அத்தியாயம் – 6
கேதரியின் குடியிருப்பைத் தாண்டியவுடன்
“பத்து மணிக்கு சாப்பாடு ரெடியாக இருக்கணுமாமே. எத்தனை கண்டிப்பா சொல்றான். ஒரு பத்து நிமிஷம் முன்ன பின்ன ஆனால்…”
“முன்ன.. ஆனால் ஓகே. பின்ன ஆனால் கிளம்பிடுவான்”
“ஒரு பத்து நிமிஷம் கூடவா பொறுக்கக் கூடாது”
“அவன் எத்தனை வீட்டில் டிபன் பாக்ஸ் வாங்கணும் தெரியுமா. ஒரு ஒரு வீட்லயும் ஒரு நிமிஷம்தான் கணக்கு. சில அப்பார்ட்மெண்ட்ல லிப்ட் கூட இருக்காது. அங்கெல்லாம் மாடி ஏறி போயி கலெக்ட் பண்ணுவாங்க. எல்லாரு வீட்டு டப்பாவையும் கலெக்ட் பண்ணிட்டு டாண்ணு இந்த ஏரியா டப்பாவாலாங்கா எல்லாரும் ஸ்டேஷன்ல நிப்பாங்க. அப்பறம் பெரிய கிரெட்ல அம்பது அறுபது டப்பாவா அடுக்கி சென்ட்ரல் ஸ்டேஷன் போவாங்க. அங்க போயி மறுபடியும் ஏரியா வாரியா பிரிப்பாங்க. நம்ம வீட்டில் கலெக்ட் பண்ணவன் வேற ஏரியா ஆபிஸ்ல சாப்பாடு டெலிவரி பண்ணுவான். இப்படி ஒவ்வொரு வீட்லையும் அஞ்சு பத்து நிமிஷம் லேட்டாக்கினா… இவங்களால நேரத்துக்கு போக முடியுமா சொல்லு”
“நீங்க சொல்றதும் சரிதான்… இருந்தாலும் ஒன்பது மணிக்கும் பத்து மணிக்கும் சாப்பாடு தர்றதுக்கு பதிலா முழுசா சமைச்சுக் கைலேயே கொடுத்துடலாமே”
“நீ சொல்லுவம்மா… இவங்களோட சேவை என்னை மாதிரி பெண்களுக்கும், வீட்டு சாப்பாட்டை சாப்பிடும் ஆண்களுக்கும் எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் தெரியுமா.
அந்த காலத்தில் என் நிலைமையை யோசிச்சு பாரு. உதவிக்கு யாரும் இல்லை. என் வீட்டுக்காரர் சம்பளத்துக்கு வேலைக்காரி வச்சுக் கட்டுப்படியாகாது.
காலைல உங்க அங்கிள் ஏழு மணிக்கு கிளம்பணும். ரெண்டு பொண்ணுங்களும் ஒவ்வொரு ஷிப்ட்டுக்கு ஸ்கூல் போவாங்க”
“அது என்னத்துக்கு ஆன்ட்டி ஷிப்ட் . டீச்சருங்க சம்பளத்தைக் குறைக்க இந்த மாதிரி திட்டமா”
“அப்படி எல்லாம் திட்டம் போட்டு செய்யல. ஆனாலும் இங்க இடப்பற்றாக்குறையால ஷிப்ட் முறை சகஜம்”
“உங்க பொண்ணுங்க கூட ஷிப்ட்லதான் படிச்சாங்களா… அப்ப அரைநாள் போனால் போதும்ல… ரொம்ப ஜாலி உங்களுக்கு”
” ஜாலியா… அப்ப என் தினப்படி வேலையை சொல்றேன் கேட்டுக்கோ. என் முதல் பொண்ணுக்கு ஏழரை மணி ஷிப்ட். அவளுக்கும் காலை சாப்பாடு போட்டு, இன்டெர்வல்ல சாப்பிட ஸ்நாக்ஸ் டப்பாவையம் கொடுத்து அங்கிள் கூடவே அனுப்பிடுவேன். அவர் ஸ்கூலில் விட்டுடுவார்.
அப்பறம் சமையல் வேலை. பத்து மணிக்கு டப்பாவாலாகிட்ட அங்கிளோட லஞ்சைக் கொடுத்துட்டு, சின்னவளை ஸ்கூலுக்குக் கிளப்பிவிடணும். இடையில் துணி துவைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது, மாவாட்டுறது மாதிரி வீட்டு வேலைகள்.
பெரியவளுக்கு ஒரு மணிக்கு ஸ்கூல் முடியும். அதே ஸ்கூலில் ரெண்டாவது பொண்ணுக்கு ஒண்ணே காலுக்கு ஸ்கூல் ஆரம்பிக்கும். நான் சின்னவளை விட்டுட்டு பெரியவளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வருவேன். மத்தியானம் சாப்பாடு தந்துட்டு, ஒரு அரைமணி நேரம் தூக்கம். அப்பறம் பெரியவளை டியூஷன் விட்டுட்டு, கடைக்கு போற வேலை எல்லாம் முடிக்கணும். அப்பறம் அவளைக் கூட்டிட்டு வரணும். சின்னவளை சாயந்தரம் ஆறரைக்கு கூட்டிட்டு வரணும். ரெண்டும் போட்டுக்குற சண்டையை விலக்கிவிட்டுட்டு, பாடம் படிக்க வச்சு, சித்தி சீரியல் பார்த்துட்டு, ராத்திரி சாப்பாட்டுக் கடையை விரிக்கணும்”
“ஐயோ தினமும் இதே மாதிரியா… கேக்குற எனக்கே மலைப்பாயிருக்கு. …
ஆக காலை ஏழரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரைக்கும்தான் சமையல் நேரமா… ஷாமிலியும் அவங்கப்பாவும் காண்டீன்ல சாப்பிட்டுக்குறோம்னு சொல்லிடுறாங்க. மத்தவங்க எல்லாம் ஏன் காண்டீன்ல சாப்பிடறதில்லை”
“தினமும் கடைல சாப்பிட்டா ஒத்துக்குமா? அவன் ருசிக்காக உப்பையும், எண்ணையும் தூக்கலா போடுவான். நம்ம அவங்க உடம்புக்கு வந்துடக் கூடாதுன்னு பாத்து பாத்து சமைக்கிறோம்ல
இந்த ஆம்பளைங்களுக்கு ஆசை அறுபது நாள் எல்லாம் பொண்டாட்டி விஷயத்தில்தான். மத்தபடி அவ சமைக்கிற சாப்பாட்டில் இல்லை. ஒரு புருஷனை நம்ம கூடவே பிடிச்சு வைக்கிறது பொண்டாட்டியோட கைமணம்தான்”
“ஆன்ட்டி மசாலா பவுடர் விளம்பரம் மாதிரி சொல்றிங்க” சிரித்தாள்.
“விளம்பரம் இல்லடி… அதுதான் உண்மை. பார்த்தவுடன் பச்சக்குன்னு மனசில் பெவிக்கால் போட்டு ஒட்டிக்கிறது கதைக்கும் சினிமாவுக்கும் வேணும்னா சரிப்பட்டு வரலாம். ஒரு சாதாரண மனுஷனின் தேவைகளில் வயிறு நிறையுறதுதான் பிரதானம். ஆணோட மனசில் இடம்பிடிக்க சமையல் ஒரு வலிமையான ஆயுதம்”
பத்மினியின் முகம் இருண்டது “இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நான் கொடுத்து வைக்காத பிறவி ஆன்ட்டி. அவருக்கு என் சாப்பாட்டைத் தொடக் கூடப் பிடிக்க மாட்டிங்குது”
“உனக்கு சிகிரெட்டால சூடு வைக்கிறது மட்டும் இனிக்குதோ”
கண்கள் கலங்க தலை குனிந்தாள்.
“உனக்கு முதுகெலும்புன்னு ஒண்ணு இருக்கா இல்லையா… வீட்டில் எவ்வளவு பெரிய அநியாயம் நடக்குது. அந்தக் காலக் கதாநாயகி மாதிரி எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்க. இப்படியெல்லாம் இருந்தால் நளாயினி, கண்ணகி வரிசைல உனக்கும் ஒரு சிலை வைப்பாங்கன்னு நினைப்பா…”
“அப்படில்லாம் இல்லை ஆன்ட்டி. இப்போதைக்கு எங்கப்பாவுக்கு மருத்துவ செலவுக்கு பிரச்சனை இல்லை. நான் ஏதாவது பண்ணி அது தடை படக்கூடாதுன்னு ஒரு எண்ணம்.
அப்பறம் நானும் ஒரு தப்பு செஞ்சிருக்கேன். அதான் அவங்களை எதிர்த்து பேசமுடியாம எனக்கு ஒரு குறுகுறுப்பு”
“வேற யாரு கூடயாவது ஓடிப் போனியா”
“ஐயோ அந்த அளவுக்கெல்லாம் எனக்கு தைரியம் கிடையாது. இவரோட சித்தி மகன் என்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைபட்டார். எனக்கும் அவரைப் பிடிச்சிருந்தது. அது எங்க ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரிஞ்சு பயங்கர சண்டை. இவங்க சித்தி வீட்டில் அட்வான்ஸா பணம் வாங்கிருந்தோம். அது வட்டியோட சேர்ந்து லட்சக்கணக்கில் கடனாயிடுச்சு. பைசா பாக்கியில்லாம எடுத்து வை இல்லை ஷாமிலி அப்பாவை கல்யாணம் பண்ணிக்கோன்னு எங்க கிட்ட சொன்னாங்க. முதலாவதை எங்களால் செய்ய முடியல. அதுதான் ரெண்டாவதை ஒத்துகிட்டோம்”
“இதெல்லாம் ப்ரஷாந்த்துக்குத் தெரியுமா”
“நல்லாவே தெரியும். அதுதான் என்னை ஊருக்கே அனுப்புறதில்லை”
“இதைப் போயி ஊரு குத்தமா சொல்லாதே. எவனோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சது உன் கற்பு கெட்டு போயிருச்சாமா… சுத்த பேத்தல். ப்ரஷாந்த் மட்டும் பெரிய கற்புக்கரசனா… எனக்குத் திட்ட கெட்ட வார்த்தை கூட அவசரத்துக்குக் கிடைக்க மாட்டிங்குது…”
“அவரைப் பத்தி பேசாதிங்க ஆன்ட்டி. நீங்க கூடத்தான் நான் மும்பை வந்தப்ப பேசமாட்டிங்க”
“ஆமாம் பத்மினி… நீ கல்யாணம் முடிஞ்சு வந்த புதுசில் உன் மேல ரொம்பக் கோபம்”
“தெரியுமே… தமிழ்காரங்கன்னு பார்த்து சிரிச்சா கூடாது திரும்பிட்டு போயிடுவீங்க”
“வேறேன்னடி செய்றது… பிரஷாந்த் ஏதோ அவன் பொண்டாட்டி நிது கூட மனவருத்தத்தில் இருக்கான். மறுபடியும் ஒண்ணு சேர்ந்திருவாங்கன்னு நினைச்சா… திடுதிப்புன்னு உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா அதிர்ச்சியா இருக்காதா…. நிதுவோட வாழ்க்கையைக் கெடுக்க வந்த வில்லியாத்தான் பாக்க முடியும்”
“பத்து வயசு பொண்ணோட இருக்கும் ஒரு நாற்பத்தி மூணு வயசு ஆள்…
ஒரு இருபது வயசு பொண்ணு ரெண்டாந்தாரமா அந்த ஆளைக் கல்யாணம் செய்துட்டு வந்திருக்கா… அவளுக்கு என்ன விதமான நிர்பந்தம் இருக்குமோன்னு நினைக்க முடிஞ்சிருக்காது. பணத்துக்காகக் கல்யாணம் செய்துட்டாதாத்தான் தோணும்
அந்த நிது என்னானா… எதனால ஷாமிலியோட அம்மா அப்பாவுக்கு விவாகரதாச்சு”
“தெரிஞ்சு என்ன செய்யப்போற… இருந்தாலும் சொல்றேன். பிரஷாந்த் கூடக் குடும்பம் நடத்துறதுக்கு அசாத்திய பொறுமை வேணும். அவளுக்கில்லை உனக்கு நிறையாவே இருக்கு”
“என் வாழ்க்கை முழுசும் இப்படியே ஓடிடுமான்னு பயம்மாருக்கு ஆன்ட்டி…”
ஆறுதலாய் அவள் தோளைத் தட்டினாள் விஷ்ணுபிரியா.
“எல்லாம் சரியாயிடும்… பேசாம ஒரு குழந்தை பெத்துக்கோயேன்”
சோகமாய் முறுவலித்தாள் “எங்கம்மா மாதிரியே பேசுறிங்க ஆன்ட்டி”
“அசடு நாங்கெல்லாம் எதுக்கு சீக்கிரம் குழந்தை பெத்துக்க சொல்றோம். கல்யாண மயக்கம் தீர்ந்ததும் கணவனோட குறை மனைவிக்கும் மனைவியோட குறை கணவனுக்கும் கண்ணில் படும். அந்த சமயத்தில் ஒரு குழந்தை இருந்ததுன்னா அவங்க கவனம் முழுசும் அங்கேயே போய்டும். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குறதுன்னா லேசான காரியமா… ரெண்டு பேரும் உழைக்கணும். அப்பறம் அவங்களை செட்டில் பண்ணதும்தான் மறுபடியும் ஒருத்தொருத்தர் மூஞ்சியைப் பார்த்துக்க முடியும். அந்த சமயத்தில் பேயை விட்டா பிசாசுக்கு கதியில்லை. பிசாசோட குடும்பம் நடத்துறதைத் தவிர பேய்க்கு வேற வழியில்லை”
“எங்க ஆன்ட்டி என் முகத்தைக் கூட சரியா பாக்க மாட்டீங்கிறார். நான் சமைச்சா சாப்பிட மாட்டிக்கிறார்”
“வருத்தப்படாதே… ஷாமிலி மாதிரி தோளுக்கு உசந்த பொண்ணை வச்சுட்டு உன்னைக் கொஞ்சிட்டா இருப்பான். அவன் வெளிப்படையா அன்பைக் காமிக்கமாட்டான். ஆனால் இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழுறது குறையணும். அவன் சப்போர்ட் இருந்தால் அகிலாவோட பேச்சும் குறையும். என்ன செய்யலாம்”
யோசித்துவிட்டு சொன்னார் “ஒரு கணவனின் மனசை அடைய சிலசமயம் சாப்பாடு கூட உதவி பண்ணும். நான் சொல்ற மாதிரி சமைச்சுத்தாயேன்.சாப்பாடு மூலமா அவன் மனசை அடைய ட்ரை பண்ணேன்”
பத்மினியின் கண்கள் அந்த யோசனையைக் கேட்டு இருட்டிலும் கூட பிரகாசமாய் மின்னியது.
Ad மல மாடே உனக்கு இது ரெண்டாவது கல்யாணமா… இந்த ஷாமிலி பொண்ணு உன்னை அது தான் மதிகிறதே இல்லையா… Aunty நீங்க சொல்லுற ஐடியா எல்லாம் மனுஷ பிறவிக்கு ஒத்து வரும் இவனுக்கு இல்ல