“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க”
வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா.
“மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே பையன் வரான். அவனுக்கு நம்ம பொண்ண புடிக்கணும். நம்ம பொண்ணுக்கு அவன பிடிக்கணும். அப்புறம் எந்த குளறுபடியும் இல்லாம கல்யாணம் நிச்சயம் ஆகணும். அப்புறம் கல்யாணம் நடக்கணும். இத்தனையும் நடந்ததுக்கு அப்பறம் தான் அவன் நமக்கு மாப்பிள்ளை. அதுவரைக்கும் பையன் தான்”
“ஆரம்பத்திலேயே அபசகுணமா பேசாதீங்க. இத்தனையும் நடந்துரணும்னு கருமாரியம்மனுக்கு வேண்டுதல் வச்சிருக்கேன்”
“நீ பாட்டுக்கு பெருசா ஆகாயத்தில் கோட்டை கட்டாத. பையன் ரொம்ப பெரிய இடம் நமக்கு ஒத்து வருதான்னு பாக்கணும்”
“டௌரி நிறைய கேப்பாங்கன்னு பயப்படுறீங்களோ”
“அதுதான் எந்த காலத்திலையோ ஒழிஞ்சு போயிருச்சே. இப்பல்லாம் பொண்ணுக்கும் பய்யனுக்கும் ஏதோ பிரீக்குவன்சி ஒத்து வரணும்னு சொல்றாங்க. இதெல்லாம் சரியா இருந்தா தான் கல்யாணம்”
“இத விட்டுட்டீங்களே எல்லாம் சரியா இருந்தாலும் கல்யாணத்துக்கு நடுவுல கேப் இருந்துச்சுன்னா பையனை கலைச்சிட்டு போயி வேற ஒரு இடத்துல கல்யாணம் பண்ணி வைக்க துடிக்கிற பொறாமைக்கார உறவுக்காரர்கள் வேற”
“எல்லா தடையும் தாண்டனும். சரி நான் போய் ஸ்னாக்ஸ் கூல்டிரிங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்”
“நான் 50 கிராம் அரிசி போட்டு கொஞ்சமா சக்கரை பொங்கலும், 4 பஜ்ஜியும் செய்றேன். ஒருவேளை பையன் ட்ரெடிஷனல் புட் வேணும்னு கேட்டார்ன்ன”
வீடு எங்கும் பன்னீர் ரோஜாவின் நறுமணம் . பால்கனியிலோ லாவண்டர் பூக்கள் பூத்துக் குலுங்கின. மனைவி இன்று தந்திருந்த லிஸ்டில் உள்ள பொருள்களை வாங்க கண்டிப்பாக ஒரு லட்சமாவது செலவாகும்.
வீட்டின் பொருளாதார நிலைமை தெரியாமல் செலவை இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் மனைவியையும் பெண்ணையும் நினைத்து எரிச்சல் பட்டவாரே சூப்பர் மார்க்கெட் சென்றார்.
டாக்டர்கள் இன்ஜினியர்கள் வக்கீல்கள் என்று என்று வந்திருந்த பயோடேட்டாக்கள் நூற்றுக்கணக்கில் அவரது லேப்டாப்பில் போல்டரில் உறங்குகிறது இதில் ஒரு பய்யனை கூட அவரது பெண் மேனகாவிற்கு பிடிக்கவில்லை. தகுதிக்கு மீறின இடத்தில்தான் அவளது மனது சென்றது.
கடவுள் புண்ணியத்தில் அந்தப் பையனுக்கும் இவளை போட்டோவில் பார்த்து மற்றும் பயோடேட்டாவை பார்த்து பிடித்து விட்டது நேரில் பார்த்துவிட்டு இன்று முடிவினை சொல்வதாக சொல்லி இருக்கிறான் அவனை இம்ப்ரஸ் செய்வதற்கு என்று மட்டும் 5 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள்.
சந்திராயன் 50 என்ற செய்தியை கேட்டவாறு கடையில் எடுத்த பொருள்களை பேக் செய்து கொண்டிருந்தார்.
அப்போதுதான் எதிர்பாராத விதமாக அவரது நண்பர் நரசிம்மனை சந்தித்தார் நரசிம்மன் சில வருடங்களாக மேனகாவை அவரது பையனுக்கு தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன ஸ்வீட்டு காரம் எல்லாம் பார்க்கிறப்ப வீட்ல மேனகாவ பொண்ணு பாக்க வர்ற மாதிரி இருக்கு. பரவால்ல, பொண்ணு தானே பார்க்க வராங்க கல்யாணம் இன்னும் முடியலையே.
என் பையனுக்கு இப்ப நிலாவுல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. ஸ்பவுசுக்கும் ஸ்பான்சர் பண்றதா சொல்லி இருக்காங்க. இப்ப கூட லேட் இல்ல, உன் பொண்ணுக்கு இந்த இடம் சரிப்பட்டு வரலைன்னா சொல்லு, ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணலாம்” என்று பெரிய மனதுடன் சொல்லிச் சென்றார் நரசிம்மன்.
அப்பாடி பிடிக்கலைன்னு சொல்லிட்டா நரசிம்மோட பையனை பார்க்கலாம் என்று திருப்தியுடன் வீட்டிற்கு சென்றார். மாலையில் சென்னைக்கு சார்ட்டட் பிளைட்டில் வந்து இறங்கி, அங்கிருந்து பின்னர் ஹெலிகாப்டரில் வந்து மாடியில் இருக்கும் ஹெலிபேடில் இறங்கி அவரது அப்பார்ட்மெண்ட்டிற்கு பெண் பார்க்க வந்தான் மாப்பிள்ளை கணேஷ்.
பையன் மேனகாவை விட கொஞ்சம் கலர் கம்மி தான். உயரம் கூட ரொம்ப உயரம் இல்லை இருந்தாலும் அவனது வசதி அவர்கள் அனைவரின் கண்ணையும் மறைத்து விட்டது.
அரை மணி நேரத்திற்குள் பெண் பார்க்கும் வைபவம் முடிந்து கல்யாணமும் நிச்சயமாகிவிட்டது. வரும் ஞாயிறு திருமணம் முடித்து விடலாம் என்று சொல்லிவிட்டான் கணேஷ். இன்விடேஷன், வெர்சுவல் இன்வைட், மேரேஜ் ஹால் புக்கிங்….. என்று பெரிய லிஸ்ட்களாக இருந்த வேலைகள் அனைத்தும் அவனது செல்வாக்கால் சட்டு சட்டு என்று நடந்தது.
சும்மாவா பின்னே, இந்தியாவில், காவிரி டெல்டா பாசனத்தில் 10 ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வரும் பில்லினர் விவசாயி ஆயிற்றே. அதுவும் 10 ஏக்கரிலும் அரிசியை விளைவிக்கிறாராம். பெரும் விவசாயி என்பதால் தமிழக அரசாங்கமே முன்னின்று அவரது நிலத்தை பாதுகாக்க ஹை லெவல் செக்யூரிட்டியை வழங்கி இருக்கிறதாம்.
“மேனகா, சொந்தக்காரங்க கிட்ட மாப்பிள்ளை 10 ஏக்கர் நிலம் சொந்தமா வச்சு அரிசி விவசாயம் பண்றாருன்னு சொல்லிராத ஊர் கண்ணே பட்டுரும். ஒரு ஏக்கர், 2 ஏக்கர்னு சொல்லு போதும்” என்று ரத்னா மகளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள்.