Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 1

உன் இதயம் பேசுகிறேன் – 1

அத்தியாயம் – 1

வாசல் கதவின் உள் தாழ்பாளை ஒருமுறைக்கு இருமுறை இழுத்துப் பார்த்து, வீடு பூட்டியிருப்பதை உறுதி செய்துக்கொண்டாள் பத்மினி. வீட்டில் புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி. அப்பாடா என்றிருந்தது. வேலை இல்லாமல் ஒன்றும் இல்லை. சிங்க் முழுவதும் பாத்திரங்கள் கழுவ சொல்லி ஆணையிட்டன.

ஊசிப் போன உணவுத் துணுக்குகளின் விரும்பத்தகாத மணத்தை மீறிக் கொண்டு விடியற்காலை  மாமியார் அசிங்கம் பண்ணியிருந்த சேலையின் துர்நாற்றம் அறை முழுவதும் வீசியது. பக்கெட்டில் இருந்த துணியின் மேல் பிளாஸ்டிக் மூடி ஒன்றைப் போட்டு  மூடி குளியலறையில் வைத்தாள்.

‘அப்பாடா… இனி வீடு முழுவதும் நாத்தம் அடிக்காது.

ஒரு இடத்தில் வைக்கவே முடியலையே இதை எப்படித்தான் அலசித் துவைக்கப்போகிறோமோ…

தருமம் தலை காக்கும்னு சொல்றாங்களே… இன்னைக்கு இந்தம்மாவுக்கு நான் செய்றேன். நாளைக்கு இவங்க மாதிரியே நமக்கு ஒரு நிலமை  வந்தா… ‘

மனது அதன் கேள்விக்கு தானே பதிலையும் கண்டுபிடித்தது

‘ரோட்டில் தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டே இருப்பாங்க… அங்கேயே கிடந்தது சாக வேண்டியதுதான்… கார்பரேஷன்காரன் திட்டிட்டே அள்ளிட்டு போற வரைக்கும் அங்கேயே கிடந்து நாற வேண்டியதுதான்’

முகத்தை சுருக்கிய  உற்சாக பத்மினி  ‘அதை ஏண்டி இப்ப நினைக்கிற… தலைவர் சொன்ன மாதிரி சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும். இப்ப வாழும் நாள்’

சோப்பு போட்டு நன்றாகக் கை கழுவி ஈரம் போகத்  துடைத்துவிட்டு, சுடுதண்ணி கெய்சரை ஆன் செய்தாள்.

படுத்த படுக்கையாக இருக்கும் மாமியார் அகிலா, இயற்கை அழைப்பு எழுந்தவுடன் ‘ஏய்’ என்று கத்துவாள். பத்மினி போட்டது போட்டபடி ஓடவேண்டும். சில வினாடிகள்  தாமதமானால் கூட இந்த மாதிரிதான் நடக்கும்.

மருமகள்… அருவருப்புப் பார்க்காமல் துடைத்து, வேறு உடை உடுத்திவிட்டு, பாழான உடையைக் கைகளிலேயே அலசுகிறாளே என்று அனுசரணையாகப்  பேசக் கூட வேண்டாம்.

“கூப்பிடுறது கூட கேட்காம அப்படி என்ன மந்தத்தனம். புருஷனையும் புள்ளையையும் வெளிய அனுப்பிட்டு பால்கனில நின்னு எவனைப்  பார்த்துட்டு இருந்த” என்பார் வக்கிரமாக.

“நான் ஒருத்தி மட்டும் காவல்காரியாட்டம் இங்க இல்லைன்னா இந்த வீட்டில் என்னென்ன நடக்குமோ… ” என்று ஆரம்பிக்கும் வசை அவளது நடத்தையைப் பற்றிக்  கூறு போடும்.

“எங்கம்மா அப்படித்தான். கொஞ்சம் வாய் அதிகம். நான் கண்டிச்சால்லாம் கேட்காது. நீதான் பொறுத்துக்கணும்” என்று பிரஷாந்த் திருமணமான புதிதிலேயே சொல்லிவிட்டான். ஆகையால் அதன்பிறகு அவனிடம் முறையிடுவதும் குட்டி சுவற்றில் முட்டிக் கொள்வதும் ஒன்றுதான் என்றாகிவிட்டது.

இந்தம்மா பேசும் இத்தனை வசவுகளையும்  பொறுத்துக்க கொண்டு துணியை சுடுதண்ணியில் அலசிக் காய வைக்கவேண்டும். வாஷிங் மெஷினில் துவைத்தால் மற்ற துணிகளிலும் நாற்றம் படிந்து குமட்டி ஷாமிலிக்கு வாந்தி வருகிறதாம். அதனால் கையில் தான் துவைக்க வேண்டும்.

இரவு முழுவதும் அகிலாவுக்குத் தூக்கம் வராது. தான் தூங்கவில்லை என்றால் மருமகளும் தூங்கக் கூடாது என்ற மாமியாரின் நல்லெண்ணத்தினால் சுடுதண்ணி கொண்டுவர, மருந்து தர, பெட்பேன் வைக்க என்று தினமும் பத்மினிக்கு சிவராத்திரிதான்.

இதனாலேயே என்றாவது ஒருநாள்… சிறிது நேரம் அபூர்வமாய்க்  கிடைத்து, ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும்போது, புளிமூட்டை போல தொம்மென்று தன் மேல் விழும் கணவன் மீது காதல் என்ற உணர்வே தோன்றாமல் எரிச்சல்தான் மண்டுகிறது.

காலை உணவு ஊட்டிவிட்டு மாத்திரையை மாமியாருக்குத் தந்துவிட்டாள். மாத்திரையை விழுங்கிவிட்டு கிறக்கத்தில் கண்ணசந்திருக்கிறார் அகிலா. இந்த பொன்னான நேரத்தைத் துளித்துளியாக அனுபவிக்க வேண்டாமா…. ரசனையாகப் புன்னகைத்தாள்.

ரெண்டு மணிநேரமும் என்னோடது. எனக்குப் பிடிச்ச விஷயத்தை மட்டும் செய்யப்போறேன்.

டீ பாத்திரத்தை அடுப்பின் மேல் எடுத்து வைத்தாள். அதன் பின்னே டீத்தூள், மிச்சமிருந்த பால், சர்க்கரை, டீ  வடிகட்டி என்று ஒவ்வொன்றாய் அணிவகுத்தன.

சத்தமெழுப்பாமல் மெதுவே சமையலறைக்கும் வரவேற்பறைக்கும்  நடுவே இருந்த ஸ்லைடிங் டோரை இழுத்து சாத்தினாள்.

அதற்கு எதிர்புறமிருந்த சமையலறைக் கதவைத் திறந்ததும், காலைக்காற்று  அவள் மேல் மோதி அவளது கூந்தலைக் கலைத்து விளையாடியது.

அந்தப் புறாக் கூண்டு பிளாட்டின் பின்னால் மும்பை ‘என்னைப் பார்… என் அழகைப் பார்…’ என்று கர்வமாக விரித்துப் பரந்திருந்தது. தீப்பெட்டி சைசில் ரெட்டை படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில் அவளுக்கு மிகவும் பிடித்த இடம் சமையலறைக்குப் பின்னிருக்கும் இந்த பால்கனிதான்.

நாலு சேர்கள் போடும் அளவுக்கு இருக்கும் இடத்தில் மிகவும் அருகிலேயே பக்கத்து பிளாட் பால்கனியும் இருக்கும். இரண்டு பால்கனியையும் பிரித்தது மிகச் சிறிய சுவர் மட்டுமே. சில நாட்கள் அந்த சுவற்றைத் தாண்டி பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாள்.

“கடன்காரி, அப்படி என்ன தலை போற அவசரம். வாச வழியா வரதுக்கு  என்ன? பத்தாவது மாடியிலிருந்து விழுந்து தொலைச்சா சிதறு தேங்காய்தான்” அன்று பக்கத்து வீட்டு விஷ்ணுபிரியா கடிந்து கொள்வாள்.

“ஆன்ட்டி…” தன் வீட்டு பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்து பக்கத்து பால்கனிக்கு குரல் கொடுத்தாள் பத்மினி.

“தோ  வந்துட்டேன்…. உன் குரலுக்காகக்  காத்துட்டே இருந்தேன்”

கைகளைத் துடைத்தபடி தனது கனத்த தேகத்தைத் தூக்கிக் கொண்டு வந்தார் விஷ்ணுபிரியா

“என்ன, காலைல ஷாமிலி  கிளம்புறதுக்கு முன்னாடி வழக்கம்போல கலாட்டா பண்ணா போலிருக்கு”

“வழக்கம்போல சாப்பாட்டுத் தகராறுதான். சப்பாத்தில எண்ணெயே  இருக்கக் கூடாதாம். எண்ணை  ஊத்தலைன்னா மத்தியானம் சாப்பிடும்போது காஞ்சு போயிடாதா…”

“இந்த ஊர்ல சுடுற மாதிரி சுக்கா ரொட்டி செஞ்சு தாயேன்”

“எண்ணெய்யே இல்லாம செஞ்சா அப்பளம் மாதிரி இருக்கும் ஆன்ட்டி. அவ வயசுக்கு கொஞ்சம் நெய்யோ எண்ணெயோ  சேர்த்துக்கலாம். கேட்க மாட்டிங்கிறா. இந்த ஊரு சினிமாக்காரிங்க மாதிரி ஒல்லிக் குச்சியா உடம்பை வச்சிருக்கா. என் மாமியார் வேற நான் என்னவோ பிள்ளைக்கு சாப்பாடே தராம பட்டினி போடுற மாதிரி நாள் பூரா  திட்றாங்க”

“அது கிடக்குது… எனக்குத் தெரிஞ்சு அந்தம்மா வாயை மூடினதா சரித்திரமே இல்லை. உன் கல்யாணத்துக்கு முந்தியும் அப்படித்தான். பால், மளிகை கடை, பேப்பர், கேபிள் எல்லார் கூடவும் சண்டை

நான், உனக்கு அந்தப்பக்கத்து மராத்திகாரி, எதிர்த்த வீட்டு பெங்காலி, வீட்டுல உன் மாமனார் … இப்படி அடுக்கிட்டே போலாம். ஒருத்தரை விடாது. எல்லாரு கூடவும் தினமும் சண்டைதான். உன் மாமனார் இவ  திட்டு தாங்கமுடியாமலே பத்து வருஷத்துக்கு முன்னாடியே போயிட்டார். இவ படுத்த படுக்கையாயிட்டப்பறம் அலைஞ்சு அலைஞ்சு சண்டை போட முடியல. அதுதான் உன்கூட போடுறா”

“எல்லாருக்கும் நான்தான் கிடைச்சேனா”

“எல்லாருக்கும்னா…”

“அவருக்கு வேலைல பிரச்சனைனா என் ராசிதான் வேலை செஞ்சிருக்கு. ஷாமிலிக்கு பிரெண்ட் கூட சண்டைன்னா பட்டிக்காடாட்டம் நான் முன்னாடி நின்னதுதான் காரணம். மாமியாருக்கு வயிறு வலின்னா நான்தான் விஷம் வச்சு கொல்லப் பாக்குறேன்… ஷ்… ஷப்பா… முடியல”

விரக்தியாய்  சொன்ன பக்கத்து வீட்டுப் பெண்ணை இரக்கத்துடன் பார்த்தார் விஷ்ணுபிரியா.

1 thought on “உன் இதயம் பேசுகிறேன் – 1”

  1. எத்தனை நாள் இந்த கதையை தேடிட்டு இருக்கேன்… முன்னாடி ஆரம்பிச்சி விட்ட பிறகு இதை பத்தி நினைக்கும் போது எல்லாம் தேடுவேன் … என்ன title மறந்து டப்பாவாலா மும்பை பத்மினி மட்டும் தான் நினைவில் இருந்துச்சு… இப்போ தான் fb யில் title கிடைச்சி கதையும் முடிஞ்சிடுச்சு தெரிஞ்சி வந்து இருக்கேன்… ரொம்ப ரொம்ப happy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 3உன் இதயம் பேசுகிறேன் – 3

அத்தியாயம் – 3  பிரஷாந்த் புது கம்பெனி மாறியிருக்கிறான். பழைய நிறுவனத்தில் ஆட்குறைப்பில் அவனுக்கு வேலை போய் விட்டது. இரண்டு மாதங்கள் சிரம திசைதான். வாரத்துக்கு நான்கைந்து இண்டர்வியூ  செல்வான். ஆனால் ஒரே நிறுவனத்தில் வெகு காலம் வேலை செய்ததால் இப்போது வெளியே

உன் இதயம் பேசுகிறேன் – 14உன் இதயம் பேசுகிறேன் – 14

அத்தியாயம் – 14 அது என்னவோ தெரியவில்லை காலையிலிருந்து பாலாஜிக்கு நிற்க முடியாத அளவிற்கு வேலை அடுக்கடுக்காக அணிவகுத்து நின்றது. அடுத்த வாரத்துக்கான சோப்புகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை அதனை விசாரிக்க சொல்லி ஓனர்

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,