அத்தியாயம் – 8
ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே…
பக்து ஜனோம் கி ஸங்கட் , தாஸு ஜனோம் கி ஸங்கட் …
பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு, சதுரமான முகம். சிரிக்கும்போது ஒரு குழந்தைத்தனம் முகத்தில் தெரியும். யாரிடமும் வம்புக்குப் போகாத, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ரகம். அதனாலேயே அந்தப் பகுதியினருக்கு அவனை மிகவும் பிடிக்கும்.
அவனது வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி சிறிய மந்திர் ஒன்று இருந்தது. மந்திர் என்றால் நமது தமிழ்நாட்டு கோவிலைப் போல நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சற்று நடைபாதையிலிருந்து உள்வாங்கிய இடத்தில் ஒரு மாதிரி சரி செய்து, அங்கு சுவாமி படத்தை வைத்து மந்திர் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
அதற்கு உரிமை கொண்டாடி ஒரு பண்டிட் குடும்பம் அதே தெருவில் குடியிருக்கிறது. அந்த பண்டிட் மூன்று வேளை ஆரத்தி காண்பிக்கும்போது மட்டும் வருவார். அந்த இடத்தில் அமர்ந்தபடியே பக்தர்கள் யாரிடமாவது விளக்கைத் தந்து ‘ஜெய் ஜெகதீஷ் ஹரே’ பாட்டு முடியும் வரை சுவாமி படத்தை சுற்றிக் காண்பிக்க சொல்லுவார். அவர்களுடன் சேர்ந்து பாடுவார். கோவில் வருமானத்தை எடுத்து பராமரிப்பு வேலைகளை செய்வார். பண்டிகை நாட்களில் பூ பழம் என்று அலங்காரம் செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்குவார்.
அது தவிர அந்தப் பகுதியில் யார் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்து பலகாரம் தயாரித்து எடுத்து வந்தால் மறுப்பே சொல்லாமல் பிராசாதத்தை பகவானுக்குப் படைப்பார். சிலநாள் யாரோ ஒருவர் ஏதாவது இனிப்பு மித்தாய்களை வைத்து செல்வார்கள். அதுதான் அன்று அனைவருக்கும் பிரசாதம்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை மாதிரி அந்த ஒதுக்குப்புறமான பகுதியில் இவர்தான் எல்லாம். சைக்கிள் பூஜை, ஸ்கூட்டர் பூஜை, பெயர் சூட்டுதல் என்று அவரும் பிஸியாகத்தான் இருக்கிறார்.
தமிழ்நாட்டு சிவன் கோவிலில் சொல்வது போல தேவாரம், திருவாசகம் அது இல்லாவிட்டாலும் ஏதாவது சமஸ்க்ருத மந்திரத்தையாவது சொல்வாரா என்று அவனும்தான் பார்க்கிறான். ம்ஹும்… ஐந்து வருடங்களாக ஒரு மூன்று நான்கு பாட்டு மட்டுமே இங்கு தேறியிருக்கிறது. பக்கத்திலேயே இருப்பதால் அந்த பாட்டுகளும் அவனுக்கு மனப்பாடமாகிவிட்டது.
அவன் அம்மா இங்கு வந்திருந்தபோது கூட சர்க்கரைப் பொங்கல் சமைத்து கோவிலில் தந்து படைக்க சொன்னார்.
“லட்டு, குலாப்ஜான் சாப்பிட்டுட்டு இருந்த சாமி இன்னைக்கு நம்ம ஊர் மாரியம்மன் கோவில் சாப்பாட்டை சாப்பிடுது”
“சாமிக்கு ஏதுடா பாகுபாடு. நம்ம ஊரு மாரியம்மனை கருங்கல்லில் செஞ்சிருப்பாங்க. எண்ணெய் காப்பு சாத்தி நம்ம ஊரு பொண்ணுங்களைப் போல மூக்கும் முழியும் அம்சமா நிப்பா…
பக்கத்து கோவில் சாமி இந்த ஊர் பொண்ணுங்க மாதிரி ஜாடைல இருக்கு. ரெண்டு சாமியும் உருவத்தில் வேறமாதிரி இருந்தாலும் அம்மா அம்மாதானே. நான் ஊருக்குப் போனதும் என் மகனைப் பாத்துக்கோ. அவனுக்கு ஒரு நல்ல வழியைக் காமின்னு வேண்டினா முடியாதுன்னா சொல்லப் போறா”
“அம்மா என்ன இவ்வளவு பெரிய தத்துவத்தை ரெண்டு வரில சொல்லிட்டே. சாமி என்னைக்கும் யாரையும் காப்பாத்த மாட்டேன்னு சொல்லாது. எவ்வளவு நல்லவனா இருந்தாலும் சரி இல்லை கெட்டவனா இருந்தாலும் சரி பாராபட்சமில்லாம ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே மழை, ஒரே நிலம்னு சமமாத்தான் தருது. ஆசாமிதான் இதை நாசம் பண்ணுறவன்”
“பேச்சை மாத்தாதே… ஒரு மனுஷன் உயிரோட இருக்க வேணும்னா மழை, நிலம், சாப்பாடு மட்டும் போதும். நல்ல வாழ்க்கை வாழ ஒரு பொண்ணு வேண்டாமாடா…
நம்ம ஜாதி ஜனத்தில் கூட வேண்டாம்…. இந்த ஊர் பொண்ணு யாரையாவது இழுத்துட்டு வந்தா கூட மனசார ஆசீர்வாதம் பண்றேன். ”
“இந்தப் பேச்சை எடுத்தா வரும்போது ஊருக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்துடுவேன்”
“சரி சரி நான் சொல்லல. இந்த ஊரு சாமியாவது உன் மனசை மாத்தட்டும்… ” வருத்தத்தோடு சொல்லி வீட்டுக்கு சென்றார். அந்த அன்னையின் ஆசையை கடைசி வரை நிறைவேற்ற முடியவில்லை என்பதே அவனது வருத்தங்களில் ஒன்று.
சட்டையை அணிந்து வீட்டை விட்டு இறங்கியவனை அழைத்தார் பண்டிட்டின் மனைவி
“பாலாஜி… இந்தா பிரசாதம் எடுத்துக்கோ” என்று அவலில் செய்த ஏதோ இனிப்பை வழங்கினாள்.
வாங்கி உண்டான்.
“வெளிய கிளம்பிட்டியா”
“ஆமா… என் பிரெண்டை பாக்கப் போறேன்”
‘டோபி காட்’ எங்கெங்கு காணினும் மனிதத் தலைகள். சின்ன சின்ன கட்டங்களாக சிமெண்ட்டால் பிரிக்கப்பட்ட இடங்களில், கணுக்கால் வரை தண்ணீரில் நின்று துணி துவைத்துக் கொண்டிருந்தனர். இந்த இடத்தில் மட்டும் ஐந்தாயிரத்திலிருந்து ஏழாயிரம் நபர்கள் வேலை செய்கிறார்களாம். கீழே நிரம்பியிருந்த சோப்பு தண்ணீரில் துணியை முக்கி கல்லில் அடித்து துவைத்தனர். பேண்ட்டுகளின் கால் பகுதியிலிருந்த கறைகளை சோப்பு போட்டு ப்ரஷால் தேய்த்துவிட்டு மறுபடியும் அதே தண்ணீரில் முக்கித் துவைத்தார்கள்.
ஒவ்வொரு சதுரமும் ஒவ்வொரு நபருக்கு சொந்தம். பெரும்பாலும் சலவை நிலையம் வைத்திருப்பார். அவரது சலவை நிலையத்தில் எட்டிலிருந்து பத்து நபர்கள் வேலை செய்வார்கள்.மொத்தம் இங்கு எழுநூறு சதுரங்கள் உண்டு. ஏறக்குறைய ஏழாயிரம் பேருக்கு இந்த இடத்தில் வேலை வாய்ப்பு.
சலவைக்குத் தேவையான சோப்பு பவுடர் முதலியவற்றை விற்கும் கடைகளும் சுற்றிலும் இருந்தன. நெரிசலின் ஊடே புகுந்து லாவகமாக நடந்தான் பாலாஜி.
ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து வந்திருந்த துணி மூட்டைகளை வண்டியிலிருந்து வகை பிரித்துக் கொண்டிருந்தனர் ஓரிடத்தில். அந்த இடத்துக்கு உள்ளே அவன் நண்பன் அமாவசையின் குரலைக் கேட்டபடி நுழைந்தான்.
“காஸ்டிக் சோடா… சோப்பு இதெல்லாம் கணக்கில் எழுதிட்டு கடைல வாங்கிக்கோ…
கரையான வெள்ளைத்துணியைத் தனியா பிரிச்சியா… கெமிக்கல் தண்ணில ராத்திரி ஊற வச்சுடு
ஹோட்டல் வெள்ளை விரிப்பை ஆஸ்பத்திரி துணி கூட கலக்காதே. ஹோட்டல் துணில அவ்வளவா அழுக்கு இருக்காது. பாதி கெமிக்கல் போட்டா போதும்”
மருந்துவமனை வாடையுடனிருந்த படுக்கை விரிப்புக்களை தனது கைகளால் அதிகமான பொடியை கலந்து கொதிக்கும் சுடுநீரில் போட்டவனை ஸ்நேகமாய் நெருங்கினான் பாலாஜி.
“பாலாஜி வா.. வா..”
“அமாவாச… இதெல்லாம் வாய் கிழிய பேசு… ஒரு க்ளவுஸ் மாட்டிட்டு துணி துவைக்கிறதுக்கென்ன.. இந்த கெமிக்கல் தோலில் எவ்வளவு டேமேஜ் பண்ணும் தெரியுமா”
“ஏண்டா ஒரு துணி ரெண்டு துணின்னா க்ளவுஸ் போட்டுட்டு லேசா துவைக்கலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் உருப்படி துவைக்கிறோம். இதெல்லாம் பாக்கவா முடியும். சரி கைக்கு க்ளவுஸ் போடலாம் காலு அதே சோப்புத் தண்ணிலதான நிக்குது” என்றவாறு புண்ணாகியிருந்த காலைக் காட்டினான்.
கையிலிருந்த பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துத் தந்தான் பாலாஜி
“கொஞ்சம் காட்டம் கம்மியா சோப்பு எடுத்துட்டு வந்திருக்கேன். இது தோலைக் கெடுக்காது”
“காட்டம் கம்மியா போட்டா அவங்க எதிர்பார்த்த சுத்தம் கிடைக்காது பாலாஜி. இத்தைப் பாரு ஹாஸ்பிட்டலருந்து வந்தது. எவ்வளவு கறை, கிருமி, பச்சையும் வெள்ளையும் கரைகரையா படிஞ்சிருக்கு. ஆனால் இதை சலவை செஞ்சு பழைய நிறத்துக்கு மாத்தித் தரணும். காட்டம் கம்மியான சோப்பு போட்டா கறை முழுசுமா மறையாதே. அப்பறம் துணி சரியா வெளுக்கலைன்னு வேற இடத்தில சலவைக்குப் போட ஆரம்பிச்சுருவாங்க. வருமானம் குறைஞ்சா முதலாளி வெளிய அனுப்புற முதல் ஆள் நம்மதான்…”
“இதுக்கு எதுவும் செய்ய முடியாதா…” வருத்தத்தோடு நண்பனைக் கேட்டான்
“மெஷின்ல வேலை செஞ்சா நல்லாருக்கும். பிரைவேட்டா ஒரு துணி துவைக்குற இடம் இருக்காம். சீக்கிரம் அந்த மாதிரி கடைல வேலைக்குப் போயிடணும்” தனது உட்சபட்ச கனவை சொன்னான் அமாவாசை.
டீ சொல்லிவிட, இருவரும் டீ பருகியபடி பேசினார்கள் .
“சாப்பாடு சாப்பிடுறியா… ”
“என்ன கொண்டு வந்திருக்க”
“சப்பாத்தியும், முட்டைகோஸும்”
“ஐயோ அதை நீயே சாப்பிடு” கையெடுத்து கும்பிட்ட நண்பனைப் பார்த்து சிரித்தான்.
“என் பொழப்பை விடு… உன் வேலை எப்படி போய்ட்டிருக்கு”
“ஏதோ நித்திய கண்டம் பூரண ஆயுசுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி ஓடிட்டிருக்கு
ஓனரோட சொந்தக்காரன் ஒருத்தன் போன வாரம் ஊரிலிருந்து வந்திருக்கான். நான் தொழில் கத்துத் தரணுமாம். கத்துக்கிட்டதும் என்னை வேலையை விட்டு அனுப்பிடுவாங்களாம்” அலுத்துக் கொண்டான் பாலாஜி.
“இப்ப என்ன செய்யப் போற?”
“சோப்பையும் சலவைத் தூளையும் தவிர எனக்கு வேறொண்ணும் தெரியாது. வேற சோப்பு கம்பெனில வேலை கிடைச்சா நல்லாருக்கும்.”
“தனியார் வேலை வேற, திடீர்னு வேலையை விட்டு அனுப்பிட்டா என்னடா செய்வ?”
“போன மாசத்திலிருந்து சூப்பர் மார்க்கெட் ஒண்ணுல ராத்திரி எட்டு டு பன்னிரண்டு வேலைக்கு சேர்ந்திருக்கேன். ஞாயிறு முழு நேரம் போகணும். சோப்பு கம்பெனி வேலை போனாலும் இந்த வேலை கொஞ்ச நாள் தாங்கும்”
“காலைல ஏழு மணிக்கு சோப்பு கம்பெனி. அப்பறம் ராத்திரி எட்டு மணிக்கு சூப்பர் மார்க்கெட். என்ன பொழப்புடா இது. ஆமாம் இன்னைக்குப் போகலையா”
“உன்னைப் பாக்க லீவு அரை நாள் லீவெடுத்துட்டு வந்திருக்கேன்”
“உன் கம்பெனி முதலாளி ஒரு நாளைக்கு பன்னெண்டு மணி நேரம் வேலை வாங்குவானே… அதுக்கப்பறம் கடைல வேலை. எப்படி சமாளிக்கப் போற”
” ஒரு மாசம் தாக்குப் பிடிச்சுட்டேன். இனியும் சமாளிக்கணும்… அமாவாசை உன்னால ஒரு உதவியாகணுமே”
“சொல்லு”
“ரெண்டு வேலையும் பார்த்துட்டு சமைக்கவும் முடியல… மத்தியானமாவது நம்ம ஊர் சாப்பாடு வேணுண்டா”
“நம்ம ஊரு சாப்பாடா…”
“நீ ஒரு கடைல்ல சாப்பாடு தருவான்னு சொன்னேல்ல, அவன்கிட்ட மத்தியான சாப்பாடு அனுப்ப முடியுமான்னு கேக்கணும்”
“லட்சுமி விலாஸா… அங்க சாப்பாடு சுமாராத்தான இருக்கும்”
“பரவால்ல… எனக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சோத்தைப் பாக்கணும். சப்பாத்தி மூஞ்சில மூணு வேளையும் முழிக்க முடியலைடா… அதுவும் கம்பெனி பக்கத்தில கிடைக்குற சப்பாத்தி பரிட்சை அட்டையை பிச்சுத் தின்னுற மாதிரியே இருக்குடா…”
“லட்சுமி விலாஸ்லதான் வேணுமா”
“அங்கனதான நம்ம ஊரு சாப்பாடு கிடைக்கும்”
“அதுவும் சரிதான்… நீ வேற சாப்பாடில்லாம பாதியா இளைச்சுட்ட… சரி வா.. அந்தக் கடைல சாப்பிட்டுட்டு உனக்கு சாப்பாட்டுக்கு மாசப் பணத்தைக் கட்டிட்டு போலாம்”
அமாவசை மதியம் கொண்டு வந்த உணவு டப்பாவைத் தனது பைக்குள் எடுத்து வைத்தான்.
லட்சுமி விலாஸ் அந்தப் பகுதி மக்களுக்கு தென்னக சாப்பாடு என்ற பெயரில் ஒரு மீல்ஸ் வழங்கி வந்தது. ஆனால் ஒரு நாள் கூட அங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் ஒரே சுவையுடன் இருந்ததில்லை. ஒரு நாள் அரிசி வெந்தும் வேகாமலிருக்கும், குழம்பு ஒரு நாள் உப்பும் உரைப்பும் இல்லாமல் இருந்தால் அதற்கு மாறாக மறுநாள் புளித் தண்ணீரைக் கரைத்து விட்டாற்போலிருக்கும். ஏதோ விலை குறைவு என்பதால் சிலர் வந்து போவதுண்டு. அதனால் அவர்களது பிழைப்பும் ஓடுகிறது.
காற்றை விட சத்தம் அதிகமாக வந்த மின்விசிறியும், சர்வர் டேபிளில் நங்கென்று சப்தமெழ வைத்த தம்ளர் ஓசையையும் பொறுத்துக்க கொண்டு
“முதலில் டேபிளை துடை அப்பறம் ஆர்டர் தரோம்” என்றான் பாலாஜி.
அவனது சாந்தமான முகத்தினால் கவரப்பட்டானோ என்னவோ டேபிளைத் துடைத்துவிட்டு தோழர்கள் இருவருக்கும் மீல்ஸ் கொண்டு வந்தான்.
லட்சுமி விலாஸின் குழைந்த சாதத்தையும், வேகாத முருங்கைக்காயையும், புளி வாடை போகாத காரைக்குழம்பையும் கஷ்டப்பட்டு விழுங்கியபடி பாலாஜியைப் பார்த்தான் அமாவசை.
துளி கூட மீதம் வைக்காமல் வேக வேகமாக உண்ட நண்பனை ப் பரிதாபத்துடன் பார்த்தபடி
“நிஜம்மாவே உனக்கு சாப்பாடு பிடிச்சிருக்கா” என்றான்.
“அரிசி சாதத்தைக் கண்ணுல பாத்தே ஒரு மாசமாச்சு. சாப்பாட்டோட அருமை பசிச்சவனுக்குத்தானே தெரியும். தங்கச்சி தினமும் வகை வகையா சமைச்சு சாப்பிடுறேல்ல அதுதான் உனக்கு சாப்பாடு இறங்கல”
“நீ வேற… உன் தங்கச்சிக்கு ஆறாவது மாசம்… அடுப்புகிட்ட நிக்க முடியல, அதனால என் மாமியார் எனக்கும் சேர்த்து சமைச்சுத் தந்துடுறாங்க. அதுவும் சப்பாத்தித்தான்” சிரித்தான்.
“இந்த ஊர் பொண்ணைக் கட்டிட்டா உனக்கு என்ன மீன் குழம்பும், பழைய சோறுமா கிடைக்கும். ரொட்டி சப்ஜின்னு பழகிக்கோ”
“ஊருக்குப் போகணும்டா. கோபமெல்லாம் தீர்ந்து குழந்தையைப் பாக்கவாவது அம்மா வந்தா நல்லாருக்கும்”
“அதெல்லாம் சரியாயிடும்.அம்மாவோட கோபமெல்லாம் புள்ளையைப் பாக்குற வரைக்கும்தான். இருந்தாலும் நீயும் ஒரு போனைப் போட்டு தங்கச்சி உண்டாயிருக்குறதை சொல்லு”
இருவரும் ஒனரை சந்தித்து மறுநாளிலிருந்து மத்தியான சாப்பாடு கட்டி அனுப்ப ஆர்டர் தந்தார்கள்.
“சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிங்க. இந்த ஏரியாலேயே எங்க கடைலதான் கம்மியா காசு வாங்கிட்டு பொது சேவை பண்ணிட்டிருக்கோம். உங்களுக்கு மத்தியான சாப்பாட்டை இந்த ஏரியா டப்பாவாலாகிட்ட ஆபிசுக்குக் கொடுத்தனுப்பிடுவோம். டப்பாவாலாவுக்கும் சேர்த்து எங்ககிட்டயே பணம் கட்டிடுங்க. அட்ரஸ எழுதிக் கொடுத்துட்டுப் போங்க” என்றார்.
அட்ரெஸ்ஸை முத்து முத்தான கையெழுத்தால் எழுதினான் பாலாஜி.
“டிபன் பாஸ்”
“நாங்களே வச்சிருக்கோம். தந்துடுறோம். டேமேஜ் ஆனாலோ தொலைஞ்சாலோ நீங்க புதுசுக்குக் காசு தந்துடணும்”
“என்னென்ன சாப்பாடு தருவிங்க”
“எலுமிச்சை சாதம் இல்லைன்னா ஏதாவது கலந்த சாதம் ஒரு டப்பால, அன்னைக்கு சமைச்ச காய், இந்த ஊர் ஆளுங்களும் இருக்குறதால மூணு சப்பாத்தியும், தயிர் பச்சடியும் வைப்போம்”
‘சாதம் ஒரு டப்பாலதானா… சப்பாத்திக்கு தயிர் பச்சடியா… ‘ யோசித்தான் பாலாஜி. ஆனால் அந்த உணவுக்காக அவர்கள் சொன்ன தொகை அவனது படஜெட்டுக்கு ஒத்துவரவும் வேறு வழியில்லாமல் போனது.
“மூணு மாசம் பாரு, வேற எங்காவது இதைவிட நல்ல சாப்பாடு கிடைச்சா மாத்திக்கோ” காதருகே முணுமுணுத்தான் அமாவசை.
“இவன் கேக்குற காசு ஒகேடா… சோப்பு கம்பெனி வேலை போனாலும் சமாளிச்சுக்கலாம். அட்ரஸ் மாத்துறதுன்னாலும் சொல்லிடலாம்ல”
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை வராது”
கிளம்பும் முன் முதலாளியிடம் மறுபடியும் சென்று
“கௌரி சோப் கம்பெனி, நம்பர் 14, 18 வது ரோடு, அம்பேத்கர் நகர்.. இதுதான் அட்ரஸ்.நாளைலேருந்து சாப்பாடு அனுப்பிடுங்க” என்று விலாசத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தினான்.
“அதெல்லாம் டாண்ணு வந்துடும்” கவலைப்படாதிங்க என்று ஓட்டல் முதலாளி சொன்னதை நம்பியவண்ணம் நண்பனிடம் விடைபெற்று வீட்டுக்கு செல்லும் ட்ரெயினில் ஏறினான்.