This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.
அத்தியாயம் – 6
போலிஸ் ஸ்டேஷனில் நுழைந்தபோது பயங்கர புத்துணர்ச்சியாய் உணர்ந்தார் விஜயா. போலீஸ் என்ற ஒதுக்கம் இல்லாது மேரி மாதிரி சிலர் அன்பும் அக்கறையும் காண்பிப்பது அவர்கள் துறையில் அதிசயம்தான். தங்களை எதிரி மாதிரி பார்க்கும் மக்களிடம் அவர்களுக்காகத்தான் இந்த பாதுகாப்பு, கட்டுப்பாடு என்பதை உணர்த்துவது எத்தனை கடினம்.
“மேடம்” என்று அழைத்தாள் அல்லி.
“சொல்லு அல்லி”
“ஈவ் டீசிங் கேஸ் வந்திருக்கு மேடம்”
“புகார் பதிஞ்சிருக்காங்களா”
“இல்ல மேடம். போன்ல ஒரு பொண்ணு பேசுச்சு. வாட்ஸ் அப்ல கான்வெர்சேஷனை ரெகார்ட் பண்ணிருக்கேன்”
“பசங்களோட நம்பர் கொடுத்து அட்ரெஸ் ட்ரேஸ் பண்ண சொல்லணுமா?”
“இல்ல மேம் கூடப் படிக்கிற பசங்கதான்”
“அப்பறம் என்ன? “
“பசங்களைக் கூப்பிட்டு சாரிக்கணும் மேம். பசங்களை மட்டுமில்லாம அவனுங்க பேரண்ட்ஸயும் கூப்பிடப் போறேன்”
“என்ன குற்றம்னு விளக்கமா சொல்லு அல்லி”
“மூணாவது வருஷம் படிக்கிற பிள்ளைங்க மேடம். பொண்ணு சாதாரண குடும்பம். அழகா இருக்கா. இவனுங்க பெரிய இடத்துப் பசங்க. மொதோ வருஷத்தில் இருந்து காதலிக்க சொல்லி டார்ச்சர் கொடுத்துட்டே இருந்திருக்காங்க. போன் நம்பரை மாத்தினாலும் எப்படியாவது நம்பரைக் கண்டுபிடிச்சு மாத்தி மாத்தி போன் போட்டு லவ் டார்ச்சர் பண்ணிருக்காங்க”
மேலே சொல்லு என்பது போல பார்த்தார்.
“ஒரு நா சாயந்தரம் லாப் முடிஞ்சு லேட்டா இந்த பொண்ணு மட்டும் கிளாஸ்லேருந்து கிளம்பிருக்கு. ரெண்டு பேரும் சுத்தி வளைச்சுட்டானுக. கஞ்சா போதைல வேற இருந்திருப்பானுங்க போலருக்கு. இன்னைக்கு எங்களுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்னு ஆளுக்கு ஒரு பக்கம் பிடிச்சு இழுத்து, கோவத்தில் அவளைத் தள்ளி விட்டுட்டானுங்க”
அல்லியையே பார்த்தார் விஜயா.
“மொதோ மாடிலேருந்து மேடம்”
திடுக்கிட்டார் “பொண்ணு எப்படி இருக்கா?”
“நல்லவேளையா பக்கத்தில் கட்டிடம் கட்டிட்டு இருந்ததால மணல் கொட்டி இருந்தது அதில் விழுந்துட்டா… கை காலெல்லாம் சிராய்ப்பு, வலது காலில் சின்ன எலும்பு முறிவு. சத்தம் கேட்டு வந்த வாட்ச்மேன் காப்பாத்தி ஆஸ்பத்திரில சேர்த்துட்டான். அவ கீழ விழுந்ததும் இவனுங்க ரெண்டு பேரும் ஓடிட்டானுங்க”
“பொண்ணு புகார் பதிஞ்சிருக்கா”
“ஆமா மேடம்”
சுறுசுறுப்பானார் விஜயா
“முதல்ல அவனுங்கதான் குற்றத்தை செஞ்சிருக்காங்களான்னு உறுதி செஞ்சுக்கோ. கன்பார்ம்டா தெரிஞ்சா உடனே அவனுங்களை அள்ளிட்டு வந்து பெருமாள்சாமிகிட்ட சொல்லி செமத்தியா ட்ரீட்மெண்ட் கொடு”
“மேடம் ஏன் அதிகாரிகள் எல்லாரும் பர்ஸ்ட் டிகிரி, செகண்ட் டிகிரி எல்லாம் போகாம நேரா தேர்ட் டிகிரி போறேன்னு சொல்றிங்களே”
“எல்லாருக்கும் அப்படி சொல்றதில்லை அல்லி. போன வாரம் குட்டிச்சுவத்து மேல நின்னு போற வார பொம்பளைப்பிள்ளைக மேல ராக்கெட் விட்டு விளையாண்ட பசங்களையும் பெற்றோர்களையும் கூப்பிட்டு கண்டிச்சு அனுப்பினோம். ஆனா இதே மாதிரி ஒரு வழக்கில் பசங்களைத் தூக்கி பெங்களூர் போலீஸ் உள்ள போட்டுட்டாங்க. கேஸ் ரெக்கார்டாகி பாஸ்போர்ட்டை முடக்கிட்டாங்க. அவனுங்களால வெளிநாட்டு வேலை எதுக்கும் போக முடியல. தமிழ்நாட்டுப் போலிஸைப் பொறுத்தவரை நிறைய பேர் கண்டிப்பை மட்டும்தான் காமிக்கிறோம். அடி கூட ஒருவகை கண்டிப்புத்தான். ஆனால் இந்த பசங்களுக்கு கண்டிப்பைத் தாண்டி தண்டனை கண்டிப்பா தேவை”
“தண்டனை கோர்ட்டில் வாங்கித் தந்து…”
“பணக்கார வீட்டுப் பசங்கதானே… “
“ஆமாம் மேடம்”
“தியரி படி முதல் டிகிரிலிருந்து ஆரம்பிச்சா அந்தப் பொண்ணுக்கு மிரட்டல் வரும், கேஸை வாபஸ் வாங்கும். பசங்களை எதோ உள்நோக்கத்தோடு கூப்பிட்டு மிரட்டுறோம்னு நம்ம மேல புகார் போகும். டிரான்ஸபெர் வரும்”
“நேரா அடிக்க ஆரம்பிச்சா இதெல்லாம் நடக்காதா?”
“ஐயோ கண்டிப்பா நடக்கும். வொர்ஸ்ட் சினாரியோ சொல்லட்டுமா… புகார் கொடுத்ததோ ஏழைப்பொண்ணு. தப்பு செஞ்சவனுங்க பணக்காரங்க. மிரட்டியோ, பணத்தால் அடிச்சோ அவளை கேஸை வாபஸ் வாங்க வைப்பாங்க.
அவ மறுத்தா அவதான் அவனுங்களை விபச்சாரத்துக்கு அழைச்சதா கேஸ் திசை மாறும். இப்ப மனிதாபிமானத்தோடு உதவி செஞ்ச வாட்ச்மேன் அவ தொழில் பண்ற பொண்ணுன்னு சாட்சி சொல்லுவான்.
நம்ம மேலதிகாரிகளுக்கு அரசியல் ரீதியா ப்ரெஷர் வரும். அவங்க அங்க வாங்குற திட்டை நம்ம மண்டைலதான் இறக்குவாங்க. எப்படியோ கோர்ட் வரைக்கும் போறதே கஷ்டம். இந்த மாதிரி நூத்துக்கணக்கான கேஸை பார்த்துட்டேன்.
அப்பறம் எதுக்கு இந்த அடி உதைன்னு நினைக்கலாம். இவனுங்க இன்னொருத்தரம் தப்பு செய்ய நினைச்சாலே நடுங்குற அளவுக்கு இப்ப ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவோம் பாரு. அதுதான் நமக்குக் கிடைக்கப் போற ஒரே சந்தோசம்”
“இது சந்தோசமா மேடம்? குற்றவாளியை தண்டிக்க முடியாத நிலைல நம்ம கைகள் கட்டப்பட்டா துக்கம் தானே? நம்ம மேல இருக்குற மரியாதையே போயிருமே. காண்டாக்ட், பணம் இருக்குற யாரு வேண்ணா என்ன வேண்ணா தப்பு செய்ய ஆரம்பிக்கலாமே”
“நீ சொன்னது சரிதான் அல்லி. நம்ம கைகள் மட்டும் கட்டப்படல, கண்ணையும் கட்டி டைரெக்ஷனை சொல்றாங்க. வாயைத் திறந்து பேசக் கூட முடியாது. இருந்தும் சவால்களை சந்திச்சு வேலை செய்யுறோம். இப்ப எனக்கு இருக்குற கவலை அந்த பசங்களோட கஞ்சா போதை அப்பறம் பண போதை. இந்த விறகு ரெண்டையும் புடுங்கிட்டா எதிர்காலத்தில் இவனுங்களால நடக்கப்போற மத்த குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம்”
“குற்றவாளிகளை தண்டிக்கிறதைவிட குற்றவாளிகளே உருவாகாம பாத்துக்கணும்னு சொல்றிங்க. சரியா மேடம்”
“எக்ஸாக்ட்லி”
விஜயா சொன்னதை போன்று இந்த புகார் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்றெண்ணி மனத்தைத் தேற்றிக் கொண்டாள்.
அன்று மாலையே “பசங்களைத் தூக்கிட்டோம் மேம். பெருமாள்சாமி தந்த ட்ரீட்மெண்ட்ல உண்மையை ஒத்துக்கிட்டானுங்க. அவனுங்க பேரண்ட்ஸை வர சொல்லிருக்கேன்”
விஜயா அவசர அவசரமாக முக்கியமான கேஸ் விஷயமாக கிளம்பிக் கொண்டிருந்தார்.
“கூட ஏஎஸ்ஐ வச்சுக்கோ. பாயிண்ட்ஸ் எடுத்துத் தருவாறு. நீயே ஹாண்டில் பண்ணு”
“அவரை ஸ்கூல் பக்கத்தில் சில கடைகள்ல குட்கா விக்கிறது விஷயமா விசாரிச்சுட்டு வர சொன்னிங்க”
“ஆமாம் ரொம்ப முக்கியம். குட்கா பள்ளி மாணவர்கள் கைல கிடைக்கிற அளவுக்கு சுலபமா இருக்கக் கூடாது. நீ விசாரிக்கிறப்ப நான் பக்கத்தில் வேணும்னா உக்காந்து மாரல் சப்போர்ட் தர்றேன். நீதான் இந்த கேசை ஹாண்டில் பண்ற சரியா?”
“ஓகே மேம்”
சற்று நேரத்தில் அவர்களது பெற்றோர்களை கோழி அமுக்குவது போல அமுக்கி கையோடு அழைத்து வந்தனர் அவர்கள் காவல் நிலைய அதிகாரிகள்.
“என்ன நடக்குது இங்க. நான் இந்த ஊரில் எவ்வளவு பெரிய புள்ளி தெரியுமா? என் மகனைப் பத்தி என்னென்னவோ சொல்றிங்க… அதுவும் பொண்ணு விஷயத்தில் ரிடிக்குலஸ்…” கத்திக் கொண்டே வந்தார் ஒருவர்.
“உங்க பசங்க மாத்தி மாத்தி அவங்கள்ல யாராவது ஒருத்தரை லவ் பண்ண சொல்லி அந்தப் பொண்ணை போர்ஸ் பண்ணிருக்காங்க. மாட்டேன்னு சொன்னதுக்கு கீழ தள்ளிவிட்டிருக்காங்க.
இவங்க செஞ்சதுக்கு ஐபிசி செக்சன் 354 – ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகவும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். செஞ்சிடலாமா”
“எங்க பசங்க அப்படி எல்லாம் செஞ்சிருக்க சான்சே இல்ல. அந்த பொண்ணு பொய் சொல்லுது. பணத்துக்காக நீங்களும் இந்த கேஸ் எடுத்து இருக்கீங்க” விஜயா முன்பே சொல்லியிருந்தால் அவர்கள் பேசியதை எதிர்கொள்ள முடிந்தது அல்லியால்.
“அபாண்டமா பேசாதிங்க சார். உங்க பையன் செஞ்ச வேலைக்கு சாட்சிகள் இருக்கு” என்று சொன்னதும் வாயை மூடினார்.
பசங்களை அழைத்து வர அவர்கள் இருவரும் முகம் முழுவதும் காயத்தோடு வந்ததை பார்த்து அதிர்ந்தனர் பெற்றவர்கள்
“போலீஸ் அட்றாஸிட்டி… எப்படி நீ கை வைக்கலாம்”
இடையிட்டார் விஜயா “சார் உங்க பசங்க அவனுங்களுக்குள்ளயே அடிச்சுகிட்டு நின்னானுங்க. நாங்கதான் விலக்கிவிட்டு உக்கார வச்சிருக்கோம்”
இருவரும் கஞ்சாவின் ஆதிக்கத்தில் அரை போதையில் மரத்தடியில் படுத்திருந்தபோது அலேக்காக தூக்கி வந்து கும்மி எடுத்திருந்தால் அவர்கள் மூளையே சரியான வேலை செய்யவில்லை. இப்பொழுதுதான் சற்று தெளிந்து உடலெல்லாம் வலிக்கிறது.
“சொல்லுப்பா… நீ செஞ்சது சரியா தப்பா?” என்றார் விஜயா.
“கஞ்சா பழக்கமாயிருச்சு பெரிய போலீஸ்காரம்மா” என்றான் தெனாவெட்டாக.
“அதைக் கேக்கல. அந்தப் பொண்ணை கீழே தள்ளிவிட்டது சரியா தப்பா?”
“அவதான் மேடம் எல்லாத்துக்கும் காரணம்…” என்றான் இன்னொருவன்.
“அவ என்னப்பா செஞ்சா… கிளாஸ் முடிஞ்சு வந்தவளை இப்படி முதல் மாடியிலிருந்து தள்ளி விட்டிருக்கிங்களே அது தப்பில்ல”
“மூணு வருஷமா எங்கள்ல ஒருத்தனை லவ் பண்ண சொல்லி கேக்குறோம். லவ் பண்ணிருந்தா இதெல்லாம் நடந்திருக்காதுல்ல… அதைவிட்டுட்டு எங்களை சுத்தல்ல விட்டா கடுப்பாகும்ல… இதுக்கெல்லாம் அவதான் காரணம்” என்றான் வலியைப் பொறுத்துக்கொண்டு.
இந்த அளவுக்கு காவல்துறை அதிகாரிகளிடம் பேசத் துணிவு இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் பெற்றோர்கள் தானே?. பெற்றோர்களை முறைத்தார் விஜயா.
“கேட்டுக்கிட்டிங்களா… பிள்ளை படிக்க வந்தா படிக்கணும் இல்லை இன்டெரெஸ்ட் இல்லைன்னா கம்முனு கிடைக்கணும். அட காலேஜை விட்டு விலகிடலாம் அது கூட ஒகே. உங்க பையன் எதிர்காலம் மட்டும்தான் பாழாகும். கஞ்சா குடிச்சுட்டு மத்த பிள்ளைகளை படிக்க விடாம டார்ச்சர் பண்ணிருக்கானுங்க. கல்லூரில ரெண்டு தடவை சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க. இதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்திருக்கணுமே”
ஒருவர் உண்மையை உணர்ந்து தலை குனிந்தார். மற்றவர் அலைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். உள்ளே இருந்தவர் கூனிக் குறுகி
“என் மகன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் மேடம்” என்று விஜாவிடம் குரல் கம்ம சொன்னார்.
“நீங்க ரெண்டு பேரும் பெரிய புள்ளி. உங்களுக்கு தெரியாதது இல்லை. சுதந்திரம் தேவைதான். பட் கட்டுப்பாடற்ற சுதந்திரம் பலருக்கு கையாளத் தெரியாதது.”
“புரியுது மேடம். இவனோட கஞ்சா பழக்கத்துக்கு சிகிச்சை எடுத்துட்டு அடுத்து என்ன செய்றதுன்னு பாக்குறேன்”
“உங்க பையனைப் பொறுத்தவரை ஒரு அப்பாவா நீங்க சவுக்கை எடுங்க. இல்லைனா நாங்க லத்தியை சுழட்டி பாடம் நடந்த வேண்டி வந்துரும்.
இது உங்க மகனுக்கு மறுவாழ்வு. அந்தப் பொண்ணுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தா இந்நேரம் அவரோட இளமைக்காலம் முழுசும் ஜெயிலில் கழிஞ்சிருக்கும்”
“நாங்க கும்பிட்ட தெய்வம் காப்பாத்திருக்கு. அந்தப்பொண்ணை பார்த்து மன்னிப்பு கேக்குறேன். அவளோட வைத்திய செலவை நானே பாத்துக்கிறேன். அவ ஆசைப்பட்டதைப் படிக்க வைக்கிறேன்”
மற்றொருவர் பேசி முடித்து வந்தார் “இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தப் புகாரை வாபஸ் வாங்க அந்தப் பொண்ணோட அப்பா வருவார்”
எந்த வழியில் புகார் வாபஸ் வாங்கப்பட்டிருக்கிறது என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.
“இவனோட காயம் எல்லாம் எப்படி வந்திருக்கும்னு எனக்கும் தெரியும் எஸ் ஐ மேடம். அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகணும்”
“சரியா நடந்த நாங்க எல்லாரும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லத் தயாரா இருக்கோம்” என்று தீர்க்கத்தோடு சொன்னார் விஜயா.