அத்தியாயம் – 18
நன்றாக தூங்கி எழுந்ததும் அமாவாசைக்கு சற்று காய்ச்சல் விட்டது போல் தோன்றியது. மூன்று நாட்களாக வீட்டுக்குள்ளேயே சுத்தியது வேறு அவனுக்கு அடைத்து போட்டார் போல் இருந்தது.
இதை என்ன சுற்றுவது? மிகச்சிறிய ஹால் மூன்று பேர் படுத்தால் ஹாலே ரொம்பி விடும். அதன் பின்னர் அதே சைஸுக்கு ஒரு ரூம். அந்த ரூமை பாதியாக தடுத்து ஒரு ஓரத்தில் அடுப்பை வைத்து சமையலறை போன்று ஒரு ஏற்பாடு பண்ணி இருந்தனர்.
தடுப்புக்கு மறுபுறம் இவனது படுக்கை அறை இந்த இரண்டு அறைக்குள்ளுமே எவ்வளவு தான் சுற்றி வருவான்?
காய்ச்சல் அசதி சற்று குறைந்ததுமே அவனுக்கு வெளியே சென்று காற்று வாங்கி வரவேண்டும் போல இருந்தது.
சற்று நேரம் யோசித்து விட்டு ‘சரி நம்ம பாலாஜிக்கு சாப்பாடு தந்துட்டாங்களான்னு லட்சுமி விலாசுக்கு போய் கேட்டுட்டு வரலாம்’ என்று கிளம்பினான்.
வெளிய கிளம்பு முன் அவனது வீட்டில் ஒரு ஓரமாக ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பிள்ளையாரை கும்பிட்டுக் கொண்டான்.
பிள்ளையாரை கும்பிடும் போது அவனுக்கு பாலாஜியின் நினைப்பு வந்தது.
அவனும் பாலாஜியும் சிறு வயதில் இருந்து தோழர்கள் .ஒன்றாக படித்தவர்கள் அதாவது அவன் படித்தான். இவன் அதே பள்ளியில் அதே வகுப்பிற்கு சென்று வருவான்.
அப்போதே பாலாஜியின் கள்ளமில்லாச் சிரிப்பு ஒரு நெருக்கத்தை இருவருக்குள்ளும் ஏற்படுத்தியது. அது இங்கு மும்பை வந்தும் கூட தொடர்கிறது
நன்றாக படிக்கும் பாலாஜியும் ஊர் சுற்றும் அமாவாசையும் எப்படி இன்று வரை நண்பர்களாக இருக்கிறார்கள் என்பது விளங்க முடியாத புதிர் தான்.
பிள்ளையாரை கும்பிடும் போது ஏன் பாலாஜி நினைவுக்கு வரவேண்டும்? அதுவும் ஒரு காரணமாகத்தான் பாலாஜிக்கு பிள்ளையாரை விட முருகரைத் தான் மிகவும் பிடிக்கும். அவனது வீட்டில் கூட முருகர் படத்தை தான் பிரதானமாக மாட்டி வைத்திருக்கிறான். ஏதாவது வேலை செய்யும் பொழுது அவன் முருகரைக் கும்பிட்டு விட்டே தொடங்குவான்.
“எந்த வேலையும் ஆரம்பிக்கிறப்ப கணேசன் தாண்டா முதல்ல கும்பிடணும்.பிள்ளையார் என்னடா பாவம் செஞ்சாரு”
“இந்த முருகரைப் பாரு. எப்படி பால் வடியும் முகம். இவரை ஏமாத்திட்டு எப்படிடா சிவனும் பார்வதியும் ஞானப்பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தாங்க”
“பிள்ளையார்தான் அம்மா அப்பா உலகம்னு சுற்றி வந்தாரு. பழத்தை வாங்கிட்டாரு”
“அப்ப உலகம் முழுக்க மயில்வாகனத்தில் சுத்தி வந்த முருகனோட உழைப்புக்கு என்ன பலன்? இப்ப பக்கத்திலேயே உட்கார்ந்து அம்மா அப்பா கிட்ட மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் பண்ணி பழத்த வாங்குற பிள்ளை புத்திசாலி பிள்ளை… அவர்கள் சொன்ன வேலையை, சொன்ன சொல் மாறாம முடிச்சுட்டு வந்த பிள்ளை யோசிக்கத் தெரியாத புள்ளையா?”
“நீ சொல்றதுக்கெல்லாம் எனக்கு விடையே தெரியலடா. நான் கதையை அப்படியே கேட்டு அதுதான் சரின்னு நினைச்சு வளர்ந்தவன். உன்னை மாதிரி எல்லாம் எனக்கு சிந்திக்க தெரியாது. இப்ப நீ என்ன சொல்ற, பிள்ளையார் செஞ்சது தப்புன்னு சொல்றியா?”
“இந்த மாதிரி போட்டி வச்சது சிவனும் பார்வதியும் செஞ்ச தப்புன்னு சொல்றேன். பிள்ளைங்க ஒருத்தருக்கு ஒருத்தர் எதுக்குடா காம்பெடிஷன் உருவாக்குறாங்க? இப்ப அவங்கள ஒரு முன் மாதிரியா எடுத்துக்கிட்டு மனுஷ பதர்கள் எல்லாரும் அண்ணனை மாதிரி படிக்கல, தம்பிய மாதிரி படிக்கல, அண்ணனை மாதிரி டான்ஸ் ஆடல, அக்காவ மாதிரி பாட்டு பாடல அப்படின்னு கம்பேர் பண்ணிக்கிட்டே இருக்காங்க இல்ல. இப்படி பேசிப் பேசியே தங்களை அறியாமலேயே பிள்ளைகளுக்குள்ள ஒரு போட்டியை உருவாக்கிட்டு இருக்காங்க”
“டேய் பாலாஜி நீ சொல்றதப் பார்த்த சிவனையும் பார்வதியும் செஞ்சது தப்பு அப்படின்னு சொல்ல எனக்கே தோணுதுடா. இதுக்கு மேல இதைப் பத்தி உன்கிட்ட பேசினா நானும் முருகன் போட்டோ வச்சு கும்பிட ஆரம்பிச்சிடுவேன்”
” இது வெறும் பழம் பத்தி மட்டும் இல்லையே அமாவாசை. ஒரு அம்மா அப்பாவே ஒரு பிள்ளைக்கு வஞ்சனை பண்ணிட்டு இன்னொரு பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணலாமா? அப்பகூட என் முருகன் என்ன செஞ்சான்? எதிர்த்து சண்டை போடாமல் அமைதியா போயி பழனி மலையில் உட்கார்ந்துகிட்டான். பழிவாங்கலடா அவன் கோபத்தை அவனுக்குள்ளே மனசுக்குள்ள அடக்கிட்டு போய் ஒரு சித்தனா மாறிட்டான்”
ஓ அதனாலதான் நான் பழனி மலை சித்தர்கள் மலை ஆயிடுச்சோ கோபம் வருத்தம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அடக்கி முருகன் அங்கு சித்தனவே மாறி உக்காந்துட்டானோ என்று அமாவாசையும் அடிக்கடி சிந்திப்பதுண்டு.
இப்படி எல்லாம் வித்தியாசமாக சிந்திப்பவன் தான் பாலாஜி அதனால்தான் அப்படி பெரிய கவிஞராக உருவானான் போலும். கவிதை எழுதுவான், கதைகள், கட்டுரை எழுதுவான்.
அவனைப் பார்த்து எப்பொழுதுமே அமாவாசைக்கு பிரமிப்பு தான். படைப்பாளிகளுக்கு இருக்கும் மென்மையான மனசு பாலாஜிக்கும் உண்டு. சற்று மொத்தமாக தோல் இருந்தால் இந்த உலகத்தில் பெற்றவர்களாலும் கூட பிறந்தவர்களாலும் சுற்று சுற்றி இருப்பவர்களாலும் ஏற்பட்ட அல்லது இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அநியாயங்கள் நடந்திருக்காது என்று கூட நினைத்திருக்கிறான்.
அவனுக்கு தனது நண்பன் பாலாஜியின் வாழ்க்கையை பொருத்தவரை ஒரே ஒரு வேண்டுதல் தான். இந்த மென்மையான மனசுக்காரனுக்கு ஏற்ற வலிமையான போராளிப் பெண் மனைவியாக வேண்டும்.
நினைத்துக் கொண்டே லட்சுமிபவன் இருந்த இடத்தை அடைந்து விட்டான். அவன் நினைத்ததற்கு மாறாக ஹோட்டல் மூடி இருந்தது.
நல்ல பிசினஸ் நேரமாச்சே… இப்ப போய் ஏன் ஹோட்டல் மூடிக் கெடக்குது. வழக்கமாக லட்சுமி பகவனில் பண்டிகை நாள் சனி ஞாயிறு எதற்கு மூட மாட்டார்களே 365 நாட்களும் அவர்களுக்கு கடை நடந்தாக வேண்டும்.
ஒருவேளை ஓனருக்கு ஏதாவது உடம்பு முடியவில்லையோ என்று எண்ணிக் கொண்டே ஓனர் இருக்கும் தெரு பக்கமே மெதுவாக நடைபோட்டான். அவ்வப்போது ஓனரைப் பார்த்திருக்கிறான். ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசி இருக்கிறான். முகம் பரீட்சயமாகும் அளவுக்குத் தெரிந்தவர் தான்.
அந்த இருட்டு வேளையில் அவரது வீட்டின் அருகே சென்றபோது, அவனது நல்ல நேரம் ஓனரே எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்.
“என் ஃப்ரெண்ட் பாலாஜிக்கு சாப்பாடு கட்டிட்டு போனா அதப் பத்தி விசாரிச்சுட்டு வர சொன்னான் அதுதான் இந்த பக்கம் வந்தேன். என்ன சார் ஹோட்டல் மூடிக் கிடக்கு?”
அவனது கையைப் பற்றிக் கொண்டவர் ” தம்பி, உங்க பிரண்டு உடம்புக்கு எதுவும் இல்லையே… நல்லா இருக்காரா? அவருக்கு ஏதும் ஆகலையே”
குழம்பிப் போய் அவரைப் பார்த்தான் “என்ன சார் ஆச்சு? ஏன் இப்படி கேக்குறீங்க”
“இந்த சாமா என்ன செஞ்சான்னு தெரியல. சாம்பார்ல பல்லி விழுந்திருச்சுன்னு சொல்லிக்கிறாங்க. சாப்பாடு சாப்பிட்ட 15, 20 பேருக்கு வாந்தி பேதின்னு ஹோட்டலை மூட சொல்லிட்டாங்க.
விஷயம் கேள்விப்பட்டது சாமா ஊர விட்டு ஓடிட்டான். அந்த கேஸ் விஷயமா அதிகாரிகள பாக்க ராப்பகலா அலைஞ்சுட்டு இருக்கேன். தம்பி உங்க பிரண்டுக்கு ஒன்னும் ஆகலையே”
“ஒன்னும் ஆகல சார். அவன் நல்லாதான் இருக்கான். சாப்பாடு ஏன் வரலைன்னு கேட்கத்தான் என்னைய விசாரிச்சுட்டு வர சொல்லி இருப்பான் போல இருக்கு”
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார். “அப்பாடி அவருக்கு ஒன்னும் ஆகல. தம்பி இந்தாங்க இந்த காசை புடிங்க. அவர் கொடுத்து அட்வான்ஸ். ஹோட்டல் எல்லாம் சரியாயிட்டு ஒரு பிரச்சனையும் இல்லன்னு தெரிஞ்சதும் மறுபடியும் சாப்பாடு தர ஆரம்பிக்கிறேன் தம்பி. அதுக்கு இன்னும் ஒன்னு ரெண்டு மாசம் ஆகும் அதுவரைக்கும் உங்க பிரண்டை எங்களை மன்னிச்சுக்க சொல்லுங்க”
ஆவென்று வாயை பிளந்த வண்ணம் ஓனர் சென்ற திசையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அமாவாசை ” டேய் பாலாஜி இந்த சாப்பாடு கிடைக்காதது உனக்கு துரதிஷ்டமா இல்ல அதிர்ஷ்டமா?”
Wow awesome