அத்தியாயம் – 4
கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடி அலுத்த ப்ரஷாந்த்துக்கு சிலபல விட்டுக்கொடுத்தலுக்குப் பிறகு வேலை கிடைத்தது..வீட்டை விட்டு வெகு தொலைவு தள்ளியிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் விற்பனைப் பிரிவில் அவனுக்கு வேலை கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பத்மினி.
“காலைல ஆறரை மணி ட்ரைன் பிடிச்சால்தான் ஆபிஸுக்கு சரியான நேரத்துக்குப் போயி சேர முடியும். ராத்திரி வீட்டுக்கு வர லேட்டாகும்” என்று அறிவித்தான்.
“இனி காலைல டிபனும் , சாப்பாடும் கட்டித் தந்துடு” என்றாள் அகிலா படுக்கையில் இருந்தபடியே.
இனி காலைல எந்திரிச்சு வேற சமைக்கணுமா… என்று மனதில் அலுத்தவாறே பாத்திரங்களைக் கழுவினாள் பத்மினி.
சில தினங்கள் கழித்து, அதிகாலை ஐந்தரை மணிக்கு குக்கர் கத்தும் சத்தத்தைக் கேட்டுவிட்டு படுக்கை அறையிலிருந்து ஹிந்தியில் கத்தினாள் ஷாமிலி. அவளது குரல் கேட்டு அருகே சென்ற பத்மினி அர்த்தம் புரியாமல் விழிப்பதை பார்த்துவிட்டு மறுபடியும் தமிழில் ப்ரஷாந்த்திடம் சொன்னாள் .
“இந்தப் பட்டிக்காட்டுக்கு எத்தனை சொன்னாலும் புரியிறதில்லை. இந்த வீட்டில் தூங்குறதா வேண்டாமா… காலைல அஞ்சு மணிக்கே சத்தம் போட்டு எழுப்பிவிட்டா நாள் முழுசும் டயர்டாகுது. பாடத்தை கவனிக்கவே முடியல. அப்பா மார்க் கம்மியானால் ஏன்னு கேக்காதே… ”
பிரஷாந்த் எரிச்சலுடன் சமையலறைக்கு வந்து அடுப்பை நிறுத்தினான். “ஷாமிலி தூங்கும்போது ஏன் தொந்தரவு பண்ற”
“தோ … ஆயிடுச்சு… டிபன் கட்டிட்டேன். உங்களுக்கு மத்தியான சாப்பாடு கட்டிட்டு இருக்கேன்”
“அது ஒண்ணுதான் கேடு. எப்படியும் உன் சமையல் வாய்ல வைக்க முடியாது. நான் வெளில பாத்துக்குறேன்…” என்றவாறு இஸ்திரி போட்டு வைத்திருந்த தனது சட்டையை அணிந்து கொண்டான்.
“வெளி சாப்பாடு வேண்டாமே. சமைச்சுட்டேன் ரெண்டு நிமிஷத்தில் பேக் பண்ணிடுறேன்”
“என்ன சமையல்?”
“தக்காளி சாதம், உருளைக்கிழங்கு ”
அவர்கள் உரையாடலைக் கேட்டபடி படுத்திருந்த ஷாமிலி எகத்தாளமாய் சொன்னாள் “எனக்கு சாப்பாடெல்லாம் தந்துடாதே… நான் கேன்டீன்லயே சாப்பிட்டுக்குறேன்”
“தக்காளி சாதத்தில நெய், இதில் வறுவல் வேறயா… முறுக்கு போடுற நினைப்பில் அரை லிட்டர் எண்ணெயக் கொட்டிருப்ப . அதனால எனக்கும் வேண்டாம். புது ஆபிஸ்ல கேன்டீன் நல்லாருக்கு. நானும் அங்கேயே சாப்பிட்டுக்குறேன்”
“இல்லை உருளைக்கிழங்கு வறுக்கல வேகவைச்சு மசிச்சிருக்கேன். எண்ணை இருக்காது. இன்னைக்கு ட்ரை பண்ணிப் பாருங்களேன்” இறைஞ்சுவது போலக் கேட்டது காதிலேயே விழாதது போலக் கிளம்பினான்.
தந்தையின் வழியே மகளும் உணவை மறுத்துவிட்டுக் கிளம்பினாள்.
காலையில் எழுந்து சமைத்தது எல்லாம் வேஸ்ட். தலையே வலித்தது பத்மினிக்கு. யாரும் தொட்டுக் கூடப் பார்க்காத தக்காளி சாதமும் உருளைக்கிழங்கும் தன்னைப் பரிகாசம் செய்வது போலத் தோன்ற, எல்லாவற்றையும் மூடி வைத்தாள்.
மாமியார் அகிலா தூங்கியதும் பக்கத்து வீட்டு பால்கனி சுவரேறிக் குதித்து, விஷ்ணுபிரியா வீட்டுக்கு சென்றாள்.
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்
வான் வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்
தேடும் நாள் வேண்டும்
என்று சன்டிவி பாட்டுடன் சேர்ந்து பாடியபடி தலைக்கு டை அடித்துக் கொண்டிருந்தார் விஷ்ணுபிரியா.
பின்னால் திரும்பாமலே அவள் வருவதை உணர்ந்து “உனக்கு பிடிச்ச பாட்டு போடுறான். கேட்டுத்தான் வந்தியா” என்றார். பதிலே வராதது கண்டு பின்னால் திரும்பி பத்மினியின் முகத்தைப் பார்த்தார்.
“என்னடி…. சுண்டைக்காயாட்டம் சிறுத்திருக்கு முகம்”
“காலைல எந்திருச்சு செஞ்ச வேலைக்காவது மரியாதை தந்திருக்கலாம்ல ஆன்ட்டி. நான் வேண்டாத ஆள், அதனால் நான் என்ன செஞ்சாலும் யாருக்கும் பிடிக்கிறதில்லை”
“சாப்பாட்டை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்களா…”
உர்ரென்று டிவியை முறைத்தாள்.
“விடு, எப்போதும் நடக்குறதுதானே… புதுசா கவலைப்பட்டுட்டு… ஷாமிலியை மாத்த முடியாது… ஆனால் பிரஷாந்த் ஏன் இப்படி இருக்கான். உன்னைக் கேட்டுத்தானே கல்யாணம் பண்ணிட்டான்”
“அவர் எப்படி கல்யாணம் பண்ணிட்டாரோ யாருக்குத் தெரியும். என் மாமியாரோட தங்கச்சி எங்க ஊருதான். எங்க வீட்டுக்கு தூரத்து சொந்தம். முறுக்கு கம்பெனி வச்சிருக்காங்க. அவங்ககிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டுத்தான் அவங்க கம்பெனிக்கு முறுக்கு சுத்தித் தருவோம். அவங்க மூலமாத்தான் எங்க கல்யாணமாச்சு.”
“அவளுக்கு உன் மேல என்ன ஆத்திரமோ… நல்ல பாழும் கிணறா பாத்து உன்னைத் தள்ளிவிட்டிருக்கா….
எனக்கென்னமோ உங்க கல்யாணம் பணக்காரங்க எல்லாம் பண்ணிக்குவாங்களே அதுமாதிரி marriage of convenience மாதிரி தோணுது”
“அப்படின்னா… ஆன்ட்டி நான் ப்ளஸ் டூ பெயில் ஆனதே இந்த இங்கிலிஷ் கருமத்தாலதான். அதனால இந்தமாதிரி டப்பு டப்புன்னு ஏதாவது சொன்னா உடனே அர்த்தம் சொல்லிடுங்க”
“திருமணம் நடக்க அடிப்படை காரணமான காதல், ஈர்ப்பு, அன்பு, மரியாதை இது எதுவுமே இல்லாம பணத்துக்காகவும், கட்டாயத்துக்காகவும் நடக்குறதுதான்”
“மானங்கெட்ட கல்யாணம்னு சொல்றிங்களா ஆன்ட்டி”
“உன்னுதை பாக்கும்போது அப்படித்தான் சொல்லத் தோணுது. இத்தனை வருஷத்தில் நீ நல்ல புடவை கட்டி பார்த்ததில்லை. உன் வீட்டுக்காரனோட சந்தோஷமா வெளிய போயி பார்த்ததில்லை.
பிரஷாந்த், பத்மினி நீ எங்க வீட்டைப் பொறுத்துக்கணும். நான் அதுக்கு பதில் உங்க வீட்டுக்கு மாசம் அஞ்சாயிரம் அனுப்பிடுறேன்னு ஒரு ஒப்பந்தம் போட்டு நடக்குற மாதிரி தோணுதுடி”
“இதுவரைக்கும் அதுதான் நடந்துட்டு இருக்கு ஆன்ட்டி. எனக்கும் இங்க வேலை செய்ய வந்திருக்கிற உணர்வுதான் இருக்கு.”
“உன் ராமாயணத்தை அப்பறம் பேசலாம். உனக்கு கவிதை கொஞ்சம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திருக்கார் அங்கிள். டேபிளில் இருக்கு எடுத்துப் படி. நான் குளிச்சுட்டு வந்துடுறேன்”
விஷ்ணுபிரியா தலையை அலசி வரும்வரை கவிதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தவள் அதில் ஆழ்ந்துவிட்டாள். ஈரம் போக துடைக்கக் கூட நேரமில்லாமல் சேலையை அரக்கப் பறக்க சுற்றிக் கொண்டு வந்தார் விஷ்ணுபிரியா.
” லேட்டாச்சு, சமைக்கணும். என்னடி பொழைப்பு இது. ஒரு கடை கண்ணி உண்டா, சொந்தக்காரங்க வீடு, டூர் உண்டா… விடிஞ்சதிலிருந்து டிபன், சாப்பாடு, காப்பி பலகாரம்னு செக்கு மாட்டு வாழ்க்கை. அலுப்பாயிருக்கு… ”
“இன்னைக்கு சமைக்காதிங்க. நான் காலைல சமைச்ச தக்காளி சாதமும், உருளைக்கிழங்கும் எடுத்துட்டு வந்துடுறேன். சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் சாயந்தரம் ஊர் சுத்திட்டு வர்றோம்”
“நிஜம்மாவா… உன் மாமியார்… ” இழுத்தார் விஷ்ணுப்ரியா.
“என் நாத்தனார் மத்தியானம் வந்து டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறாங்க. டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வர ராத்திரி ஆயிரும்”
“நீ போகலையா”
“வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கு பதிலா நான் உங்க கூட போயி டப்பாவாலா ஏற்பாடு பண்ணி, நாளைலேருந்து தினமும் மத்தியானம் அவருக்கு சாப்பாடு கொடுத்தனுப்பனுமாம்”
“ஏதேது உன் கூட பேசுறதுனால அகிலா என்னையும் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாளா?”
“ஆன்ட்டி அந்த கோவத்தை மனசில் வச்சுட்டு என்கூட வராம இருந்திராதிங்க”
“நான் வரலைன்னா நீ டப்பாவாலாவை எங்கேன்னு போய் தேடுவ…. நானே கூட்டிட்டுப் போறேன்… சாப்பாடு தர டிபன் பாக்ஸ் எல்லாம் வாங்கி வச்சுட்டியா”
“பழைய கேரியர் ஒண்ணு இருக்கு. அதைத் தந்துடலாம். டப்பாவாலான்னா என்ன ஆன்ட்டி”
“நம்ம ஊரில் கூடைக்காரம்மா கேள்விப் பட்டிருக்கியா”
“இல்லையே”
“அந்த காலத்துல வயசானவாங்க சிலபேர் ஒவ்வொரு ஏரியாலிருந்தும் ஸ்கூல் பிள்ளைகளுக்கு வீட்டில் மத்தியான சாப்பாட்டை வாங்கிட்டு பெரிய கூடைல வச்சு எடுத்துட்டுப் போவாங்க. ஸ்கூல் லன்ச் போது குழந்தைகள் அவங்க ஏரியா கூடைக்காரம்மாட்ட டிபன் பாக்ஸ் வாங்கி சாப்பிட்டுட்டு, காலி பாக்ஸை கொடுத்துடுவாங்க. இவங்களும் வீட்டில் கொண்டு வந்து அம்மாக்கள்ட்ட காலி டிபன் பாக்ஸத் தந்துடுவாங்க”
“நல்ல ஐடியாவா இருக்கே… இப்பல்லாம் கூடைக்காரம்மா ஏன் இல்லை”
“அப்பல்லாம் பொம்பளைங்க வீட்டில் இருந்தாங்க. வக்கணையா சமைச்சுப் போட முடிஞ்சது. இப்ப அவங்களும் கால்ல சக்கரத்தைக் கட்டிட்டுல்ல பறக்குறாங்க”
“மும்பை கூடைக்காரம்மாதான் டப்பாவாலாவா?”
“ஆமாம், ஆனால் இவங்க ஆபிஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு சாப்பாடு டெலிவர் பண்றவங்க. உங்க அங்கிள் வேலை பார்த்தப்ப, காலைல ஏழு மணிக்கே கிளம்பிடுவார். அதுக்குள்ள டிபனைப் போட்டு அனுப்பணும் . அத்தோட குழந்தைகளை வேற கிளப்பி ஸ்கூலுக்கு அனுப்பனும். இதுலே பொழுது ஓடிடுறதால என்னால சமைக்க முடியாது.
இவங்களை அனுப்பிட்டு பொறுமையா சமைப்பேன். டப்பாவாலா வீட்டுக்கு சரியா பத்தரைக்கு வருவான். அதுக்குள்ளே நான் சாதம், பொரியல், குழம்பு, ஒரு அப்பளம், ரெண்டு ரொட்டி, ஒரு கப் சாலட் கட்டி வச்சுருவேன். இதுதான் இந்த ஊரு மக்களோட மத்தியான மெனு. அதனால நீயும் இதே மாதிரியே தா. சாப்பாட்டுத் தகராறு கொஞ்சம் குறையும்”
“ம்ம்… நீங்க டப்பாவாலா பத்தி சொல்லுங்களேன் சுவாரஸ்யமா இருக்கு”
“டப்பாவாலா பக்கத்துல இருக்குற ஸ்டேஷன் வழியா அப்படியே எடுத்துட்டு போயி ஆபிஸ்ல தந்துடுவான். மத்தியானம் காலி டிபனை வாங்கிட்டு வந்து வீட்டில் தந்துடுவான்”
“ஒரே ஆள்தானா…”
“நீ வேற… எத்தனை ஆயிரம் பேரு டப்பாவாலாவா இருக்காங்க தெரியுமா… வெள்ளை ஜிப்பா, குல்லா போட்டுட்டு பெரிய காரியர் வச்ச சைக்கிளில் உன் பக்கத்து பிளாட் மராத்திக்காரி வீட்டுக்கு வருவான் பாத்திருக்கியா”
“தெரியுமே… வயசான ஆள் ஒருத்தர்”
“அவரேதான்… அவர்தான் இந்த ஏரியா முழுசும் வாங்கிட்டு போறவர். வெள்ளை ஜிப்பாவும் குல்லாவும்தான் இவங்க யூனிபார்ம்”
“நம்ம பிளாட்ல எல்லாரும் வேற வேற ஆபிசாச்சே ஆன்ட்டி. எப்படி சாப்பாட்டை கொண்டு போயி சேர்ப்பாங்க”
“ஒவ்வொரு டிபன்பாக்ஸ்லயும் உன் வீட்டு அட்ரஸ், ஆபிஸ் அட்ரஸ் எல்லாத்தையும் அவங்களுக்கு புரியுற மாதிரி நம்பர்ல எழுதிடுவாங்க. அப்பறம் எடுத்துட்டு ரெயில்வே ஸ்டேஷனில் வச்சு ஒரே ஏரியா, ஒரே ஆபிஸ் போற டிபன் எல்லாம் பிரிப்பாங்க.
ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பா டப்பாவை கலெக்ட் பண்ணறவங்க இருக்குறமாதிரி ஒவ்வொரு ஏரியால இருக்குற ஆபிஸ்லயும் டெலிவரி பண்ண இன்னொருத்தங்க இருப்பாங்க.
அந்தந்த இடத்துக்கு பொறுப்பா இருக்கவங்க பாக்ஸ்ல இருக்குற நம்பர் பிரகாரம் டப்பாவை எடுத்துட்டுப் போயி ஆபிஸ்ல சரியான நேரத்துல டெலிவரி பண்ணிருவாங்க”
சாப்பிட்டுட்டு அதே மாதிரி காலி டப்பாவை வாங்கிட்டு ஸ்டேஷன் போவாங்க. வீட்டு அட்ரஸ அவங்களுக்கு புரியிற மாதிரி நம்பர்ல எழுதிருப்பாங்க. அந்த நம்பரை வச்சு சரியா பிரிச்சு சாய்ந்திரத்துக்குள்ள காலி டப்பாவை வீட்டில் சேர்த்துடுவாங்க”
“அடேங்கப்பா…. பிஸியான ஆளுங்க போலருக்கு… இவங்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறது”
“டப்பாவாலாங்கா காலைல ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினா சாய்ந்தரம்தான் வருவாங்க. இப்ப ஆன்லைன்ல சொல்லலாம்னு சொல்றாங்க. எனக்கு அதைப்பத்தி எல்லாம் தெரியாது.
இந்த அப்பார்ட்மெண்ட் வருவாரே அந்த டப்பாவாலா அவரு வீடு இங்க நாலஞ்சு தெரு தள்ளித்தான் இருக்கு. சாயந்திரம் அவர்கிட்ட உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ உனக்கு வசதிப்பட்ட நாள்லருந்து டப்பாவைக் கலெக்ட் பண்ணிக்க சொல்லு”
“காலைல டப்பா வாங்குறப்ப பேசிக்கலாமே ஆன்ட்டி”
“மழை வெயில் பார்க்காம கால்ல சக்கரத்தைக் கட்டிட்டுப் பறக்குறவங்கடி அவங்க. இங்கிருக்குற வீட்டு மாடில ஏறி இறங்கணும், சைக்கிளை மிதிச்சு ஸ்டேஷனுக்கு எல்லா டப்பாவையும் எடுத்துட்டுப் போகணும். எல்லாம் டைம் பிரகாரம் நடக்கணும். அதனால அவங்களுக்கு நின்னு பேசக் கூட நேரமிருக்காது. சாயந்தரம் வேலை முடிஞ்சுதும் போயி பார்த்தால்தான் சரிப்பட்டு வரும்”
“சரி ஆன்ட்டி சாய்ந்தரமே போயி பாக்கலாம்”
என்ன ஒரு வாழ்க்கை இல்ல… காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப ட்ராபிக் கூட ஆகும் ஆனா இந்த டப்பா வாலாக்கு ரெஸ்ட் இல்ல போல