Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 2

உன் இதயம் பேசுகிறேன் – 2

அத்தியாயம் – 2

பத்மினி, சராசரி உயரம், தென்னகத்து மாநிறம், இடையைத் தொடும் கூந்தல், முகத்தைப் பார்த்தவுடன் வசீகரிக்கும் பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், சினிமா நடிகைகள் ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் மூக்கு அவளுக்கு இயல்பாகவே இருந்தது. வரைந்து வைத்தார் போன்ற இதழ்களும், சிரிக்கும் போது பளிச்சிடும் முத்துப் பற்களும் அவளை அழகியாகக் காட்டும். 

 

இவ்வளவு லக்ஷணமான பெண் புடவை உடுத்தும் ஒரே காரணத்துக்காக பட்டிக்காடு என்று சொல்வது பேராபத்தமாகப் பட்டது அவருக்கு. இவளை நம்ம ஊர் பக்கமே யாருக்காவது கட்டித்தந்திருந்தால் அவன் ராணியாட்டம் வச்சிருப்பான். எந்த ஜென்மத்தில் செஞ்ச பாவமோ இந்த மும்பைல வந்து லோல்படணும்னு இவை தலைல விதி எழுதிருக்கு என்று வழக்கம்போல நினைத்துக் கொண்டார்.  

 

உன் வீட்டுக்காரன் ஆபிஸ் போயிட்டானா?” 

 

ஆறரைக்கே கிளம்பியாச்சு. அவரு இருந்தா உங்க கூட இப்படி நின்னு பேச முடியுமா

 

அதுவும் சரிதான். உன் மாமியார் என்ன பண்றா “.

 

காலை சாப்பாடு கொடுத்து மாத்திரை தந்து தூங்க வச்சிருக்கேன்

 

அவ எந்திரிக்கிற வரைக்கும் நீ பிரீதான்னு சொல்லு

 

ஆமாம் இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு நான் பிரீ பேர்ட்’தான்… உங்க கூட பேசிட்டிருக்கப் போறேன். நம்ம ரெண்டு பேருக்கும் டீ போடட்டுமா

 

போடு போடு… இஞ்சி டீ போடு. நேத்து ஷாப்பிங் போயிட்டு சுவாதி சுவீட்ஸ்ல கச்சோரியும், சக்லியும்  வாங்கிட்டு வந்தேன். அதை எடுத்துட்டு வரேன்உள்ளே சென்றார். 

 

பத்து நிமிஷம் கழிச்சே வாங்க…என்றபடி சமயலறைக்குள் நுழைந்தாள். 

 

தண்ணீரில் இஞ்சியையும், ஏலக்காயையும் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்தாள். நன்றாகக் கொதித்து இஞ்சியின் மஞ்சள், தண்ணீரில் இறங்கியது. அந்தச் சிறிய சமையலறை முழுவதையும் இஞ்சி, ஏலக்காய் மணம் நிரப்பியது.  சிவப்பு டீத்தூளில் ஒரு ஸ்பூன் போட்டு மேலும் சில நிமிடங்கள்  கொதிக்க வைத்தாள். அந்த மஞ்சள் வண்ண நீரில் இளஞ்சிவப்பு பரவி அப்படியே மொத்த நீரும் டீ டிகாஷனாக மாறுவதையும் டீயின் நறுமணம் தந்த புத்துணர்ச்சியையும் அனுபவித்தாள். 

 

ஷாமிலி காலையில் குடிக்காமல் வைத்துவிட்டுப் போன பாலை சூடுபடுத்தி அதில் கலந்தாள். அலமாரியில் அடுக்கியிருந்த கண்ணாடித் தம்ளர்களை  எடுத்து வைத்து அதில் டீயை வடிகட்டினாள். சர்க்கரை கலந்தவள், விஷ்ணுப்ரியாவிடம் ஒரு  டம்ளரை நீட்டினாள். 

 

தடுப்பு சுவற்றின் மேலே ஒரு தட்டில் கச்சோரிகள். அதை எடுத்து ஒரு கடி கடித்தாள்.  

 

மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்த விஷ்ணுப்ரியா கால்கள் கூச பின்னால் ரெண்டெட்டு நடந்து சமையலறை கதவுக்குப் பக்கத்தில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். 

 

தலையே சுத்துது… பின்னாடி வா… “ 

 

அவர் அழைத்தாலும் வரமாட்டாள். அது தெரிந்தும் விஷ்ணுப்ரியா அழைக்காமல் இருக்கமாட்டார். 

கச்சோரி எப்படி இருக்கு

 

எதுவும் இல்லாததுக்கு இதைத் தின்னலாம். ஆனாலும் ஊர் பக்கத்து பலகாரம் போல டேஸ்ட் இல்லை…. இது மைதா மாவா…

 

ஆமாம்… மைதாமாவுக்கு நடுவில் காரப் பூரணத்தை வச்சு,  எண்ணைல சின்ன தீயில் முறுக விட்டு எடுப்பாங்கசெய்முறையை ஒரே வரியில் சொன்னார். 

 

ஒரு வாய் டீயைப் பருகியவள் 

 

பூரணம்னா இனிக்கணும். இதென்ன காரமா… பருப்புப் பூரணம் மாதிரி தொண்டையை அடைக்குது. என்ன பருப்புன்னுதான் தெரியல

 

சிறுபருப்பை வேக வச்சு மசிச்சு, தேங்காய், பச்சை மிளகாயைப் போட்டு கிண்டுவாங்க. கெட்டிப்பட ஒரு கை கடலைமாவைத் தூவணும்

 

களுக்கென சிரித்தாள். 

 

அதானே பார்த்தேன்… கடலைமாவு இல்லாம இவங்களால சமைக்கமுடியுமா… இந்த ஊர்க்காரங்க கைல விருந்து சமைக்க ஒரு கிலோ கடலைமாவு கொடுத்தா போதும் போலிருக்கு… இன்னொன்னு சொன்னிங்களே சங்கிலியோ புங்கிலியோ அதெங்க

 

சக்லி… எடுத்துட்டு வருவேன். ஆனால் சாப்பிட்டுட்டு ஏழு நொட்டை சொல்லக் கூடாது

 

சரி மாட்டேன்

 

ட்டட டொய்ங்….பின்னாலிருந்த பாக்கெட்டை அவள் கண்களில் காட்டினார். 

 

சக்லின்னா முறுக்கா…வியப்பைக் காட்டினாள். 

 அதனைப் பிரித்துக் கடித்தவள் அதிலிருந்த பொருட்களைக் கண்டறிய முயன்றாள்வழக்கம் போலக் கடலைமாவு, அரிசி மாவு, வெண்ணை, சீரகம், ஓமம், மஞ்சள் தூள் போட்டிருக்காங்க போலிருக்கு வாசம் வருது, அதைத்தவிர வேற ஏதோ மாவு கலந்திருக்காங்க…. கேப்பை மாவு இல்லை, மைதா போட்டா மொறு மொறுன்னு வராது,  அதனால கோதுமை மாவா இருக்கலாம்சொல்லிவிட்டு சரியா என்று அவரது முகத்தைப் பார்த்தாள். 

 

கைதட்டிப் பாராட்டினார் விஷ்ணு ப்ரியா. 

 

அசத்திட்ட போ…

 

அப்பறம்… பொறந்ததிலிருந்து முறுக்கு வாசத்துலையே வளர்ந்திருக்கேன். இதைக் கூட கண்டு பிடிக்க மாட்டேனா

 

உங்க ஊர் மானத்தைக் காப்பாத்திட்டடி… உங்க மணப்பாறை முறுக்குக்கும் இதுதானே ரெசிப்பி. அப்பறம் அது மட்டும் எப்படி இவ்வளவு பேமஸ்

 

மஞ்சள், கோதுமை போட மாட்டோம். அதைத்தவிர எங்க ஊரு  மாவு, தண்ணி, பெசையுற முறை, வேக வைக்குறது எல்லாம் சேர்ந்து ஒரு டேஸ்ட்

 

உன் ரெண்டு மணி நேரப் பரோல் முடிஞ்சுடுச்சா…

 

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு….

 

கீரையை எடுத்துட்டு வரேன், ஆய்ஞ்சுகிட்டே பேசலாம். டான்னு ஒண்ணு அடிக்கும்போது சாப்பாடு மட்டும் ரெடியா இல்ல, உங்க அங்கிளோட சிவதாண்டவத்தைப் பாக்கலாம்

 

எங்கிட்ட கீரையைத் தாங்க ஆய்ஞ்சு வைக்கிறேன். நீங்க காய்கறியை அரிங்க

 

நீ உன் மணப்பாறை முறுக்கு சீக்ரெட்டை பத்தி சொல்லு

 

பச்சரிசி மாவ மதுரை மில்லுலேருந்து நேரடியா வாங்கிட்டு வருவாங்க. உப்பு, ஓமம், எள்ளு, பெருங்காயம்  எல்லாம் நாங்களும் போடுவோம்.  முக்கியமான சீக்ரெட் தண்ணிதான். எங்க ஊரு தண்ணி கொஞ்சம் உப்பு டேஸ்டா இருக்கும். அதை நல்லதண்ணின்னும் சொல்ல முடியாது. உப்புத்தண்ணின்னும் சொல்ல முடியாது. அந்தத் தண்ணியை ஊத்தி பிசைஞ்சா மாவு ஒரு பெரிய பாத்திரம்  நிறையா பிடிக்கும்

 

பெரிய பாத்திரம்னா ஒரு நாலு லிட்டர் குக்கர் அளவு இருக்குமா

 

அதெல்லாம் எந்த மூலைக்கு ஆன்ட்டி. ஒரு நாளைக்கு அய்யாயிரம் முறுக்கு சுடணும். உங்க வீட்டில் தண்ணி பிடிக்கிற பிளாஸ்டிக் வாளி இருக்கே. அவ்ளோ பெரிய பாத்திரம் வேணும்

 

அத்தனை கிலோ மாவை எப்படி பிசைவிங்க. மெஷின் வச்சிருக்கிங்களா

 

மெஷின் வாங்க காசு வேணாமா… எங்கண்ணன் தான் பிசையும். எங்கப்பாவுக்கு உடம்புக்கு வர்றதுக்கு முன்னாடி அவரு பிசைவார்

 

எல்லா மாவையும் உடனே போட்டு எடுக்கணுமே இல்லைன்னா மாவு புளிச்சிடுமே

 

அதுக்குத்தான் பெரிய இடுப்பு சட்டில டின் டின்னா கடலை எண்ணை ஊத்திக் காய வைப்பாங்க. நாங்க எல்லாரும் சுத்தி உக்காந்துட்டு முள்ளு முறுக்கு அச்சில் கட கடன்னு முறுக்கு பிழிஞ்சு வச்சுருவோம். மட மடன்னு எங்கக்காவும் அம்மாவும் முதல் வேக்காடு போட்டு பாதி வெந்ததும் எடுத்துடுவாங்க

 

பாதிலயா

 

ஆமாம் அப்பத்தான் ரெண்டாவது தடவை போட்டு எடுத்ததும் நல்ல மொறுமொறுப்பா வாயில் கரையும்

 

எனக்கு ஒரு தடவை சொல்லித்தாயேன்

 

நாளைக்கே சொல்லித்தரேன். மாவு மட்டும் வாங்கி வைங்க

 

குடும்பமே வேலை செஞ்சு சம்பாதிச்சும் ஏண்டி உனக்கு இந்த நிலைமை. இன்னமும் பிராஷாந்த்கிட்ட காசு வாங்கி வீட்டுக்கு அனுப்பிட்டிருக்க

 

பச்…தலையில் கோடு போட்டுக் காட்டினாள். 

 

எல்லாம் கம்பனில அட்வான்ஸ் வாங்கிட்டு வேலை பார்த்தோம். வட்டி போக கையில் மிஞ்சுறதை வச்சு சாப்பிடறதா, படிக்கிறதா, இல்லை எங்கப்பாவுக்கு வைத்தியம் பாக்குறதா… ஏதோ ஷாமிலி அப்பா மாசா மாசம் கொடுக்குற பணத்தில் எங்கப்பா வைத்தியம் ஓடிட்டு இருக்கு. அதுக்காகத்தான் இத்தனையும் பொறுத்துட்டு இருக்கேன் ஆன்ட்டி

 

நீ அகிலா ஒருத்திக்கு செய்ற வேலைக்கு வெளில ஆள் பார்த்தா எத்தனை ஆயிரம் தரணும் தெரியுமா…

 

நான் கணக்கெல்லாம் பாக்குறதில்லை. என்னால முடிஞ்ச அளவுக்கு செய்றேன்

 

இடது கைகளின் முட்டியில் சிவப்பாக என்னவோ காயம் போல விஷ்ணுப்ரியாவின் கண்ணில் பட்டது. 

 

பத்மினி… என்னது அது காயம்… காட்டு பார்க்கலாம்…

 

அவள் பேசாமல் நிற்கவும். 

 

இப்ப என்கிட்டே காட்டல நான் உன்னை மாதிரியே இந்த சுவரேறி குதிச்சு அங்க வருவேன்

 

ஆன்ட்டி கைகாலை உடைச்சுக்காதிங்க

 

அப்ப சொல்லு

 

நேத்து… தூக்கக் கலக்கத்தில் அவரைத் தெரியாம தள்ளிவிட்டுடேனா… என் கை வேற முறுக்கு சுத்திப்  பழகினது அதுனால  ஸ்ட்ராங்கா இருக்கும். தள்ளிவிட்டது அவருக்கு வலிச்சுடுச்சு போலிருக்கு. கோபத்தில் எப்படி வலிக்குதுன்னு காமிக்கிறேன்னு சிகரெட்.. “ 

 

கடவுளே….காதைப் பொத்திக் கொண்டார் விஷ்ணுப்ரியா.

 

பேசாம உங்கப்பா ஊர் பக்கமாவே உன்னைக் கட்டிக் கொடுத்திருக்கலாம். நம்மூரு பசங்க உன்னை ராஜாத்தியாட்டம் தங்கிருப்பாங்க ஆதங்கத்துடன் சொன்னார்.

 

ஏய்… இந்தாடி எங்க போயிட்டஇல்ல வீட்லயையே எவனாவது ஒளிச்சு வச்சிருக்கியாவீட்டின் உள்ளிருந்து அகிலா விழித்துக் கொண்டதற்கு அடையாளமாய் நாராசமாகக்  குரல் ஒலிக்க

 

அப்பறம் பாக்கலாம் ஆன்ட்டிஎன்றபடி உள்ளே ஓடிச் சென்றாள் பத்மினி. 

 

 

ஓடியவளை ஒரு பரிதாபப் பார்வை பார்த்தபடி தனது வீட்டிற்குள் சென்றார் விஷ்ணுபிரியா. தன் கணவரிடம் ஆதங்கப் பட்டவாறே மதிய உணவு பரிமாறினார். 

பத்மினி வீட்டில் சின்ன வயசிலிருந்து மாடு மாதிரி வேலை செய்யவிட்டுட்டு, இப்ப வரைக்கும் இவளை வச்சுப் பொழைச்சுட்டு இருக்காங்க பாருங்க… இவளுதும் நல்ல சுயநலம் பிடிச்ச குடும்பம் போலிருக்கு. கல்யாணம் பண்ணித் தந்ததுதான் தந்தாங்க… இந்தப் படுபாவி பிராஷாந்துக்கா தரணும். அவன் ஆளும், குரங்கு குணமும்… எனக்கு நல்லா வாய்ல வருது, நாகூர் பிரியாணியை உளுந்தூர் பேட்டைல எதுக்கோ தந்த மாதிரி….

 

பிரியாணின்னதும் நினைவுக்கு வருது, ராத்திரிக்கு பிரியாணியும், தயிர் பச்சடியும் பண்ணிடு

 

எவ்வளவு  சீரியஸான விஷயம்   பேசிட்டு இருக்கேன், இந்த மனுஷனுக்கு சாப்பாட்டு விஷயம் மாத்திரம் காதில் விழுது பாரு என்ற கோவத்துடன் நங்கென்று டேபிளில் பாத்திரத்தை வைத்தவர் எரிச்சலாக சொன்னார் 

 “கொட்டிக்கிறதிலேயே இருங்க… ராத்திரிக்கு உப்புமாதான் பண்ணப் போறேன். உங்களுக்கு வேணாம்னா எனக்கும் சேர்த்து கடைல பார்சல் வாங்கிட்டு வாங்க” 

 

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 2”

  1. அகிலா உங்களுக்கு இருக்குறது வாயா இல்ல கூவமா… என்ன பேச்சு… பாவி தெரியாம கை பட்டத்துக்கு சூடு வைப்பீயா நீ எல்லாம் மனுஷன் இல்ல பேரா பாரு பிரஷாந்த் அது ஒன்னு தான் கேடு இவனுக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 20உன் இதயம் பேசுகிறேன் – 20

அத்தியாயம் – 20 மெயின் ரோட்டில் வலது புறமாக இருக்கும் சிறிய தெருவின் வழியே நடந்து செல்லவேண்டும், ஐந்து நிமிடங்கள் நடந்தபின் ஒரு பெரிய சாக்கடை, முன்பு ஒரு காலத்தில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது கழிவு

உன் இதயம் பேசுகிறேன் – 15உன் இதயம் பேசுகிறேன் – 15

அத்தியாயம் 15 “பாலாஜி, நீ நம்ம ஊர்ல இருந்தேனா வள்ளி புருஷன் சந்தேகப்பட்டு அடிக்கிறான் போல இருக்கு. அதனால கொஞ்ச காலத்துக்கு வெளியூர்ல வேலை கிடைச்சதுன்னா போய் இருந்துட்டு வரியா” தன் தாயே தன்னிடம் சொல்லியதும் அதற்கு சம்மதிப்பது போல் தகப்பனும்

உன் இதயம் பேசுகிறேன் – 12உன் இதயம் பேசுகிறேன் – 12

அத்தியாயம் – 12 மறுநாள் எழுந்ததும் முதல் நாள் சாயல் மாறாமலேயே எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கழிவறைக்கு சென்றவண்ணம் இருந்த ப்ரஷாந்தைப் புதிராகப் பார்த்தபடியே காலை வேலைகளை முடித்தாள் பத்மினி.   “நேத்து புளியும் நல்லெண்ணையும் கலந்து வாசம் வந்தப்பாயே நினைச்சேன்.