Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 3

உன் இதயம் பேசுகிறேன் – 3

அத்தியாயம் – 3 

பிரஷாந்த் புது கம்பெனி மாறியிருக்கிறான். பழைய நிறுவனத்தில் ஆட்குறைப்பில் அவனுக்கு வேலை போய் விட்டது. இரண்டு மாதங்கள் சிரம திசைதான். வாரத்துக்கு நான்கைந்து இண்டர்வியூ  செல்வான். ஆனால் ஒரே நிறுவனத்தில் வெகு காலம் வேலை செய்ததால் இப்போது வெளியே இருக்கும் ட்ரெண்ட் தெரியாமல் தடுமாறினான்.

நேர்முகத்  தேர்வில் தோல்வியுற்றுத் திரும்பும்போதெல்லாம் பத்மினியின் நிலைதான் பரிதாபத்திற்குரியதாகும். அவளது ராசிதான் இப்போது சோத்துக்கே கஷ்டப்படும் நிலையில் நிற்கிறோம் என்று வார்த்தைகளால் விளாசித் தள்ளுவார்கள்.

“முறுக்கு சுத்திட்டு இருந்த உன்னை என்ன மகனுக்குக் கல்யாணம்  செஞ்சுட்டு வந்தேன் பாரு…  உன் ராசி என் மகனை சுத்துது” என்று எல்லார் காதும்   கிழியப்  பேசும் மாமியாரின் வாயைக் கிழித்துவிடலாம் போலிருக்கும். ஏதாவது பேசினால் அந்த மாதம் அவள் வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியாது.

மூன்று மாதங்களாக அம்மாவுக்குப்   பணம் அனுப்ப முடியவில்லை. செல்லில் காசு வேறு தீர்ந்துவிட்டது.  பிரஷாந்த் இருந்த கடுகடுப்புக்கு அவனிடம் வீட்டு செலவுக்குக் காசு கேட்கவே தயக்கமாய் இருந்தது. இதில் எங்கே ஊருக்கு அனுப்ப சொல்வது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து அம்மாவே பேசினாள். அவரது குரல் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

“எப்படிடி  இருக்க?”

“நல்லாருக்கேன்மா நீ எப்படி இருக்க… வீட்ல எல்லாரும் சவுக்கியமா”

“இருக்கோம். உன்னைப் பாத்துதான் ஏழு வருஷமாச்சு. ஊருக்கு வந்துட்டு போலாம்ல”

“எங்கம்மா அவ்வளவு தூரம் வர்றது… மாமியார் படுத்த படுக்கையானதும் பக்கத்துல கடைத்தெருவுக்குக் கூட போயிட்டு வர முடியல”

“ஒரு போட்டோவாவது பிடிச்சு அனுப்பு”

“ஆகட்டும்மா”

“குளிச்சுட்டுத்தான் இருக்கியா…”

பத்மினியின் மௌனம் பல செய்திகளை தாய்க்கு உணர்த்தியது.

“இன்னும் தள்ளிப் போடாம  ஒரு ஆம்பளப் புள்ளையை பெத்துக்கோ…”

“அவரு ஷாமிலி மட்டும் போதும்னு சொல்லிட்டாரும்மா”

“பொம்பளைப் புள்ளைன்னா செலவுதான். ஆம்பளைப் புள்ளைதான் வரவுன்னு நீதாண்டி மாப்பிள்ளைக்குப் புரியவைக்கணும். கடைசி காலத்தில் மகன்தான காப்பாத்துவான்”

இப்ப மாசாமாசம் உனக்கு மகனா பணம் தர்றான் என்று வாய் வரை வந்த கேள்வியைக்  கஷ்டப்பட்டு அடக்கினாள்.

“சொல்லிப் பாக்குறேன்”

“சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு. ஒரு மகனைப் பெத்துக்குறதுதான் உனக்குப் பாதுகாப்பு”

“சரிம்மா… அப்பாவுக்கு எப்படி இருக்கு”

“அப்படியேதான் இருக்கு. வைத்தியத்துக்கே சம்பாரிக்கிறதெல்லாம் சரியாயிடுது”

“என்னால வேற ரெண்டு மாசமா பணம் அனுப்ப முடியல… இவருக்கு வேலைல கொஞ்சம் பிரச்சனை”

“கேள்விப்பட்டேன்… பணம் இல்லாம கஷ்டமாத்தான் இருந்தது. நேத்துக் காலைலதான் உன் கொழுந்தன் பணத்தைத் தந்துட்டுப் போனான்”

“யாரு ரமேஷா?”

“இல்ல சுதாகர்”

அவள் மனது சற்று தடுமாறியது. வீட்டுக்கு மறுபடியும் வர ஆரம்பிச்சுட்டானா…

“பத்மினி” இரண்டாவது முறையாக தாய் அழைத்ததும் சுதாரித்துக் கொண்டாள்.

“சொல்லும்மா”

“என் பெரியம்மா பேத்தி சீதாவை  உனக்குத் தெரியும்ல, திருச்சி காலேஜுல படிச்சாளே…  அவளுக்கும்  சுதாகருக்கும்  மூணு மாசம் முன்னாடி கல்யாணம் முடிஞ்சுருச்சு. பொண்ணு  வீட்ல இவனுக்கு ரயில்வே ஸ்டேசன் கிட்ட கடை வச்சுத் தந்திருக்காங்க. இப்ப அவன் கடைக்குத் தான் முறுக்கு தந்துட்டு இருக்கோம்”

“சுதா காசைக்  கூட்டித் தர்றானா?”

” எங்க… அவங்கம்மாவையே நல்லவங்களாக்கிடுவான் போலிருக்கு” அலுத்துக்கொண்டார்.

“கம்மியா தர்றானா”

“அதே காசுதான்… ஆனா இழுத்தடிச்சுது தர்றான். ஏற்கனவே உன்னைக் கல்யாணம் பண்ணித் தரலைன்னு நம்ம வீட்டில் கோபமா இருக்கான். அதை எல்லாம் சேர்த்து வயித்தில் அடிக்கிறான்” எரிச்சலாய் சொன்னாள்

அகிலாவின் தங்கை புவனாதான் அவர்கள் வேலை செய்துவந்த முறுக்குக் கம்பெனியின் சொந்தக்காரி. அவளுக்கு ஒரு வகையில் தூரத்து உறவினரும்  கூட. கஷ்டத்திலிருக்கும் உறவினர்களிடம் தேனொழுகப் பேசி, நிறைய அட்வான்ஸ் தந்து, குடும்ப உறுப்பினர்களைத் தொழிலாளியாக்குவாள். அவர்களும் அவளது பேச்சிலும், பணத்திலும் மயங்கி மீள முடியாத வட்டத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

அட்வான்ஸில் தாராளம் காட்டும் அவள், மற்ற விஷயங்களில் எச்சில் கையில் காக்கா ஓட்டமாட்டாள். அவள் தரும் சம்பளம் குடும்பத்தில் எத்தனை நபர்கள் உழைத்தாலும் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சரியாக இருக்கும். அந்த அறிவாளிகளும்  கல்யாணம், காதுகுத்து என்று வீட்டு அனைத்து விசேஷங்களுக்கும் புவனாவிடமே அட்வான்ஸ் வாங்கி மேலும் கடனை அதிகப் படுத்திக் கொள்வார்கள்.

இந்த வியாபார தந்திரத்தில்  சிக்கிக் கொண்டதில்  பத்மினியின்  குடும்பமும் ஒன்று. இந்த லக்ஷணத்தில் மாலை கடைக்கு முறுக்கு எடுத்து செல்ல, பண பட்டுவாடா செய்ய என்று வீட்டுக்குப் போக வர இருந்த புவனாவின் மகன் சுதாகருக்கு அவள் மேல் காதல்.

மகனின் எண்ணம் புரிந்த புவனா சூறாவளியாய் சுழன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தனது அக்கா மகன் ப்ரஷாந்துக்கும், பத்மினிக்கும் திருமணத்தை முடித்துவிட்டாள். பணக்கார ஆண்மகனும், அவன் வீட்டில் வேலை செய்யும் ஏழைப் பெண்ணும் மணமுடிப்பதெல்லாம் கதைகளிலும், படங்களிலும்தான் சாத்தியம் போலும்.

பிரஷாந்துக்கும் அகிலாவுக்கும் இவளை சுதாகர் காதலித்தது நன்கு தெரியும். அதனால்தான் இவளுக்கு தினமும் விபச்சாரிப் பட்டம் அகிலாவின் வாயால் வழங்கப்படுகிறது.

அந்த இளம் வயதில் இவளுக்கும் சுதாகரைப் பிடித்திருந்தது நிஜம்தான்.

முறுக்கு பாக்கெட் எடுக்க வரும்போது அவளுக்காக வளையல், பொட்டு என்று சிறு சிறு பரிசுகளை நைசாக வைத்து செல்வான். மறுநாள் அவள் கைகளில் வளையல்களைப் பார்க்கும்போது அவனது முகத்தில் ஒரு சின்ன புன்னகை தோன்றும்.

“ஒரு டீ கிடைக்குமா” என்று திண்ணையில் அமர்ந்தவாறு அவள் அண்ணனிடம் கேட்பான்.

இவள் வீட்டில் டீ  போட ஏது  நேரம்… அவர்களே டீக்கடையில் வாங்கி குடிப்பவர்கள்.

“இதோ வாங்கிட்டு வரேன்” என்றபடி அவளது அண்ணன் எவர்சில்வர் தூக்கு சட்டியை எடுத்துக் கொண்டு கிளம்புவான்.

“அப்படியே சூடா பஜ்ஜி எல்லாருக்கும் சேர்த்து வாங்கிக்கோங்க” என்றதும் அண்ணனின் முகம் சிறுக்கும். டீ  களைப்பைப்  போக்க, அது அவர்களுக்கும் தேவை. ஆனால் பஜ்ஜி ஆடம்பரம்.

“டீக்கு உடைஞ்ச முறுக்கு எடுத்து வச்சிருக்கோம். உங்களுக்கு வேணும்னா உடையாத முறுக்கு எடுத்து வைக்கவா” என்று நைச்சியமாகக் கேட்பான்.

சுதாகர்  அவன் பேச்சை சட்டை செய்யாமல்  கைபேசியை எடுத்து  “சோலை… பஜ்ஜி போட்டுட்டியா… இருபது பஜ்ஜியும், பத்து டீயும் கொடுத்துவிடு. பணத்தை என் கணக்கில் எழுதிக்கோ” என்று பத்மினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி தாராளமாக சொல்வான்.

ஓசி டீ,  பஜ்ஜி உண்டபடி அனைவரும் உற்சாகமாக அதிக நேரம் வேலையை செய்வார்கள்.

இவ்வாறுதான் கண்களாலேயே காதல் துளிர்விட்டது. சுதாகரின் தாய் எப்படி மோப்பம் பிடித்தாளோ  தெரியவில்லை. இறுதியாக ஒரு சுபயோக சுபதினத்தில், பத்மினி,  புவனாவின்  சிறைக் கூடத்திலிருந்து அவளது அக்கா அகிலாவின் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாள்.

இதைத் தவிர பத்மினிக்கென்று  பெரிதாக பிளாஷ்பேக் எதுவும் இல்லை.

இந்த சுதாகரைத் திரும்பிப் பாக்காம இருந்திருந்தா தினமும் ரெண்டு வேளை திட்டு இல்லாத சாப்பாடும், ஆறு மணி நேரம் நிம்மதியான தூக்கமும் கிடைச்சிருக்கும். அதுக்குக்  கூட வழியில்லாம போச்சே என்று தினமும் நூறு முறை நினைத்து எரிச்சல் கொள்கிறாள்.

சுதாகரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டதைத் தவிர அவள் வேறேதும் தப்பு செய்ததாக நினைவில்லை. பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை தனக்கு சரிப்பட்டு வருவானா என்று யோசித்துத் தலையாட்டுவது போல ஒரு நிகழ்வு. அவ்வளவுதான்…

ஆனால்  அதனாலேயே அவளது கற்பு களங்கப்பட்டுவிட்டதா? அந்தப் பாவத் செயலால்தான்  இவளது நடத்தை அகிலாவால் தினமும் குத்திக் காண்பிக்கப் படுகிறதா?

மனம் களங்கப்பட்டதால்  தனக்கு இந்த தண்டனை… களங்கப்படுத்திய சுதாகருக்கு பணக்கார மனைவி, தொழில். விதியும் கூட பெண்களுக்கு சதி செய்வது எந்த வகையில் நியாயம்?

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 3”

  1. அம்புட்டு அசிங்கம் பாக்குற அம்மாவும் பிள்ளையும் எதுக்கு பத்மினியை கட்டிக்கிட்டு வந்தாங்க… சுதாகர் உனக்கு எல்லாம் காதல் ஒரு கேடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,

உன் இதயம் பேசுகிறேன் – 15உன் இதயம் பேசுகிறேன் – 15

அத்தியாயம் 15 “பாலாஜி, நீ நம்ம ஊர்ல இருந்தேனா வள்ளி புருஷன் சந்தேகப்பட்டு அடிக்கிறான் போல இருக்கு. அதனால கொஞ்ச காலத்துக்கு வெளியூர்ல வேலை கிடைச்சதுன்னா போய் இருந்துட்டு வரியா” தன் தாயே தன்னிடம் சொல்லியதும் அதற்கு சம்மதிப்பது போல் தகப்பனும்

உன் இதயம் பேசுகிறேன் – 17உன் இதயம் பேசுகிறேன் – 17

அத்தியாயம் 17 பாலாஜிக்கு லட்சுமி விலாசின்  போன் நம்பரை  அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை. ‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே