Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 21

உன் இதயம் பேசுகிறேன் – 21

அத்தியாயம் – 21

“சொந்தக்காரப் பொண்ணு கூடக் கல்யாணம்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் பெருசா ஒண்ணும் அவரைப்பத்திக் கேள்விப்படலை. மின்னலோனைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சு ஆன்ட்டி. 

கடிதத்தைப் படிக்கிறப்ப பழசெல்லாம் நினைவுக்கு வருது. ஒரு தரம் நேரில் பார்த்தால் நல்லாருக்கும்னு கூடத் தோணுது. அவர் வேற கையெழுத்துக்குக் கீழ அந்தக் கடிதத்தில் பாருங்க ஒரு நம்பரை எழுதி அனுப்பி இருக்கார். போன் நம்பரா இருக்குமோ? போன் போட்டுப் பாக்கட்டுமா ஆன்ட்டி” முகம் முழுக்க ஆர்வத்தோடு கேட்டாள் பத்மினி. 

“ஆமாம் இப்ப அந்த மின்னல் பய்யன் பாலாஜி கவிதை எதுவும் எழுதுறதில்லையா. அவனிது பத்திரிக்கைல வந்திருந்தா நீ என்கிட்டே சொல்லிருப்பியே” என்றார் விஷ்ணுபிரியா

“இப்பல்லாம் எழுதி போஸ்ட் பண்ண நேரம் இல்லையாம். அதனால  என்னவோ ஆன்லைன்ல எழுதுறாராம். ப்ரதிலிபின்னு ஒரு தளத்தில் கவிதைகள் பதிவிடுறேன்னு சொல்லிருந்தார்”

“நீ பார்த்தியா?”

“என்னோட  செங்கல் போன் வேலை செய்றதே பெருசு. இதில் எப்படி பாக்குறதுனு எனக்குத் தெரியல”

“ராதா இங்க வாடி, இதில் பத்மினி சொன்ன தளத்துக்குப் போயி மின்னலோன் பேரைக் கண்டுபிடி”

ராதா என்னென்னவோ தட்டச்சு செய்து தளத்திற்கு செல்வதை இருவரும் வேடிக்கை பார்த்தனர். 

அதில் இருந்த கவிதைகளை பத்மினி படித்துக் காட்டினாள். 

“இந்தக் கவிதை முன்னாடியே ஒரு தரம் என்கிட்டே சொல்லிருக்கேல்ல”

“உங்க நியாபக சக்தி பிரமாதம் ஆண்ட்டி”

“இதென்னடி நிஜமாவே சினிமா மாதிரி இருக்கு “ 

என்று அதிர்ச்சியாக சொன்னார் விஷ்ணு ப்ரியா. அவருக்கு அன்று மனது சற்று லேசானது போல இருந்தது. உடலும் கூட நன்றாகவே இருந்தது. 

“நான் சொல்றது இருக்கட்டும் ஆன்ட்டி. நீங்க என்னவோ குட் நியூஸ் சொல்றேன்னு சொன்னிங்களே”

“நிஜமாவே குட் நியூஸ் தான் பத்மினி. அம்மாவுக்கு இன்னொருத்தரம் டெஸ்ட் பண்ணிருக்கோம். செகண்ட் ஒபினியன்ல வியாதி இருக்க சான்ஸ் இல்லன்னு நினைக்கிறேன் “

“புரியலாக்கா  ஒரே வாரத்தில் மருந்து மாத்திரைல குணமாயிருச்சா?”

“அப்படி இல்லம்மா. போனதடவை அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனப்ப, அங்க டெஸ்ட் பண்ற மெஷின் ரிப்பேர். அதனால பக்கத்தில் இருக்கும் டைகண்ஸ்டிக் சென்டர்ல டெஸ்ட் எடுத்துட்டு வர சொன்னாங்க.

 நாங்களும் போயி எடுத்துட்டு ரிசல்ட் வாங்கிட்டு வந்து டாக்டர்கிட்ட தந்து ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணோம். அந்த மருந்து மாத்திரை  சாப்பிட்டுட்டு அம்மாவுக்கு அலர்ஜி மாதிரி வந்துருச்சு.

 அப்புறம் டாக்டர்கிட்ட காமிச்சோம். அவரு இன்னொரு தடவை டெஸ்ட் எடுத்தா நல்லதுன்னு பீல் பண்ணாரு செகண்ட் டைம் டெஸ்ட் எடுத்தப்பதான் நாங்க முதல்ல டெஸ்ட் எடுத்த  நாளில் இன்னொரு விஷ்ணு பிரியா டெஸ்ட் எடுக்க வந்திருக்காங்கன்னு கண்டுபிடிச்சோம். அவங்களோட ரிப்போர்ட்ட இவங்களுக்கு மாறி இருக்க சான்சஸ் இருக்கு அப்படின்னு நினைச்சதால மறுபடியும் டெஸ்ட் பண்ணி இருக்கோம்”

“இப்படி எல்லாம் கூடவா அக்கா தப்பு நடக்கும்?”

“தப்பு எப்படி வேணும்னாலும் நடக்கலாம் பத்மினி. இவங்களுக்கு தப்பான மாத்திரையை சாப்பிட தந்து இருக்காங்க. ஆனா மத்தவங்களுக்கோ மாத்திரையை தராமல் நல்லா இருக்காங்கன்னு சொல்லி அனுப்பி இருப்பாங்க. அது எவ்வளவு பெரிய கொடுமை.

 இந்த மாதிரி ரிப்போர்ட் வேற தப்பா வரும் பொழுது யாரை நம்ம தப்பு சொல்ல முடியும்? டாக்டரையும் சொல்ல முடியாது. அவர் ரிப்போர்ட்ட வச்சு தான் சிகிச்சை தர முடியும். ரிப்போர்ட் தரும் இடத்தில் எப்படி தவறுகள் நடக்கும் பொழுது யாரை பழி சொல்றது?

 பொறுப்பில்லாமல் ரிப்போர்ட்ட மாத்தி வச்சவங்கள சொல்லலாம், சரியா ஒவ்வொரு ரிப்போர்ட்டையும் பிரிச்சு எடுக்க வசதி இல்லாம, ஒரு அட்மினிஸ்ட்ரேஷன் பண்றதுக்கு ஒரு ஒழுங்கான ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் இல்லாமல் இருக்கிற அந்த நிறுவனம் தான் காரணம்.

 பட் என்னவோ ஏதோ தப்பு நடந்திருக்கு. அது நமக்கு சாதகமாக இருக்கிற வரைக்கும் மகிழ்ச்சி அப்படின்னு மனசுல சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்”.

 விஷ்ணு பிரியா ஆன்ட்டிக்கு எதுவுமில்லை என்ற கேள்விப்பட்டதுமே பத்மினிக்கு ஓரளவு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் மற்றொரு விஷ்ணு பிரியா எப்படி இருக்கிறார் என்று நினைத்து கவலையாகவும் இருந்தது. இந்த மனசு கவலைப்படுவதற்கு ஏதோ ஒரு காரணத்தை தேடிக்கொண்டே இருக்கிறதே! கவலைப்படுவதில்  சுகம் கண்டுவிட்டதோ?

 விஷ்ணு பிரியாவுக்கு தனக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தது சற்று தெம்பாக  இருந்தது. இருந்தாலும் முழுமையாக டாக்டர் ரிப்போர்ட் தரும் வரை அவரை ரெஸ்ட் எடுக்குமாறு வீட்டினர் சொல்லி இருந்தனர். அவரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு பத்மினி கிளம்பினாள். ஆனால் விஷ்ணு பிரியா அவர்கள் கிளம்புவதற்கு முன்பு 

“பத்மினி என்னவா இருந்தாலும் சரி அந்த பாலாஜி கூட இந்த கடிதப் போக்குவரத்து, சந்திப்பு இதெல்லாம் எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு எனக்கு தெரியல. பொம்பளைங்க நிறைய பேருக்கு நல்லா தெரிஞ்சவங்களாலத்தான் பிரச்சனையே வருது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீ பத்திரமா இருந்துக்கோ. நீ ஒரு அழகான சிறு வயசு பொண்ணு. உனக்கான பாதுகாப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். நான் சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்”

 அவரது கவலையும் ஆதங்கமும் பத்மினிக்கு நன்றாக புரிந்தது.

“ ஆன்ட்டி உங்களுக்கு மனசு குறை படுற  மாதிரி எந்த விஷயமும் நடக்காது. ஏதோ ரொம்ப நாள் கழிச்சு தெரிஞ்சவங்கள பாத்ததுனால எனக்கு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் அவ்வளவுதான். இதனால என் வாழ்க்கையில் என்ன மாற்றம் வரப்போகுதுன்னு தெரியவே இல்ல. மாற்றம் எல்லாம் அந்த கடவுள் நினைத்தால் தான் நடக்கும் .ஆனா அது என்ன மாற்றமோ யாருக்கு தெரியும்?” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

அங்கு பத்மினியின் வாழ்க்கைக்கான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான காட்சிகள் வெகு வேகமாக அரங்கேறிக் கொண்டிருந்தன

அதைப் பற்றி கொஞ்சமும் அறியாத விஷ்ணு பிரியா “கவலப்படாதடி நாளைக்கு கண்டிப்பா நல்ல பொழுதா விடியும் அப்படி என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு பத்மினி”

பத்மினி  அங்கிருந்து கிளம்பும்பொழுது சிரித்துக் கொண்டாள். அவளது மனதில் ஒரு சின்ன கவிதை ஒன்று பிறந்தது

‘நாளை நாளை’ என்று சொல்லி நீர்க்குமிழி நாளையை எண்ணி ‘இன்றை’ தொலைத்து ஓடும் நம்பிக்கை மனிதர்கள்!

பத்மினி விரக்தி கவிதை சொல்லிவிட்டு  அங்கிருந்து கிளம்புவதை கவனித்துக் கொண்டிருந்த ராதா பத்மினி நகர்ந்ததும் படபடவென பொரிந்தாள் 

அம்மா வளைந்து கொடுக்கிறது அட்ஜஸ்ட் பண்ணிக்கிறது இதுதான் வாழ்க்கை அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கியே உண்மையான மீனிங் என்னன்னு உனக்கு தெரியுதா

ஒரு மூங்கில் வளைந்து கொடுக்கும் பொழுது உயிரோடு இருக்கு அதே மூங்கில் வெட்டுனதுக்கு அப்புறம் உறுதி ஆயிடுது அதால வளைஞ்சு கொடுக்கவே முடியாது. இப்படி வளைஞ்சு வளைஞ்சு பத்மினி ஒரு நாள் முறிஞ்சு உயிர்ப்பை இழந்து கட்டையா மாறப் போறா. 

பொம்பளைன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும். அட்ஜஸ்ட்பிலிட்டி வேணும் ஆம்பளைங்க முறை தவறி அலைஞ்சாலும் திருத்த வேண்டியது பொம்பளைங்க பொறுப்பு அப்படின்னு வளைந்து கொடுக்காத பிரின்ஸ்பல்ச நாமதான் பேசிட்டு இருக்கோமோ?

 இப்ப காலம் மாறிக்கிட்டு இருக்கு அந்த காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மளும் மாறனும். ஒரு பொண்ண சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் பழமொழிகள் இப்படி எல்லாம் சொல்லி, கட்டுப்பாடுகளை விதிச்சு அவளுக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கையை கூட தராம இந்த சமுதாயத்துக்கு பயந்து தினம் சித்திரவதை அனுபவிக்கிற மாதிரி வச்சிருக்கோமே, நம்ம எவ்வளவு பெரிய கொடுமைக்காரங்க. 

அவளை உயிரோட கொல்றது தான் நம்மளோட குறிக்கோளா? இப்படியே தொடர்ந்த, அவ சத்தியமா மன வேதனையிலயே செத்துருவா. செத்ததுக்கு அப்புறம்  அவள வச்சு கும்பிடுவதில் என்ன பிரயோஜனம்? உயிரோட இருக்கிற போதே வாழ வேண்டாமா?

செத்ததுக்கு அப்புறம் எத்தனை நாள் கும்பிட போறீங்க யார் கண்டது பிரசாந்த் அடுத்த மாசமே மூணாவது கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பான். அப்ப என்ன சொல்லுவீங்க ‘ஐயோ! பெண்  துணை இல்லாமல் என்ன செய்வான்? சுடு தண்ணி வச்சுக் குடுக்க கூட வீட்ல பொண்டாட்டி வேண்டாமா அப்படின்னு சொல்லுவீங்க

இதே இப்படி யோசிச்சு பாரு. பிரஷாந்த் ஒரு நல்லவனா இருந்து, பத்மினி ஒரு முறை தவறி போறவளா இருந்திருந்தா என்ன சொல்லுவீங்க? பிரசாந்த் பத்மினிய டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு வேற தராச வச்சில்ல நீங்க மெஷர் பண்ணுவிங்க. கேட்டா, ஆண்கள் தனியாக வாழ முடியாது பயாலாஜிக்கலா அப்படி டிசைன் பண்ண படல அப்படின்னு அறிவியலையும் துணைக்கு கூப்பிடறிங்க”

“ஏண்டி ராதா, இன்னைக்கு என் கூட சண்டை போடுறதுக்குனு வந்து இருக்கியா?”

“இது சண்ட இல்லம்மா. என் உள் மனசு ஆதங்கம். ஏழு வருஷமா பத்மினிய பார்த்து என் மனசு வலிக்குது. என்னை விட நீ தான் அவளுக்கு நெருக்கம் உன் மனசு வலிக்கலையா?”

சம்மட்டியாய் மகளது கேள்வி மனதைத் தாக்க, கண்களை மூடி படுத்துக் கொண்டார் விஷ்ணு பிரியா.

“மனசு வலிக்குதோ இல்லையோ, இப்போதைக்கு தல பயங்கரமா வலிக்குது. எனக்கு ஏதாவது சூடா குடிக்க கொண்டு வரியா?”

“பசியா இருக்கும். ரெண்டு தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்”

மகளை  அப்பொழுது அனுப்பி விட்டாலும், விஷ்ணு பிரியாவின் மனதில்ஒரு பேரலை ஒன்று பொங்கியது. பொங்கி என்னென்னவோ நினைவுகள் அவர் மனதில் வந்து போயின. அவர் கண்களில் இருந்து கண்ணீர் அப்படியே வழிந்தது. பத்மினி நீயும் எனக்கு ராதா போலத்தானே? நீயும் சந்தோஷமா இருக்க வேண்டாமா? அதுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா?

“ராதா அம்மா என்ன பண்ணிட்டு இருக்கா? குடிக்கிறதுக்கு ஏதாவது கொடுத்தியா? ஏதாவது சாப்பிடுவதற்கு இருக்கா? தோசை ஊத்துறியா? எனக்கும் ஊத்தி கொடு பசிக்குது”  கணவர் பேசிய சத்தம் கேட்டு விழித்தார்.

தட்டில் இருந்த தோசையை வாயில் போட்டுக் கொண்டே  விஷ்ணு பிரியா இருந்த அறைக்கு வந்த சந்தானம், “என்னடி விஷ்ணு, வீட்ல எல்லாத்தையும் கலவரப்படுத்திட்டியே… ரிப்போர்ட்ல எதுவும் இல்லன்னு சொல்றாங்க.

 டாக்டர்  உறுதியா சொல்ல வேண்டியதுதான் பாக்கி. அதுக்கப்புறம் மஹாராணி மாதிரி கவனிப்பு எல்லாம் உனக்குக்  கிடையாது. கல்லு  குண்டாட்டம் இருக்க, இந்த ஓபி எடுத்துட்டு படுக்குற வேலை எல்லாம் வேணாம்” என்று சொல்லிய  வண்ணம்  தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவரை வெறுமையான பார்வை பார்த்தார் விஷ்ணு.

“சொல்ல மறந்துட்டேன்டி. ரொம்ப முக்கியமான விஷயம். இன்னைக்கு உன் டெஸ்ட் ரிசல்ட் வாங்குவதற்கு போயிட்டு அப்படியே மாத்தி ரிப்போர்ட் கொடுத்த இடத்துக்கு போயி நல்லா கத்திட்டு வந்தேன். கேஸ் போடப்போறேன்னு மிரட்டிருக்கேன்”

“உங்க ப்ரஸ்ஸரை இன்னைக்கு அங்க போயி திட்டித் தீர்த்துட்டிங்களா? சரி அவ்வளவுதானே”

 “அதைவிட முக்கியம். அங்க போனப்ப முக்கியமான ஒருத்திய பார்த்தேன்”

“யாரது, உங்க தூரத்து அக்கா தங்கச்சி பொண்ணுங்க யாரையாவது பாத்தீங்களா?”

“அடச்சே, முழுசா சொல்ல விடுடி பக்கத்து வீட்டு பிரஷாந்த் ஓட முதல் பொண்டாட்டிய பாத்தேன்டி” என்றார் ரகசியமாக

“அவ எதுக்கு அங்க வந்தா?  உடம்புக்கு ரொம்ப சரியில்லையாங்க?”

“பைத்தியம் உடம்பு சரியில்லாதவங்க தான் டெஸ்ட் பண்ண   வருவாங்களா? என்ன நல்ல நிகழ்ச்சிக்கு வர மாட்டாங்களா? அவ இப்ப மாசமா இருக்காடி”

“மாசமா இருக்காளா? அவளுக்கு 40 வயசுக்கு மேல இருக்குமே”

“அதனால என்ன இப்ப? இந்தக் காலத்து  நாற்பது அந்த காலத்து 20 ஆயிடுச்சு. அதனால இந்த வயசுலயும் ஆரோக்கியமா இருந்தா புள்ள பெத்துக்கலாம் தப்பு கிடையாது. என்ன கொஞ்சம் கவனமா இருக்க  டாக்டர் செய்ய சொல்லுவாங்க. அவ்ளோ தான… “

விஷ்ணு பிரியாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நிது, பிரஷாந்தின் முதல் மனைவி, அவளை மிகவும் நம்ப நம்பியிருந்தார். ஆனால் அவளோ பிரசாந்த்தின் மேனேஜருடன் சேர்ந்து ஊரை விட்டு ஓடி போனாள் என்று அகிலா சொன்னாள். 

அது கூட பொய்யாக இருக்கும் என்று நம்பினார். அதனால்தான் பத்மினி கல்யாணம் தரும் செய்து கொண்டு பிரசாந்த் வந்த போது பத்மினியுடன் பேசுவதையே தவிர்த்தார்.

அதன்பின் அப்பார்ட்மெண்ட்டில் சிலர் நிது வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டதாக சொன்னார்கள். ராதாவே ஒருமுறை பார்த்துவிட்டு சொன்னதும்தான் நம்பினார். 

ஒரு கணவன் மனைவி தன் சுகம் நலம் மட்டுமே பெரிதென்று எண்ணாமல் குடும்பத்திற்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழவேண்டும் என்று நினைத்தால்  அவர் பூமரா? இன்றைய  இளைய தலைமுறை அப்படித்தானே சொல்கிறது.  

பிரசாந்தின் குணமும் பிடிக்கவில்லை. அவனது மனைவியும் குழந்தையைக் கூட பார்க்காத சுயநலமாக இருந்திருக்கிறாள் என்று மனது உறுத்தலாக இருந்தது.

“என்னங்க,அந்த ஆள் இருக்கானே பிரசாந்த், அதான்  ஓட பழைய மேனேஜர் அவனும் வந்திருந்தானா?”

அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் தோசையை தட்டில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் யோசி யோசித்த வண்ணம் இருந்தார்  சந்தானம்.

 அவர் மனதில் பார்த்த விஷயங்களை மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கனவே நிது கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தே அதிர்ச்சியில் இருப்பளுக்கு இது இன்னும் தாங்க முடியாத அதிர்ச்சியை தரும் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். ஆனாலும் என்ன ஒரு நாள் தெரியத்தான் போகிறது அது இன்றாகவே இருந்துவிட்டுப் போகிறது.

“அவ கூட வந்திருந்ததே பிரஷாந்த் தாண்டி. ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கு”

4 thoughts on “உன் இதயம் பேசுகிறேன் – 21”

  1. அடப்பாவி உன் அம்மாவுக்கு ஆயா வேலை பாக்க தான் பத்மினியா… உன்னை போல ஒரு கேவலமான பிறவி பாக்கவே முடியாது… ஷாமிலிக்கு இது எல்லாம் தெரியுமா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 7உன் இதயம் பேசுகிறேன் – 7

அத்தியாயம் – 7 மறுநாள் காலை ராட்சனை போலத் தன்னருகே குறட்டை விட்டவண்ணம்  உறங்கும் பிரஷாந்தைக் காணவே எரிச்சலாக இருந்தது பத்மினிக்கு.  இந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லைதான். பிறந்த வீட்டுக்கு சென்றால் பாராட்டி சீராட்டி வரவேற்கவா போகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு

உன் இதயம் பேசுகிறேன் – 19உன் இதயம் பேசுகிறேன் – 19

அத்தியாயம் 19 மருந்து மாத்திரைகளால் உடல் சற்று தேர்ச்சி பெற்று, வலிகள் கொஞ்சம் குறைந்து எழுந்து உட்கார்ந்து இருந்தார் விஷ்ணுபிரியா. இருந்தாலும் எப்பொழுது தலைவலி வரும் எப்பொழுது உடல் நன்றாக இருக்கும் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர் எழுந்து

உன் இதயம் பேசுகிறேன் – 2உன் இதயம் பேசுகிறேன் – 2

அத்தியாயம் – 2 பத்மினி, சராசரி உயரம், தென்னகத்து மாநிறம், இடையைத் தொடும் கூந்தல், முகத்தைப் பார்த்தவுடன் வசீகரிக்கும் பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், சினிமா நடிகைகள் ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் மூக்கு அவளுக்கு இயல்பாகவே இருந்தது. வரைந்து வைத்தார்