்கத்துடன் சத்தம் வரும் திசையை ஊகித்து  நடந்தாள். அது அவளை இழுத்து சென்றதோ  யாரும் உபயோகப்படுத்தாத பின் கட்டு அறைக்கு. அதன் கதவைத் திறந்தாள். சுற்றிலும் கண்ணாடி பாதிக்கப்பட்ட சுவர்.  ஏதோ  ஒரு கண்ணாடி சுவற்றிலிருந்துதான் அந்த சத்தம் கேட்கிறாற்போலத் தோன்றியது.
ருள் கவிழ்ந்த  இரவு நேரம். “டிரிங் ட்ட்ரிங்” என்று அலறியது லேண்ட் லைன்.
மெதுவாக நடந்து சென்று போனை எடுத்தாள்.
“ஹாய் டியர். கிளம்பிட்டேன். டின்னர் ரெடியா”
மறுபடி அந்த சத்தம் ‘டக்  டக்’  அவளின் பார்வை அந்த அறையில் விழுந்து மீண்டது.
“எதுவும் சமைக்கலைன்னா விடு ரெண்டு பேரும்  ரொமான்டிக் டின்னர் போலாம்” மறுமுனையில் கொஞ்சினான் கணவன்.
“அப்பவே ரெடி. ரொமான்டிக் டின்னர் வீட்டிலேயே வச்சுக்கலாமே”
“வந்துட்டே இருக்கேன் டார்லிங்”
இருமுனையிலும் முத்தங்களால் போன் எச்சிலானது.
வீட்டை அலங்கரித்தவள் தன்னையும் அழகுபடுத்திக் கொண்டாள்.
குழந்தை வீறிட்டு அழத் தொடங்கினான். அவனருகே சென்றவள் மெதுவாக ஒரு பூவைத் தொடுவது போல தனது விரலால் பஞ்சுக் கன்னங்களை  வருடினாள். அவளைப்  பார்த்து முறுக்கிக் கொண்டான் அவன்.
“கோபமா…. என் ராசால்ல… இந்த அம்மாட்ட கோச்சுப்பியா… “
குழந்தையுடன் ஆசையாக விளையாடினாள். சற்று நேரம் சென்றவுடன் குழந்தை அவளிடம் அமைதியாக இருந்தது. தன்னைக் கண்ணாடியில் பார்த்தவள் கழுத்தில் முக்கியமான ஒன்று குறைவதை உணர்ந்தாள்.
“தாலி… “
இடைவிடாது தொடர்ந்து சத்தம் கேட்கவும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் அந்த அறைக்கு விரைந்தாள்.
அறைக் கதவைத் திறந்ததும் சுற்றிலும் இருக்கும் கண்ணாடியில் அவளது பிம்பம் தெரிந்தது கையில் குழந்தையுடன். ஆனால் ஒரு கண்ணாடியில் மட்டும் அவள் தனியாக. கண்ணாடியில் தெரிந்த அவள் வேகமாக கண்ணாடியை உடைத்து விடும் வெறியுடன் உள்ளிருந்து தட்டினாள்.
கண்ணாடிக்கு வெளியே இருந்தவளிடம் ஒரு வெற்றி புன்னகை. வெளியே இருந்தபடியே கண்ணாடிக்குள் கைவிட்டு பிம்பத்தின் கழுத்திலிருந்த தாலியைப் பிடிங்கி வெளியே எடுத்து நிதானமாக அணிந்து கொண்டாள்.
“என் புருஷனை எடுத்துட்டு வட்டியோட திரும்பத் தந்தத்துக்கு தாங்க்ஸ்”
குழந்தையை அணைத்துக்  கொண்டவள் “நீ வாடா கண்ணா… அப்பா வர்ற நேரமாச்சு”  என்றபடி கதவை இழுத்து சாத்தினாள்.