Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 19

உன் இதயம் பேசுகிறேன் – 19

அத்தியாயம் 19

மருந்து மாத்திரைகளால் உடல் சற்று தேர்ச்சி பெற்று, வலிகள் கொஞ்சம் குறைந்து எழுந்து உட்கார்ந்து இருந்தார் விஷ்ணுபிரியா. இருந்தாலும் எப்பொழுது தலைவலி வரும் எப்பொழுது உடல் நன்றாக இருக்கும் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அவர் எழுந்து உட்கார்ந்ததும் அவருக்கு முதலில் தோன்றியது பத்மினியின் முகம் தான் . ‘பத்மினியைக்  கூப்பிடு’ என்று ராதாவுடன் அரித்து ஒரு வழியாக இருவருக்கும் பேசுவதற்கான நேரம் கூடி வந்தது.

“பத்மினி உனக்கு சாப்பாடு கட்டி தரதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு இப்படி போய் உடம்புக்கு  வந்து படுத்துட்டேன் பாரு… சரி சாப்பாட்டுக்கு என்ன செஞ்ச? சும்மாவே  உன் புருஷன் தையத் தக்கான்னு  குதிப்பானே?”

“ அவர் சாப்பிடவே இல்ல ஆன்ட்டி. அவர் தந்த அட்ரஸ் கூடத்  தப்பு”

“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன் பத்மினி”

பத்மினி அதற்கு பின்னர் நடந்தது அனைத்தையும் வரி மாறாமல் விஷ்ணு பிரியாவிடம் ஒப்பித்தாள்.

“என்னது இது! சினிமா மாதிரி இருக்கு!இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?

“ஒரு வேளை  சினிமா தான் வாழ்க்கையோ, இல்ல  வாழ்க்கை தான் சினிமாவோ தெரியல ஆன்ட்டி”

கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் “சரிடி நடந்தது நடந்திருச்சு இனிமே சாப்பாடு அனுப்பாத”

“என்ன சொல்றீங்க ஆன்ட்டி!!! எப்படி சாப்பாடு அனுப்பாம இருக்க முடியும்? வீட்டுக்காரர் கேப்பாரு என் மாமியார் சும்மா விட்ருமா?”

“அதுக்காக யாருக்குமே தெரியாத ஒருத்தனுக்கு சாப்பாடு அனுப்புறது ஒரு குடும்ப பொண்ணுக்கு அழகா? ஊர் உலகம் என்ன சொல்லும்? நாளைக்கே உன் வீட்டுக்காரனுக்குத்  தெரிஞ்சதுன்னா அவன் என்ன நினைப்பான்”

“ சாப்பாடு அனுப்புறதுக்கான ஆபீஸ் அட்ரஸ் கூட ஒழுங்கா சொல்லாத என் வீட்டுக்காரர் என்ன நெனச்சா எனக்கு என்ன ஆன்ட்டி?

 அந்த ஆள் தந்த அட்ரஸ்க்குத்  தானே சாப்பாடு அனுப்புறேன். அத்தோடு என்னோட வேலை முடிஞ்சிடுச்சு. அந்த ஆளு எவனையாவது சாப்பிட்டுட்டு இல்லாட்டி நாய்க்கு போட சொல்லி இருக்கான். என்னோட அதிர்ஷ்டம் பசியோடு இருக்கிற ஒரு ஆளுக்கு சாப்பாடு போகுது அவ்வளவுதானே…  இதில் என் தப்பு எங்க இருக்கு? சொல்லப்போனால்  உண்மை தெரிஞ்சதும்  என் வீட்டுக்காரர் கிட்ட நான் தான் சண்டை போடணும். எனக்கு மனசே மரத்துருச்சு. சண்டை போடக் கூட பேசணுமே. எனக்கு அந்த ஆள் மூஞ்சைப் பார்க்கவே பிடிக்கல. ”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஒரு மாதிரி தாண்டி இருக்கு. அந்த பாலாஜியா யாரோ சொன்னியே அவன் நல்லவனா இருக்கலாம். ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் அனுப்புறது எல்லாம் சரிப்பட்டு வராது. இது வேற எங்கேயாவது போய் நிக்கும்.  உனக்கு இருக்கிற பிரச்சனை பத்தாதா? இன்னும் இந்தப் பிரச்சனையை வேற தலையில் போட்டுக்கிறியா?”

பத்மினியை நன்றாக குழப்பி விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

லுவலகத்தில் அன்று மதியம் எல்லாம் சர்க்கரை மூட்டையை மனதில் சுமந்த வண்ணம் திரிந்தான் பாலாஜி. பின்னே எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பிரசவித்த கவிதை. அதனை, பல வருடங்களுக்குப் பிறகு, பல கிலோமீட்டர்களுக்கு அப்பால், ஒரு ஜீவன் அச்சு பிசகாமல்  பிரதியெடுத்து அனுப்பும்போது மனது ஜிவ்வென்று பறப்பது இயற்கை தானே?

இந்த கவிதையும் கதைகளும் எழுதியதற்காக எத்தனை முறை வீட்டில் திட்டு வாங்கி இருக்கிறான். ஆகிற வேலையை பார்ப்பானா பொழப்பு இல்லாம கிறுக்கிக்கிட்டு கிடக்கான் என்று சொல்வதும், அவர்களே வாரமலரில் அவனது கவிதைகள் பிரசுரமாகும் பொழுது நம்ம பாலாஜி என்று காண்பித்து பெருமைப்பட்டுக் கொள்வதும் அடிக்கடி நடக்கும்.

ஆனாலும் என்னவோ கவிதை அவனுக்கு ஒரு வடிகாலாக இருந்திருக்கின்றதே தவிர, அதனை தொழிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒரு நாளும் நினைத்ததில்லை.

அவனுக்கு இன்று மதிய கடிதத்தில் ஒரு மிகச் சிறிய ஐயம் ஒன்று இருந்தது. அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பதில் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான். நாளை பதில் கடிதம் வரும் வரையில் அவனால் எப்படி பொறுக்க முடியும் என்று தெரியவில்லை. மறுநாள் சனிக்கிழமை இல்லையே என்று காலண்டரைப்  பார்த்து ஒன்றுக்கு பத்து முறை உறுதி செய்து கொண்டான்.

மாலை நெருங்கியது. பத்மினிக்கு காலை டிபன் பாக்ஸ் வந்தடைந்து விட்டது. இருந்தாலும் அதனை பிரிக்க மனமின்றி குழப்பத்துடன் இருந்தாள். விஷ்ணு பிரியா சொன்னது போல இந்த கடிதம் கிடிதம் எல்லாம் ஏதாவது பிரச்சனையை கொண்டு வரப்போகிறது.

 அந்த பாலாஜி பசியோடு இருந்தால் எனக்கு என்ன? நன்றாக சாப்பிட்டால் எனக்கு என்ன? ஏன் அவனுக்கு சாப்பாடு எல்லாம் தந்து இன்னும் பிரச்சினை இழுத்து விட்டுக் கொண்டிருக்க வேண்டும்? ஆன்ட்டி சொல்வது போல கம் என்று இருக்க வேண்டியதுதான்.

அப்படியும் அவளால் இரவு 7 மணிக்கு மேல் ஆர்வம் தாங்க முடியவில்லை. எப்படியும் பிரசாந்த் வருவதில்லை, வந்தாலும் நள்ளிரவு தான் வீட்டிற்கு வருவான்.

 காலை டிபன் பாக்ஸை பிரித்து அதன் இருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு மறைவான இடத்தில் விளக்கின் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தாள். படிக்க படிக்க அவ்வளவு முகத்தில் வானவில்லின் வண்ணங்கள் மாறி மாறி வந்து போயின.

வணக்கம் தங்களது கடிதம் கிடைத்தது. பசித்த எனது வயிறுக்கு உங்களது உணவு அமுதாய் இனித்தது. இருந்தாலும் வேறு ஒருவர் உணவை உண்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி என்னை விட்டு அகலவில்லை. அதனால் இந்த உணவுக்கான தொகை என்று நான் வழக்கமாக எவ்வளவு தருவேனோ அதனை இந்த டிபன் பாக்ஸின் கடைசி அடுக்கில் வைத்துள்ளேன் தயவு செய்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ளவும்.

இது குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்த உணவை நான் உண்ண  எனக்கு பேருதவியாக இருக்கும். உங்களுக்கு இந்தப்பணம் தேவையில்லை என்றால் தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துவிடவும் இல்லை கோவில் உண்டியலில் போட்டுவிடவும். 

 என்னைப்  பொறுத்தவரையில் இதனை உங்களிடம் விலைக்கு வாங்கி உண்கிறேன் என்ற ஒரு திருப்தி வேண்டும் . இந்த வியாபாரம் உங்களுக்கும் தேவையில்லாத பிரச்சினையைத்  தவிர்க்கும் என்று எண்ணுகிறேன்

உங்களுக்கு எத்தனையோ நாட்களுக்கு முன்னே படித்த கவிதை மனதினில் பதிந்தது கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். அந்த கவிதை எழுதிய அதே கவிஞரின் இன்னொரு கவிதையை எழுதி இருக்கிறேன். 

தேய்ந்து போன கனவுகள்

வானவில்லை ரசித்திருந்தேன்

வண்ணத் துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு

வயிற்றுப் பசியாற விளைந்தேன்

பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு

 

நான் செய்வதும் அகழ்வு தான் குடைந்து எடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்…

அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன் தீக்குச்சிகளை

 

வாய்ப்பிருந்தால் கவிதையின் மீதியை எனது அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். 

இப்படிக்கு 

பாலாஜி.

கவிதையைப் படித்து அதிர்ந்து போனாள் பத்மினி. பாதியில் நின்ற அந்த கவிதை அவளுக்குப்  பல செய்திகளைச்  சொல்லியது. திக்குத்தெரியாத இருண்ட காட்டில் தவித்தவளுக்கு கையில் ஒரு அகல்விளக்கைத் திணித்தது போல சந்தோஷமாக இருந்தது. 

பரபரவென்று அவளது கைகள் பேப்பரையும் பேனாவையும் எடுத்து மீதிக் கவிதையை நிறைவு செய்தது.

 

றுநாள் மதியம் உணவின் இடைவேளைக்கு முன்பே டப்பாவாலா  வரும் நேரத்தை தோராயமாக கணித்து வாயிலுகருகேயே சென்று விட்டான் பாலாஜி.

வேகமாக அன்று மதிய உணவினை வாங்கிக்கொண்டு மரத்திற்கு பின்னே இருக்கும் பெஞ்சு நோக்கி விறு விறு என நடக்கத் தொடங்கினான். அவனுக்கு தேவை உணவா? சத்தியமாக இல்லை, பதில், அவன் அவன் அந்த கவிதை மூலமாக கேட்டிருந்த கேள்விக்கு ஒரு பதில்.

அவனை ஏமாற்றாமல் பதிலும் வந்திருந்தது. அந்த கடிதத்தை உடனடியாக பிரித்தான். அதில் முதல் நாள் அவன் எழுதிய கவிதையை நிறைவு செய்து இருந்தாள்  அந்தப் பெண்.

பசை கொண்டு ஒட்டி தீர்க்கிறேன் தீப்பெட்டி அட்டைகளை

புத்தகங்கள் கையில் எடுத்தேன் படிப்பதற்கா

தூசு தட்டி அலமாரியில் அடுக்குவதற்கு

கணக்கில் பெருக்கல் எப்படி என்றேன்

குப்பைகளின் கூட்டல் கற்றுக்கொண்டேன்

பளிங்காகும்படி துடைத்த தரையில் என் பிம்பம் கண்டேன்

தோய்ந்து போன என் உருவில் நான் கண்டது தேய்ந்து போன என் கனவுகளையே!

இன்று முடிந்திருந்த அந்த வரிகள் அடுத்ததாக ஆனந்த அதிர்ச்சியாக கேட்டது 

அன்புக் கவிஞர் மின்னலோனே நலமாக இருக்கிறீர்களா?

பாலாஜியின் கண்களைக்  கண்ணீர் மறைத்தது. சாப்பிடக்  கூடத்  தோன்றவில்லை. பதில்  அவனது வயிறை நிறைந்து விட்டது. ‘மனதுக்கு உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’

கண்களைத் துடைத்துக் கொண்டான்.அவன் பாக்கெட்டில் இருந்த பேப்பரை எடுத்து பதில் எழுதினான்

வணக்கம் பத்மினி அவர்களே நலம் நலம் அறிய ஆவல்.

 

(இன்றைய  அத்தியாயத்தில்  பதிவிட்டிருந்த ‘தேய்ந்து போன கனவுகள்’ என்ற கவிதையை எழுதியது அன்புத் தங்கை முத்துமாரி. முத்து மூர்த்தி என்ற பெயரில் ப்ரதிலிபியில் கவிதைகளைப் பதிவிட்டிருக்கிறார். இந்தக் கவிதையை கதைக்கு இரவல் தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்  முத்துமாரி)

3 thoughts on “உன் இதயம் பேசுகிறேன் – 19”

  1. வாவ் interesting பத்மினி பேர் சொல்லாமலே பாலாஜி க்கு தெரிஞ்சி இருக்கு… aunty ன்3எபிக சொல்லுறது சரி தான் ஆனா பிரசாந்த் மாதிரி ஒரு வக்கிரம பிடிச்ச ஆளுக்கு பயந்து நல்ல ஜீவனுக்கு வயிருக்கு ஏன் வஞ்சனை பண்ணனும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 20உன் இதயம் பேசுகிறேன் – 20

அத்தியாயம் – 20 மெயின் ரோட்டில் வலது புறமாக இருக்கும் சிறிய தெருவின் வழியே நடந்து செல்லவேண்டும், ஐந்து நிமிடங்கள் நடந்தபின் ஒரு பெரிய சாக்கடை, முன்பு ஒரு காலத்தில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது கழிவு

உன் இதயம் பேசுகிறேன் – 7உன் இதயம் பேசுகிறேன் – 7

அத்தியாயம் – 7 மறுநாள் காலை ராட்சனை போலத் தன்னருகே குறட்டை விட்டவண்ணம்  உறங்கும் பிரஷாந்தைக் காணவே எரிச்சலாக இருந்தது பத்மினிக்கு.  இந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லைதான். பிறந்த வீட்டுக்கு சென்றால் பாராட்டி சீராட்டி வரவேற்கவா போகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு

உன் இதயம் பேசுகிறேன் – 14உன் இதயம் பேசுகிறேன் – 14

அத்தியாயம் – 14 அது என்னவோ தெரியவில்லை காலையிலிருந்து பாலாஜிக்கு நிற்க முடியாத அளவிற்கு வேலை அடுக்கடுக்காக அணிவகுத்து நின்றது. அடுத்த வாரத்துக்கான சோப்புகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை அதனை விசாரிக்க சொல்லி ஓனர்