தோழமைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் இத்தனை சிரமத்திலும், இயற்கை இடர்பாடுகளிலும் அயராது பாடுபட்டு உலகுக்கு உணவளிக்கும் வேளாண்மக்களுக்கு என் நன்றிகள்.
தை மாசம் பொறந்துடுச்சு தில்லே லே லேலோ
பொங்கப் பானை வைக்கப் போறோம் தில்லே லே லேலோ
கதிரை எல்லாம் அறுத்துபுட்டோம் தில்லே லே லேலோ
எங்க கவலைகளை தொரத்தப் போறோம் தில்லே லே லேலோ
கரும்புகளை வாங்கி வந்து தில்லே லே லேலோ
நாங்க கடிச்சுத் தின்னு மகிழப் போறோம் தில்லே லே லேலோ
என்று பொங்கல் கொண்டாடத் தயாராயிட்டோம். இந்த சமயத்தில் நான் கேள்விப்பட்ட, பொங்கல் சம்பந்தமாக சொல்லப்படும் அழகான ஒரு நாட்டுப்புறக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பொன்னிவள நாட்டின் ராஜா ராணிக்கு வாரிசு இல்லை என்ற கவலை வாட்டுகிறது. இருவரும் இறைவனை மனமுருக வேண்டுகிறார்கள். ராணி தாமரையின் பக்திக்கு மெச்சிய விஷ்ணு பகவான், கணவன் மனைவி இருவரையும் கைலாசத்துக்கு சென்று சிவனிடம் உபாயம் கேட்குமாறு யோசனை சொல்கிறார். ராஜாவும் ராணியும் சிவனை சந்திக்க பயணம் மேற்கொள்கிறார்கள். அது என்ன அவ்வளவு சாதாரணமா….. காடு மலை வனாந்திரம் தாண்டிய நெடும்பயணம். ராஜாவுக்கோ நடக்கவே முடியவில்லை. நாட்டிற்கே திரும்பி சென்றுவிடலாம் என்று மனைவியை நச்சரிக்கிறார். ஆனால் மனஉறுதி கொண்ட தாமரையோ விடாப்பிடியாக பயணத்தைத் தொடர்கிறார். இடையில் நடக்க முடியாது சிரமப்பட்ட ராஜாவை முதுகில் சுமந்தே நடக்கிறார். கைலாயம் செல்லும் வாயிலில் கணவனை அமரவைத்துவிட்டு வளர்ந்து செல்லும் உயரமான படிகளில் நடந்து கைலாயத்தை அடைகிறார்.
சிவனோ சூரியனுக்கு மிக அருகில் இருக்க, அங்கே இருக்கும் தூணில் ஏறி பஞ்சாட்சரனின் பார்வை படும் இடத்தில் கைகூப்பி மண்டியிட்டவாறே அமர்ந்து கொள்கிறார் . சூரியனின் வெப்பம் கொளுத்த அதைப் பொருட்படுத்தாது சிவனின் கருணைப் பார்வைக்காக இருபத்தியோரு வருடங்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார் தாமரை. கடைசியில் முக்கண்ணனின் மனம் இளகி கருணைக் கண் திறக்கிறது. மகாராணியின் ஆசைப்படி அவர்களுக்கு இரண்டு ஆண் மகவுகளும் ஒரு பெண் மகவும் அருளுகிறார். தாமரையோ அத்துடன் மட்டும் சந்தோஷப்பட்டுவிடாமல் தனது நாட்டில் உள்ள அனைவருக்கும் குறைவற்ற வளத்தையும் மக்கட்செல்வத்தை வழங்கும்படி வேண்டுகிறார். சிவபெருமானும் ஒரு சிறிய பானை வடிவிலிருக்கும் கூஜாவில் குறைவற்ற அமிர்தத்தை வழங்கி அதை அனைவருக்கும் தரும்படி சொல்கிறார். தாமரையும் நாடு திரும்பியவுடன் அனைவருக்கும் அதிலிருந்து பொங்கி வந்த அமிர்தத்தை அனைவருக்கும் தருகிறார். அதன் நினைவாகவே பானையில் அரிசியையும் பாலையும் பொங்கச் செய்கிறோம். அதனை அனைவரும் உண்ணுகிறோம் என்று சொல்கிறது இந்த நாட்டுப்புறக்கதை.
ஆக கதை என்னவாக இருந்தாலும் நோக்கம் பொங்கல் நன்நாளின் குறிக்கோள் அனைவரின் வாழ்விலும் இன்பத்தையும் வளத்தையும் பொங்கச் செய்வதே.
வண்ண வண்ண பொங்கப் பானை வாங்கி வைச்சோமே
அதில் மஞ்சள் கொத்தும் இஞ்சிக் கொத்தும் கட்டி வச்சோமே
பச்சரிசி வெல்லம் போட்டுப் பொங்க வச்சோமே
பால் பொங்கல் பொங்கி வந்தது குலவையிட்டோமே
தைப்பொங்கல் வந்ததம்மா தந்தினத்தின்னானே
தமிழ் திருநாள் வந்ததம்மா தந்தினத்தின்னானே