Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 18 (நிறைவுப் பகுதி)

அறுவடை நாள் – 18 (நிறைவுப் பகுதி)

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 18

கண் மூடி நான்கைந்து வருடத்திற்கு முன்னர் நடந்த விவரங்களை யோசித்து வாக்குமூலமாகக் கொடுக்க ஆரம்பித்தாள் மணி. 

“இந்த வாட்ச் கிடைச்சது நம்ம ஊரு அம்மன் கோவில்ல விழா நடந்த சமயத்தில். வருசம் 2017”

“என்ன விழான்னு நினைவிருக்கா?”

“நினைவில்லை ஆனால் தீச்சட்டி எடுத்துட்டு மக்கள் நடந்து போயிட்டு இருந்தாங்க.  இந்த மாதிரி திருவிழா சமயத்தில் எங்களைத் தேடி வழக்கமா வர்ற பார்ட்டிங்க பலர் வர மாட்டாங்க. அதனால ஆவுடை எங்களை வெளியூர் பார்ட்டிக்கு அனுப்பி விடுவான்.

நான் அப்படித்தான் தின்னவேலிக்குப் போயிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். என் க்ரூப் ஆளுங்க வேற ஊருக்குப் போயிட்டாங்க. அதனால இந்த சைக்கோ கூப்பிட்டப்ப நான் மட்டும்தான் இருந்தேன்”

“தீச்சட்டி விழான்னு உறுதியா சொல்றியா?”

“ஆமாம் மேடம். தீச்சட்டியை எடுத்துட்டு மக்கள் போனப்ப, இந்த சைக்கோகிட்ட போறதுக்கு பெரிய தீச்சட்டி இருந்தா போயி குதிச்சிறலாமேன்னு நினைச்சு வருத்தத்தோட போனேன்”

“என்னைக்கு தீச்சட்டி விழா நடக்கும் கிரேஸ்”

“மே மாசம் நம்ம ஊரு மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி விழா நடக்கும்”

“வேற ஏதாவது அந்த நாள் சம்பந்தமா நினைவிருக்காம்மா”

“கன்னியாகுமரிக்கு வர்ற டூரிஸ்ட்டுங்க கொஞ்ச பேர் இந்த விழாவைப் பாக்க வருவாங்க”

“நல்லா தெரியுமா?”

“சில நாள் வெளிநாட்டு ஆளுங்க கூட வருவாங்க. அவங்க கூட நான் ஒரு தரம் கேரளாவுக்குப் போயி ஒரு வாரம் தங்கிட்டு வந்திருக்கேன்”

“கிரேஸ். அந்த பொண்ணு சாரா, கேஸ் நம்பர் மூணு எப்ப இந்தியா வந்திருக்கா”

“மார்ச் மாசம் கேரளாவுக்கு கஜமேளா பாக்க  வந்திருக்கா மேடம். அவளும் மத்தவங்களுக்கு வீடியோ எடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டிருக்காங்க. மத்தவங்க எல்லாரும் பாய் பிரென்ட், பேமிலி கூட போட் ஹவுஸ் ட்ரிப் போக, கன்யாகுமரி கிராமபுறம் எல்லாம் பாத்துட்டு வந்துடுறதா சொல்லிட்டு கிளம்பிருக்கா. அதுக்கப்பறம் மிஸ் ஆயிருக்கா” 

“மார்ச் மாசம் காணாம போன சாராவோட வாட்ச், மே மாசம் மணிக்கு அன்பளிப்பா கிடைச்சிருக்கு. மாசம் கொஞ்சம் மேட்ச் ஆகுது. வருஷம்?”

“எக்ஸாக்ட் மேட்ச்”

“சோ மார்ச் ஏப்ரலில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். அந்த வாட்ச் கூட சாராவோடதுன்னு அவளோட பேமிலி உறுதி செஞ்சிருக்காங்க. அவ ஆன்லைனில் வாங்கின வாட்சாம். சீரியல் நம்பர் ஒத்துப் போகுது. எக்ஸ்ரே யை வச்சு ஒப்பிட்டு பார்த்ததில் ஸ்கல் மேட்சிங் ஆகுது. 

இதை எல்லாம் கனெக்ட் பண்ணி பாக்கும்போது  மண்டை ஓடு அவளிதுதான்னு சொல்லலாம். ஆனால் மிச்சம் மீதி உடல் எங்க புதைச்சிருக்குன்னு உடலைப் புதைச்சவனுக்குத்தான் தெரியும். இது கொலைண்ணே வச்சுக்கிட்டாலும் மோட்டிவ்? அதைத்தான் அடுத்து கண்டுபிடிக்கணும்.

மணி அந்த சைக்கோ பத்தி சொல்லு? எங்க வேலை செய்றான்?”

“வேலையெல்லாம் இல்லாத வெட்டி முண்டம் . சின்ன சின்ன குற்றங்கள் எல்லாம் செஞ்சுட்டு அப்பப்ப ஜெயிலுக்கு போயிட்டு வர கேஸ்தான். கஞ்சா பிடிச்சுப்புட்டு ஏதாவது குட்டிச்சுவரா பாத்து உட்கார்ந்து இருப்பான்.

 திடீர்னு ஆயிரக்கணக்கா காசு எடுத்துட்டு வந்து பயங்கரமா செலவு பண்ணுவான். ஏதாவது குற்ற செயல் செய்யாம அப்படி சம்பாதிக்க முடியும் எனக்கு நம்பிக்கை இல்லை மேடம்.

பாக்க டிப் டாப்பா இருப்பான். நாலு அஞ்சு பாஷை பேசுவான் கைடா வேலை பார்க்கிறான்னு நினைக்கிறேன்”

விஜயாவின் மூளையில் பல்ப் எரிந்தது. சாரா வெளிநாட்டு பயணி. இவன் போதையில் தடுமாறும் குறுக்கு புத்தி இருக்கும் டிப் டாப் ஆசாமி, கைட் என்ற போர்வையில் நிழல் வேலைகளை செய்பவன். அப்படித்தான் தொடர்பு கிடைத்திருக்கக் கூடும். காட்டு வழி ட்ரெக்கிங் எல்லாம் விருப்பமுள்ள பெண் என்று சாராவைப் பற்றி குடும்பத்தினர் சொல்லி இருக்கின்றனர். அதைக் காரணம் காட்டி அழைத்து வந்து, அப்படியே படமாக ஓடியது. 

“இது போதும்மா. இந்த விவரம் எங்களுக்கு எவ்வளவோ உதவியா இருக்கும். அவன் பேர் என்ன?”

“ஜார்ஜ்”

“கிரேஸ் உனக்குத் தெரியுமா?”

“நல்லா தெரியும் மேடம். ‘பெட்டி’ கேஸ்ல நம்ம தான் நாலஞ்சு தடவை உள்ள தள்ளி இருக்கோம். டூரிஸ்ட்ஸ் ரெண்டு மூணு பேரை வழிப்பறி பண்ண கேஸ்,  ஒரு தடவை குடிச்சிட்டு ஒரு வெளிநாட்டு பொண்ணு கூட தகராறு பண்ணதுக்கு கூட அவன் மேல கேஸ் இருக்கு. உடனே பிடிக்க ஏற்பாடு பண்ணிடலாம் மேடம்”

” ஏதாவது பெட்டி கேஸ்ல விசாரணைக்கு கூப்பிடற மாதிரி வர சொல்லு அங்க வச்சு மண்டைய ஒட்டி கேஸ் பத்தி என்ன விசாரணையே வச்சுக்கலாம்.

நடுவுல ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்ஸ்காண்ட்டா  இருந்தானா என்ன”

“ஆமா மேடம் ஒரு நாலு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திடீர் ஒரு வருசத்துக்கு  ஆளக் காணோம். அப்பறம் திரும்பி வந்தான். வெளியூர்ல வேலைக்கு போயிருந்தேன் எனக்கு செட் ஆகல அப்படின்னு சொல்லிட்டு மறுபடிம் டூரிஸ்ட் கைடானான்”

“அப்ப கண்டிப்பா அவன்தான். கொலை செஞ்சதும் பயந்துட்டு தலைமறைவாய் இருந்திருக்கான். யாரும் கண்டுபிடிக்கலன்னதும் தைரியம் வந்து மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பிச்சு இருக்கான்”

“ஒரு கொலைய செஞ்சிட்டு எவ்வளவு தைரியமா சுத்திட்டு இருக்கான்? நல்ல நாலு மிதிக்கணும் மேடம். என் காலெல்லாம் விறுவிறுன்னு இருக்குது”

“சத்தம் காட்டாமல் செய்யணும் கிரேஸ் கொஞ்சம் லீக் ஆனா கூட தப்பிச்சு ஓடிடுவான். டூரிஸ்ட் யாராவது புகார் கொடுத்து இருக்காங்களா”

“டூரிஸ்ட் ஒருத்தர், யூடியூபராம், கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட்டை வீடியோ எடுத்து போட வந்திருக்கார். ரூம்ல வச்சிருந்த வீடியோ கேமராவை காணோம்னு புகார் கொடுத்திருக்கிறார். அது விஷயமா விசாரிச்சிட்டு இருக்கோம்”

” அந்த விசாரணைன்னு சொல்லி இவனையும் இன்னும் நாலு அஞ்சு ஆளுங்களையும்  கூட்டிட்டு வரச் சொல்லி ஏட்டுக்கு மெசேஜ் அனுப்பிடு.  விசாரிச்சிட்டு இருக்க நேரத்துக்கு நம்ம போயிடலாம் அப்புறமா இருக்கு அவனுக்கு கச்சேரி”

ஊருக்கு திரும்பும் போது தனக்கு வந்திருந்த மெசேஜ்களை மொபைலில் செக் பண்ணிக் கொண்டே வந்தார் விஜயா.

“கிரேஸ் இன்னைக்கு சரியான அறுவடை நாள் போல இருக்கு”

“புரியலையே மேடம்”

“குற்றம் செய்தவர்களுக்கு வினையை அறுவடை சேர நாள் இது. நம்மள மாதிரி காவலர்களுக்கு அவங்க உழைப்புக்கான அறுவடை,  அதாவது கேசை சால்வ் பண்றதுக்கான நாளும் சொல்லலாம்”

“அப்ப எல்லாமே நல்லபடியா நடந்துட்டு இருக்கா மேடம்”

“ஸ்டேஷனுக்கு போன் பண்ணி நம்மள பஸ் ஸ்டாண்ட்ல வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லிரு. அல்லிய அதில் கிளம்பி வந்துர சொல்லு.இறங்குனதும் நேரா சோபியா வீட்டுக்கு போறோம்”

சோஃபியாவின் வீட்டில் திடீரென்று போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கிய எஸ் ஐ அம்மாவையும் கிரேஸையும் கண்டு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அனைவருக்கும். 

“இப்ப எதுக்கு இங்க வந்திருக்கிங்க? அதுதான் அவளுக்கு கர்ப்பம் கலைஞ்சதாலதான் ஆஸ்பத்திரில சிகிச்சை எடுத்துகிட்டான்னு டாக்டர் சர்டிபிகேட் எல்லாம் வாங்கி எங்க வக்கில் தந்துட்டாரே” என்றார் அவளின் மாமியார். 

“அதுதான் உங்க டாக்டர் சான்றிதழ் தந்துட்டாரே. அப்பறம் ஏன் பயப்படுறிங்க?”

“இப்படி வீட்டுக்கு வந்து தொந்தரவு பண்றது சரியில்லை. நல்ல குடும்பம் இருக்குற வீடு. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க எங்க குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க. இங்கிருந்து கிளம்புறிங்களா இல்லை வக்கிலைக் கூப்பிடவா?”

“ஏம்மா போன வருசம் உன் மருமக தூக்கு மாட்டிகிட்டு சாக முயற்சி செஞ்சது உண்மையா இல்லையா?”

“ஆமாம் ஆனா காப்பாத்திட்டோமே. அது போன வருசக் கதை”

“அடிக்கடி ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணுது? அதுவும் உங்க வீட்ல இருக்கும்போதுதான் இதெல்லாம் நடக்குது?”

“எங்களை சந்தேகப்படுறிங்களா? ஒரு புத்தி சரியில்லாத பைத்தியத்தை எங்க தலைல கட்டிட்டு அவ அப்பன் பாரத்தை எல்லாம் எங்ககிட்ட தள்ளிட்டான். அவளால நாங்க படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை” மூக்கை சிந்தினாள். 

“ஆம்பளைங்க இல்லாத நேரத்தில் வந்து தகறாரா பண்றிங்க? ஜோஸ்லின் போயி கடைக்கு போனைப் போட்டு வீட்டுக்கு வர சொல்லுடி”

“அட வீச்சு வீச்சுன்னு கத்தாதீங்க. அந்தப்பொண்ணு போன வருசம் தற்கொலை பண்ண கேஸை மூடணுமா வேணாமா?”

“மூடணும் மூடணும்”

“அப்ப, அந்த ரூமை எடுத்த போட்டோ மிஸ்ஸாயிருச்சு. கிரேஸ் அந்த போட்டோ கிராபரைக் கூட்டிட்டு போயி அந்த உத்திரத்தை படம் பிடிச்சுக்கோ”

“ஓ அதுக்குத்தான் வந்திங்களா?”

“சரி, தூக்கு போட்டுக்கிட்ட கயிறை போலீஸ்கிட்ட ஒப்படைச்சிங்களா இல்லையா? அதுவும் காணோம்”

“அது ஏய் ஜோஸ்லின் அந்தக் கயித்தையும் எடுத்துக் குடுடி”

அறைக்கு சென்று பார்த்தார் விஜயா. 

“இந்தக் கயிறு தான் மேடம். இதுதான் தூக்கு மாட்டிக்கிட்ட உத்திரம். அதை சுத்தி கயித்துல போட்ட முடிச்சு கூட அவுக்காம வச்சிருக்கோம்” என்றாள் ஜோஸ்லின். 

“நல்லதும்மா எங்க வேலையை சுலபமாக்கிட்ட. இந்த ரூமை யாரு உபயோகிக்கிறது?”

“விருந்தாளிங்க வந்தா உபயோகிப்பாங்க”

“சரி, நீ அந்தம்மாவை வரச் சொல்லு இதை எழுதி கையெழுத்து வாங்கணும். அப்படியே சோபியாவையும் கூட்டிட்டு வந்துடு. பெருமாள்சாமி ஜீப்ல இருக்குற பார்ம் எல்லாம் எடுத்துட்டு வந்துடு”

“எஸ் மேடம்” என்று ஜோஸ்லின் கூடவே பேசிக் கொண்டு சென்றான். 

“உன்னை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே? அருப்புக்கோட்டைதான் என் சொந்த ஊரு. அங்கிட்டு எங்கேயோ இருந்தியோ?”

“இல்லங்கய்யா நான் மார்த்தாண்டம் பக்கம்” பேச்சு சத்தம் தேய்ந்துக் கொண்டே செல்ல, முட்டியைப் பிடித்தபடி வலியில் சுளித்த முகத்துடன் ஏறினார் சோபியாவின் மாமியார்.

“இதெல்லாம் கீழ வரும்போது வாங்கக் கூடாதா? 

“ஸ்பாட்ல வச்சு நீங்க உறுதி செஞ்சு கையெழுத்து வாங்கணும். இந்த ரூமில் அந்த சம்பவத்துக்கு அப்பறம் ஏதாவது மாற்றம் செஞ்சிங்களா? தரைல கட்டில் போட்ட தடம் இருக்கே. எப்ப மாத்துனிங்க”

“போன மாசம்தான் இங்கிருந்த கட்டிலை எடுத்து என் ரூமில் போட்டோம்”

“டபுள் காட்டா?”

“ஆமாம்”

“கிரேஸ். டபுள் காட் போட்டா இந்த ரூமே நிறைஞ்சு போயிரும். சோபியா இருக்குற உயரத்துக்கு, கட்டிலில் ஏறி நின்னா உத்திரம் தலைல இடிக்கும். இதில் கழுத்தில் சுருக்கு மாட்டினா நிக்கத்தான் முடியும். சாகுறதெல்லாம் சான்ஸே இல்லையே?”

“நிஜம்தான் மேடம். ஏம்மா இந்த ரூமா இல்லை வேற ரூமா?”

“மத்த ரூமுல எல்லாம் அன்னைக்கு ஆளுங்க இருந்திருக்காங்க. இந்த ரூமுன்னுதான் சொன்னாங்க”

“ஏய் கிழவி தூக்கு மாட்டிகிட்டாளா இல்லை நீங்க மாட்டி இருக்குனீங்களா?” என்றார் கடுமையான குரலில் 

“ஐயோ ஐயோ ஐயோ வீண் பழி”

“நீ அடி தாங்க மாட்டேன்னு தெரியும். இப்ப சொல்லு, நீ தூக்கு மாட்டின சோபியாவைப் பாத்தியா?”

“நான் பாக்கல, ஜோஸ்லின் பாத்துட்டு கத்தினா அப்பறம் என் மகன் கயித்தை அறுத்துட்டு தூக்கிட்டு வந்தான். ஒருவேளை தூக்கு மாட்டிகிட்டு நின்னுருக்கலாம். இவ பயந்துட்டு கத்திட்டா”

“இருக்கலாம் இருக்கலாம். கிரேஸ் என்ன சத்தம்”

“இந்தம்மாவோட வீட்டுக்காரரும், பிள்ளையும் வந்துட்டாங்க. வந்து கத்துறாங்க”

“நல்லதா போச்சு. நானும் அவங்ககிட்ட விசாரிக்க வேண்டியிருக்கு. பாரன்சிக் டிபார்ட்மென்ட் அவங்களுக்கு வேண்டியதை எடுத்துட்டாங்களா?”

“எடுத்தாச்சு. விசாரணை நடந்துகிட்டு இருக்கு”

கீழே வந்த பொழுது கன்னம் சிவக்க நின்றிருந்தாள் ஜோஸ்லின். 

“என்ன ஜோஸ்லின். ஊருல இருக்குற எல்லாம் முட்டாள்னு நினைக்கிறியா? அருப்புக்கோட்டைல டிபார்ம் படிச்சுட்டு பல இடங்களில் வேலை பாத்த உனக்கே இவ்வளவு கிரிமினல் மூளைன்னா. கிரிமினாலஜியையே பாடமா படிச்சுட்டு வந்திருக்கிற எங்களுக்கு எவ்வளவு மூளை இருக்கும்?”

தலை குனிந்தாள். 

“அல்லி எவிடென்ஸை எடுத்தாச்சா?”

“எஸ் மேடம். இந்த காளான் வகை ஹலுசினேஷன் தரும். உதாரணமா இதை  கொஞ்சம் அளவுக்கு அதிகமா சாப்பிட்டுட்டு கொஞ்சம் மயக்கம் வர ஆரம்பிச்சதும் , ஏதாவது படத்தை போட்டா அது கண்ணு முன்னாடி நடக்குற மாதிரி அதோட தாக்கம் நமக்கு இருக்குற மாதிரி தோணும்”

கையில் இருந்த லத்தியால் ஜோஸ்லினின் முகத்தை நிமிர்த்தியவர் 

“இதை நீ சோபியாவுக்கு தந்தது உன் கிரிமினல் மூளை. ஆனால் துணைக்கு வந்த பாப்பம்மாவுக்கு தந்து ஓவர் ஸ்மார்ட்னெஸை காமிக்க நினைச்ச பாரு. அங்கதான் உனக்கு சனி ஆரம்பம்”

“நம்ம பாப்பம்மாவுக்கு இதை டபுள் டோஸேஜ் கொடுத்து, நெட்டபிலிக்ஸ்ல குமாரி படம் ஓட விட்டிருக்கா. பாப்பம்மாவும் அதே மாதிரி ஒரு புள்ள தின்னுற பேய் வந்திருக்குன்னு அதை உதைக்கிறேன்னு உன்னை ஓங்கி உதைச்சு உடம்பு சரியில்லாம மயக்கமாகிட்டா. அப்பறம் காய்ச்சல்ல விழுந்துட்டா. 

அதுக்கப்பறம் அவளை டெஸ்ட் பண்ணதில் வந்த ரிசல்ட் சரியில்லை. ஏதோ தப்பு இருக்கிறதா பட்டது. எங்களுக்கு இன்னும் க்ளூ தேவைப்பட்டது. 

அந்த சமயத்தில்தான் ராஜாத்தியா அல்லி இந்த வீட்டுக்கு இன்வெஸ்டிகேஷனுக்கு வந்தாங்க. நீ உன்னோட பொருட்களோட இந்த காய்ஞ்ச காளானை  ஒரு பாட்டிலில் போட்டு  வச்சிருக்குறதை கண்டுபிடிச்சாங்க. 

அதில் சில சாம்பிள் எடுத்தாச்சு, அப்பறம் அமாவாசை அன்னைக்கு பேய் வரும்னு சொல்லி நீ சமைச்ச காளான் பிரியாணி சாம்பிள் எல்லாம் டெஸ்ட் பண்ணியாச்சு. வீட்டில் இருந்தவர்களுக்கு நீ சமைச்ச மஷ்ரூம் வேற, இவங்களுக்கு நீ தந்த சாப்பாடுல இருந்த காளான் வகை  வேற. இந்த காளான் போதை வாஸ்து வகையை சேர்ந்தது. அது எங்கிருந்து உனக்கு கிடைச்சது அப்டின்னுறது அடுத்த விசாரணை. எதுக்காக இத்தனையும் செஞ்ச அதை இப்ப சொல்லு. இல்லைன்னா சாம்பிள் காமிச்சிருக்கோம். அதே வகைல உண்மையை வாங்குவோம்”

“இல்லை மேடம் சொல்லிடுறேன்”

அடுத்து அவள் சொன்னதெல்லாம் மனதைப் பதற வைக்கும் உண்மைகள். அவளைக் கைது செய்து அனுப்பிவிட்டு, நடந்தது எதையும் அறியாமல் இன்னமும் மருந்து மாத்திரைகளின் விளைவால் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்து சோபியாவை மனம் கனக்க பார்த்தார் விஜயா. 

சோபியாவின் தாத்தா வந்ததும், 

“பாதர். நடந்தது எல்லாம் கேள்விப் பட்டுருப்பீங்க”

“மனசே தாங்கலம்மா, இவளோட வீட்டுக்காரனுக்கு அந்த ஜோஸ்லினுக்கும் தொடர்பு இருந்ததாவும், அதுக்குத் தடையா இவ இருக்கவும் ராத்திரி போதை காளானைத் தந்து மயங்க வச்சுட்டு அவங்க தொடர்பைத் தொடர்ந்ததாவும் சொன்னாங்க. இதுக்கு ஏன்மா இந்த சின்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்?”

“முறைகேடான உறவு. ஊருக்காக உங்க பேத்தி கூட நடந்த திருமணம். சோபியா மாசமானது பிடிக்காம கழுத்தில் கயிறை இறுக்கி கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கா, ஆனால் கல்யாணம் முடிஞ்சதும் இந்த மாதிரி நடந்தா போலீஸ் விசாரணை வரும்னு அந்த பய்யன் சொன்னதால தற்கொலை முயற்சின்னு சொல்லிட்டாங்க. 

ரெண்டாவது தடவையும் இதே மாதிரி ஒரு முயற்சி நடந்திருக்கு. பாவம் உங்க பேத்தி  கூட ஒரு சாத்தான் வந்து கட்டளையிட்டுக்கிட்டு இருக்குன்னு நினைச்சிருக்கா. அவ மயக்கத்தில் இருக்கும்போது இவங்களோட உறவைப் பாத்தும் அது கனவாவே அவ மனசுக்குத் தோணிருக்கு.

 நடக்கும் அநியாயத்தைக் கூட சாத்தானின் மாய வேலையாவே நினைச்சிருக்கு அவளோட பிஞ்சு மனசு. இந்த பொண்ணை ஊருக்காக இங்கயே விட்டுட்டு போகப் போறிங்களா? இதுதான் நான் உங்ககிட்ட வைக்கும் கேள்வி”

அவரது கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய “ஒவ்வொரு முறையும் கடவுள் எங்க பெண்ணை காப்பாத்தி இருக்கான். இன்னமும் அவரை தொல்லைப்படுத்த விரும்பல. என் பேத்தியை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அவ ஊர் பெருமைக்கு புருஷன் வீட்டில் இருக்கிறதை விட, உயிரோட என் வீட்டில் இருக்கட்டும்”

“நன்றி பாதர். இப்பத்தான் இந்த கேஸை முடிச்ச ஆறுதல் என் மனசுக்குக் கிடைச்சது. உங்களை மாதிரி தெளிவான சிந்தனை எல்லாருக்கும் இருக்கணும்னு நானும் சாமியை வேண்டிக்கிறேன்” 

சோஃபியாவின் கேஸ் முடிந்த மன நிறைவோடு மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிவிட்டு கிரேஸுடன் காவல் நிலையத்திற்கு வந்தார் விஜயா. 

“சோபியா கேசில் சோர்வா இருக்கியா பெருமாள்சாமி?”

 

“இல்ல மேடம். அந்த கேசில் விசாரணை எல்லாம் நம்ம அல்லிதான்”

“நிஜம்மாவா?”

“ஆமாம் மேடம். எனக்கு வேலையே இல்லை. டீ குடிச்சுக்கிட்டே அல்லி பண்ண விசாரணையை வேடிக்கை பார்த்தேன். நம்ம அல்லி தேறிடுச்சு மேடம். போலீஸ் வேலைக்கு உண்டான மெண்டல் செட்டப் வந்துருச்சு”

“அதுதானே வேணும் பெருமாள்சாமி. நம்மல்லாம் கருப்பண்ணாசாமி. பிராது கொடுத்துட்டு நியாயத்துக்காக மக்கள் நிக்கிறாங்க. அவங்களுக்கு நியாயம் கிடைக்கணும்னா குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்குற விஷயத்தில் ஈவு இரக்கமே பாக்க கூடாது”

“எஸ் மேடம். இதையே தான் எனக்கு ட்ரைனிங்ல சொல்லித்தந்தாங்க”

“ஏட்டு கிட்ட சொல்லி அங்கிருக்குற டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் அந்த ஜார்ஜு கையில் கொடுத்து இந்த ரூமுக்கு அனுப்பி வைக்க சொல்லு கிரேஸ். பெருமாள்சாமி விசாரணை செய்ய தயாரா?”

 

“தயாரா இருக்கேன் மேடம்.”

பார்க்க ஒல்லியாக அப்பாவியாக இருக்கும் இந்த ஜார்ஜா அவ்வளவு கொடூரமானவன் ஒரு மனிதனின் உயிர் உருவத்தோற்றத்திற்கும், உள்ளத்தில் இருக்கும் கொடூரத்திற்கும் சம்பந்தமே இல்லை

உடம்பெல்லாம் ரத்த வரிகளை பரிசாக பெற்றுக் கொண்டு கடைசியாக தான் கஞ்சா போதையில் அந்த சாராவை கற்பழித்து கொன்று காட்டு பகுதியில் புதைத்ததாக ஒப்புக்கொண்டான். 

“அந்தம்மாவைப் பாத்ததும் எனக்குப் பிடிச்சுருச்சு. ட்ரெக்கிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூட்டிட்டுப் போயி காட்டுக்குள்ள வச்சு கொன்னேன். அங்கிருக்குற புளிய மரத்தடியில் ஒரு குழி இருந்துச்சு. அதுக்குள்ளே பொணத்தை  மடக்கி வச்சு  வச்சு புதைச்சேன். தலை மேலாப்புல இருந்ததால காட்டு மிருகம் ஏதாவது எடுத்திருச்சு போலருக்கு.

அந்தம்மாவோட நகை வாட்ச், பர்ஸ், போன், லேப் டாப் எல்லாத்தையும் வித்து செலவு செஞ்சேன். அப்பறம் ஊரை விட்டு ஓடிப் போயிட்டேன். அந்த வெளிநாட்டுப் பொண்ணு ஊருக்கு வந்து இருந்தது சில மணி நேரம்தான். நிறைய பேர் கண்ணில் படாததால் நீங்க விசாரணை செஞ்சப்ப யாருக்கும் தெரியல. நானும் மாட்டிக்கல. ஒரு வருஷம்  கழிச்சு இந்த பரபரப்பெல்லாம் அடங்கிருக்கும்னு நினைச்சு திரும்ப வந்தேன்”

அவனது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டார். 

அவன் கூறிய இடத்தில் போய் தோண்டி பார்த்த பொழுது மீதமிருந்த எலும்புகளின் பகுதிகள்  கிடைத்தது. 

தடயவியல் துறையின் உதவியால் அந்த எலும்புகள் சூப்பர் இம்போஸ் செய்யப்பட்டு சாராவின் குடும்பத்தினர் சாரா பல் மருத்துவரிடம்  சென்றபோது எடுத்துக் கொண்ட  தலை எக்ஸ்ரே, மற்றும் பல சோதனைகள் உதவியுடன் உறுதி செய்தனர். அத்துடன் அவளது வாட்ச் வேறு அதற்கு முக்கிய சாட்சியாக இருந்தது. 

ஜார்ஜ் புதைக்காததால் தலை மட்டும் எப்படியோ அங்கிருந்த காட்டு விலங்குகள் தள்ளிக் கொண்டு வந்து ஏதோ இடத்தில் போட்டிருந்தது அந்த மண்டையோடு யார் கண்களிலோ அகப்பட்டு தன்னைக் கொன்ற குற்றவாளியை ஐந்து வருடங்களுக்கு பின்னர் விஜயாவின் உதவியோடு காட்டித் தந்த திருப்தியோடு தனது சொந்த நாட்டிற்குச் சென்று கல்லறையில் அமைதி பெற்றது.

மூன்று குற்றங்களையும் சால்வ் செய்ததை ஈத்தாமொழி காவல் நிலையத்தில் போலீஸ் அனைவரும் பிரியாணியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர். 

“மூணு குற்றம், ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வகை. ஆனாலும் மூணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு பாத்திங்களா?” தயிர்பச்சடியைப் பிரித்து பிரியாணிமேல் ஊற்றியபடியே கேட்டார் விஜயா. 

“ஆமாம் மேடம். மூணும் போதை சம்பந்தப்பட்ட விவகாரம். ஒன்னு போதை மருந்து கடத்தல், ரெண்டாவது கஞ்சா போதையில் செஞ்ச குற்றம் மூணாவது திட்டம் போட்டு போதைக் காளானைத் தந்து ஒரு பொண்ணை படிப்படியா பைத்தியமாக்கி தற்கொலைக்குத் தூண்டியது. மூணாவது கேஸ் ரொம்ப பயம்மா இருக்கு மேடம்”

“சூப்பர் மேடம், மூணு வாரத்தில் ப்ராகிரஸ் கேட்ட ராஜாராம் மூஞ்சிலே மூணு கேஸை சால்வ் பண்ணி குற்றவாளியைக் கைது செஞ்சு கரியைப் பூசிட்டிங்க”  என்றாள் அல்லி. 

“அதுக்கு நான் தென்னாடானுக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும் அல்லி. அவர் கொடுத்த க்ளூதான் இந்த அளவுக்கு கேஸ் சால்வ் பண்ண உதவியா இருந்தது”

“நீங்க சொல்ற மாதிரி இது டீம் வொர்க் மேடம். ஒரு க்ளூவை வச்சு அப்படியே தொடர்ந்து போயி குற்றவாளியைக் கைது செஞ்சது நீங்கதானே” என்றான் தென்னாடன் அடக்கமாக. 

“சரி நம்ம டீம் வொர்க். பிரியாணி மட்டும் போதுமா? வேற எப்படி செலிப்ரேட் பண்ணலாம்”

“சார் நாளைக்கு ஊருக்கு வராங்க. நீங்க ஒரு வாரம் லீவு போட்டுட்டு குடும்பத்தோட என்ஜாய் பண்ணுங்க. இந்த கேசுக்காக ராப்பகலா ஓய்வில்லாம உழைச்சிருக்கிங்க” என்றார் கிரேஸ் அக்கறையோடு. 

“ஆமாம் மேடம். ஒரு நாளைக்கு ரெண்டு ஷிஃப்ட் வேலை பாத்திருக்கிங்க. அடுத்த ஒரு வாரம் உங்க ஸ்டேஷனை பத்திரமா நாங்க பாத்துக்குறோம். நீங்க எல்லாத்தையும் மறந்துட்டு ஓய்வெடுத்துட்டு வாங்க”

அடுத்த வாரம், காரில் குடும்பத்தோடு பயணம் செய்து கொண்டிருந்தார் விஜயா. ஜன்னலின் வழியே தாமரைக்குளத்து காற்று முகத்தை வருட, அப்படியே கணவர் முத்துவின் தோளில் சாய்ந்து கண்களை மூடி ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றார்.

“பசங்களா பாட்டை நிறுத்துங்க. அம்மா களைச்சு போயிருக்காங்க கொஞ்ச நேரம் தூங்கட்டும்” 

நமது கதாநாயகி செல்ல வேண்டிய தூரம் இன்னும் எக்கச்சக்கம். சற்று நேரம் அவர் ஓய்வெடுக்கட்டும் மீண்டும் அவரை அடுத்த பாகத்தில் சந்திப்போம். 

-முதல் பாகம் நிறைவு பெற்றது-

ஹாய் பங்காரம்ஸ்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அறுவடை நாள் – இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? வித்யாசமா கதை வேணும்னு சொன்ன நிறைய பேர் இந்தக் கதை பிடிச்சிருக்குன்னு சொல்லிருந்தீங்க.

ஒரு குட்டி பிளாஷ்பேக், இந்தக் கதை நான் எழுத ஆரம்பிச்சது 2011இல். போன வருடம் மறுபடியும் உன் இதயம் பேசுகிறேன் ஆரம்பிக்கலாம்னு இருந்தப்ப என் தோழி சாரதா ‘நீ பாதி பாதில எழுதி நிப்பாட்டி  வச்சிருக்குற கதை எல்லாத்தையும் முடி.அதுவே இன்னும் ரெண்டு மூணு வருசத்துக்கு வரும்’ அப்படின்னு சொல்லி டிரிகர் பண்ணிட்டதால ஒரு மாமாங்கத்துக்கு முன்னாடி பாதில விட்ட  இந்தக் கதையை எடுத்து முடிச்சேன்.

அப்படியே பாதில விட்டு வச்சிருக்குற கதைகளை முடிக்க எண்ணம். குறிப்பு -மாயன் கதை நீங்கலாக (இதையும் நினைவு வச்சு மாயன் கதை என்னாச்சுன்னு  கேக்கும் தோழிகளுக்கு நன்றி. 2012 இல் அந்த மாயன் உலக அழிவு சம்பவம் முடிந்துவிட்டதால் இப்போது அதனைத் தொடர முடியாது. ஆனால் அந்த கான்செப்ட்டை மாத்தி யோசிக்கலாம்)

ஓய்வுக்கு பின்னாடி அடுத்த கேசை விஜயா எடுக்கும்போது மறுபடியும் அவரைத் தொடரலாம்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

3 thoughts on “அறுவடை நாள் – 18 (நிறைவுப் பகுதி)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post