அத்தியாயம் 17
பாலாஜிக்கு லட்சுமி விலாசின் போன் நம்பரை அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை.
‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே எழுதிக் கொண்டு வந்தோம். ஏன் யாரும் எடுக்க மாட்டேங்கிறாங்க’ என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு இப்பொழுது மதிய உணவு பிரச்சனை என்ற தலைவலி போய், திருகுவலி வந்தது போல இருந்தது. லட்சுமி விலாசிடம் சாப்பாடு அரேஞ்ச் பண்ணாமல் இருந்தபோது கூட இன்று மதியம் என்ன சாப்பாடு கிடைக்கும்? எங்கு எங்கு போய் சாப்பிடலாம்? என்ற ஒரே கவலை தான்.
ஆனால் இப்பொழுது சாப்பாடு எங்கிருந்து வருகிறது? அருமையாக ருசியாக வரும் சாப்பாடு கூட தனக்கானது இல்லையே? என்ற குற்ற உணர்ச்சி அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.
அவனால் இந்த பசியை கூட எப்படியாவது தாங்கிக் கொள்ள முடியும் இந்தக் குற்ற உணர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதற்கு வடிகாலாகத்தான் லட்சுமி விலாசைத் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறான், பலன் தான் இல்லை.
அடுத்ததாக அமாவாசையை தொடர்பு கொண்டால் என்ன என்று யோசித்து அவனை அழைத்தான்.
“என்னடா பாலாஜி இப்ப கால் பண்ற? வழக்கமா சனிக்கிழமை தானே கூப்பிடுவ”
“இல்லடா லட்சுமி விலாஸ்ல சாப்பாடு எனக்கு அனுப்புறாங்களா இல்ல மறந்துட்டாங்களான்னு கொஞ்சம் கேட்டு சொல்றியா. நானும் நம்பரைப் போட்டு பார்க்கிறேன் யாரும் எடுக்க மாட்டேங்கறாங்க”
“அப்படியா, என்னன்னு தெரியலையே… சரி, நான் இந்த வார க் கடைசியில் போய் பார்க்கிறேன்”
“வாரக் கடைசில தான் நானே போய் பார்த்திடுவேனே. ஏன்டா நடுவுல போய் பார்க்க முடியாதா?”
“நான் சொன்னா நீ திட்டுவேன்னுதான் சொல்லல. ரெண்டு நாளா காய்ச்சல் டா. அந்த தண்ணில நின்னு துணிய புழிய போட்டு கழுவுனதுல, கை காலெல்லாம் வெந்து புண்ணு ஜாஸ்தி ஆயிடுச்சு. மருந்து தடவியும் போகல.
அதனால டாக்டர் ரெண்டு நாளா ஊசி போட்டுட்டு இருக்காரு காய்ச்சல் நிற்கிற வரைக்கும் வேலைக்கு போக கூடாதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாரு”
“அடப்பாவமே, நான் தான் படிச்சு படிச்சு சொன்னேன் டா. அவ்வளவு காட்டம் அதிகமான இடத்தில போய் வெறும் கையிலே நிற்கிறப்ப தோல்ல பட்டு புண்ணாகிடும் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்”
“சொல்லியிருக்கடா, தொழிலாச்சே வேற என்ன பண்றது?”
“கிளவுஸ் போட்டுகிறது காலுக்கும் ஏதாவது போட்டுட்டு வேலை செய்றது”
“கால்ல பிளாஸ்டிக் கவரை கட்டிட்டலாம் நின்னு பார்த்தேன். தண்ணி உள்ளுக்குள்ள புகுந்துருச்சு. அப்புறம் வழுக்கி வேற விட்டுருதுடா. மண்டை கிண்டல் அடிபட்ட யாரு புள்ள குட்டிய பாத்துக்குறது?”
“அமாவாசை, நீ சொல்றது எனக்கு புரியுது. இதுக்கு ஒரே தீர்வு தான். ஒன்னு வாஷிங் மெஷின் இருக்கிற கம்பெனியா போய் வேலைக்கு சேரு, இல்லாட்டி இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போ”
“அதே தாண்டா எனக்கு ஒரு ரெண்டு நாளா நினைப்பு. என் பொண்டாட்டி வேற அழுவுறா. பாக்கலாம், அடுத்த வாரத்தில் இருந்து வேற எங்காவது வேலை கிடைக்குதான்னு முயற்சி பண்ணி பாக்குறேன். பிரசவ சமயம் வேற நெருங்கிருச்சு. இப்ப வேலையை விட்டா ஆஸ்புத்திரி செலவுக்கு எங்க போறது? இப்போதைக்கு இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்”
போனை வைத்தவுடன் அமாவாசை நிலமையை கண்டு, தனது மதிய சாப்பாடு பிரச்சனை மிகச்சிறியதாகவே பட்டதால் தனது வேலைகளை பார்க்கத் தொடங்கினான் பாலாஜி.
அன்று மதியம் வம்படியாக வேலையை எடுத்து வைத்துக்கொண்டு உணவு நேரத்தையே மறந்து விட்டது போல அமர்ந்திருந்தான். இருந்தும் உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு, ‘பாலாஜி பசில உயிர் போகுதுடா. போய் தான் பாரேன், சாப்பாடு உனக்கு வந்திருக்குமா என்று பாரேன்’ என்று அவனைக் கெஞ்சியது
‘இங்க பாரு சாப்பாடு தெரிஞ்சு வந்திருந்தாலும், தெரியாம வந்திருந்தாலும் அது உனக்கானது கிடையாது. உனக்கான சாப்பாட்டை மட்டும் தான் நீ சாப்பிடலாம் .தெரியாம வந்த சாப்பாட்டத் தவறி கூட போய் தொடக்கூடாது’ என்று தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டான்.
பாலாஜி தனக்குத்தானே ஆயிரம் கட்டுப்பாடுகள் விடுத்துக் கொண்டாலும், அன்று மதியம் அவன் பத்மினியின் கையால் சமைத்த உணவை உண்ண வேண்டும் என்பதே விதி போல இருக்கிறது.
விதி என்னும் மகா சமுத்திரத்தில் ராமரும், கிருஷ்ணரும், பாண்டவர்களும், கௌரவர்களுமே சிக்குண்டு தவித்த போது இந்த அப்பாவி சிறுவன் பாலாஜி மட்டும் தப்பித்து விடுவானா என்ன?
வம்படியாக வேலையில் மனதினை ஈடுபடுத்திக் கொண்டு மதிய உணவு வேளையில் பாலாஜி அமர்ந்திருந்த போதும், அவனுக்கான டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு வந்து நின்றான் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவன். முதல் நாள் அவனுடன் அமர்ந்து சாப்பிட்டவன்தான். இப்படி எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றுதான் முதல் நாளே பாலாஜியுடன் உணவு உண்ண வைத்து டிபன் பாக்ஸை அடையாளம் காட்டியதோ அதே விதி.
“பாலாஜி சார், என்னோட டிபன் பாக்ஸ் எடுக்க போனேன். அப்படியே உங்க உங்க பாக்ஸையும் நீங்க எடுக்காம வச்சிருந்ததைப் பாத்து கேட்டன். செக்யூரிட்டி என் கையோட கொடுத்து அனுப்பிட்டார்” என்று அவனது கைகளில் கொடுத்துவிட்டு
“வாங்க சாப்பிடலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல காலி பாக்ஸ் வாங்க வந்துருவான். சீக்கிரம் சாப்பிடலாம்” என்றும் அழைத்தான்
தனக்கு அதே வீட்டில் இருந்து உணவு மறுபடியும் வந்திருப்பது டிபன் பாக்ஸ் வைத்து அடையாளம் கண்டு கொண்டான் பாலாஜி. அவனுக்கு ஆச்சரியம்? என்ன மறுபடியும் வந்து இருக்கிறது? இது எனக்கானது இல்லையே, ஒருவேளை லட்சுமி விலாசிலிருந்து தான் வந்திருக்கிறதோ தான்தான் லெட்டர் எல்லாம் எழுதி குழப்பி விடுகிறேனோ?” என்று கேள்வியோடு உணவை எடுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றான்.
உணவைப் பிரித்ததும் அவன் கண்முன்னால் சேனைக்கிழங்கு வறுவல், அருமையான எலுமிச்சம்பழ சாதம் மற்றும் கீரை கூட்டு, இரண்டு சப்பாத்திகள்.
‘என்னவாக வேண்டும் என்றாலும் இருந்துவிட்டு போகட்டும். நாம்தான் நமக்கு உரியது இல்லை என்று சொல்லிவிட்டோம். அப்படியும் அனுப்புகிறார்கள் என்றால் அது அவர்களது பிரச்சனை. நாம் சாப்பிட்டுவிடலாம்’ என்று மானம் கெட்ட மனது பாலாஜியை தூண்டியது.
“சீக்கிரம் சாப்பிடுங்க சார்” என்று மற்றவர்கள் அவசரப்படுத்த, வேறு வழி இன்றி எலுமிச்சை சோறை ஒரு துண்டு சேனைக்கிழங்கு வறுவலுடன் சேர்த்து முதல் கவளத்தை எடுத்து வாயில் வைத்தான். அவ்வளவுதான் அதன் சுவையில் மயங்கி அடுத்தது அடுத்தது என்று முழு டிபன் பாக்ஸும் காலியானது.
மூன்றாவது அடுக்கில் இருந்த மெத்து மெத்து சப்பாத்தியை அவனால் முழுமையாக ரசித்து உண்ண முடியவில்லை. ஏனென்றால் மூன்றாவது அடுக்கின் கீழே ஒரு லெட்டர் இருந்ததை பார்த்து விட்டான். ஆனால் அதனை கூட அமர்ந்து உண்பவர்களுக்கு எதிரே படிக்க முடியாதே எப்படி படிப்பது என்று யோசித்தவன்,
“காலி டிபன் பாக்ஸத் தாங்க. நான் போய் செக்யூரிட்டிகிட்ட குடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களது காலி பாத்திரங்களையும் வாங்கிக்கொண்டு வாயிலை நோக்கி நடக்க தொடங்கினான்.
சற்று வெளியே வந்ததும் அந்த சீட்டினை எடுத்து அவசர அவசரமாக படிக்க ஆரம்பித்தான்.
வணக்கம் திரு.பாலாஜி அவர்களே இது கண்டிப்பாக உங்களுக்கான உணவு இல்லை.ஆனால் எப்படியோ உங்களை வந்தடைந்து விட்டது. நேர்மையாக அதை என்னிடம் தெரிவித்ததற்கு எனது நன்றி. ஆனாலும் எனக்குத் தரப்பட்ட விலாசம் இதுதான் என்பதால் இதற்கு நான் உணவு அனுப்பியே ஆக வேண்டும்.
நீங்கள் இதனை சாப்பிட்டால் பசியோடு இருக்கும் ஒருவரின் மனதையும் வயிற்றையும் திருப்தி படுத்தினேன் என்ற நிம்மதி எனக்குக் கிடைக்கும். உங்களுக்கு இந்த உணவை சாப்பிட இஷ்டமோ அல்லது வாய்ப்போ இல்லை என்றால் பசியோடு இருக்கும் வேறு யாருக்காவது தந்துவிடவும்.
மனதார ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முகமூடி இல்லாத ஒரு மனிதரை வாழ்க்கை முதன்முறையாக எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது எனக்கு நான் பல காலத்திற்கு முன்பு படித்த ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறது.
வலியவனுக்கு பணம் எனும் முகமூடி
எளியவனுக்கு திருப்தி எனும் முகமூடி
குழந்தைகளுக்கு மறதி எனும் முகமூடி
வஞ்சகனுக்கு பழி எனும் முகமூடி
ஆத்திரக்காரனுக்கு பிறர் செய்யும் குற்றமே முகமூடி
அறிவார்ந்தவனுக்கு அமைதி எனும் முகமூடி
மனிதர்களும் பலவிதம்
அவர்தம் முகமூடிகளும் பலவிதம்
நல்லவையாய் சிலதும்
தீயனவாய் சிலதும்…
உள்ளே ஒரு முகம்
வெளியே ஒரு பூச்சு
( பிகு – இந்த கவிதையினை கதைக்காக தந்த எனது அன்பு தங்கை முத்துமாரிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்)
கவிதையைப் படித்ததும் பாலாஜியின் முகத்தில் ஆச்சரியம் அதிர்ச்சி எல்லாம் ஒரு சேர கலந்து ஹை வோல்டேஜ் மின்னல் ஒன்று தாக்கியதை போல் தாக்கியது.