This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.
அத்தியாயம் – 17
சோபியாவின் வீட்டில் லொக் லொக் என்று வந்ததிலிருந்து பாப்பம்மாவின் தங்கை இருமிக் கொண்டிருந்தாள்.
அவள் எதற்கு வந்திருக்கிறாள் என்றே அவர்களுக்கு புரியவில்லை. சோபியாவை கவனித்துக் கொள்ள என்று வந்தவள் அவளே நோயாளியாக இருமிக் கொண்டிருந்தாள்
மூன்று வேளைகளும் மருந்து மாத்திரை. இதில் இருமல் மருந்து குடித்துவிட்டு நன்றாக உறங்கினாள். இரவு நேரம் சோபியா அழைத்தால் கூட எந்திரிக்க மாட்டாள் போலிருக்கிறது.
“ஏம்மா ராஜாத்தி, சோபியாவை பார்த்துக்க அனுப்புனா நீ நல்லா தான் படுத்து தூங்குற போ”
“நான் என்னக்கா செய்றது எனக்கே இந்த தாளாத இருமல்.என் வீட்டுக்காரர் வைத்தியம் பார்த்துட்டு வரதுக்கு எங்க அக்கா வீட்டுக்கு அனுப்புனாரு. எங்க அக்கா என்னடான்னா இங்க வேலைக்கு அனுப்பிருச்சு.
இருமலுக்கு ஏகப்பட்ட மருந்து கொடுத்து இருக்காங்க. அதை சாப்பிட்டாலே தூக்கம் தூக்கமா வருது. இதுல நான் எங்க இவள கவனிச்சிக்கிறது?”
“இன்னும் ஒரு நாள் தானே, அதுக்கப்புறம் உங்க அக்கா வந்துருவா இல்ல”
“ஆமா ஆமா… ஆனாக்கா எனக்கு இந்த வேலை புடிச்சிருக்கு. எங்க அக்கா இவ்ளோ சொகுசா மூணு வேள சாப்பாடு நல்ல தூக்கம்னு இன்னும் ரெண்டு மூணு மாசம் இருக்கும்.
இந்த வேலைதான் இவ்வளவு சுலபமா இருக்கே, அப்புறம் ஏன் வேற யாரும் வர மாட்டேங்கிறாங்க?”
“நல்லா சொன்ன போ.உன் நல்ல நேரம் பேய் ரெண்டு நாள் வரல போலருக்கு. வந்திருத்தா தெரியும்”
“வரவே வேணாம்பா”
“உனக்கு வரலைன்னா என்ன சோபியாவுக்கு மட்டும் பேய் பிடிச்சுச்சு ராத்திரி ஒரு ஆட்டம் காட்டிருவா. இன்னைக்கு ராத்திரி அமாவாசை பேய்ங்க நல்லா அலையும். எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“எனக்கு அந்த ஆட்டம் எல்லாம் பார்க்க புடிக்கலக்கா. மூணு நாள் வந்தோமா எந்திரிச்சு போனோமான்னு இருந்தா போதும்”
மறுபடியும் பேசவிடாமல் அவளது இருமல் அரவணைத்துக் கொண்டது.
சற்று நேரம் கழித்து “இந்த சாப்பாடு” என்று கொண்டு வந்த ஜோஸ்லின் அவளது இருமலை பார்க்க சகிக்காமல், தட்டினை தரையில் வைத்து விட்டு,
“இந்த இருமல் கொஞ்சம் நின்னதும் சாப்பாடு வச்சிருக்கேன் சாப்ட்ரு. தட்டைக் கழுவி வச்சுரு” என்று சொல்லிவிட்டு அகன்றாள்.
சற்று நேரம் கழித்து ஜோஸ்லின் வந்த போது ராஜாத்தி சாப்பிட்டுவிட்டு தட்டினை கழுவி வைத்திருந்தாள்.
“அக்கா, இன்னைக்கு நெஜமாலுமே பேய் வரும்னு சொல்றீங்களா”
“நல்ல கதையா இருக்கே. நான் எங்கடி அப்படி சொன்னேன்? இன்னைக்கு அம்மாவாசை வழக்கமா பேய் வரும் நாள் அப்படின்னு தானே சொன்னேன்”
“அது ஏன் அப்படி? அமாவாசைனா பேய்க்கு ரொம்ப பிடிக்குமா?”
“உனக்கு தெரியாதா அமாவாசை ராத்திரி ரொம்ப இருட்டா இருக்கும். இருட்டுன்னா அதுக்கு ரொம்ப பிடிக்கும்”
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்கா. வழக்கமா அமாவாசை அன்னைக்கு சோபியா கலாட்டா பண்ணுவாளா?”
“எனக்கு தெரிஞ்சு அமாவாசை அன்னைக்கு சோபியா ஒரு மாதிரி தான் இருப்பா. எதுக்கும் நீ அவகிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“அக்கா என்கிட்ட இருமல் மருந்து இருக்கு. அதை குடிச்சா தூக்கமா வரும். பேசாம சோபியாவுக்கு ரெண்டு ஸ்பூன் ஊத்தி கொடுத்துரட்டுமா”
“ஐயோ அதெல்லாம் செஞ்சுராதடி ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிட போகுது”
“ஏன் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகணும்?”
“அவ ஏற்கனவே நிறைய மருந்து மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கா. இதுல இந்த மாத்திரையும் சேர்ந்து ஏதாவது குழப்படி பண்ணிடப் போகுது.
அப்புறம் இன்னொரு விஷயம் நீயும் மருந்து குடிச்சுட்டு படுத்து தூங்கிறாத. இன்னைக்கு நைட்டு சோபியாவை கவனமா பாத்துக்கணும். நீயும் ஜாக்கிரதையா இருந்துக்கோ. உங்க அக்கா என் வலது கால்ல மிதிச்ச மாதிரி நீ இடது காலை உடைச்சு விட்டுடாத”
“அட போங்க அக்கா, எனக்கு இன்னைக்கு நைட் இங்க இருக்கவே பயமா இருக்குது” புலம்ப ஆரம்பித்தாள் ராஜாத்தி.
அவளை கண்டுக்காமல் தனது வேலைகளை தொடர்ந்தால் ஜோஸ்லின். இரவு 10:30 மணிக்கு மேல் ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து இறங்கினாள் பாப்பம்மா.
“என்ன அக்கா இந்த நேரத்துல வந்து இருக்கீங்க?”
“எல்லாம் உன்னால தான் ஜோஸ்லின். ராஜாத்தி கிட்ட என்ன சொன்ன?”
“புரியல அக்கா”
“இன்னைக்கு அமாவாசை பேய் வரும்னு சொல்லி வச்சியா”
” வர வாய்ப்பு இருக்கு அப்படின்னு தான் சொன்னேன்”
“எனக்கு போன் போட்டு உடனே இங்கிருந்து கூட்டிட்டு போ, நான் இங்க இருக்கவே மாட்டேன் அப்படின்னு ஒரே அழுகை. அடம் தாங்க முடியாம ஆட்டோ புடிச்சு ஓடி வந்துட்டேன்”
பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டு தடபுடவென்று ஓடி வந்தாள் ராஜாத்தி.
“அக்கா ஆட்டோ நிக்கிது இல்ல. நான் கிளம்பி வீட்டுக்கு போறேன். இல்ல நம்ம வீட்டுக்கு போகல. நான் போயி அத்தை வீட்டில் தங்கிக்கிறேன். என்னால எல்லாம் தனியா இருக்க முடியாது”
“போனதும் எனக்கு தகவல் சொல்லு. காலையில எனக்கு ஒரு போனை போட்டு நல்லா இருக்கேன்னு சொல்லிடு, சரியா” என்று சொல்லி பாப்பம்மா ராஜாத்தியை வழி அனுப்பி வைத்தாள்
ஆட்டோவில் ஏறிய ராஜாத்தி தனது பையினை இறுக்கி பிடித்துக் கொண்டாள்
“எங்கம்மா போகணும்”
“தெரியாத மாதிரி கேக்குறீங்க. வழக்கமான இடத்துக்கு தான்”
15, 20 நிமிடங்களில் அந்த கட்டிடத்தின் முன்பு நின்று ஆட்டோ அமைதியாக ஓய்வு எடுத்துக் கொண்டது. அந்த கட்டிடத்தின் வாசலில் அவள் வரவை எதிர்பார்த்து ஒருவன் நின்றிருந்தான்.
“இந்தா நீ கேட்டது” என்று அவனது கைகளில் பையை திணித்தாள் ராஜாத்தி
“ரெண்டு டிபன் பாக்ஸ் இருக்கு ஒன்னு சோபியாவுக்கு கொடுத்த சாப்பாடு. ரெண்டாவது பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கிறது எனக்கு கொடுத்த சாப்பாடு. டெஸ்ட் பண்ணிட்டு எப்ப ரிசல்ட் சொல்லுவ?”
“எல்லாம் எடுத்து ரெடியா வச்சிருக்கோம் அல்லி. உடனடியா டெஸ்ட்டை ஆரம்பிச்சிட வேண்டியது தான். ஆமா உன்னோட ஜலதோஷம் எப்படி இருக்கு?மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டியா?”
“யோவ் காய்ச்சல் இருமல் இருக்குன்னு சொல்லி லீவு கேட்டா, மூணு நாள் போயி சோபியாவை பார்த்துட்டு அப்படியே ரெஸ்ட் எடுத்துட்டு வர சொல்றீங்க”
“அப்புறம் பாப்பம்மா வேற மயக்கமாகி கெடக்கா. அங்க என்ன நடக்குதுன்னு நமக்கு தெரியணும். கொஞ்சம் ஸ்ட்ராங் மைன்டா இருக்கணும். உன்னை விட்ட வேற யாரு இருப்பா.
சோபியா வீட்ல பகல்ல நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தியா இல்லையா? ரவுண்ட்ஸ் கிடையாது யாரும் திட்டறது ஆள் இல்லை இங்கே அங்கேயும் ஓட வேண்டாம்”
“நிஜம்தான் தென்னாடன் நல்ல படுத்து தூங்கி மூணு நாள் ரெஸ்ட் எடுத்து பிரஷா வந்து இருக்கேன்”
“மூஞ்சிய பாத்தாலே தெரியுது பயங்கர சுறுசுறுப்பா இருக்கு”
“விஜயா மேடமையும் கிரேஸ் அக்காவையும் காண்டாக்ட் பண்ணவே முடியல. ஆமா மண்டையோடு கேஸ் இண்வெஸ்டிகேசன் எந்த நிலைமையில் இருக்கு”
“அதுலயும் ஒரு முக்கியமான க்ளு கிடைச்சிருக்கு அல்லி. அது விஷயம் அது விஷயமான விசாரணைக்காகத் தான் மேடமும் கிரேஸும் திருவனந்தபுரம் வரைக்கும் போயிருக்காங்க. நாளைக்கு மத்தியானத்துக்குள்ளார இங்கே திரும்பி வந்துடுவாங்க”
“அதுக்குள்ள இந்த டெஸ்ட் ரிசல்ட் சொல்லிடுவியா”
“கண்டிப்பா”
விஜயாவுக்கும் கிரேஸுக்கும் ஆவுடை வாட்ச் பத்தி சொன்ன செய்தி அந்த அளவு திருப்தி தரவில்லை. அவனது குரூப்பில் இருந்த பெண் ஒருத்திக்கு கஸ்டமர் கொடுத்த அன்பு பரிசாம். அந்த வாட்ச் அழகாக இருக்கவும் இவன் புடுங்கி அணிந்து கொண்டிருக்கிறான்.
நான்கைந்து வருடம் இருக்கலாம் என்று சொல்கிறான். யாரிடம் இருந்து அந்த கைகடிகாரத்தைப் பறித்தான் என்று யோசித்து ஒரு வழியாக அந்த பெண்மணியின் பெயரையும் சொல்லிவிட்டான். ஆனால் அவள் இப்போது தொழிலில் இல்லையாம் ஊருக்கு சென்று விட்டாளாம்.
ஒருவழியாக அதே சமயத்தில் அவளுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து, குத்து மதிப்பாக விலாசத்தை வாங்கி இரண்டு நாட்கள் அலைந்து அவளை கண்டுபிடித்து விட்டார்கள்.
இந்த வாட்ச் புகைப்படத்தைப் பார்த்ததும் அவள் கண்களில் மெலிதாகத் தெரிந்த திகிலே அவளுக்கு என்னவோ நடந்திருக்கிறது என்பதை காட்டி தந்தது.
“இங்க பாரு மணி, தொழில விட்டு ஊர்பக்கம் போறதா சொல்லி ஆவுடை கிட்டேருந்து எஸ்கேப்பாகி, இங்க வந்து நீ மறுபடியும் வந்து தொழில் பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.
உன்னை அரெஸ்ட் பண்றதுக்காக நாங்க வரல. இந்த வாட்ச் ஒரு மிஸ்ஸிங் பொண்ணோட கையில் இருந்தது. அது எப்படி உன் கைக்கு வந்ததுன்னு கரெக்டா தெரியணும்.
அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? அந்த பொண்ண நீ பாத்தியா? எப்ப எங்க பாத்த? இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லிட்ட, பதில் எங்களுக்கும் திருப்தியா இருந்ததுன்னா உன்னை தொந்தரவு பண்ணாம போயிடுவோம்”
“மேடம் இது யாரோடதுன்னு எனக்கு தெரியாது. அந்த பொண்ணுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனா வாட்ச் என்கிட்ட வந்தது ஒரு சந்தோஷமான சமாச்சாரத்தில் இல்லை”
“அப்படின்னா? புரியலையே கீழ கெடந்த பொருளா? கண்டு எடுத்தியா”
“இந்த வாட்ச் வந்த அன்னைக்கு தான் தொழிலை விட்டே போகணும்னு முடிவு பண்ணேன் மேடம்”
“அப்படி என்னம்மா நடந்துச்சு”
“அங்க சைக்கோ ஒருத்தன் இருக்கான் மேடம். அவனுக்குன்னு ஒரு பேர் இருந்தாலும் நாங்க எல்லாம் அவன சைக்கோன்னுதான் சொல்லுவோம். அப்படி ஒரு கொடூரமானவன்.
அவன் வந்தா கூட நாங்க யாரும் போக மாட்டோம். அன்னைக்கு இந்த ஆவுடையப்பன் மத்த எல்லாரையும் ஒரு பார்ட்டிக்கு பேசி விட்டிருந்தான். என் நேரம் அன்னைக்கு நான் மத்த பொண்ணுங்க கூட போகல.
கடைசில நான் வேணாம் வேணாம்னு கெஞ்ச கெஞ்ச என்னைய அந்த சைக்கோ கிட்ட அனுப்பி விட்டுட்டான்.
அந்த சைக்கோ அன்னைக்கு வெளியே கூடி போயி என்னை ரணமாக்கிட்டான் மேடம். இவனுக்கு அடுத்தவங்க வலி வேதனையில் துடிக்கிறதைப் பார்த்தா ஒரு சந்தோஷம்.
உடம்பு ஃபுல்லா ரத்தம். பெல்ட் அடி. கிளம்பறதுக்கு முன்னாடி அன்பளிப்பா இந்த வாச்ச மேல தூக்கி எறிஞ்சுட்டு போனான். அடுத்த தடவையும் வருவேன் நீ தான் வரணும்னு சொன்னான்.
அன்னைக்கே ஆவுடைகிட்ட கணக்கை முடிச்சுட்டு இந்த ஊருக்கு ஓடி வந்துட்டேன்.
கஸ்டமர் தர அன்பளிப்பு எல்லாம் தனக்கு தான் சொந்தம்ன்னு ஆவுடை வாட்சைப் புடுங்கிட்டான். எனக்கு அதுல ஒன்னும் வருத்தம் இல்லை. அன்னைக்கு நடந்ததுக்கு தான் ஏகப்பட்ட தழும்பு உடம்புல இருக்குதே. வாட்ச்ச வேற பாத்து ஞாபகம் படுத்திக்கணுமா?”
“அந்த சைக்கோ பத்தின விவரம் உனக்குத் தெரியுமா” கிரேஸ் ஆர்வமாகக் கேட்டாள்.
“நம்ம அந்த சைக்கோதான்னு முடிவெடுக்க வலுவான ஆதாரம் வேணும் கிரேஸ். அதுக்கு முன்னாடி தீர்மானத்துக்கு வந்துடாதே. அது விசாரணையோட போக்கையே மாத்திரும். மணி நீ அன்னைக்கு நாளைப் பத்திக் கோர்வையா சொல்ல முடியுமா”
“சொல்றேன் மேடம்”
“நல்லா கேட்டுக்கோ மணி. நாங்க அவன் எப்படி எப்படி டிசைன் டிஸைனா உன்னைக் கொடுமை பண்ணான்னு கேக்கல. அன்னைக்குத் தேதி என்ன? ஏதாவது முக்கியமான சம்பவங்கள் நடந்ததா? அதாவது தலைவர்கள் பிறந்தநாள், நடிகர்கள் படம் ரிலீஸ் ஆன நாள் ரசிகர்கள் தியேட்டர் மின்னாடி டிக்கெட்டுக்கு சண்டை போட்டுட்டு இருந்தாங்க. இப்படி ஏதாவது சின்ன சின்ன தகவல்கள் கூட அந்த நாளுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கான்னு விளக்கும்”
தனது வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அன்றைய சம்பவங்களைக் கண் மூடி யோசிக்க ஆரம்பித்தாள் மணி.