Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 14

உன் இதயம் பேசுகிறேன் – 14

அத்தியாயம் – 14

அது என்னவோ தெரியவில்லை காலையிலிருந்து பாலாஜிக்கு நிற்க முடியாத அளவிற்கு வேலை அடுக்கடுக்காக அணிவகுத்து நின்றது.

அடுத்த வாரத்துக்கான சோப்புகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை அதனை விசாரிக்க சொல்லி ஓனர் பாலாஜியிடம் சொல்லி இருந்தார்.

அது தவிர பேங்குக்கு வேறு செல்ல வேண்டி இருந்தது. பாலாஜியை விட நம்பிக்கையான ஆள் அவருக்கு வேறு யார் கிடைப்பார்கள். லட்சக்கணக்கான பணத்தை கூட அவனிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரச் சொல்லுவார். அதே போல் அன்றும் வங்கி வேலையை முடித்து வரச் சொன்னார்.

பேங்க் எவ்வளவு தூரம் இருக்கிறது… போய்விட்டு மதியம் சாப்பாட்டிற்குள் வந்து விட முடியுமா என்று ஒரே பதட்டம் பாலாஜிக்கு.

வெறும் ஒருவேளை சாப்பாடு மட்டும் என்றால் பரவாயில்லை என்று வங்கிக்கு அருகிலேயே இருக்கும் ஏதாவது விடுதியில்  சாப்பிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். டப்பாவாலா  அப்படியே உணவினை லட்சுமி விலாஸிர்க்கு எடுத்துச்  செல்லப் போகிறான் அவ்வளவுதானே.

ஆனால் இது உணவிலே தாண்டி ஏதோ ஒன்று என்னவோ ஒன்று, அவன் மனதிற்கு நெருக்கமாக நேற்று மதியத்தில் இருந்து ஒட்டிக்கொண்டதே என்னவாக இருக்கும்!!!

ருசி அவனை பிரமிக்க வைத்தது உண்மைதான். உணவை கட்டிக் கொடுத்திருந்த விதமும், சீராக  வெட்டப்பட்ட காய்கறிகளும் பாராட்டப்பட வேண்டியதுதான்.

ஆனால் அதையும்  தாண்டி அந்த உணவுடன் அவனே எதிர்பாராத விதமாக வந்திருந்த அந்த சிறிய துண்டு காகிதம், அதில் எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பசுமையாய் கோந்து போட்டது போல் ஒட்டிக்கொண்டு நிற்கிறதே!

கையெழுத்து கூட குண்டு குண்டாக, ஒரு புறமாக  சாய்ந்து, சீராக முத்துக்களை கோர்த்தது போல, அவசரமாக எழுதினாலும் அதில் ஒரு அழகுணர்ச்சி. இது போன்ற கையெழுத்து பெண்களுக்கு தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவனுக்கு தெரிந்த லட்சுமி விலாசில்  பெண்கள் யாரும் வேலை பார்க்கவில்லை.

அதை நினைக்க நினைக்க அவனுக்கு அந்த உணவின் மீது ஆர்வமும் அதைவிட அந்த கடிதம் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்க்கும் பேராவலும் உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் தோன்ற ஆரம்பித்தது.

பேங்கிலிருந்து  வெளியே வந்த போது வேகமாக ஓடி வந்து அவனை ஒரு நபர் மறைத்தார். அவரை அவன் எங்கோ பார்த்திருக்கிறான் ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

“எப்பா நில்லு நில்லு… நீ பாலாஜி தானே”

“ஆமா நீங்க யாரு தெரியலையே”

“கௌரி சோப் கம்பெனியில் தானே வேலை பாக்குற”

“ஆமாங்க”

“நான் மகேஸ்வரன். கங்கால வேலை பாக்குறேன்”

கங்கா அவர்களது போட்டி சோப்பு கம்பெனி. அதில் வேலை பார்க்கும் நபருடன் பேசுவது முதலாளிக்குத்  தெரிந்தால் அவ்வளவுதான் அவன்  வேலை.

“அப்படிங்களா உங்களை சந்தித்ததில் சந்தோஷம் வரேங்க”

“அட நில்லுப்பா, நீ பாட்டுக்கு ஓடறதுலே குறியா இருக்க”

“இல்லைங்க வேலை இருக்குது. முதலாளி சீக்கிரம் வரச்  சொல்லி இருக்காரு”

“வேலை இன்னிக்கி இருக்கு. நாளைக்கு இருக்குமான்னு தானே கேள்வி.  உன் முதலாளியோட சொந்தக்காரன் ஒருத்தன் வந்திருக்கான் போல இருக்கு. அவனுக்கு தான் வேலை தர போறதா சொல்லிக்கிறாங்க.  அப்போ உன் வேலை என்ன ஆகும்”

எல்லா விவரமும் தெரிந்து கொண்டுதான் மகேஷ் வாயைப் பிடுங்குகிறார்.

“தெரியலங்க நான் கிளம்பட்டுமா”

“பாலாஜி நம்ம ஊரு பையன்னு ஒரு ஊர் பாசத்துலதான்  தான் கூப்பிட்டு வச்சு பேசிகிட்டு இருக்கேன். அது உன் நன்மைக்காக தான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு கட் பண்ணிட்டு கிளம்பாத”

பாலாஜி அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு நின்றான்

“பாரு பாலாஜி நானும் கங்கா சோப்பில் இருந்து இன்னும் ஆறு மாசத்துல ரிட்டயர் ஆக போறேன். நீ பாக்குற அதே வேலை தான் கங்கால  நான் பாத்துட்டு இருக்கேன். எங்க முதலாளி எனக்கு அப்புறமேட்டு வேலை பாக்குறதுக்கு நம்பிக்கையான ஒரு ஆள தேடிட்டு இருக்காரு.

உன் முதலாளி ஒரு முட்டாள் அவனுக்கு உன்னை மாதிரி நல்ல ஆளுங்கள வச்சுக்க கொடுப்பினை இல்ல. அவன் சொந்தக்கார பையன் நானும் பார்த்தேன் அவனுக்கு அவ்வளவா புத்தி இல்ல. இருந்தாலும் அவனை வச்சுக்கணும்னு நினைக்கிறான்.

நீ மட்டும் சரின்னு சொன்ன என் முதலாளி கிட்ட சிபாரிசு பண்றேன். ஆறு மாசம் கழிச்சு நான் ரிட்டயர் ஆனதும் நீ அங்க சேர்ந்துக்கலாம். கண்டிப்பா என் முதலாளி சம்பளம் அதிகமா தான் தருவாரு என்ன சொல்ற சொல்லு”

என்னடா இது நடுத்தெருவுல நிக்க வச்சு எப்படி ஒரு கேள்வி கேட்கிறார் என்று திகைத்தான் பாலாஜி.

“ரொம்ப நன்றி அண்ணே. ஆனா எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கணும் நான் எதிர்பார்க்கல. முதலாளி நல்லவர் தான் ஆனா அவருக்கு அவரோட சொந்தக்காரருக்கும் வாய்ப்பு கொடுக்கணும்னு ஒரு ஆசை. அதனால தான் இப்படி முடிவெடுத்தாரே தவிர என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் கம்பெனியை விட்டு வர தயக்கமா இருக்கு. அதுவும் நீங்க வேற எங்க போட்டி கம்பெனி. என்ன தான் முதலாளி எப்படி இருந்தாலும் அவங்கள விட்டுட்டு போட்டி கம்பெனியில் சேர்வது நாணயமான செயல் இல்லைங்களே”

“போயா போ. இந்த கம்பெனில ஒரு பத்து வருஷம் வேலை பார்த்து இருப்பியா. நீ வேலைக்கு சேர்ந்ததும் கங்கா சோப்பில் வியாபாரமே படுத்து போயிருச்சு. அந்த அளவுக்கு வளர்ச்சி. உன் முதலாளிக்கு உன் அருமை தெரியலை. அருமை தெரிஞ்ச இடத்தில கூப்பிடுறாங்க அது உபயோகப்படுத்திக்கோ. இன்னைக்கு பதில் சொல்லணும்னு இல்ல இந்தா இதுல என்னோட போன் நம்பர் எழுதி இருக்கிறேன் நல்லா யோசிச்சுட்டு எப்பயாவது என்னை காண்டாக்ட் பண்ணனும்னு நெனச்ச இந்த ஆறு மாசத்துக்குள்ள கூப்பிடு”

“ரொம்ப நன்றி அண்ணே. பிறகு சந்திக்கலாம்”

வேகமாக கிளம்பி ஆட்டோவை பிடிக்க ஓடினான் பாலாஜி.

கௌரி சோப்பு நல்ல சோப்பு கம்பெனி தான். ஆனால் என்னமோ அவனது அதிர்ஷ்டம் அங்கு நிரந்தரமாக இருக்க முடியவில்லை. கங்கா சோப் கம்பெனி கௌரி வளர்ச்சி அடைய அடைய வியாபாரத்தில் சற்று மந்தமானது உண்மைதான்.

அதனாலேயே இவனை போட்டி நிறுவனத்தில்  அழைக்கிறார்கள். ஆனால் இப்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்தை விட்டு விட்டு கங்காவிற்கு சென்றால் சரி வருமா?

‘அட போடா பாலாஜி எப்பொழுது மட்டும் என்ன வாழுது. உன் முதலாளி இத்தனை நாள் வேலை பார்த்தும், உனக்கு ஒரு பதில் சொல்லாம ஒவ்வொரு மாசமும் அடுத்த மாசம் இந்த வேலை நிலைக்குமா நிலைக்காதா என்ற பதட்டத்திலேயே வச்சிருக்கிறாரே அது மட்டும் சரியா?’

சரியோ சரியில்லையோ இப்போதைக்கு எனக்கு சாப்பாடு வேணும். முதலில் சாப்பாடு கட்டி தரும் அவனைப் பற்றி தெரிஞ்சுக்கணும். நல்ல மாதிரியான பய்யனாக தெரிகிறான்.  முடிந்தால் இந்த வாரம் லட்சுமி விலாசிற்கு சென்று அவனை சந்தித்து வரவேண்டும்.

‘ஏன் கடிதத்தில் அத்தனை பயம்? யாருக்கு பயப்படுற? யார் உன்னை என்ன செய்றாங்க? உனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் வேலையை விட்டுட்டு என்னோட வந்துடு . நான் பார்த்துக்கிறேன்’ என்று தைரியம் சொல்ல வேண்டும்.

பாலாஜி உனக்கு அடுத்த மாசம் வேலை இருக்குமா இருக்காதா என்று சொல்ல முடியல அதுல  வேலை செஞ்சிட்டு இருக்கவனையும் கெடுத்து கையோட கூட்டிட்டு வர போறியா? ஆகுற கதையா பேசுடா

இப்படி தனக்குள்ளேயே அவன் இரு நபர்களாக மாறி மாறி பேசிக்கொண்டே வந்ததில் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்ததே தெரியவில்லை.

வாசலில் ஆட்டோ நுழையும் பொழுதே காவலாளியிடம்  உணவுப்  பாத்திரத்தை வாங்கிக் கொண்டான். முதல் நாள் வழக்கமாக சாப்பிட்ட இடத்தில் இன்று ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. சற்று தள்ளி போய் அமரலாம் என்றால் அதற்குப் பின்னாடியே அவன் அலுவலகத்திற்கு வேலை செய்பவனும் வந்து அவனுடன் அமர்ந்து கொண்டான்.

“பாலாஜி சார் அங்க இடம் இல்ல. நீங்க தனியா சாப்பிடுவிங்க அதனால நான் கம்பெனி தரலாம்னு வந்துட்டேன்” என்று சொன்னவனிடம்

‘தம்பி எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கும். அதனை படிக்க வேண்டும் கொஞ்சம் தனிமை வேண்டும்’ என்றா கேட்க முடியும்

கம் என்று அமர்ந்து அலுவலகத்தை பற்றி அவன் பேச பேச உன் கொட்டிக் கொண்டே டிபன் பாக்சைப்  பிரித்தான்

கப கப என்று எரிந்த வயிறுக்கு ஆறுதலாக தயிர் சாதத்தையும் சுரக்காய் கூட்டையும் பார்த்ததும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அப்படி இன்று காரமாக எதுவுமில்லை ஏற்கனவே இருந்த  அசிடிட்டிக்கு அது எண்ணை வார்ப்பது போல் இருக்கும்

காரம் கம்மியாக அந்த வெயிலுக்கு இதமாக சமைக்கப்பட்டிருந்த சாப்பாடு அப்படியே மனதினை மயிலிறகால் வருடி கொடுப்பது போன்று சுகமாக இருந்தது பாலாஜிக்கு

காலையில் கிளம்பி வரும் பொழுது தான் அவனுக்கு அம்மா தந்த மோரும் அதில் போட்டிருந்த இஞ்சி துண்டுகளும் நினைவு வந்தது. ஆனால் அதே போல் இவனும் என்று தயிர் சாதத்தில் சிறிதாக இஞ்சியினை வெட்டி போட்டிருந்தான். செரிமானத்திற்கு அது மிகவும் நன்றாக இருக்கும்.

இன்னொரு அதிசயம் ஒரு தேங்காய் துவையல் வேறு அரைத்து வைத்திருந்தார்கள். தேங்காய் கெட்டுப்போக கூடாது என்று வறுத்து அரைத்து இருப்பார்கள் போலிருக்கிறது. தயிர் சாதத்திற்கு அந்த சுரக்காய் கூட்டும் தேங்காய் துவையலும் தேவாமிர்தம் என்றால் இதுதானோ என்று எண்ண வைத்தது அவனுக்கு.

முத்தாய்ப்பாக ஒரு சிறிய பொட்டணத்தில் இருந்த லேகியம் போன்ற ஏதோ ஒன்று. வாயில் போட்டதும் அது பெருங்காயத்தில் செய்யப்பட்ட லேகியம் என்று கண்டுபிடித்து விட்டான் . அவர்கள் வீட்டில் பாட்டி என்னமோ இப்படி ஒரு லேகியம் செய்து வைத்த நினைவு அவனுக்கு

முதன்முறையாக அவன் மனதில் ‘டேய் பையா, எப்படி பார்த்து பார்த்து என் உடம்புக்கு ஒத்துக்கிற மாதிரி செஞ்சு கொடுத்து அனுப்பி இருக்க. நீ மட்டும் பொண்ணா பொறந்து, அதுவும் எங்க அம்மா கண்ணுல பட்டு இருந்த, உடனே உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க’.

அது பின்னர் தொணதொணவென்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவனை ஒரு வழியாக அனுப்பிவிட்டு அவசர அவசரமாக டிபன் பாக்ஸ் இருக்கு உள்ள ஏதாவது கடிதம் கிடைக்கிறதா என்று தேட துவங்கினான்.

அவனை ஏமாற்றாது அன்றும் ஒரு சிறிய துண்டு சீட்டினைக்  கண்டதும் அவன் மனதில் வெள்ளை உடை தேவதைகள் நடனம் ஆடி சென்றனர்.

வேகமாக கடித்ததில் கண்களை ஓட்டியவனுக்கு முகத்தில் ஒரே குழப்பம் என்னது என்ன கடிதம் இது? எனக்கு வந்தது தானா?

அந்த கையெழுத்து… அவன் மனதில் பதிந்திருந்த அந்த முத்து முத்தான எழுத்துக்கள் இந்த கடிதத்திலும் அச்சுக்  கோத்திருந்தன. கண்டிப்பாக இந்த கடிதத்தை எழுதிய நபர் நேற்று எழுதிய அவரே தான். ஆனால் இது என்ன கடிதம்? யாருக்கு எழுதப்பட்ட கடிதம்? நிஜமாலே எனக்கு வந்தது தானா

மன்னிச்சுக்கோங்க உங்களுக்கு நேத்து செஞ்ச புளி சாதம் ஒத்துக்காதது வருத்தமா இருக்கு. அது சரியாகறதுக்காக இன்னைக்கு தயிர் சாதமும் காரம் கம்மியா கூட்டும் செஞ்சு வெச்சிருக்கேன். செரிமானத்துக்காக விஷ்ணு பிரியா ஆன்ட்டி சாப்பிடற பெருங்காய லேகியம் ஒரு சின்ன உருண்டையும் இன்னொரு கவர்ல போட்டு வச்சிருக்கேன். மத்தியானம் ஒரு வாய் போட்டுக்கோங்க. 

இனிமே உங்க உடம்புக்கு ஒத்துக்கிற மாதிரி பார்த்து சமைக்கிறேன். ராத்திரிக்கு தோசை தான் சாப்பிடுவீங்க இன்னைக்கு மட்டும் இட்லியும் தயிரும் தொட்டு சாப்பிட்டீங்கன்னா உடம்பு சீக்கிரம் குணமாகிடும்.

ராத்திரி தோசை சாப்பிடுவேனா? யாரது விஷ்ணுபிரியா?

படிக்க படிக்க அந்த கடிதம் சத்தியமாக தனக்காக எழுதப்பட்டதில்லை, இந்த உணவும் கூட அவனுக்கானது இல்லை என்ற உண்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக  உணர்ந்த போது பாலாஜியின் இதயத்தை யாரோ பிசைந்தது போல் வலித்தது

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 14”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 4உன் இதயம் பேசுகிறேன் – 4

அத்தியாயம் – 4  கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடி அலுத்த  ப்ரஷாந்த்துக்கு  சிலபல விட்டுக்கொடுத்தலுக்குப்  பிறகு வேலை கிடைத்தது..வீட்டை விட்டு வெகு தொலைவு தள்ளியிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் விற்பனைப் பிரிவில் அவனுக்கு வேலை கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பத்மினி.  

உன் இதயம் பேசுகிறேன் – 2உன் இதயம் பேசுகிறேன் – 2

அத்தியாயம் – 2 பத்மினி, சராசரி உயரம், தென்னகத்து மாநிறம், இடையைத் தொடும் கூந்தல், முகத்தைப் பார்த்தவுடன் வசீகரிக்கும் பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், சினிமா நடிகைகள் ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் மூக்கு அவளுக்கு இயல்பாகவே இருந்தது. வரைந்து வைத்தார்

உன் இதயம் பேசுகிறேன் – 20உன் இதயம் பேசுகிறேன் – 20

அத்தியாயம் – 20 மெயின் ரோட்டில் வலது புறமாக இருக்கும் சிறிய தெருவின் வழியே நடந்து செல்லவேண்டும், ஐந்து நிமிடங்கள் நடந்தபின் ஒரு பெரிய சாக்கடை, முன்பு ஒரு காலத்தில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது கழிவு