Tamil Madhura

விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2

விநாயகர் சதுர்த்தி சந்தோஷம் தரும் விஷயம் என்றாலும், அதன் பின் சிலையை ஆற்றிலோ கடலிலோ இல்லை நீர்நிலையிலோ கரைக்கிறோம். தற்காலத்தில் அழகுக்காக சேர்க்கப்படும் செயற்கை சாயங்களும், பிளாஸ்டர் ஆப் பாரிஸும் கரைவேனா என்று அடம்பிடித்து சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றன. இந்த வருடம் இதை மனதில் கொண்டு சிலர் கொண்டாடிய விதத்தைப் பற்றிப் பார்ப்போம்.

நவி மும்பையின் அக்ரோலி கிராமத்தில் நூறு குடும்பங்கள் சேர்ந்து ஒரே விநாயகர் சிலையை வைத்து வழிபடுகின்றனர். இது ஐம்பத்தி ஐந்து வருடங்களாக நடக்கிறதாம். கணேஷ சதுர்த்திக்காக கடன்வாங்கி கஷ்டப்படுவதைத் தடுக்க கிராம மக்கள் செய்த ஏற்பாடாம் இந்த கூட்டு வழிபாடு.

பெங்களூரில் பொறியியல் துறையில் பணிபுரியும் சஷி ஷா சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுவதைத் தடுக்க, வர்ணங்கள் எதுவும் பூசப்படாத இயற்கையான  களிமண் பிள்ளையார் சிலைகளை தயாரித்து விற்கிறாராம். ஆனால் விலை நானூறு ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு வாரத்துக்குப் பின்னர் வீட்டிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிச் சென்று இவர்களே கரைத்து விடுகிறார்களாம்.

\

பெங்களுரை விட இன்னும் ஒரு படி மேலே சிந்தித்த மும்பையின் ஆனந்த், விநாயகர் உருவத்தின் உள்ளே மீன்கள் உணவை அடைத்து விற்பனை செய்கிறாராம். கலருக்கு மஞ்சள், அரிசிமாவு, குங்குமம் போன்ற கெடுதல் விளைவிக்காத இயற்கை பொருட்களையே பயன்படுத்தி செய்திருக்கிறாராம். இதற்கு பலத்த வரவேற்பாம். ஆக மும்பை கடலில் நீந்தும் மீன்கள் கூட இனி ஆவலாய் விநாயகர் சதுர்த்தியை எதிர்பார்க்கும்.