Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 20

உன் இதயம் பேசுகிறேன் – 20

அத்தியாயம் – 20

மெயின் ரோட்டில் வலது புறமாக இருக்கும் சிறிய தெருவின் வழியே நடந்து செல்லவேண்டும், ஐந்து நிமிடங்கள் நடந்தபின் ஒரு பெரிய சாக்கடை, முன்பு ஒரு காலத்தில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது கழிவு நீர் தேங்கி முழு சாக்கடையாக மாறி அந்த பகுதிக்கே கொசு உற்பத்தி தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

அந்த சாக்கடைக்கு உதவி செய்வது போல அடிபம்பு ஒன்று அதன் கரையிலேயே. தெருப் பெண்கள் குடம் வழிய வழிய தண்ணீர் அடித்து சென்றபின்னர் தேங்கிய நீர் ஓடிச்சென்று சாக்கடையில் கலந்து. 

உள்ளே நுழையும்போதே மூக்கைப் பொத்திக் கொண்டால் நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதிது என்று அர்த்தம். அந்த சாக்கடையை ஒட்டி இருந்த சந்தில் ஐந்தாவதாக மங்கலான மஞ்சளில் ஒரு வீடு தென்படுகிறதே. அதுதான் பாண்டியம்மா டீச்சர் வீடு. 

பாருங்கள் வீட்டின் வாசலில் லேட்டாய் வந்த ஐந்து மாணவர்களும் அமர்ந்து சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தனர். ஹாலில் ஒரு பத்து பேர். சமையலறையின் ஓரத்தில் கூட இரு பெண்கள் நாண்டிட்டைல் படித்ததை பரிட்ச்சையாக எழுதிக் கொண்டிருந்தனர். 

இந்த ஏரியாவிலேயே கண்டிப்பான ஆங்கில ஆசிரியை இவர்தான். இவரிடம் டியூஷன் படிக்க முண்டியடித்துக் கொண்டு சேருவார்கள். ஏழைப்பிள்ளைகள் என்பதால் கட்டணம் கூட மிகக் குறைவாகவே பாண்டியம்மா பெற்றுக் கொள்வார். 

“பத்மினி இங்க வாடி” பத்மினியின் பரிட்சைப் பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு அழைத்தார். 

“இதென்னடி I have has had did done do it they them?”

“நீங்க சொன்ன மாதிரியே மனப்பாடம் பண்ணிட்டேன். ஆனா அந்த இடத்தில் has, had, have இதில் என்ன வரும்னு மறந்துடுச்சு”

“அதனால மூணுமே எழுத்திட்டியாக்கும். உனக்கெல்லாம் பாடம் எடுத்தா எனக்குத் தாண்டி கிறுக்கு பிடிக்கும்”

“தமிழ்ல்ல இருக்குற 247 எழுத்தும் ஈஸியா வந்துருச்சு டீச்சர். இந்த 27 எழுத்தை வச்சுக்கிட்டு இந்த இங்கிலிஷ் என்ன ஆட்டம் காட்டுது?” திட்டினாள் பத்மினி. 

“இங்கிலிஷ்ல எத்தனை எழுத்துடி 26 ஆ இல்லை 27 ஆ?”

திரு திருவென விழித்தாள். 

“சித்தி 27 கூட ஒரு வகைல சரிதான். 1800 லதான் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்னு தீர்மானம் போட்டாங்க. அதுக்கு முன்னாடி 27 இருந்துச்சு” என்ற அந்த இளைஞனை நன்றியுடன் பார்த்தாள் பத்மினி. 

 “இவ  1800லையாடா இருக்கா? இப்ப இன்னைக்கு தேதில 26 எழுத்துத்தான். அதைத்தான் விடையா சொல்லணும். சரியா” என்று பத்மினியை அதட்டினார். 

“சரி டீச்சர். ஆமா இவரு உங்க சொந்தக்காரரா?”

“எங்க அக்கா மகன். லீவுக்கு வந்திருக்கான். இவனை உங்களுக்கு முன்னாடியே தெரியும். எப்படின்னு சொல்லுங்க பாக்கலாம்?”

“மின்னலோன்” என்றாள் பத்மினி பளிச்சென. மின்னலோன் என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்த பாலாஜிக்குக் கூச்சமாகப் போய்விட்டது.  

“அவனேதான். டேய் உன் பேரே மின்னலோன்னு வச்சிருச்சுங்கடா இந்தப் பிள்ளைங்க”

 “அது அவரோட புனைப் பெயர்தானே. வேறொருத்தரோடது இல்லையே”

பாலாஜி எழுதிய கவிதையை பாண்டியம்மா அக்கம் பக்கத்தில் காண்பிப்பது வழக்கம். அதுவும் வாரமலரில் அவனது கவிதைகள் வந்தால் பாண்டியம்மா கடலைமிட்டாய் வாங்கித் தந்து கொண்டாடி விடுவார். அதற்காகவே அவனது கவிதைக்கு டியூஷன் மாணவர்கள் காத்திருப்பார்கள். அவனும் சமூகக் கவிதைகளை நிறைய எழுதுவான். அதற்கு அர்த்தம் சொல்லுவார் பாண்டியம்மா. காதல் கவிதைகளாக இருந்தால் எப்படியோ தட்டிக் கழித்துவிடுவார். 

“எருமை மாடு பிள்ளைங்களுக்கு அர்த்தம் சொல்ற மாதிரி எழுதுறதுக்கென்ன. காதல் கவிதை எழுதி வச்சிருக்கு” என்று அன்று முழுவதும்  முணுமுணுப்பார். 

 அவனது ஒவ்வொரு கவிதைக்கும் அர்த்தம் கேட்ட அந்த மான்விழியாள் பத்மினி அவன் மனதில் தனி கவனம் பெற்றாள்.

“பத்மினி எவ்வளவுதான் தமிழும் கவிதையும் பிடிச்சாலும் ஆங்கிலத்தில் பாஸானால்தான் ஆல் பாஸ். போய் படி”

இப்படி அறிமுகமானவர்கள்தான் மின்னலோனும் பத்மினியும். அன்று ஒரு நாள் நல்ல மழை நேரத்தில் டீச்சர் வீட்டில் மாட்டிக் கொண்டாள். 

“பத்மினி மழை விட்டதும் வீட்டுக்குக் கிளம்பு. நமக்கு சாப்பிட சூடா பஜ்ஜி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று பாண்டியம்மா சமயலறைக்கு செல்ல

புத்தகத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் பத்மினி. பேனாவால் என்னவோ எழுதி கிறுக்கிக் கிறுக்கி கிழித்துப் போட்டான் பாலாஜி. 

“மின்னல் என்ன எழுதி கிழிச்சுட்டு இருக்கிங்க?” மெதுவான குரலில் கேட்டாள். 

“இல்ல போன தரம் சாத்தூருக்குப் போனப்ப தீப்பெட்டி ஆபிஸ்ல வேலை பாக்குற பிள்ளைகளைப் பாத்தேன். அதுலேருந்து மனசு கிடந்து அடிச்சுக்குது. அதுதான் நம்ம உணர்ச்சியை கவிதைல கொட்டிடலாம்னு உக்காந்துட்டேன். பாதி எழுதிட்டேன் ஆனால் மீதியை முடிக்க முடியாம என்னமோ ஒரு தடை”

“சரி சொல்லுங்க கேட்போம்”

“என்னடா கவிதை தர்பார் ஓடிட்டு இருக்கா?” என்று தட்டு முழுவதும் பஜ்ஜிக்களை அடக்கியபடி வந்தார்  பாண்டியம்மா.

“ஆமாம் சித்தி”

“பத்மினி மூணு பேருக்கும் சமையல் ரூமில் டீ எடுத்து வச்சிருக்கேன். இங்க கொண்டு வந்து வை”

டீ வைத்ததும் மின்சாரம் தடைபட்டது. இருட்டுவதற்கு முன்னர் அந்த மாலை வேளையில், சூடான பஜ்ஜி டீயுடன் அவனது கவிதை மழை தொடங்கியது. 

தேய்ந்து போன கனவுகள் இதுதான் தலைப்பு .

வானவில்லை ரசித்திருந்தேன்

வண்ணத் துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு

வயிற்றுப் பசியாற விளைந்தேன்

பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு

நான் செய்வதும் அகழ்வு தான் 

குடைந்து எடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்…

அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன் தீக்குச்சிகளை

 

இதுக்கு அப்பறம் என்ன எழுதன்னு தெரியல சித்தி திணறிக்கிட்டு இருக்கேன்”

அவன் பேசிக் கொண்டிருக்க பத்மினியின் மனது அந்தப் பிள்ளைகளின் உணர்வுகளோடு கரைந்து போனது. 

“அப்படியே தொடர வேண்டியதுதானே…”

“தொடருவது இங்க பிரச்சனை இல்லை. எப்படி திருப்தியா முடிக்க? அதுதான் என் பிரச்சனை. தலைப்பை நினைவு படுத்துற மாதிரி முடிக்கணும்னு பாக்குறேன்”

ஐந்து நிமிடங்கள் கழித்து பத்மினி மெதுவான குரலில் 

“கவிஞரே நான் முயற்சி பண்ணட்டுமா?”

ஆச்சிரியமாக பார்த்தனர் இருவரும். 

“சொல்லு பத்மினி”

பசை கொண்டு ஒட்டி தீர்க்கிறேன் தீப்பெட்டி அட்டைகளை

புத்தகங்கள் கையில் எடுத்தேன் படிப்பதற்கா

தூசு தட்டி அலமாரியில் அடுக்குவதற்கு

கணக்கில் பெருக்கல் எப்படி என்றேன்

குப்பைகளின் கூட்டல் கற்றுக்கொண்டேன்

பளிங்காகும்படி துடைத்த தரையில் என் பிம்பம் கண்டேன்

தோய்ந்து போன என் உருவில் நான் கண்டது 

தேய்ந்து போன என் கனவுகளையே!

இருவரும் அப்படியே உறைந்துவிட்டனர். எவ்வளவு அழகாக பாலாஜியின் கவிதையை முடித்துவிட்டாள். 

“சூப்பர் பத்மினி. இந்தக் கவிதை இப்படி அற்புதமா வரும்னு நினைக்கல. உங்க பேரிலேயே அனுப்பிடுறேன்”

“ஐயோ அதெல்லாம் வேண்டாம். அது உங்க கவிதை. நான் என்னமோ உளறினேன். அதெல்லாம் கவிதை ஆகாது”

“சரி இது உங்க ரெண்டு பேரோட கவிதை போதுமா. அவ பேரையும் சேர்த்து அனுப்புடா”

“இல்ல வேண்டாம் டீச்சர். வீட்டுக்குத் தெரிஞ்சா கொன்னுருவாங்க”

“சரி, பத்மினி சரி சொல்ற வரைக்கும் இந்தக் கவிதையை எங்கேயும் அனுப்பப் போறதில்லை” என்று பாலாஜி வீம்பாய் சொல்ல. அந்தக் கவிதை தேயாத பிறைநிலாவாக இருவர் மனதிலும் நிலைத்தது. 

அதன் பின்னர் ஒன்றிரெண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறாள். ஒரு சில வார்த்தைகள் பேசியதோடு சரி. பழனியம்மா கூட யாரோ ஒரு சொந்தக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான் என்று சொன்ன நினைவு. 

அவளும் படிப்பை மூட்டை கட்டிவிட்டு முறுக்கு சுற்ற ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம் கவிஞன் அவளது மனதில் எங்கோ ஒரு மூலையில் சென்று மறைந்துவிட்டான். ஆனால் வாரமலரை ஒவ்வொரு முறை புரட்டும்போதும் மின்னலோன் என்ற பெயர் தெரிந்தால் மின்னல் போல அன்று முழுவதும் நினைவில் மின்னிச் செல்வான். 

திருமணம் முடிந்ததும் எங்கு கவிதை படிக்க, பிரசாந்த் கடுமையான பயிற்சியை அல்லவா தினமும் தருகிறான். இப்போது மீண்டும் அவனைக் கண்டு கொண்டதும் மனசு மகிழ்ச்சியைச் சூடிக் கொண்டது. 

அங்கு பாலாஜியோ குதித்தாடிக் கொண்டிருந்தான். உடனடியாக அமாவாசையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. அதனை உடனே செயலாற்றினான். 

“நீ கதை கிதை எழுத ஆரம்பிச்சுட்டியா?”

“நிஜம்மாவே இது உண்மைடா”

“உண்மையோ பொய்யோ ஆனா லட்சுமி விலாஸ் சாப்பாடு உனக்குக் கிடைக்காதது அதிர்ஷ்டம்தான். என்னாச்சுன்னா…”

அமாவாசை முடித்தபொழுது

“பத்மினி சாப்பாடு மட்டும் தரலை என் உயிரையே காப்பாத்தித் தந்திருக்கான்னு சொல்லு”

“உயிர் போற அளவுக்கு ஒன்னும் இல்ல ஒரு நாலு நாள் ஆஸ்பத்திரி வாசத்தைத் தடுத்திருக்கா”

“எனக்கு பத்மினியைப் பாக்கணும் போல இருக்கு. அட்ரஸ் கேட்கலாம்னு பாக்குறேன்”

“டேய் பாலாஜி இப்ப அந்தப் பொண்ணு வேற குடும்பத்துப் பொண்ணு. படக்குன்னு அட்ரஸ் கேட்காதே. அவ வீட்டில் என்ன நிலமையோ. வாரக்கடைசில வீட்டுக்கு வாயேன்”

“சரிடா வரேன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 4உன் இதயம் பேசுகிறேன் – 4

அத்தியாயம் – 4  கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடி அலுத்த  ப்ரஷாந்த்துக்கு  சிலபல விட்டுக்கொடுத்தலுக்குப்  பிறகு வேலை கிடைத்தது..வீட்டை விட்டு வெகு தொலைவு தள்ளியிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் விற்பனைப் பிரிவில் அவனுக்கு வேலை கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பத்மினி.  

உன் இதயம் பேசுகிறேன் – 15உன் இதயம் பேசுகிறேன் – 15

அத்தியாயம் 15 “பாலாஜி, நீ நம்ம ஊர்ல இருந்தேனா வள்ளி புருஷன் சந்தேகப்பட்டு அடிக்கிறான் போல இருக்கு. அதனால கொஞ்ச காலத்துக்கு வெளியூர்ல வேலை கிடைச்சதுன்னா போய் இருந்துட்டு வரியா” தன் தாயே தன்னிடம் சொல்லியதும் அதற்கு சம்மதிப்பது போல் தகப்பனும்

உன் இதயம் பேசுகிறேன் – 10உன் இதயம் பேசுகிறேன் – 10

அத்தியாயம் – 10    அவசர வேலைகளுக்கெல்லாம் உதவாமல் சாவாகாசமாய் வந்த அபயைக் கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாய் இருந்தது . தொழில் பக்தி இல்லாதவனால் எப்படி தொழிலில் முன்னேற முடியும். “சாரி பாலாஜி, அண்ணியை காலைல பிரெண்ட் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்தேன்”