Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 10

உன் இதயம் பேசுகிறேன் – 10

அத்தியாயம் – 10 

 

அவசர வேலைகளுக்கெல்லாம் உதவாமல் சாவாகாசமாய் வந்த அபயைக் கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாய் இருந்தது . தொழில் பக்தி இல்லாதவனால் எப்படி தொழிலில் முன்னேற முடியும்.

“சாரி பாலாஜி, அண்ணியை காலைல பிரெண்ட் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்தேன்”

“எந்த இடம்…”

“இங்கதான் பக்கத்தில்…” அருகிலிருக்கும் பகுதியை சொன்னான்.

உடை மிக அழகாக ஏதோ விருந்துக்கு சென்று வருவது போல இருந்தது. கேள்வியுடன் பார்த்தான் பாலாஜி.

“ட்ரெஸ் நல்லாருக்கு… ஆனா மிக்சிங் மெஷின் பக்கத்தில் போய்டாத, தூசியெல்லாம் ஒட்டிக்கும்”

“அண்ணி விருந்துக்கு போறாங்க. அதனால் நாமும் நல்ல டிரஸ் போடணும்ல அதுதான்…” சிரித்தான்.

அடுத்த மாதம் வரை நிலைக்குமா நிலைக்காதா என்று தெரியாத வேலைக்காக காலையிலிருந்து கொலைப்பட்டினியாய்  ஓடி வந்திருக்கிறோம்… இவன் என்னடாவென்றால் பக்கத்திலேயே விருந்து சாப்பிட்டுட்டு இவ்வளவு தாமதமா வந்திருக்கிறான். எரிச்சலாகப்  பார்த்தான் பாலாஜி.

“இன்னைக்கு சோப்பு தூள் செய்ய உன்கிட்டக் கத்துக்க சொல்லி அண்ணன் சொன்னாங்க. எப்ப சொல்லித்தர…”

“காலைல மிக்சிங் பண்ணோம் அப்படியே சொல்லித்தந்துடலாம்னு பார்த்தேன். மத்யானம் பிசி. நேரமிருந்தா சொல்லித்தரேன்” என்று பாலாஜி சொன்ன தோரணையே அவனுக்கு அபய் மேலிருந்த வருத்தம் அப்பட்டமாய் தெரிந்தது.

அதை எதிராளியோ உணர்ந்து கொள்ளவே இல்லை.

“சரி நான் கொஞ்சம் வெளிய போயிடு வந்துடுறேன்”

என்று கிளம்பிவிட்டான்.

அபய் எந்த வகையிலோ முதலாளிக்குத் தம்பி முறை. அதனால் தொழில் கத்துத் தந்து வலதுகையாக வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். இவனோ ஊர் சுற்றுவதிலேயே இருக்கிறான். இப்போது பாலாஜி செய்து கொண்டிருக்கும் வேலைகளை எல்லாம் கத்துக் கொடுக்க நினைக்கிறார். ஆனால் அண்ணன் கண் முன்னே ஒழுங்காக நடந்து கொள்ளும் அபயக்கு அவர் கண்ணை விட்டு மறைந்ததும் நோக்கமும் மறைந்துவிடுவதுதான் கொடுமை.

அதற்கு மாறாக அவனுக்குக் கொடுக்கப்படும் வேலைகளையும் தானே மறுதரம் செய்தாகவேண்டிய நிர்பந்தம் பாலாஜிக்கு. தான் என்னதான் விழுந்து விழுந்து உழைத்தாலும் ஒரு வேலைக்காரன்தானே. அபய் தேறிவிட்டான் என்று தெரிந்ததும் என்னை தயவு தாட்சண்யம் பார்க்காது தூக்கி எரிந்து விடுவார்கள். அப்படி வெளியே போகச் சொன்னால் போகத்தான் வேணும். பெருமூச்சு விட்டபடியே வேலையில் கவனம் செலுத்தினான். இந்த மாதத்துக்கான உற்பத்தியை பெருக்க வேண்டும்.

என்னதான் நிர்மா, சர்ப், ரின் என்று பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் சோப்பு சலவைத்தூள் மார்க்கெட்டின் பெரும்பகுதியை பிடித்து வைத்திருந்தாலும். இவர்களைப் போன்ற சிறு நிறுவனங்களுக்கும் இடம் இருக்கத்தான் செய்கிறது. யானை வாழும் காட்டில் எறும்புக்கு இடமில்லாது போய்விடுமா இல்லை உணவுதான் இல்லாது போய்விடுமா?

“டேய் அதை அழுத்திப் பிடிக்காதே சோப்பு ரெண்டும் அப்படியே ஒட்டிக்கும்” என்று யாரோ ஒருவனை எச்சரித்தபடி அவ்விடத்துக்கு விரைந்தான் பாலாஜி.

யாரோ ஒருவன் கலரிங்கை அதிகம் கலந்துவிட, அதை சமன் செய்வதற்குள் கலைத்துவிட்டான்.

“சார் சாப்பிடலையா… “ என்று கேட்டதும்தான் உணவு வாங்க வேண்டும் என்றே நினைவு வந்தது. அவனது பேக்டரி இருந்த இடத்திலிருந்து நல்ல உணவகத்துக்கு ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஏன் நிறுவனத்தின் வாயிலுக்கே ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

வியர்க்க விறுவிறுக்க எட்டி நடை போட்டவனை “ஸாப்” என்று அழைத்து குறுக்கிட்டான் வாயில் காப்பாளன்.

“உங்களுக்கு டப்பாவாலா சொல்லிருந்திங்களா… “ என்று கேட்கவும்தான் லக்ஷ்மிபவனில் உணவுக்குப் பணம் கட்டி வந்ததே நினைவுக்கு வந்தது பாலாஜிக்கு.

“ஆமாம்” என்றான்.

அந்தத் தொழிற்பேட்டையில் மட்டும் டப்பாவாலாக்கள் வாயிலில் உணவுப் பாத்திரங்களைக் கொடுத்துவிட்டு, மறுபடியும் அங்கே வந்து காலிப் பாத்திரங்களைப் பெற்றுச் செல்வார்கள். அவ்வளவு தூரம் உள்ளே நுழைந்து கொடுத்துவிட்டு சென்றால் அவர்களுக்கும் நேரமாகிவிடும் என்பதே காரணம்.

“மத்தவங்க வாங்கிட்டு போய்ட்டாங்க. இது யாரிதுன்னு தெரியல. ஃபைசல்தான் நீங்க டப்பாவாலாட்ட சாப்பாடு சொல்லிருக்கிங்கன்னு சொன்னான்” என்றதும் தன்னைத் தேடியே வந்த அன்னலட்சுமிக்கு நன்றி சொல்லிக் கொண்டான் பாலாஜி.

டப்பாவைப் பெற்றுக் கொண்டதும் அலுவலகம் செல்லும் திசையில் திரும்பியவனிடம்.

“சார் லேட்டாச்சு. இங்க பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுட்டு பாக்ஸைதாங்க. இங்க குடிக்க தண்ணி பிடிச்சு வச்சிருக்கேன்… நாளைலேருந்து  நேரத்தோட வந்து டப்பாவை எடுத்துக்கோங்க” என்றான் அக்கறையுடன்.

“சரி” என்று சம்மதித்து, ஒரு காலி பாட்டிலில் தண்ணி நிரப்பிக் கொண்டு சாப்பிட இடம் தேடிய பாலாஜி, தூரத்தில் தெரிந்த மரத்தடியில் ஒரு கல்பெஞ்சு போட்டிருப்பதைப் பார்த்து அங்கு விரைந்தான்.

எல்லா பக்கங்களிலும் அடித்து ஒடுங்கிய டிபன் பாக்ஸ் ஒன்றை எதிர்பார்த்திருந்தவனுக்கு அழகான பச்சை கவரில் ஹாட்பேக்கில் வந்திருந்த சிறிய கேரியரைக் கண்டது சந்தோஷ அதிர்ச்சியாகவே இருந்தது.

ஆவலுடன் முதல் அடுக்கைத் திறந்தவனின் முகத்தின் முன் செக்க சிவந்த நிறத்தில் பொன்னிற முந்திரிகள் பளபளக்க சிரித்த கேசரியைக் கண்டதும் பசியால் இருட்டிக் கொண்டிருந்த கண் பல்ப் போட்டது போல பிரகாசமாக எரிந்தது. ஸ்பூனும் கூட ஓரத்தில் செருகி வைத்திருந்த லக்ஷ்மிவிலாசின் முன் யோசனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால்.

ஒரு வாய் போட்டுக் கொண்டதும் அப்படியே கரைந்து தொண்டையில் வழுக்கிக் கொண்டு போன கேசரி தேவாமிர்தமாய் தித்தித்தது.

போதும் வாழ்க்கை இந்தக் கேசரியை சாப்பிட்டுக் கொண்டே மிச்ச வாழ்நாளை ஓட்டிவிடலாம் என்றது பசித்த வயிறு. முதல் அடுக்கை சுத்தமாகக் காலி செய்தவன் இரண்டாவது அடுக்கில் நீ என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் என்பது போல நைசாகத் திறந்தான். மூன்று சப்பாத்திகள்… சப்பாத்தியா… ஐயோ என்று அலறி ஓடுபவன் இன்று அதன் நிறத்திலேயே தமிழ்நாட்டு சப்பாத்தி என்று கண்டுகொண்டான். அதுவும் அவனை ஏமாற்றாமல் எண்ணை மினுமினுப்புடன் மெத்து மெத்தென்றிருந்தது. அதற்குத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு கறி, கொஞ்சம் தக்காளி வெங்காய சாலட். தக்காளி வெங்காயத்தை ஒரே அளவில் அரிந்திருந்த விதத்தில் கூட ஒரு சிரத்தை தெரிந்தது அவனுக்கு.

அன்னைக்கு ஹோட்டல்ல மட்டும் ஏன் அப்படி ஒரு அரைகுறையா சமைச்சாங்க என்ற கேள்வியும் அவன் மனதில் எழாமலில்லை.  அதற்குப் பிறகு கடைசி அடுக்கில் புளியோதரை. அதை சமைத்தது ஒரு அக்மார்க் தமிழர் என்று முத்திரை குத்தியது.

யாராக இருந்தாலும் இதை சமைத்தவர் ரசனை மிகுந்தவராக இருக்கவேண்டும். சமையலிலேயே இத்தனை ரசனை என்றால் வாழ்க்கையில் எத்தனை ரசனையுள்ளவராய் இருப்பார்கள் என்று அந்த ரசனையாளனுக்கு அக்கணமே ரசிகனானான்.

நன்றி செலுத்தும் விதமாக பதிலுக்கு டப்பாவைக் கழுவி வைத்தவன் பச்சை பையில் வைக்கும் முன்பு அதில் கடைசியாக ஒளிந்து கொண்டிருந்த சிறிய நான்காக மடிக்கப்பட்டிருந்த காகிதத்தை வியப்புடன் எடுத்துப் பிரித்தான்.

அதில் முத்து முத்தான கையெழுத்தில்

‘எனக்கு இந்த ஊர்ல செய்ற மாதிரி எண்ணை இல்லாத சப்பாத்தி செய்யத் தெரியாது. சீக்கிரமே கத்துகிட்டு உங்களுக்கு செஞ்சு தரேன். இன்னைக்கு எனக்குத் தெரிஞ்ச விதத்தில் சமைச்சிருக்கேன். ப்ளீஸ்  ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க’

என்று எழுதியிருக்க, அவனுக்கு அந்த எழுத்தும் அதில் தென்பட்ட ஏதோ விளங்க முடியாத உணர்வும் மனதை என்னவோ செய்தன.

லக்ஷ்மி விலாஸில் வாடிக்கையாளர்கள் புகார் கொடுப்பாங்களோ… புகார் கொடுத்தால் தண்டனை கடுமையாக இருக்குமோ. அதுதான் இத்தனை பயத்துடன் ஒரு கடிதமா…

தமிழில் கடிதம் இருக்கு… இதென்ன கம்பசூத்திரமா அங்க வர்றவங்க பெரும்பாலும் தமிழ் ஆளுங்கதான். என் பேரும் பாலாஜின்னு இருக்கவும் தமிழில் எழுதிருக்காங்க போலிருக்கு. ஆனால் தமிழ் தெரியாதவங்ககிட்ட என்ன செய்வான் இந்த சமையல்காரன் இப்படி மனதில் பலவகையான கேள்விகள்.

அவை அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, தான் எப்பொழுதும் சட்டைப் பையில் செருகியிருக்கும் பேனாவை எடுத்து அதே சீட்டின் பின்னால் எழுதினான்.

‘எனக்கு இந்த சப்பாத்தி ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படியே சமைக்கவும். கேசரியும், புளிசாதமும் மிகப் பிரமாதம். ரொம்ப பசில இருந்த என் வயிறும், மனதும் நிறைந்தது. நன்றி’

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 10”

  1. அடடா பிரசாந்த் க்கு அனுப்பின லெட்டர் பாலாஜி க்கு போய் இருக்கே… பதில் பாலாஜி அனுப்பி அதை பிரசாந்த் கிட்ட கேட்டா என்ன ஆகுமோ… சும்மா அவளை அகிலா பேசுற பேச்சு காது கொடுத்து கேட்க முடியாது… இது தெரிஞ்சா என்ன ஆகுமோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 9உன் இதயம் பேசுகிறேன் – 9

அத்தியாயம் – 9 “ஆன்ட்டி” விஷ்ணுப்ரியாவின் சத்தம் கேட்கவில்லையே என்றிண்ணிக் குரல் கொடுத்தாள் பத்மினி. “வாம்மா… உங்க ஆன்ட்டிக்கு தலைவலி… இப்பத்தான் மாத்திரை கொடுத்திருக்கேன்” என்றபடி காப்பி போட்டுக் கொண்டிருந்தார் சந்தானம். “விஷ்ணு… என்னடி இது.. டிகாஷன் அரை டம்ளர், பால்

உன் இதயம் பேசுகிறேன் – 4உன் இதயம் பேசுகிறேன் – 4

அத்தியாயம் – 4  கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடி அலுத்த  ப்ரஷாந்த்துக்கு  சிலபல விட்டுக்கொடுத்தலுக்குப்  பிறகு வேலை கிடைத்தது..வீட்டை விட்டு வெகு தொலைவு தள்ளியிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் விற்பனைப் பிரிவில் அவனுக்கு வேலை கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பத்மினி.  

உன் இதயம் பேசுகிறேன் – 5உன் இதயம் பேசுகிறேன் – 5

மாலை தொடங்கியதும் வீட்டை விட்டு வெளியே பத்மினியும், விஷ்ணுப்ரியாவும் கிளம்பினார்கள். பிளாட்டை விட்டுத் தள்ளி கேட்டுக்கு வந்ததும் “ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு மாலை வெயிலில் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பை அண்ணாந்து பார்த்தாள். “என்னாச்சு… வீட்டை விட்டுக் கிளம்ப மனசு