This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.
அத்தியாயம் – 10
“நடந்த இந்த சம்பவத்துக்கு நீங்க, நான், இந்த உலகம் எல்லாருமே தான் காரணம் அப்படின்னு நான் சொல்லுவேன்” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் தலைமை ஆசிரியை
“உங்களுக்கு பணிச்சுமை. எங்களுக்கும் அதே பணிச்சுமை. சொல்லப்போனால் எல்லாருக்கும் ரெண்டு மடங்கா இருக்கு. நம்ம படிச்ச காலத்துல எல்லாம் கெட்டுப் போவதற்கே சந்தர்ப்பம் குறைவு. வீடு விட்டா பள்ளி, பள்ளி விட்டா வீடு.
டிவி இருந்தது. அதுலயும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. அறிவு, கலை, பொழுதுபோக்கு இது எல்லாத்தையும் சமமா கலந்து கொடுத்தாங்க. ஆனால் ஸ்வீட் மாதிரி இலையின் ஒரு மூலைல ஒரு கரண்டி அளவே இருந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இப்ப குழந்தைகள் முன்னாடி இலை எல்லாம் பரப்பப்பட்டு கிடக்கு.
மார்க் அப்டின்னுற ஒன்னு மட்டும் இல்லைன்னா குழந்தைகள் பாடத்தைத் தொடுறதே கஷ்டம். நம்ம எல்லாரும் டிவில பொழுதை ஆரம்பிச்சு மொபைலில் முடிக்கிறோம். கொஞ்சமா ஸ்வீட் எடுத்துக்கிறதுக்கும் ஸ்வீட்டே பொழுதனைக்கும் சாப்பிடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா
இப்ப பசங்க எல்லாம் கெட்டுப் போறதுக்கு உள்ளங்கை அளவு இருக்கிற ஒரு செல்போனே போதும். எப்படி குடிக்கலாம், என்னென்ன ப்ராண்ட் சிகிரெட் இருக்கு, அதில் எப்படி போதை மருந்து கலந்து எடுத்துக்கணும்னு டியூஷன் எடுக்குறாங்க.
பெற்றோர் எல்லாம் பணத்தை தாராளமா தரிங்க. பணத்த ரேஷன் பண்ண வேண்டாமா? ஒவ்வொரு காசு சம்பாதிக்கிறதும் எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சா தானே அந்த பசங்களுக்கு செலவு பண்றப்ப யோசிக்க முடியும்”
இதெல்லாம் விஜயா தன்னிடம் புகார் கொடுக்க வரும் பெற்றோர்களிடம் சொல்லும் வார்த்தைகள். அதையே இந்த தலைமையாசிரியை சொல்கிறார் என்றால் எது காரணமாக இருக்கும் என்று பொறி தட்டியது அவருக்கு
“மருந்து எப்படி சப்ளை பண்றாங்க? இவனுங்களுக்கு எப்படி கிடைச்சது? மத்த மாணவர்களுக்கும் மருந்து தாராளமா கிடைக்குது போல இருக்கு” அதிரடியாக விஷயத்துக்கு வந்தார் விஜயா.
தாங்கள் சரியாக கண்காணிக்காமல் இருந்ததை மறைக்க பெற்றோர்களுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி விடுவது போல் பேச்சினை தயார்படுத்திக் கொண்டு வந்த தலைமை இப்போது திகைத்தது
“வந்து… வந்து… அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்?” தடுமாறினார் தலைமை.
“கண்டிப்பா உங்களுக்குத் தான் தெரியும். எங்க பசங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டது உங்க பள்ளிக்கூடத்து வாசல்ல தான். ஸ்கூல்ல இருந்து நேரா பஸ் ஸ்கூல் பஸ் ஏறி வீட்டுக்கு வந்து பக்கத்துல எங்கேயாவது மருந்து சாப்பிட்டு இருந்தாங்கன்னா, அது வீட்டுக்கு முன்னாடியாக இருந்திருக்கும்.
ஸ்கூல்ல இந்த ரெண்டு பசங்களும் தாறுமாறா கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு ஒருத்தனுக்கு கை ஒடஞ்சிருக்கு. அப்படின்னா, ஸ்கூல் வாசல்ல இருந்து பஸ் ஏற வரைக்கும் இருக்கிற பகுதியில ஏதோ ஒரு இடத்துல இந்த பசங்கள திசை திருப்பற வேலை நடந்திருக்கு.
ஏதோ ஒரு இடத்துல யாரோ ஒருத்தன் மருந்து தரவனா இருக்கணும். இந்த பசங்க ஒன்னு தெரிஞ்சே வாங்கிருக்கணும் இல்லை மருந்துனே தெரியாம வாங்கி சாப்பிட்டு இருக்கணும். இது ரெண்டுக்கும் தான் சான்சஸ் இருக்கு
என் மகனுக்கும் சரி, அவங்க பையனுக்கும் சரி எதனால சண்டை போட்டாங்கன்னே நினைவில்லை. அவரு பய்யன் ஹாஸ்பிடல் வந்து என் மகனைக் கட்டிப்பிடிச்சுட்டு கண்ணீர் விடுறான். சோ அவங்களுக்கே தெரியாம போதை மருந்து எதிலோ கலந்து தரப்பட்டிருக்கு. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது நடந்ததால் இது ஸ்கூலுக்கு உள்ளேயோ இல்லை பஸ் ஏறுறதுக்கு மின்னயோ தரப்பட்டிருக்கலாம்”
‘ஐயோ இந்தம்மா இப்படி பாயிண்ட் பாயிண்ட்டாகப் பேசுகிறதே!’
விஜயாவின் பேச்சைக் கேட்டு தலைமை ஆசிரியைக்கு வியர்க்க ஆரம்பித்தது. தன் எதிரே இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து கடகடவென்று குடித்தார்.
“இங்க பாருங்க மேடம் திஸ் இஸ் நாட் பிளேமிங் செஷன். எனக்கு உண்மை தெரியணும். நாங்க செஞ்ச புண்ணியம், இந்த பசங்க சாப்பிட்டு பெரிய டேமேஜ் ஆகாமல் சண்டை, கை உடைஞ்சதோட போயிடுச்சு.
ஆனால் எத்தனை பசங்க இதனால பாதிக்கப்பட்டிருக்காங்களோ யாருக்கு தெரியும்? உங்க குடும்பத்து பசங்களுக்கும் இந்த மாதிரி நிலைமை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. சமுதாயத்தில் ஒவ்வொருத்தரும் ரெஸ்பான்சிபிளா அவங்களால முடிஞ்ச அளவுக்கு இந்த குற்றங்கள் நடக்காமல் தடுக்க உதவி செய்யணும்” என்றார் தனது காவலர் மிடுக்குடன்
உடனிருந்த மற்றொரு பெற்றோரும் அதை ஆமோதித்தார் “ஆமாங்க சின்ன வயசுல இருந்து என் பையனும் அவங்க பையனும் சேர்ந்தே படிச்சிட்டு இருக்காங்க, க்ளோஸ் பிரண்ட்ஸ்.
என்ன ஆச்சுன்னு தெரியல ஒரு சின்ன விஷயத்துக்கு அடி அடிச்சிருக்காங்க. என் பையன் அவங்க பையன் கைய ஒடச்சி இருக்கான். ஆனா இது எதுவுமே என் பையனுக்கு தெரியல. கனவு மாதிரி இருக்குன்னு சொல்றான்.
பிளட் சாம்பிள் டெஸ்ட் பண்ணி டாக்டரு உறுதி பண்ணது என்னன்னா ரெண்டு பேரோட ரத்தத்தில் போதை மருந்து கலந்திருக்குன்னு சொல்றாங்க.
இது எப்படி கலந்துச்சு? பசங்களுக்கு என்ன ஆச்சு? உங்க ஸ்கூல் வாசல்ல இருந்து ஸ்கூல் பஸ் ஏறுர வரைக்கும் பசங்க என்ன செய்றாங்க அப்படிங்கிற சிசிடிவி ஃபுட்டேஜ் இருந்தால் எங்களுக்கு காமிங்க” என்றார் அவரின் பங்குக்கு.
அடுத்த அரை மணி நேரத்தில் தலைமையாசிரியை அறையிலேயே சிசிடிவி ஃபுட்டேஜ் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்து முடித்ததும்
“ஆக, இந்த பசங்க பள்ளியிலிருந்து வெளியே போனதும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுறாங்க. அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக்கிட்டே பஸ்ஸுக்கு வராங்க இல்லாட்டி நின்னு சாப்பிட்டுட்டு பஸ் ஏறானுங்க.தினமும் இந்த ஐஸ்கிரீம்க்காக 50-100 ரூபாய் வரைக்கும் ஒவ்வொருத்தனும் செலவு பண்றான்.”
விஜயா சற்று யோசித்துவிட்டு அந்த வீடியோவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார். “நல்லா பாருங்க இது ப்ராப்பரான கடை கிடையாது. வண்டில தள்ளிட்டு வரான். இவங்களுக்கு ஐஸ்கிரீம் எல்லாம் வித்திட்டு போயிடறான். வண்டி கிட்டத்தட்ட எம்டியா தான் போகுது. சோ, அவ்ளோ ஐஸ்கிரீம் விக்கிறான் ஒவ்வொரு நாளைக்கும். சண்டை போட்டுக்கிட்ட அன்னைக்கு பசங்க ஆளுக்கு ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னுருக்கானுங்க. டோஸ் அதிகமாயிருச்சு”
“இப்ப நினைவு வருது மேடம். பஸ் டிரைவர் கூட சொல்லிட்டு இருந்தாரு ஒருவேளை ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டால் இந்த கடைக்காரர் போன் பண்ண இன்னொருத்தன் ஐஸ்கிரீம் ட்ரக் கொண்டு வர்றான். நான் இப்பயே அதை தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றேன்”
“நோ நோ இப்ப எதுவும் செய்யாதீங்க அப்புறம் உனக்கு உஷார் ஆயிடுவாங்க. எதுவுமே நடக்காத மாதிரியே அப்படியே இருங்க. என் பையன் அடிபட்டது அடிபட்டதாக இருக்கட்டும் என் பையனுக்கு மருத்துவ விடுப்பு எடுத்து கூட்டிட்டு போறேன். இவரும் கொஞ்ச நாள் ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்கட்டும்.
நீங்க சண்டை போட்ட மாணவர்களைக் கூப்பிட்டு கண்டித்த மாதிரி ஒரு செய்தியை ஸ்ப்ரெட் பண்ணுங்க. காலைல அசெம்பிளி இல்ல இந்த மாதிரி அடிச்சுக்க கூடாது அப்படின்னு மட்டும் ஒரு பொதுவா மெசேஜ் கொடுத்துடுங்க.
அப்படியே கொஞ்சம் அமுங்கின மாதிரி இருக்கட்டும் அவங்க மறுபடியும் வர ஆரம்பிச்சு விக்கிறப்ப நான் என்னோட சீனியர் ஆபிஸர்ஸ் மூலமாக என்ன ஸ்டெப் வேணுமோ சொல்லிடுறேன். இந்த போதை விஷயம் எல்லாம் ஹேண்டில் பண்ண போலீஸ்காரங்களுக்குத் தெரியும்”
அனைவருக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது
தனது மூத்த மகன் வெற்றி வேலுடன் ஈத்தா மொழிக்குப் பயணம் ஆனார் விஜயா
“விஜயா உனக்கு இருக்கிற வேலை டென்ஷன்ல பார்த்துக்க முடியுமா? உனக்கே தலைக்கு மேல வேலை இருக்கேம்மா” என்றார் முத்து கவலை தோய்ந்த குரலில்.
“அவனுக்கு இப்போ ஒரு மாற்றம் தேவை. ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே தான் வீடு இருக்கு. புது சூழ்நிலை அவன் மனசுக்கு ஒரு தெளிவு தரும். இவனோட நிலைய கருத்துல கொண்டு உங்க ஸ்கூல்லயும் லீவு கொடுத்து இருக்காங்க.
இப்ப அவனோட உடலும் மனசும் நல்லா இருக்கணும். ஒரு தெளிவு பிறக்கணும். அதுக்கு என்கிட்ட வரட்டும் என்கூட இருக்கட்டும். அவனுக்கே உலகத்துல என்னென்ன எல்லாம் நடக்குது அப்படிங்கிற ஒரு அறிவு கிடைக்கும் . தான் ஜாக்கிரதையா இருக்கணும்னு கத்துக்கிட்டாங்க நம்ம யாரும் அவங்களுக்கு அறிவுரை சொல்லணும்னு அவசியமே கிடையாது.
இப்ப இருக்கிற என் ஜெனரேஷனுக்கு அவங்களே கத்துகிறது தான் பிடிச்சிருக்கு. அறிவுரை சொன்னால் அப்படியே ஒதுக்கிடுவாங்க. வரட்டும் வந்து கத்துக்கிடட்டும்”
வலது கையை மாவுக்கட்டு போட்டு இருந்தார்கள். அதனால் அந்த கையை மடக்கிக்கொண்டு இடது கையில் அம்மாவின் கையை பிடித்தபடி மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த 15 வயது குழந்தையை அன்புடன் பார்த்தார். அவரையும் அறியாமல் தன் மகனின் தலை முடியை கோதினர்.
ஈத்தாமொழியில் வீட்டைப் பார்த்ததுமே வெற்றிக்கு மிகவும் பிடித்து விட்டது. “அம்மா காத்து சிலுசிலுன்னு சூப்பரா இருக்கும்மா. பச்சை பசேல்னு எங்க பாத்தாலும் இருக்கு. குளம் இருக்கேம்மா போய் குளிக்கலாமா?” என்று ஏகப்பட்ட கேள்விகளை
“பாரு கண்ணு தெரியாத இடத்துல குளம் குட்டைல எல்லாம் இறங்கக் கூடாது .பாதுகாப்பில்லாத விஷயம். சேறு சகதி இருக்கும் அந்த ஊர்ல இருக்கவங்களுக்கு தான் அந்த குளத்தோட வாகை பற்றி தெரியும் .நமக்கு விஷயம் தெரியாம தண்ணிய பார்த்தவுடனே அங்கே இறங்கி விடக்கூடாது என்ன” என்றார்
“எங்கம்மா இறங்க கையில இப்படி இருக்குது. கை சரியானதும் இங்கே ஏதாவது குளம் ஆறு இருந்துச்சுன்னா நீச்சல் அடிக்க கூட்டிட்டு போம்மா”
“கண்டிப்பா கூட்டிட்டு போறேன் சரி நான் அம்மா மட்டும் தனியா இருக்கறதுனால சமையல் எல்லாம் சரியா செஞ்சுக்க மாட்டேன், இன்னைக்கு மட்டும் இடியாப்பம் சாப்பிட்டுக்கிறியா கடைல வாங்கிட்டு வந்து ஊட்டி விடுகிறேன். நாளையிலிருந்து சமைக்க ஆரம்பிச்சிடலாம் சரியா” என்றார்
“ஐயோ அம்மா! எனக்கு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு இங்க விதவிதமா வாங்கி திங்க தாங்க”
“உடம்பு கெட்டுப் போயிடும் டா வீட்டு சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது”
“அப்ப நீ மட்டும் என் வீட்டு சாப்பாடு சாப்பிட மாட்டேங்குற நீயும் சமைச்சுக்கலாம் இல்லையா”
“ஒருத்திக்கு மட்டும் சமைக்கிறது அலுப்பா இருக்குடா. சமையல்னா சமைக்கிற ஒரு அரை மணி நேரம் மட்டும் கிடையாது. அதுக்கு முன்னாடி காய்கறி வாங்கணும், கேஸ் கனெக்ஷன் எடுக்கணும், மாசம் மாசம் அரிசி பருப்பு எண்ணெய் எல்லாம் வாங்கி சேர்த்து வைக்கணும், சமைச்சு முடிச்ச உடனே பாத்திர பண்டத்தைக் கழுவி வைக்கணும். இதெல்லாம் பார்க்கும் பொழுது அட இந்த நேரத்துக்கு ஒரு பொட்டனத்தை வாங்கி சாப்பிட்டுட்டு ஒரு கேஸை விசாரிக்கலாம்னு ஒரு மனநிலை வந்துருதுடா”
“ அப்பா சொல்லுவாரு ராத்திரி நீ வரதுக்கு 11 12 மணி ஆயிடும்னு. அவ்வளவு லேட் ஆனா நான் எப்படி நான் தனியா இருப்பேன்”
“எதுத்தாப்புல தெரியுது பாரு அதுதான் ஸ்டேஷன். நானும் ஸ்டேஷன்ல இருந்து யாரையாவது உனக்குத் துணைக்கு இருக்க சொல்றேன் சரியா”
“ஏன்மா பேசாம நானும் உன் கூடவே வரேன்”
“எல்லா இடத்துக்கும் உன்னைக் கூட்டிட்டு போக முடியாதுடா. நீ வீட்ல உக்காந்து பப்ளிக் எக்ஸாம்கு படிக்கணும் சரியா. மத்தபடி உன்னை முடிஞ்ச அளவுக்கு வெளிய கூட்டிட்டு போறேன் சரியா”
அது விடுமுறையாததால் அல்லியும் அவளது சகோதர சகோதரி அழைத்து வந்துவிட்டாள் கூடவே அவ்வளவு அம்மாவும் தான்.
“வீடு பெருசா தானே இருக்கு இங்கே தங்கிக்கோங்க” என்றார் விஜயா
வெற்றிக்கு அவனது வயதினன் என்ன ஆன கிள்ளியையும் குட்டி பெண்ணான செல்வியையும் மிகவும் பிடித்து விட்டது.
விஜயா தான் அவர்கள் இருவரையும் அழைத்து வரச் சொல்லி இருந்தார். அவர்களுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் இவனுக்கும் ஒரு பொழுது போகும்.
“இன்னும் ஒரு வாரத்துல தம்பியை கூட்டிட்டு அப்பா வந்துருவாங்க அதுவரைக்கும் சமத்தா இருக்கணும்” என்று மகனிடம் சொன்னார் விஜயா
“கிள்ளியும் நானும் பத்தாவது கணக்கு எல்லாம் போட்டு பாத்துட்டு இருக்கோம்மா”
பிள்ளை ஒரு பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் பெருமூச்சு விட்டு வேலைக்கு கிளம்பினார் விஜயா.
Wow awesome