Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 7

உன் இதயம் பேசுகிறேன் – 7

அத்தியாயம் – 7

றுநாள் காலை ராட்சனை போலத் தன்னருகே குறட்டை விட்டவண்ணம்  உறங்கும் பிரஷாந்தைக் காணவே எரிச்சலாக இருந்தது பத்மினிக்கு. 

இந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லைதான். பிறந்த வீட்டுக்கு சென்றால் பாராட்டி சீராட்டி வரவேற்கவா போகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு திருமணம் பேசியபோது… இந்தப் ப்ரஷாந்துக்கு முப்பத்தி ரெண்டு வயது, ஒரு கைக்குழந்தைக்கு தகப்பன், மனைவி இறந்துவிட்டாள் என்று சொல்லித்தான் புவனா நிச்சயம் செய்தாள். என்றோ எடுத்த கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் புகைப்படம் வேறு நிரூபணத்துக்காகத் தந்தார்கள்.  அதற்கே அவளது அப்பா மிகவும் யோசித்தார். 

பையன் கொஞ்சம் குண்டா இருப்பான் போலிருக்கு. நிறமும் இல்லை… மூஞ்சி கொஞ்சம் களையாவாவது இருந்திருக்கலாம். அதுவும் இல்லை. இவனுக்கு ரெண்டாந்தாரமா பத்மினியைக் கொடுத்தே ஆகணுமா”

ஏற்கனவே சுதாகர் ரெண்டுதடவை வீட்டு முன்னாடி நின்னு கலாட்டா பண்ணிருக்கான். அவங்கம்மா வேற வீட்டுப் பொம்பளையை விட்டு வசியம் பண்ணுறோம்னு சொல்லுது. நம்ம பேரே கெட்டுப்போச்சு. 

இந்த நிலைமைல நல்ல மாப்பிள்ளை வேற எங்கேருந்து வரும்.இவளை இப்படி எங்கேயாவது தள்ளிவிட்டால்தான் உண்டு. இல்லைன்னா புவனா நம்மை ஒழுங்கா சாப்பிடக் கூட விடமாட்டா” 

அண்ணனும் அண்ணியும் கறாராக சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டனர். பல சமயங்களில் உணர்வுகளை வயிறு வென்றுவிடுகிறதே. 

இந்த வயதில் சிந்தித்துப் பார்க்கும்போது ஒன்றுமில்லாத பிரச்சனையை பூதாகரமாக்கி இவளது பெயரைக் கெடுத்து பிரஷாந்த்துக்குத் திட்டம் போட்டே திருமணம் செய்து வைத்ததாகத் தோன்றுகிறது. 

இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில்  பெண்ணின் குடும்பத்தினர் மானம் மங்காத்தா என்று புலம்பி அவசரகதியில் பெண்ணை எங்காவது தள்ளிவிடாமல் முடிவைத் தள்ளிப் போட்டால், காலம் அது பாட்டுக்கு கிழிசல் ஒடிசல் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டுப் போகிறது. குழம்பிய குட்டையில் என்ன தெளிவாகத் தெரியும். இந்த சமயத்தில் திருமணம் போன்ற முடிவெல்லாம் தேவையா… 

கிராமத்துக் கோவிலில்தான் திருமணம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொன்னபோதே யோசித்திருக்கவேண்டும். செலவில்லை என்று அண்ணனும் தலையாட்டினான். நடக்க முடியாத தந்தைக்குத் துணையாக தாயை விட்டுவிட்டு அனைவரும் திருமணம் முடிக்கக் கிளம்பினார்கள். 

தாலி கட்டுவதற்கு சிறிது நேரம் முன்புதான் பிரஷாந்த் வந்தான். கட்டையாக, குட்டையாக, கருத்த முகத்தில் கடினமான பாவனையுடன் வந்த மாப்பிளையைக் கண்டு பத்மினியின் உறவினர்கள் திகைத்தனர். மாப்பிள்ளை மேல்சட்டை தெறித்து விழுமாறு பிதுங்கி நின்ற பானை வயிற்றுடன், முன் நெத்தி ஏறிய மண்டையுடனும் இருபது வயது பத்மினி அருகில் நிற்கும்போது தந்தை மகளைப் பார்க்கும் உணர்வில் விக்கித்து போனார்கள் பத்மினியின் உறவினர்கள். 

பத்மினியின்அக்காவோ கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டாள். “பத்து வயசு பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லையே… மாப்பிள்ளையைப் பாத்தா முப்பத்திரெண்டு வயசாட்டமா இருக்கு… நாப்பத்தஞ்சு வயசுக்குக் குறையாது போலிருக்கே. என் தங்கச்சியை பாழும் கிணத்துல தள்ளிடாதிங்க” 

ஆனால் புவனாவோ தான் எல்லாவற்றையும் பெண் வீட்டினரிடம் முன்பே சொல்லிவிட்டதாக அனைவரிடமும் சாதித்தாள். 

ஒண்ணு இவளைக் கல்யாணம் பண்ணித்தா… இல்லை எனக்குத் தரவேண்டிய ரெண்டு லட்சத்தை வட்டியோட எண்ணி வை. அத்தோட விட மாட்டேன். இந்தக் கல்யாணத்துக்கு எங்கக்கா அஞ்சு லட்சம் வரை செலவு பண்ணிருக்கா. அதையும் வட்டியும் முதலுமா தராட்டி போலீசுக்கு போவேன்” ஆங்காரமாக நாற்காலியில் அமர்ந்து அவள் சொன்னபோது அவளது குடும்பத்தினரால் எதுவுமே பேச முடியவில்லை. 

கல்யாணமெல்லாம் கடவுள் முடிவு பண்றது. இவ வாங்கி வந்த வரம் இவ்வளவுதான்” என்று அவர்கள் சமாதனப் படுத்திக் கொண்டு தாலி கட்டி முடித்த சூட்டுடன் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். அம்மாவையும் அப்பாவையும் கூட சமாதனப் படுத்திவிட்டார்கள். 

ஆனால் பாதிக்கப்பட்ட இவளால்தான் எதுவும் செய்ய முடியவில்லை. செய்யும் அளவுக்கு படிப்பும் இல்லை அனுபவமும் இல்லை. முக்கியமாக தைரியம் துளி கூட  இல்லை. இருந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பும் மாதாமாதம் பிரஷாந்த் வீட்டிற்கு அனுப்பிய பணத்தில் அடங்கிப் போயிற்று. 

 ப்ரஷாந்துடன் ஆதர்ச தம்பதியாக வாழ முடியுமா என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாகியும் அவன் அருகே வந்தாலே குமட்டுகிறது. அவனும் அவளது உணர்வினைப்  பெரிதாக மதிப்பதில்லை. 

அவளது வாழ்க்கைக்கும்  ஒரு அர்த்தம் வேண்டுமல்லவா… ஒரு பிள்ளை இருந்தால் பிடிப்பிருக்குமோ… ஆனால் அதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் இரண்டு முறை கருத்தரித்த போதும் டாக்டரிடம் அழைத்துச் சென்று கலைக்கச் சொன்னான் அவள் கணவன் என்று சொல்லிக் கொள்பவன். 

இனிமேல் அவளுக்கு அன்பு காட்ட அவளை ஆதரிக்க ஒரு ஜீவன் என்றால் அது அவளது குழந்தையாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் சுயநலத்தின் மொத்த உருவமான ப்ரஷாந்த்தைப் போல அதுவும் அவதரித்துவிட்டால், அதைத் தடுக்கும்பொருட்டுத்தான் கடவுள் அந்த பாக்கியத்தை மறுக்கிறார் போலிருக்கிறது. 

ஏதேதோ யோசனையுடன் இரவு முழுவதும் படுத்திருந்தாள். பிரஷாந்தின் குறட்டை வேறு அவளை உறங்க விட்டிருக்குமா என்ன? யாரைப் பற்றியும்  கவலைப்படாமல் பொழுதும் விடிந்தது. அவளது செக்குமாட்டு வாழ்க்கையும் ஆரம்பித்தது. 

சாப்பாடு கொடுக்க அலுவலக விலாசம் கேட்டு நச்சரித்த பத்மினியிடம் எரிந்து விழுந்தான் பிரஷாந்த். 

என் ஆபிஸ் அட்ரஸ் உனக்கெதுக்கு. நிஜமாவே வேலைக்குப் போறேனான்னு வேவு பாக்குறியா”

அதெல்லாம் இல்லிங்க.உங்களுக்கு மத்தியானம்  சாப்பாடு கொடுத்தனுப்பணும். டப்பாவாலாகிட்ட அட்வான்ஸ் தந்துட்டேன். அவன் அட்ரஸ் கேட்டிருக்கான்”

உன்னை யாரு இந்த மாதிரி முந்திரிக்கொட்டை வேலையை செய்யச்சொன்னது” காபி டம்ளர் பறந்தது. 

நான்தாண்டா நேத்து போயி டப்பாவாலாகிட்ட பேச சொன்னேன். உனக்கும் அம்பது வயசாச்சு இனிமேயாவது  வீட்டு சாப்பாட்டை சாப்பிடு” என்று குரல் கொடுத்தாள் அகிலா. 

பிரஷாந்தின் சுருதி குறைந்தது. ” சும்மாவே இருக்க மாட்டியாம்மா. நான் எந்த ப்ராஞ்சில் இருப்பேனோ. போற இடத்து அட்ரஸ் எல்லாம் தர முடியுமா” என்று தாயிடம் ஹிந்தியில் திட்டினான்.

அகிலாவும் பதிமினிக்குப் புரியாத ஹிந்தியிலேயே உரையாடலைத் தொடர்ந்தாள்.

மெயினா வேலை பார்க்கும் ஆபிஸ் விலாசம் தா. சாப்பாடு நேரத்தில் நீ இல்லைன்னா பியூனை சாப்பிட்டுட்டு டிபன் பாக்ஸை கழுவித் தரச்  சொல்லு. யாரு சாப்பிட்டான்னு இவளுக்குத் தெரியவா போகுது”

பியூன் சாப்பிட நம்ம ஏன் தண்ட செலவு செய்யணும்”

நீ வேற காலைல போனா ராத்திரிதான் வர்ற… வீட்டு சாப்பாடும் சாப்பிடறதில்லை… உன் பொண்ணு இவளைக் கல்யாணம் பண்ணி வச்ச கோபத்தை எல்லாம் இப்பத்தான் காமிக்கிறா… சரியா சாப்பிடுறதில்லை, என் கூட  பேசுறதில்லை.  உன் ரெண்டாவது பொண்டாட்டி என்ன செஞ்சாலும் தூக்கி எறிஞ்சு பேசுறா… 

இந்தக் கழுதைக்கு இது வசதியா போச்சு… சும்மா தின்னுட்டு தின்னுட்டுதானே உக்காந்திருக்கா. மத்தியான சாப்பாட்டையாவது செய்யட்டும்.இவளுக்கு நிறைய வேலை தரணும்னு பாக்குறேன்”

உன் ராமாயணத்தைக் கேட்க எனக்கு நேரமில்லை. என்னதான் வேணும்னு சுருக்கமா சொல்லு”

நம்ம வீட்டாளுங்க சாப்பிடுறதில்லை. அதை இந்த முறுக்குக்காரிதான் எல்லாத்தையும் வழிச்சுத் தின்னுறா .எனக்கோ மூணுவேளையும்  எனக்கு கஞ்சிதான் சாப்பாடு, மாத்திரை போட்டுட்டு கண்ணசந்தா என்ன நடக்குதுன்னே தெரியாது. 

 நல்ல சாப்பாட்டைப் போட்டுஅதுக்குத் தகுந்த வேலை தரலைன்னா,   உன் முதல் பொண்டாட்டி மாதிரியே இவ புத்தியும் ஊர் மேயப் போகும். அதுனால தினமும் உனக்கு சமைச்சு அனுப்பட்டும். நீ சாப்பிடறியோ  இல்லை நாய்க்கு போடுறியோ தெரியாது. எனக்கு தினமும் இவ முதுகொடிய வேலை செய்யணும். ” அகிலா பதிலுக்கு ஹிந்தியிலேயே  மகனிடம் சொன்னாள். 

பிரஷாந்த் சமாதானமடைந்ததைப் போல கட கட வென விலாசத்தை சொல்ல, நினைவில் வைத்துக் கொள்ளமுடியாது  திணறினாள் பத்மினி. 

ஒரு நிமிஷம் பொறுங்க… பேனா எடுத்துட்டு வந்து எழுதிக்கிறேன்”

எரிச்சலோடு பிரஷாந்த் முறைக்க, அதுவரை உரையாடலைக் கேட்டவாறு புத்தகத்தின் முன் அமர்ந்திருந்த  ஷாமிலி சொன்னாள். 

நீங்க சொல்லுங்கப்பா நான் எழுதித் தரேன்”

பிரஷாந்த் சொல்ல சொல்ல காகிதத்தில்  வேகமாய் கிறுக்கினாள் ஷாமிலி. அவன் கிளம்பியதும் பத்மினி முன் பேப்பரை நீட்டினாள். 

பத்மினி அதிலிருந்த விலாசத்தைப் படித்துப் பார்த்தாள் . பேனாவின் மை பட்டு சில இடங்களில் எழுத்துத் தெளிவில்லாமல் இருக்க, ஓரிடத்தில் மூன்று என்று எழுதியிருந்தது எட்டு போலத் தெரிய, சந்தேகத்துடன் 

நம்பர் 14, 18 வது ரோடு, அம்பேத்கர் நகர் சரியா” என்று படித்துக் காண்பித்தாள் ஷாமிலியிடம். 

சரிதான்… நொய்  நொய்ங்காம முதலில் இடத்தைக் காலி பண்ணு” என்றாள் அப்பாவுக்கு வாரிசாக. 

இவ்வளவு சொன்னதே பெரிதாகத் தோன்ற, ஷாமிலியின்  கிறுக்கலை வேறொரு காகிதத்தில் முத்து முத்தாகப்  பிரதியெடுத்தாள் பத்மினி.

அன்று மதியம் பக்கத்து வீட்டில் உணவு வாங்க வந்த கேதரியிடம் மறக்காமல் தினமும் உணவு சேர வேண்டிய விலாசத்தைத் தந்தாள். கேதரியும் அந்த விலாசத்தை அப்படியே அவர்களது எண் மொழியில் மாற்றி அவளது டிபன் பாக்சில் அழியாத மை  எழுத்துக்களால் பதித்தான். 

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 7”

  1. அட பாவி புவனா என்ன ஒரு கெட்ட புத்தி உனக்கு கை குழந்தை இருக்குனு சொல்லி 10வயது பொண்ணோட அப்பா வை கட்டி வச்சி அககு இல்லனா போகுது குணம் வேண்டாம்…மனுசனா அவன் எல்லாம் அதை விட மட்டமான ஆளு அகிலா … இந்த நிலைமையில் கூட புத்தி எந்த அளவுக்கு கேவலமாக யோசிக்கிற…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 17உன் இதயம் பேசுகிறேன் – 17

அத்தியாயம் 17 பாலாஜிக்கு லட்சுமி விலாசின்  போன் நம்பரை  அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை. ‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே

உன் இதயம் பேசுகிறேன் – 5உன் இதயம் பேசுகிறேன் – 5

மாலை தொடங்கியதும் வீட்டை விட்டு வெளியே பத்மினியும், விஷ்ணுப்ரியாவும் கிளம்பினார்கள். பிளாட்டை விட்டுத் தள்ளி கேட்டுக்கு வந்ததும் “ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு மாலை வெயிலில் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பை அண்ணாந்து பார்த்தாள். “என்னாச்சு… வீட்டை விட்டுக் கிளம்ப மனசு

உன் இதயம் பேசுகிறேன் – 22 நிறைவுப் பகுதிஉன் இதயம் பேசுகிறேன் – 22 நிறைவுப் பகுதி

அத்தியாயம் – 22 மாற்றம் மட்டும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். துன்பங்கள் மேகம் சூரியனை மறைப்பது போல வரலாம். அது கடந்து நல்லது நமக்கு நடக்கும் என்பது தீர்மானமென்றால் நடந்தே தீரும் என்பதுதான் சத்தியம். விஷ்ணுபிரியா வேண்டாம் என்று முன்னரே சொல்லி