This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.
அத்தியாயம் – 4
ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைத்த விஜயா
“அவ ஒரு ஓடுகாலிக் கழுதைங்க… இப்ப எங்க, எந்த நாய் கூட சுத்திகிட்டு இருக்கோ”
என்ற ஆணின் குரலைக் காதில் வாங்கிக் கொண்டே, தன்னைக் கண்டதும் எழுந்து சல்யூட் அடித்த ரைட்டரிடம் என்ன? என்று பார்வையால் வினவினார்.
“மிஸ்ஸிங் கேஸ் மேடம்”
இந்த ஊரில் பல மிஸ்ஸிங் கேஸ்கள். அவற்றில் பெண்கள்தான் அதிகம். இன்று புதிதாக யாரோ?
தனது ஆபிஸ் ரூமில் நுழைந்ததும் அல்லியை அழைத்தார் “யாரும்மா மிஸ்ஸிங்?”
“அந்தாளோட பொண்டாட்டி மேடம். அவனைப் பாத்தாலே தண்ணி வண்டியாட்டம் தெரியுது. வந்ததுல இருந்து கெட்ட வார்த்தையா சொல்லி ஏசிகிட்டு இருக்கான்”
“கெட்ட வார்த்தை பேசுறானா? உன்கிட்டயா?”
“நான்தான் மேடம் முதலில் விவரம் கேட்டேன். ரெண்டு வார்த்தைக்கு மூணாவது வார்த்தை அவன் பொண்டாட்டியை காதே கூசுற மாதிரி வண்டை வண்டையா பேசுறான். அந்தம்மா ஓடிப் போனது சரிதான் போலிருக்கு”
“கிரேஸைக் கூப்பிடு”
சில வினாடிகளில் வந்த கிரேஸ் “கூப்பிட்டிங்களா மேடம்?”
“வெளில வண்டை வண்டையா பேசுறான் போல, அல்லி பயப்படுது.”
“நான் கவனிச்சுக்குறேன் மேடம்”
“அல்லி… இந்த ஆம்பளைங்களுக்கு கெட்ட வார்த்தை ஒரு ஆயுதம். நம்ம காதுல கேட்கக் கூசுறோம் பாரு. அதுதான் அவனுங்க பலம். இந்த மாதிரி ஆளுங்களை எப்படி டீல் பண்ணுறதுன்னு கிரேஸ் கத்துத் தருவாங்க…”
கிரேஸைத் தொடர்ந்த அல்லி விசாரிக்கும் அறைக்குச் சென்ற போது அங்கிருந்த மற்றொரு கான்ஸ்டபிளிடம் “இந்த கேஸ் சம்பந்தப்பட்டவங்க எல்லாரும் வாங்கப்பா” என்று அழைத்து சென்றார்.
கேஸைப் படித்துவிட்டு அங்கிருந்த வயதான பெண்மணியிடம் “நீ யாரு இவனோட அம்மாவா”
“ஆமாங்க” இந்தம்மாவுக்கு நான்தான் அம்மான்னு தெரியாதா என்ன. கேக்குற கேள்வியைப் பாரு என்றவண்ணம் முறைத்துக் கொண்டே பதில் அளித்தாள்.
“உன் மவன் பொண்டாட்டியைக் காணோம்னு சொல்லலையே… ஓடிப் போயிட்டான்னு சொல்லிருக்கான்”
“என் மகன் சொல்றது சரிதானுங்க. என் மருமவ நடத்தை சரியில்லைங்க. அந்த கரீம் பாய் எதுக்குங்க மீனெல்லாம் விக்கத் தர்றான்? அப்ப ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்பு இருக்குதானே?” என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார்.
“எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுற? அவளுக்கு ஏன் நடத்தை சரியில்லாம போகணும்… உன் மவன் வீட்டை கவனிக்கிறதில்லையா?”
“ஐயோ அவன் தங்கமுங்க… அந்த சிறுக்கிக்கு ஊர் மே… “
“ஏம்மா இதே உன் மருமவ மூணு வருசத்துக்கு முன்னாடி உன் மவன் வேற பொம்பளையை வச்சிருக்கான்னு அடிதடி சண்டையாகி இங்க வந்தப்ப, வீட்டில சாப்பாடு ஒழுங்கா இருந்தா எதுக்கு என் புள்ள வெளியத் தேடிப் போறான்னு சொன்னேல்ல… “
“நானா… எம்புள்ளையா… தங்கமுங்க…. “
“ஏய்… “ கிரேஸ் கத்தியதில் ஸ்டேஷனே ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு அமைதியானது.
“சொன்னியா இல்லையா கெழவி?”
“சொன்னேன்… “ குரலில் நடுக்கம்.
“தினமும் தண்ணியடிச்சுட்டு பொண்டாட்டி சம்பாரிக்கிற அஞ்சு பத்தைக் கூடப் புடுங்கிட்டு போற இந்தப் பொறுக்கி, தங்கமா? ஏண்டா நீ ஊர் மேஞ்சா, பொண்டாட்டி சரியில்லை… வெளிய சாப்பிட்டா என்ன தப்புன்னு கேக்கலாம். அதே நியாயம்தானே அவளுக்கும்.
உன் அயோக்கியத்தனத்தைப் பொறுத்துகிட்டு அவ வேலை செஞ்சு சோறு போட்டா கூட நிம்மதியா இருக்க விடமாட்ட. வேலை செய்யுற இடத்துல இருக்குற ஆம்பள கூட எல்லாம் தொடர்பு வச்சிருக்கான்னு தூத்திக்கிட்டுத் திரிவ… இதெல்லாம் நாங்க கண்டுக்காம இருக்கோம்னு நினைக்கிறியா? உனக்கெல்லாம் ரெண்டு கண்ணு, போலீஸ் காரனுக்கு பொடனில கூட கண்ணிருக்கு. உன்னையெல்லாம் உள்ள தள்ளி, வச்சு ஆசை தீர வெளுக்கணும் “
தலை குனிந்து கொண்டான்.
“கரீம் பாய்க்கு எத்தனை வயசுடா?”
“70 இருக்கும்… “
“உன் பொண்டாட்டிக்கு?”
“30”
“70 வயசு கரீம் பாய், மக வயசு இருக்க உன் பொண்டாட்டியை வச்சிருக்காருன்னு ஊரு பூரா புறணி பேசிட்டுத் திரியுற… “
“அது உண்மைதானே… அப்பறம் ஒரு கூடை மீனு வாங்கி விக்கிற அளவுக்கு அவளுக்கு ஏது பணம்?”
“சரி, உங்கம்மா என்ன கலெக்டரோ… ஒத்தை ஆளா நின்னு எப்படி உன்னையும் உன் தங்கச்சியையும் வளத்தா?”
பேசாமல் நின்றனர் இருவரும்.
“ஏம்மா… நீ எப்படி சம்பாரிச்ச?”
“வேகாத வெயிலில் வெந்து வெம்பாடு பட்டு வளத்தேன்”
“உன் மருமவளும் அப்படித்தானே சம்பாரிச்சா…”
அடுத்த பத்து நிமிடங்களுக்கு கிரேஸ் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் ஏதாவது டிக்ஸ்னரி இருந்தால் க்ரேஸிடம் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் அல்லி.
தாயையும் மகனையும் வார்த்தைகளிலேயே பந்தாடிவிட்டு
“ இந்த பாரு கிழவி உன் குடும்பத்தைப் பத்தி எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். உன் மருமவ எங்கன்னு உனக்குத் தெரியாம இருக்காது. இப்ப நீயே சொல்லுறியா இல்ல லாக்கப்ல வச்சு ஒரு குமுறு குமுறவா? பெருமாள்சாமி இவனை இழுத்துட்டுப் போயி விசாரி”
அதற்காகவே காத்திருந்தாற்போல் பெருமாள்சாமி அலேக்காக தூக்கிச் சென்றான்.
விசாரணையின் முடிவில் தள்ளாடியபடியே வந்தவன் “என் பொண்டாட்டியை அவ அப்பன் ஊட்டுல பணம் வாங்கிட்டு வர சொல்லி நான்தான் அடிச்சு வெரட்டுனேன். எங்க, என்மேல வரதட்சணை புகார் தந்துடுவாங்களோன்னு ஒரு சேப்டிக்கு நான் முதல்லயே அவ வீட்டுல இருந்து காசு பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிப் போயிட்டான்னு புகார் தந்தேன்”
“எப்படி எப்படி? அடி வாங்குனவ அழுவறதுக்குள்ள நீங்க முதல்ல அழுதுட்டா எல்லாரும் உங்களை நம்புவாங்கன்னு ஒரு நம்பிக்கை”
தலை குனிந்தான்.
“ஸ்டேசனுக்குள்ள வந்து தெனாவெட்டா எத்தனை கெட்ட வார்த்தை? அதுவும் போலீஸ் முன்னாடி. ஏன் எங்களுக்கு மட்டும் வாயில்லையா? நாங்க பேசமாட்டோமா? இன்னைக்கு வாய் பேசுச்சு. இதே தொடர்ந்தா நீ ஜெயிலுல காலம் பூரா களி திங்கிற மாதிரி உன் தலைல எழுதிடுவேன்.
அதுசரி, உன் பொண்டாட்டி ஏண்டா உன் மேல இன்னும் வரதட்சணை புகார் தராம இருக்கா? காலம் பூரா உன்னை மாதிரி முடிச்சவுக்கி மொள்ளமாரி நாயிகிட்ட அடி வாங்கினா எதுனா மெடல் தருவாங்கன்னு சொல்லிருக்காங்களா?”
பெருமாள்சாமி குறுக்கே வந்தான் “அன்னைக்கு மார்க்கெட்ல வெறகு கட்டையை வச்சு அடிச்சுட்டு இருந்தான்கா. நான்தான் வெரட்டி விட்டு இவன் பொண்டாட்டியை டாக்டர்கிட்ட அனுப்பினேன். இவனோட அக்குரமம் அதிகமாயிட்டே போவுதுக்கா.. நான் வேணும்னா அந்தம்மாகிட்ட வரதட்சணை புகார் எழுதி வாங்கிட்டு வரட்டுமா?”
இருவர் முகத்திலும் பீதி கோலம்போட்டது.
“ஆயும் மவனும் மூடிக்கிட்டு வீட்டில் நிக்கணும். இன்னொரு தடவை கரீம் பாய் வீட்டுல கத்துன, பொண்டாட்டியைத் திட்டுனன்னு காதில் விழுந்தது இழுத்து வச்சு அறுத்துடுவேன்…. நாக்கை…”
அவர்கள் வெளியே சென்றதும்
“க்ரேஸக்கா எப்படிக்கா இப்டி பேசக் கத்துக்கிட்டிங்க? ரெண்டு பேரும் அரண்டு போயி கிளம்புறாங்க”
“பின்னே உன்னை மாதிரி பேச பயந்தா போலீசா பொழைக்க முடியுமா? நீ பாம்பாட்டம் கொத்தணும்னு அவசியமில்லை ஆனா கண்டிப்பா சீறணும். அப்பத்தான் உன்னைப் பாத்தாலே இந்தக் காவலிங்களுக்கு பயம் வரும். காலேஜ் படிச்சிருக்கேல்ல, போலிஸைப் பொறுத்தவரை பயம் இஸ் டைரெக்டிலி ப்ரபோர்ஷனல் டு மரியாதை. குற்றவாளிக்கு மட்டுமில்ல குற்றம் செய்ய நினைக்கிறவங்களுக்குக் கூட பயத்தைக் காட்டணும்”
“அன்பால திருத்தி… “
“சினிமாப் படம் நிறையா பாப்பியா? அன்புக்கு மரியாதையே தெரியாத வம்பனுங்களைக் கண்ட்ரோல் பண்றதுதான் நம்ப வேலை. இந்தா இப்ப வந்துச்சே ஒரு கழிசடை இதெல்லாம் அன்பால திருந்துற கேசா?”
மறுத்து வேகமாய் தலையாட்டினாள் அல்லி. அப்பா இருந்த வரை அல்லி மலராகவே வளர்ந்தாயிற்று. இப்போது கள்ளிப் பூவாய் மாறச் சொல்கிறது உலகம்.
“பெருமாள்சாமி” அழைத்தார் விஜயா.
“இப்ப வந்த மிஸ்ஸிங் கேஸ அப்படியே விடுறாதிங்க. அவன் பொண்டாட்டி அவங்கப்பா வீட்டுக்குத் தான் போயிருக்காளான்னு ஒரு எட்டு போயி பாத்து உறுதிப்படுத்திக்கோங்க”
“சரி மேடம்” கிளம்பத் தயாரானார்.
“யூனிபார்ம்ல போகாதிங்க”
“இருட்டுனதும் அந்தப் பக்கட்டு டீ குடிக்கிற மாதிரி போயி பாத்துட்டு வந்துடுறேன்”
“கிரேஸ் நான் சொன்ன லிஸ்ட் தயார் பண்ணிட்டிங்களா” என்று ஒரு குரல் கொடுத்தார்.
“நாளைக்கு ரெடி ஆயிரும் மேடம். இப்ப ரவுண்ட்ஸ்கு என்னையும் பெருமாள்சாமியையும் கூப்பிட்டிருந்திங்களே”
“நாளைக்கா… டீடெயில்ஸ் எல்லாம் அல்லி கிட்ட கொடுத்துட்டு லிஸ்டைத் தயார் பண்ண சொல்லிடுங்க”
“எஸ் மேடம். அல்லி, இங்க வா… இதுதான் நம்ம ஏரியால இருக்குற கொலைக் குற்றவாளிகள் ரவுடிகள் லிஸ்ட். இவனுங்களை எல்லாம் ஏ, பி, சி ன்னு மூணு கேட்டகிரியா பிரிக்கணும்”
“கொலைக் குற்றவாளிகளை மட்டுமா? எப்படிக்கா வகைப்படுத்துறது ஏரியாவாரியாவா?”
“அஞ்சுக்கு மேல கொலை பண்ணவனுங்க ஏ ப்ளஸ் ரவுடிங்க. மூணு டு அஞ்சு ஏ, மூணு கொலை பண்ணிருந்தா பி.. “
“க்ரேஸக்கா இப்படி நம்ம கேட்டகிரி பிரிச்சு வச்சிருக்குறதைப் பாத்துட்டு ‘சி’ ல இருக்குறவனுங்க எல்லாம் ‘ஏ ப்ளஸ்’ தான் மாஸ்னு நெனச்சு அதுக்கு வர முயற்சி பண்ணாம இருந்தா சரி”
Nice 👍