அத்தியாயம் – 9
“ஆன்ட்டி” விஷ்ணுப்ரியாவின் சத்தம் கேட்கவில்லையே என்றிண்ணிக் குரல் கொடுத்தாள் பத்மினி.
“வாம்மா… உங்க ஆன்ட்டிக்கு தலைவலி… இப்பத்தான் மாத்திரை கொடுத்திருக்கேன்” என்றபடி காப்பி போட்டுக் கொண்டிருந்தார் சந்தானம்.
“விஷ்ணு… என்னடி இது.. டிகாஷன் அரை டம்ளர், பால் அரைடம்ளர் ஊத்தினா காப்பி கட்டக்கருப்பாருக்கு” குழம்பிப் போய் கேட்டார்.
“அங்கிள் டிகாஷன் கொஞ்சமாத்தான் ஊத்தணும். நீங்க தள்ளுங்க நான் போடுறேன்” என்றபடி நிமிடத்தில் இருவருக்கும் காப்பி போட்டாள்.
துண்டை தலையில் இறுக்கிக் கட்டியபடி சோபாவில் படுத்திருந்த விஷ்ணுப்ரியா அவளிடம் முனகினார்
“இன்னைக்கு விரதம்னு தலைகுளிச்சேன். அப்படியே தலை வெடிக்கிறா மாதிரி வலிக்குது…. பத்மினி ஒரு உதவி செய்றியா”
“சொல்லுங்க ஆன்ட்டி”
“ரவையை வறுத்து வச்சிருக்கேன். கொஞ்சமா கேசரி பண்ணிடுறியா… நெய்வேத்தியம் பண்ணனும்”
“இதோ பத்து நிமிஷத்தில் செஞ்சுடுறேன் ஆன்ட்டி” கடகடவென விஷ்ணுப்ரியாவின் செய்முறைப்படி செய்து சுவாமிக்கு அறையில் வைத்தாள். பின் விஷ்ணுப்ரியா மெதுவாக எழுந்து வந்து ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்தார்.
“ஏதோ என் பொண்ணு மாதிரி நீ என்னை பாத்துக்கிற பத்மினி” என்றபடி அவளது நெற்றியில் குங்குமமிட்டவர் “நீ நல்லாருக்கணும் குடும்பம் குழந்தை குட்டியோட சந்தோஷமா இருக்கணும்” என்று மனம் நிறைந்து சொன்னார்.
“பேசினது போதும் போய் தூங்கு” என்று சந்தானம் கண்டிப்பாக சொல்லிவிட்டதால் விஷ்ணுப்ரியா கண்ணை மூடிக் கொண்டு படுத்துவிட, வீட்டிற்கு வந்த பத்மினி சப்பாத்தி செய்ய எடுத்து வைத்திருந்த கோதுமை மாவை வெறித்தாள்.
அவளுக்கு இந்த ஊர் பாணி சுக்கா ரொட்டி செய்யத் தெரியாது. தமிழ்நாட்டு பாணியில் மாவில் எண்ணை ஊற்றித்தான் செய்வாள். இன்று விஷ்ணுப்ரியா சுக்கா ரொட்டி செய்ய உதவுவதாக சொல்லியிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் அவரைத் தொந்தரவு செய்வது சரியில்லை. இன்னும் சிறிது நேரத்தில் டப்பாவாலா வேறு வந்துவிடுவான்.
“ஏய்… என் மகனுக்கு டிபன்பாக்ஸ் கட்டினியாடி” என்ற அகிலாவின் குரல் கேட்டு
“இதோ சமைச்சுட்டே இருக்கேன்” என்று பல்லைக் கடித்தபடி பதிலளித்தாள்.
பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக ‘எனக்குத் தெரிஞ்ச மாதிரிதானே நான் சமைக்க முடியும். புதுசா என்னென்னவோ செய்ய சொன்னா… ‘ என்று தனக்குள்ளே முணுமுணுத்தபடியே தனக்குத் தெரிந்ததை செய்ய ஆரம்பித்தாள்.
‘லக்ஷ்மி பவன்’ உணவு டப்பாக்களை விலாசத்துடன் அடுக்கி வைத்தான் வைத்தி. வழக்கமாக வாடிக்கையாளர்களுடன் இந்த மாதம் ஐந்து புதிய வாடிக்கையாளர்கள். இது வளர்ச்சியல்ல மக்களுக்கு தினமும் பணம் தந்து வாங்கி உண்டால் கட்டுபடியாகாது என்ற நிலை வரும்போதுதான் இப்படி சுமாரான உணவகத்திலும் மாத உணவுக்குப் பணம் கட்டி செல்வார்கள்.
எப்பொழுதும் செய்வது போல வைத்தி அசிரத்தையாக எடுத்து வைக்க, ஒரு டிபன்பாக்சிலிருந்து வழிந்த சாம்பார் அதன் கீழே வைத்திருந்த விலாச சீட்டில் விழுந்து ஊறி அதன் எழுத்துக்களை முழுவதுமாக அழித்தது.
டப்பாவாலாவிடம் தரும் சமயத்தில்தான் அந்த சீட்டை கவனித்தான். “ஐயோ… யாரிது தவறுச்சு. இந்த விலாசத்தை வேற எதிலும் காப்பி கூட பண்ணலையே… முதலாளிக்குத் தெரிஞ்சா தோலை உறுச்சிடுவாரே” என்று பதறியபடி அந்த டிபன்பாக்ஸை யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான்.
நேரமானதும் பயம் தெளிந்தது.
‘இப்ப என்ன தலையையா சீவப் போறாங்க… இன்னைக்கு சாப்பாடு வரலைன்னா முதலாளிட்ட சொல்லுவாங்க… அப்ப இன்னொருதரம் விலாசம் சொல்லச் சொல்லி எழுதிக்கலாம். முதலில் தப்பா விலாசம் தந்ததா சொல்லிட்டா போச்சு. அந்தாளு புகார் கொடுக்குற வரைக்கும் நமக்கு பிரச்சனை இல்லை”
பாலாஜியின் விலாசச்சீட்டை பாழாக்கி, விலாசம் தெரியாததால் அவனுக்கு மதிய உணவையும் கொடுக்காமல் விட்ட வைத்தியின் நிம்மதி எத்தனை நாள் நிலைக்குமோ தெரியவில்லை.
காலை அலாரம் அடிப்பது கூட உரைக்காமல் உறங்கிக் கொண்டிருந்தான் பாலாஜி. முதல்நாள் கடையில் சாமான்களை ஏற்றி இறக்க வேண்டியிருந்தது. அலாரத்தின் சத்தத்தைவிட உரத்து பக்கத்து வீட்டுப் பொடியன் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் ஓசை கேட்க
“ஐயோ எட்டாச்சா…” என்று பதறியபடி எழுந்தான். பல்லை விளக்கும் போதே பசியால் அவன் வயிறு போட்ட சத்தம் காதில் கேட்டது. முதல் நாள் அசதியில் ஒண்ணும் உண்ணவில்லை. தண்ணீர் குடித்துவிட்டு உறங்கினான். இப்போது… தேடியவனுக்கு சென்ற வாரம் வாங்கிய ப்ரெட் கண்ணில் பட்டது.
“அப்பாடா… ஏதோ இருக்கு” குளித்துவிட்டு வேகமாய் வந்து ரொட்டியை உண்ண சென்றவனுக்கு அதின் ஓரமாக பூஞ்சை படர்ந்திருந்தது கண்ணில் பட கோபமாக குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தான்.
அவசர அவசரமாக பேருந்தைப் பிடித்து பேக்டரிக்கு வந்தால் அவனது நேரம் அவனுக்கு முன்னாலேயே முதலாளி வந்திருந்தார்.
“பாலாஜி… நான் ‘பிவண்டி’ போயிட்டிருக்கேன். இன்னைக்கு அபய் வந்ததும் சோப்புத்தூள் செய்றது எப்படின்னு நீயே செஞ்சு காமி. நாளைக்கு விளம்பர ஏஜென்சியைப் பாத்துட்டு வா”
வரிசையாக அவனுக்கு வேலைகளை அடுக்கி விட்டே போனார். மனதில் வேலைகளைக் குறித்துக் கொண்டு வேலையாளர்கள் வேலை செய்யும் பகுதிக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கைகளில் நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து கையிருப்பை அங்கிருந்தவர்களின் விவரம் கேட்டு குறிக்கத் தொடங்கினான்.
மொத்தம் இருபத்திஐந்து நபர்கள் மட்டுமே வேலை செய்யும் அந்த சின்ன சலவைத்தூள்- சலவைசோப்பு நிறுவனத்தில் கணிசமான அளவில் தமிழ் ஆட்கள் வேலை செய்தனர்.
“ப்ளீச் வெள்ளை துணி சலவைதூளுக்கு மட்டும்தான போடுறிங்க. அப்பறம் எப்படி இவ்வளவு சீக்கிரம் தீருது”
“சிலர் இன்னும் ஸ்ட்ராங்கா வேணும்னு கேட்டாங்க சார். அதனால முதலாளி கொஞ்சம் ஜாஸ்தி கலக்க சொன்னாரு”
‘அப்பறம்… அந்தத் தூளைப் போட்டுத் துவைக்கிறவங்க உடம்பு என்னாகுறது… அதுபத்தி எல்லாம் இவங்களுக்கு என்ன அக்கறை…’ வாய்க்குள் முணுமுணுத்தவன்.
“அதெல்லாம் அதிகம் போட்டா துணி சீக்கிரம் பாழாகிக் கிழிஞ்சுடும். அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க… நீ நான் அங்க எழுதிப் போட்டிருக்குற அதே அளவில் கெமிக்கலை கலந்து செய். ஏதாவது ஒண்ணு ஜாஸ்தி ஆனாலும் மனுஷ உடம்புக்கு நல்லதில்லை” அமைதியான குரலில் ஆனால் கண்டிப்பாக சொன்னான்.
“ஆமாம்பா எனக்கு கூட அன்னைக்கு கலந்தப்ப கண்ணில் பட்டு கண்ணெல்லாம் ஒரே எரிச்சலாயிடுச்சு…” என்றார் மயில்வாகனம்.
“அண்ணே உங்க க்ளவுஸ் எங்கே? போயி போட்டுட்டு வாங்க… யாரும் க்ளவுஸ் இல்லாம வேலை செய்யக்கூடாது “ என்ற பாலாஜியின் அதட்டல் குரல் கேட்டு க்ளவுஸை எடுக்க நகர்ந்தார்.
மணி பதினொன்று பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த இடத்தில் சிறுதொழில் செய்பவர்கள் சிறு சிறு தொழிற்கூடங்களை வைத்திருந்ததால் உணவு விற்கும் கடைகள் எதுவும் அருகில் இல்லை. ஒருவன் டீ மட்டும் காலையிலும் பின்னர் மாலை நான்கு மணி வாக்கிலும் இருப்பிடத்திற்கே வந்து, தொழிலாளிகளுக்கு டீ வழங்கிவிட்டு செல்வான். சில சமயம் சமோசாக்களையும் விற்பதுண்டு. ஆனால் அன்று பாலாஜியின் நல்ல நேரம், டீ மட்டும்தான் கொண்டு வந்திருந்தான்.
“சரி ஒரு டீ கொடு” வாங்கிப் பருகியதும் பசி சற்று அடங்கினாற்போல் தோன்றியது.
துணி துவைக்கிற இடத்தில் எத்தனை எத்தனை இருக்கு… அட பாவி லட்சுமி விலாஸ் கடையில் கட்ட பணம் அம்போ தான் ஆன அதுக்கு பதில் உனக்கு நல்ல சோறு கிடைக்க போகுது