This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.
அத்தியாயம் -9
அங்கே காவல் நிலையத்தில்,
” வணக்கம் ஐயா இந்த மாச அட்வான்ஸ் கொடுக்க வந்து இருக்கேன்”
எதிரே பவ்யமாக கை கட்டி நின்றுக் கொண்டிருந்த சில்க் ஜிப்பாவை ஏறிட்டுப் பார்த்தார் ஏட்டு
“என்ன ஆவுடையப்பா, பிசினஸ் சக்க போடு போடுது போல இருக்கு”
“ஏதோ உங்க தயவால…”
“என் தயவாலன்னு சொல்லாதையா… உன் க்ரூப் பொம்பளைங்க தயவு…” என்ற ஏட்டு, தலையை மட்டும் திருப்பி எழுத்தரை அழைத்தார்.
“இந்தா இங்க வாய்யா, இந்தப் பணத்தை அப்படியே எடுத்துட்டு போயி என்ன பண்ணணுமோ பண்ணு. எனக்கும் வீட்டில் ரெண்டு பொட்டை பிள்ளை இருக்கு. இந்தப்பணத்தைக் கையால கூடத் தொடமாட்டேன் சாமி. ஏண்டா. பொண்ணுங்கள வச்சு பிசினஸ் பண்றோமே அப்படின்னு என்னைக்காச்சும் நினைச்சு வருத்தப்பட்டு இருக்கியா?”
காதுகளைக் குடைந்தபடி “நம்ம மத்தவங்கள மாதிரி வற்புறுத்தி சின்ன பிள்ளைகளை கொண்டு வந்து பிசினஸ் பண்றது இல்ல. எல்லாம் சம்மதத்தோட வரவங்கதான். தேவை இருக்கறவங்கள வச்சு தானே பிசினஸ் பண்றோம்.”
“என்னமோ போ… வர்றவனுங்க காசு மட்டுமா கொடுக்குறானுங்க. நோவையும் நோயையும் சேர்த்துல்ல இவளுங்களுக்கு குடுத்துட்டு போறானுங்க. எந்த பொம்பளைய்யா இதுக்கெல்லாம் சம்மதிப்பா… ஆமா இப்ப எதுக்கு வந்த”
“புதுசா வந்த எஸ்ஐ அம்மா லாட்ஜ்ல நம்ம பொண்ணுங்கள புடிச்சுட்டாங்க. பிசினெஸ் டல்லடிக்குது. அதனாலதான் அம்மாகிட்ட பேசி அனுமதி வாங்கி கூட்டிகிட்டு போகலாம்னு வந்தேன். அவங்க எப்படி ஏட்டய்யா? ரொம்ப கறாரான அதிகாரியோ?”
“ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிட்டு. அதனால தான் அந்தம்மாவ வருஷத்துக்கு ஒரு ஊரா தூக்கி போட்டுட்டு இருக்காங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ. எங்கள மாதிரி உள்ளூர்காரம்மா கிடையாது… தப்புன்னு நினைச்சா தூக்கி போட்டு மிதிச்சிட்டு போய்கிட்டே இருக்கும்… பாத்து நடந்துக்கோ… உன்னைப்பத்தி தெரியாது. தெரிஞ்சா என்ன சொல்லுமோ தெரியல. எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“சரிங்கய்யா”
அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு மறுபடியும் ஏட்டிடம் வந்தவன் “அது யாரு சார் லாக்கப்ல… நாலு பேரும் ரவுடி பசங்களா…”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… கஞ்சா கேஸ்ல மாட்டினா பசங்க அப்படின்னு நினைக்கிறேன். கிரேஸ் கிட்ட விவரம் கேட்டா தெரியும்”
நைசாக கிரேஸ் இருக்கும் அறைக்குச் சென்றான்.
அவனுக்காகவே காத்திருந்தார் போல கிரேஸ் எகிற தொடங்கினார்.
“ஆவுடையப்பா! என்னல துப்பு சொல்லி இருக்க… கஞ்சா வண்டி வரும்னு சொன்னியா இல்லையா? அத நம்பி எஸ்ஐ மேடத்த கூட்டிட்டு போயி ஒரே அசிங்கமா போயிட்டு”
“பிடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்… நாலு பேத்தை உள்ள தள்ளிருக்கிங்க”
“அட நீ வேற, இந்த செகப்பு கஞ்சா காரத்தான் தேடிகிட்டு போனோம். ஆனா இவங்க மாட்டிகிட்டானுங்க. சர்ச் பண்ணா, பத்து பான்பராக்கத் தவிர வேற ஒன்னும் இல்ல. சரின்னு பான்பராக்கு குட்கா கேஸ்ல தூக்கி போட்டு இருக்கோம். இந்த மாச டார்கெட்டை சரிகட்டலாமே!”
“டார்கெட்டைப் பிடிக்கிறதா கஷ்டம். நானே நாலு பேரை அனுப்பி விடுறேன். பேசாம இவனுங்க கிட்ட கலெக்ஷன் வாங்கிட்டு அனுப்ப வேண்டியது தானே”
“அதுதான முடியாது. இவங்க கஞ்சா வச்சி இருப்பாங்கன்னு நெனச்சு காரு சீட்டு பூராத்தையும் கிழிச்சு கண்டம் பண்ணிட்டோம். இவனுங்ககிட்ட இல்லை. இப்ப போயிட்டு வான்னு வெளியில் அனுப்புனா, காரை சரி பண்ணித் தரச் சொல்லி சண்டை போட்டாங்கன்னா?”
“சரியாப் போச்சு. அதுக்காக இவனுங்களை வெளியவே விடாம இங்கனக்குள்ளயே வச்சிருக்க முடியுமா? அப்படி வேற என்ன காரணத்தை சொல்லி உள்ள வச்சிருக்கீங்க”
“நாங்களே பிடிக்கப் போனா பேசாம வண்டியை நிறுத்திருக்கலாமில்ல. இவனுங்க எங்க கிட்டேருந்து தப்பிக்கிறமாதிரி வேகமா வண்டியை ஓட்டி ஒரு சைக்கிள்காரன் மேல இடிச்சிட்டானுங்க சைக்கிள்காரனுக்கு நல்ல அடி.அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கோம்.
அவனுக்கு எதுவும் இல்லை ஓகே என்று டாக்டர் சொன்னாதான் இவனுங்க நாலு பேரையும் அனுப்ப முடியும். ஆனா செமையா அடிபட்டு இருக்கு. ..இப்போதைக்கு டாக்டர் ஓகே சொல்ல மாட்டார்ன்னு நினைக்கிறேன். இன்னும் ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆகும்”
“அப்படிங்களாம்மா. நீங்க இவனுங்க கிட்ட பேசி பாத்தீங்களா? எந்த ஊராம்?”
“எங்க? இவனுங்க யாருக்கும் தமிழ் தெரியல.. நானும் ஹிந்தி தெரியாது போடா அப்படின்னு வந்து உக்காந்துக்கிட்டேன்”
” நீங்க தவறவிட்ட அந்த சிகப்பு கார் இவங்களுக்கு அடுத்து வந்திருப்பான் போல இருக்கு.. அவன் ஜோரா தப்பிச்சு போயிட்டான்.. இவனுங்க தப்பா வந்து மாட்டிட்டானுங்க”
“சரி, நீ அந்த பொண்ணுங்கள கூட்டிட்டு போக வந்தியா? அவங்க ரெண்டு பேரும் கோர்ட்ல பைன் கட்டிட்டு வந்துருவாளுங்க.. ஒரு அரை மணி நேரம் இருந்து கூட்டிட்டு போ.. வெளிய போய் ஸ்டேஷன்ல எல்லாருக்கும் டீ சொல்லு போ”
வெளியே வந்த ஆவுடையப்பன் முட்டுச்சந்தை அடைந்து மறைவாக நின்று கொண்டு தனது மொபைலில் ஏதோ எண்ணை அழுத்தி ரகசியமாக பேசத் தொடங்கினான்
“சார் அவனுக்கு நாலு பேரும் இங்க தான் ஸ்டேஷனில் மாட்டிட்டானுங்க”
……
” பயப்பட வேண்டாம். ஸ்டேஷனில் அவங்களை பத்தி ஒன்னும் கண்டுபிடிக்கல. இவங்க போலீஸ் கிட்டேயிருந்து தப்பிக்கிற அவசரத்தில் ஒரு சைக்கிள்காரேன் மேல ஏத்திட்டானுங்க”
…
“அந்த அடிபட்ட கேஸ் தான் இருக்கு . டாக்டரை பாத்து அதை சரி பண்ணிட்டா வேற கேஸ் எதுவும் பெருசா இல்லை. அதை தவிர கார் எல்லாம் கிழிச்சதுக்காக போலீஸ்ல இவங்க கேள்வி கேட்கக்கூடாதுன்னு குட்கா கேஸ் பான்பரா கேஸ்னு செல்லாத கேஸ் எல்லாம் போட்டு உட்கார வச்சிருக்காங்க”
மறுமுனையில் பேசியதை கேட்டுக்கொண்டு
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார். இவங்கள வெளிய கொண்டு வந்துரலாம். என்ன கொஞ்சம் செலவாகும். நீங்க போய் அந்த சைக்கிள் காரன சரிகட்டுற வேலைய பாருங்க. இந்த டாக்டர் கிட்ட சரிகட்டி சைக்கிள் காரன் சரியாயிட்டான்னு சொல்ல வைங்க. இது ரெண்டையும் சொல்லிட்டீங்கனா நான் இங்க நைசா உங்க கிட்ட பேசுன மாதிரி பேசி ஸ்டேஷனுக்கு கொஞ்சம் காசு கொடுத்துட்டு வெளில கூட்டிட்டு வந்துடறேன்”
…
“உடனே எல்லாம் கூட்டிட்டு வர முடியாது சார். ஒன்னு ரெண்டு நாள் ஆகும். உடனே நான் கையோட கூட்டிட்டு வந்தா எனக்கு அவனுங்களுக்கும் ஏதோ லிங்க் இருக்குன்னு கண்டுபிடிச்சிர மாட்டாங்களா”
…
“என்ன ஆயிடுச்சுன்னா இவனுங்க வந்த வண்டி வழில ரிப்பேர் ஆகவும் இன்னொரு செகப்பு காரை புடிச்சு வந்திருக்கானுங்க. நான் போலீஸ் திசை திருப்ப ஒரு செகப்பு கார்ல கொஞ்சம் சரக்கு வச்சி முன்னாடி அனுப்பி இருந்தேன்.
அவனுங்க வரதுக்கு முன்னாடி இவங்க சிகப்பு கார் போய் மாட்டிக்கிச்சு. இது நம்மளோட கெட்ட நேரம் ன்னு தான் சொல்லணும். அதுலயே ஒரு அதிர்ஷ்டம் என்னன்னா போலீஸ்காரங்க இன்னும் நம்ம பொருளைக் கண்டுபிடிக்கல. கண்டு மட்டும் புடிச்சிருந்தாங்க கூண்டோட கைலாசம் தான்”
ஆவுடையப்பன் பதவிசாக காவல் நிலையத்திற்கு வந்து கண் ஜாடையாலேயே உள்ளே இருந்தவர்களுக்கு தைரியம் சொல்லிவிட்டு கோர்ட்டிலிருந்து வந்த பெண்களை அழைத்து சென்றான்.
மாலை காவல் நிலையம் பரபரப்பாக இருந்தது. காலை மண்டையோடு கேஸ் விஷயமாக கன்யாகுமரி சென்றிருந்ததால் கிரேஸ் காவல் நிலையத்தின் அன்றைய புகார்களின் ஸ்டேட்டஸ் பற்றி விஜயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஒரு இருபது வயசு பொண்ணு, தற்கொலை கேஸைப் பத்தி விசாரிக்க சொன்னேனே”
“மன்னிச்சுக்கோங்க மேடம். காலைலேருந்து வேலை அதிகம். இப்ப போயி விசாரிச்சுட்டு வந்துடுறேன்”
“தாமதிக்காதிங்க கிரேஸ். சின்ன பொண்ணு. அசம்பாவிதம் எதுவும் நடந்துடக் கூடாது”
“இப்பவே போயி விசாரிக்கிறேன்”
“சாதாரணமா சேலையை கட்டிட்டு ஆட்டோல போயிட்டு வாங்க. போலீஸ் யூனிபார்ம்ல போனா சரியா பதில் சொல்ல மாட்டாங்க”
“சரி மேடம்”
பேசிக் கொண்டிருந்தபோதே விஜயாவுக்கு அலைப்பேசியில் அழைப்பு வந்தது. அவரது மாமியார்தான்.
“நல்லாருக்கிங்களா அத்த. எதுனா முக்கியமான விசயமா… எனக்கு போன் போட்டிருக்கிங்க ”
“உனக்கு உன் வேலையைத் தவிர வேற புள்ள குட்டி புருசன் யாராவது முக்கியமா இருக்க முடியுமா?”
கடுப்பை அடக்கிக் கொண்டு
“இப்ப என்னாச்சு”
“என்னாச்சா? புள்ள கையை உடைச்சுட்டு ஆஸ்பத்திரில கிடக்கான். இந்தக் கிளவி ராத்தூக்கம் முளிச்சி பாத்துட்டு வாறேன். என் பய்யன் கடையை பூட்டிட்டு டாக்டரப் பாக்கவும், பள்ளிக்கூடத்துக்கு லீவு சொல்லவும் அலைஞ்சுட்டு இருக்கான். நீ பகுமானமா உக்காந்துட்டு என்னாச்சுன்னு கேள்வி கேக்குற?”
திகைத்தார் விஜயா “யாருக்கு அடிபட்டிச்சு? பெரியவனுக்கா சின்னவனுக்கா?”
“எவனுக்கா இருந்தா என்ன ரெண்டும் உம்மவனுங்க தானே. என் மகனுக்கு காய்ச்சல் தலைவலி வந்தா கூட சுக்கு காப்பி போட்டுத்தர பக்கத்தில் பொண்டாட்டி இல்ல. கல்யாணம் பண்ணியும் பொண்டாட்டி இல்லாம ரெண்டு பிள்ளைகளை பாத்துட்டு கஷ்டப்படுறான். நீ ஜாலியா ஜீப்பை எடுத்துட்டு ஊர் சுத்திட்டு இருக்க.
அப்பவே சொன்னேன். போலீஸ்காரி வேணாம் களவாணிகளைப் பிடிக்கவே நேரம் சரியா இருக்கும். டீச்சர் வேலை பாக்குற பொண்ணைக் கட்டிக்கோன்னு அடிச்சுக்கிட்டேன். கேட்டானா என் மவன். இந்தப் பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தைக்காலில் நின்னான்…. “
தொடர்ந்த பேச்சினைக் கேட்க முடியாமல் அலைபேசியை அணைத்தார்.
“என்னாச்சு மேடம். யாருக்காவது உடம்பு சரியில்லையா?”
“பையனுக்கு அடி பட்டிருக்கு போல. ஏஎஸ்ஐ இருந்தா வர சொல்லுங்க. நான் ரெண்டு நாள் ஊருக்குப் போயிட்டு வந்துடுறேன்”
“நீங்களும் ஊருக்குப் போயி ஒரு மாசத்துக்கு மேலாச்சே மேடம். ஏஎஸ்ஐயை வரச் சொல்றேன். அப்பறம் நான் இன்னைக்கே போயி அந்தப் பொண்ணை பாத்துட்டு வந்துடட்டுமா?”
“போயிட்டு எனக்கு வாட்ஸப்ல தகவல் அனுப்பிடுங்க கிரேஸ்”
ஸ்டேஷனில் பாலோ அப் செய்ய வேண்டிய கேஸ்கள் அனைத்தையும் கலந்து ஆலோசித்து, அவசரமாக முடிக்க வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டுவிட்டு கிளம்பினார்.
விஜயா காரைக்குடி கிளம்பிய தகவலறிந்த ஆவுடையப்பன் “அந்தம்மா ஊருக்குப் போயிருக்கு. ஜரூரா வேலையை செஞ்சு அந்தம்மா வரதுக்குள்ள இந்த நாலு பேரையும் வெளிய எடுக்குற வழியைப் பாருங்க”
இது எதுவும் அறியாத விஜயா, காரைக்குடியில் இறங்கி ஆஸ்பத்திரியின் விவரம் கேட்டு அங்கு சென்றபொழுது, கலங்கிய கண்களுடன் படுக்கையில் படுத்திருந்த மூத்த மகனைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துவேலன் பட்டார்.
“மாமா… “ என்றார் பதறிப் போய்.
“விஜி… என்னை மன்னிச்சுடும்மா… தகப்பன் வளர்த்த தறுதலைப் பிள்ளைன்னு இவன் காமிச்சுட்டான்” என்று கலங்கிய குரலில் சொன்னவரிடம்
“என்னாச்சு மாமா”
“உனக்கு இதுவரை வெளிய இருந்துதான் பிரச்சனை வந்தது. இப்ப இவனும் புது பிரச்சனையைக் கொண்டு வந்திருக்கான்”