Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 15

அறுவடை நாள் – 15

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 15

மருத்துவமனையிலேயே வேலை பார்த்தும் அப்பொழுது உறுத்தாத டெட்டால் வாசமும் மருந்து வாடையும் இப்பொழுது குமட்டியது பாப்பம்மாவுக்கு.

 

இரண்டு மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த காய்ச்சலும் எதை சாப்பிட்டாலும் வயிற்றை பிரட்டிக்கொண்டு வந்த வாந்தியும் இப்பொழுது நின்றிருந்தது ட்ரிப்ஸில் ஒரு பக்கம் மருந்து ஏறிக் கொண்டிருந்தது.

 

அன்று சோபியாவின் வீட்டில் கண்ட காட்சியில் தெரித்து ஓடியவள் தான். ஹாலில் மூலையில் படுத்திருந்த ஜோசலின் காலில் எசகு பிசகாக மிதித்து விட்டதால் அவளும் கூட இதே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

 

 நடக்க முடியாமல் விந்தி விந்தி நடந்து வரும் ஜோஸ்லின் இவளை முறைத்துக் கொண்டே வீட்டுக்கு செல்வாள்.

 

“எப்பா தெரிஞ்சா செய்றேன். அன்னிக்கு என்ன நடந்தது என்று எனக்கு ஒரு தெரியவே இல்லை. நீ ஹால்ல வழில படுத்து இருப்பான்னு எனக்கு எப்படி தெரியும். தெரியாம மிதிச்சிட்டேன்ப்பா. வேணுக்கின்னே உன்னை மிதிக்கணும்னு இல்ல”

 

ஜோஸ்லின் சற்று சமாதானம் அடைந்தது போல தோன்றினாள். “நல்லவேளை அக்கா சுளுக்கோட  நின்னுடுச்சு. இன்னும் கொஞ்சம் பலமா மிதிச்சிருந்தீங்கன்னா கதை முடிஞ்சிருக்கும்” 

 

“உனக்கு சரியாயிடுச்சா? எப்ப முழுசும் சரியாகும் சொல்லி இருக்காங்க”

 

“வெறும் சுளுக்கு தான் அக்கா மருந்து  போட்ட சரியாயிடும்னு சொல்லி இருக்காங்க. ஆனா நல்லா நடக்க இன்னும் ஒரு மாசம் ஆகும்”

 

பாப்பம்மா பேசிக் கொண்டிருந்த பொழுதே அவளுக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதை பயந்து கொண்டே எடுத்தாள்.  ஒரு வார்த்தை கூட தொடர்ச்சியாக பேசாமல் ‘சார் இல்லைங்க சார்’, இதை செஞ்சிட்டேங்க சார், இதோ கிளம்பிட்டேன் சார், நாளைக்கு போயிட்டு இருக்கேன் சார்’ என்று வார்த்தைகளை அரைகுறையாகக் கடித்துத் துப்பினாள். அவ்வளவுதான் உரையாடல்.

 

அலைபேசியை வைத்துவிட்டு 

“இவங்களோட பெரிய தொல்லை. நானே உடம்பு சரியில்லாம இருக்கேன்… எப்ப வேலைக்கு போற? என்ன ஆச்சு அப்படின்னு தினம் திட்டுறாங்க “என்று ஜோஸ்லீனிடம் அலுத்துக்  கொண்டாள்.

 

“என்ன ஆச்சு அக்கா? வேலைக்கு வர சொல்றாங்களா? காய்ச்சல் இப்பதானே குறைஞ்சிருக்கு. குளுக்கோஸ் வேற ஏறிக்கிட்டு இருக்கு. எப்படி வருவீங்க”

 

“உனக்குத் தெரியுது. வேலை தரவங்களுக்குத்  தெரியலையே”

 

“இப்ப என்னக்கா செய்ய போறீங்க”

 

“தெரியல ஜோஸ்லின். எனக்கு இன்னும் ரெண்டு நாளாவது ரெஸ்ட் வேணும். மறுபடியும் அங்க வர்றதுக்கே பயமா வேற இருக்கு. ஆமா இப்ப யாரு சோபியாவை பார்த்துக்குறது”

 

“வேற யாரு வீட்டுப் பொம்பளைங்க நாங்க ரெண்டுபேரும் தான். மூணு நாளா அவ கிட்ட இருந்து சத்தத்தை காணோம்”

 

“நான் வேலைக்கு வரலைன்னா திட்டுவாங்க. என் தங்கச்சியை  ஒரு ரெண்டு நாளைக்கு அனுப்பி வைக்கிறேன். என்  உடம்பு தேறுனதும் வரேன்”

 

“அப்படியா, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் உங்க தங்கச்சி எப்படி”

 

“அவளுக்கு பேய் பிசாசுன்னா ரொம்ப பயம். இந்த மாதிரி விஷயம் எல்லாம் தெரிஞ்சதுன்னா பயந்துகிட்டு வரமாட்டேன்னு சொல்லிடுவா. அதனாலதான் அனுப்ப யோசனையா இருக்கு”

 

“ஐயோ இப்ப என்ன செய்யப் போறீங்க?”

 

“மூணு மாசம் சோபியா வீட்ல வேலை செஞ்சு ஆகணும்னு எனக்கு காண்ட்ராக்ட் போட்டுருக்காங்க. ஒரு நாள்தான் வேலை செஞ்சு இருக்கேன். இப்போ முடியலன்னு சொன்னா என்னை ஹாஸ்பிடல்லயும்  வேலையை விட்டு நிறுத்திடுவாங்க. அதனால கண்ண மூடிட்டு மூணு மாசத்தை அங்க இருந்து தொலைக்க வேண்டியதுதான்.  இரண்டு நாளைக்கு மட்டும் என் தங்கச்சியை  அனுப்புறேன். அப்பறம்  நான் வந்துடுறேன்”

 

“சரிக்கா”

 

“ஜோஸ்லின்ம் என் தங்கச்சி  இப்ப சாப்பாடு கொண்டு வந்துருவா .அவளை கையோடு உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டு. தனியா எல்லாம் அவளுக்கு வர தெரியாது. அப்புறம் அவகிட்ட இந்த பேய் கதை எல்லாம் சொல்லிடாத. ரொம்ப பயந்தவ. நான் வர வரைக்கும் ஒரு ராத்திரி நேரம் உதவியா இருந்துக்கோ பயத்துல செத்து கித்துற போறா”

 

“சரிக்கா”

 

பின்னர் உணவு கொண்டு வந்த பாப்பம்மாவின் தங்கை ராஜாத்தியை ஒரு வழியாக சரிகட்டி, ஜோசலினுடன் சோபியாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

 

***

 

காவல் நிலையத்தில், கடந்த நான்கு நாட்களாக, காணாமல் போன ஐரோப்பாவை சேர்ந்த பெண்களை பெண்களின் குடும்பத்தினை தொடர்பு கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அதன் பலனாக ஒரு வழியாக இரண்டு குடும்பத்தினர் அவர்கள் கேட்ட விவரங்களை அனுப்பி விட்டார்கள்.

 

வருடங்கள் சென்று விட்டதால் அதில் ஒருவர் தொடர்பு எண், மின்னஞ்சல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் போலிருக்கிறது. பல வகைகளில் முயற்சித்தும்  தொடர்பு கொள்ளவே முடியவில்லை

 

“தொடர்பு கொள்ள முடியலைன்னா அவங்கள கண்காணிப்புல போட்டுறலாம் வா மேடம்”

 

“இல்ல கிரேஸ் சரிப்பட்டு வராது. வருஷங்கள் அதிகமாயிட்டதனால அவங்க நம்பிக்கை இழந்திருப்பாங்க. தொடர்பு கொண்டு சரியான ஈமெயில் கொடுத்திருந்தாலும் அதை ப்ராப்பரா இங்க டாக்குமெண்ட் பண்ணாம இருக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதனால சந்தேகத்தின் பலனை அவங்களுக்குத்  தான் தரணும்”

 

“ஒருவேளை அவங்களே கொலைகாரங்களா இருந்தா? இந்தியாவில் வந்து அந்த பொண்ண கொலை பண்ணிட்டு, கண்ணை மறைப்பதற்காக நம்ம கிட்ட புகார் கொடுத்துட்டு, அவங்க ஊருக்கு தப்பிச்சு போயிட்டு, வீடு விலாசம் எல்லாம் மாத்தி இருந்தா?”

 

“அது தலைய சுத்தி மூக்க தொடுற வேலை. அப்படி கொலை செய்ய  மோட்டிவ் இருக்கிறவன், அவங்க ஊர்ல செய்றது தான் சுலபம். அவங்கள இந்தியாவுக்கு கூட்டிட்டு வந்து கொலை செய்யறது எல்லாம் ஈசியா ட்ரேஸ் பண்ண முடியும்” 

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்தது

 

“மேடம் மூணாவது நபர் கிட்ட இருந்தும் மின்னஞ்சல் வந்திருச்சு” என்று அதனைப் பார்த்துக் கொண்டே கிரேஸ் சொன்னார்.

 

அந்தப் பெண்ணின் போட்டோவை பல கோணங்களில் கேட்டிருந்தார்கள். மூன்று பேருமே அந்த பெண்களின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார்கள் அந்த புகைப்படங்களை எடுத்து அலச தொடங்கினார்கள் விஜயாவும் கிரேசும்.

 

“மேடம் லஞ்ச் சாப்பிட்டு கண்டினியூ பண்ணலாமா?”

 

“மணி நாலாச்சா லன்ச் வாங்கிட்டு வரச் சொல்லு”

 

“வெற்றி எங்க மேடம்? ஊருக்கு போய் இருக்காப்லயா?”

 

இருவரும் சாப்பிட எலுமிச்சை சாத பொட்டலத்தை பிரித்து வைத்துக் கொண்டே கேட்டார் கிரேஸ்.

 

“ஆமாம் கிரேஸ் அல்லி குடும்பத்தோட ஊருக்கு போய் இருக்காங்க. வெற்றியும் பசங்க கூட கம்பெனிக்காக போயிருக்கான். இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவான்”

 

“கை இப்ப பரவாயில்லையா மேடம். சுகமாயிருச்சா?”

 

“இப்ப தேவலை. இன்னும் ஒரு வாரம் பத்து நாள்ல கட்ட பிரிச்சிடலாம்”

 

“வீட்ல யாரும் இல்லாமத்தான் இங்க கேஸ் இதெல்லாம் பிரிச்சு வச்சுட்டு ராப்பகலா ஸ்டேஷன்ல இருக்கீங்களா?”

 

“ராப்பகலா இருந்தாலும் பல கேஸ்ங்க முடிவேணான்னு  கேட்டு உசுர வாங்குது”

 

“ஆமாம் மேடம் சோபியா கேஸ் ஒன்னு. அதுல பேய் பிசாசுன்னு  பாப்பம்மாவே புலம்பிட்டு கிடக்கா. இந்த மண்டை ஓடு கேஸ் இன்னொன்னு. அப்புறம் அந்த டென்ட் ஒன்னு பாத்துகிட்டு இருந்தோமே குட்கா கேசு  அது என்ன ஆச்சு மேடம்?”

 

“எல்லாம் பாதி பாதில நிக்குது. டென்ட்டுக்கு நார்காஸ்டிக்ஸ் அனுப்பி இருக்கோம். இந்த மண்டை ஓடு கேஸ்க்கு இப்ப ஒரு துப்பு கிடைச்சிருக்கு மாதிரி என் மனசுக்கு படுது கிரேஸ்”

 

“என்ன துப்பு மேடம்? மூணு பேரு அனுப்பி இருக்காங்க. அந்த மூணு பேர்ல ஒருத்தவங்கள இருக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்களா?”

 

“ஆமாம் அதுலயும் குறிப்பா இந்த பொண்ண பாரு” ஒரு படத்தை காட்டினார். நல்ல பால் நிறத்தில், தேன் நிற முடியில் ஒரு முப்பது முப்பத்தி ரெண்டு மதிக்கத்தக்க பெண்.

 

“ அவள் இவ பேர் என்ன? சாரா வா?”

 

“ஐயோ வெளிநாட்டுக்காரங்க முழு பேர் எல்லாம் வாயில நுழைய மாட்டேங்குது மேடம். ஏதாவது பட்டப்பெயர் வச்சுக்கலாம் நமக்கு சுலபமா புரியிற மாதிரி”

 

“இவளோட போட்டோ தான் கடைசியில வந்த ஈமெயில் இருந்தது அதனால சாராவை நம்பர் த்ரீன்னு  வச்சுக்கலாமா?”

 

“சரி நம்பர் த்ரீ தான் அந்த பொண்ணு எப்படி சந்தேகப்படுறீங்க?”

 

“முதல் விஷயம் அந்த மண்டையோட்டில் ஒரு இடத்துல பார்த்தேன் பல்லு இல்லை. நம்ம அடுத்து என்ன செய்யணும்னா இந்த பொண்ணோட எக்ஸ்ரே ஏதாவது இருந்துச்சுன்னா ஊர்ஜிதப்படுத்திக்க வசதியா இருக்கும். 

 

டென்டிஸ்ட்கிட்ட வெளிநாட்டுக்காரங்க எல்லாம் அடிக்கடி போயி க்ளீன் பண்ணிக்குங்க. ஏதாவது பிரச்சனைன்னு போனா  பல் டாக்டர் எல்லாம் புல் எக்ஸ்ரே  எடுப்பாங்க. சில சமயம் தலையையும் எடுப்பாங்க. 

 

சோ அந்த எக்ஸ்ரே இருந்துச்சுன்னா அதைக் கேட்டு வாங்குங்க.  நேத்து தென்னாடன்  என்கிட்ட பேசினப்ப முகத்தோட முழு  எக்ஸ்ரே இருந்துச்சுன்னா அந்த ஸ்கல் எக்ஸ்ரேயும் இந்த ஸ்கல்லையும் வச்சு மேட்ச் பண்றதுக்கு டெக்னாலஜி வளர்ந்து இருக்குன்னு சொல்லி இருக்காரு. சோ அந்த கோணத்தில் அணுகலாம்னு நினைக்கிறேன்”

 

“அப்ப கேக்குறதும் கேக்குறோம் மூணு பேர் கிட்டயுமே கேட்டு எல்லாமே கேட்டுடலாமே”

 

“கேளு எப்ப கிடைக்குதுன்னு பார்க்கலாம். நம்பர் த்ரீயோடாது மட்டும் எப்படியாவது சீக்கிரம் வாங்கப்பாரு”

 

அந்த மூன்றாவது பெண் சாராவின் கோப்புக்களை இன்னும் தீவிரமாக படித்தார் கிரேஸ். 

 

“இருந்தாலும் இந்த பொண்ணுதான்னு  நீங்க சொல்றதுக்கு ஏதாவது ஒரு ஸ்ட்ராங் காரணம் இருக்குன்னு நினைக்கிறேன். அது என்னது?”

 

“உண்மைதான். ஏன்னா… “ என்று விஜயா தன் சந்தேகத்திற்கான காரணங்களை அடுக்க தொடங்கினார்.

 

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது செல்லில் இருந்து ஒரு மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்தது. செல்வம் தான் மதுரையிலிருந்து அனுப்பி இருந்தார்.

 

“கிரேஸ் இந்த நாலு பசங்கள விடுதலை பண்ணீங்க இல்லையா? குட்கா கேஸ். அவங்க நாலு பேரையும் ஆவுடையப்பன் கூட பார்த்ததா ஏட்டு சொல்லிட்டு இருந்தாரு”

 

“ஆமா மேடம் நிஜம்தான். ஏன்  கேக்குறீங்க”

 

“அந்த ஆவுடையப்பன் நமக்கு வேணுமே”

 

“ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வர சொல்லட்டுமா”

 

“ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வந்தா விஷயம் லீக் ஆயிடும். பெரிய ஆளுங்க சம்மந்தப்பட்டிருப்பாங்க போல இருக்கு . ரகசியமா விசாரிக்கறதுக்கு ஏதாவது இடம் இருக்கா? அப்படி இருந்தா அங்க தூக்கிட்டு வர்ற ஏற்பாடு பண்ணு. பெருமாள் சாமிய நல்லா தயாரா, ஆவுடையை ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தந்து  அடிச்சு விவரம் வாங்குறதுக்கு ரெடியா வர சொல்லு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post