Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 23’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 23’

அத்தியாயம் – 23

நரேஷின் மும்பை இல்லம். இரவு உணவின் போதுதான் மீரா மற்றும் குட்டி ரேணுவின் டிஎன்ஏ ரிசல்ட்டைப் பற்றி குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.

இரண்டு பெண்களும் அந்தக் குடும்பத்தினர்தான் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல அதில் சொல்லியிருந்தனர்.

“இதை எப்படிப்பா ஹாண்டில் பண்றது?” தகப்பனிடம் கவலைப்பட்டார் ரஞ்சித்.

“ஹாண்டில் பண்ணித்தான் ஆகணும்”

“ரே கிட்டத்தட்ட ரிசல்ட்டைக் கண்டுபிடிச்சு ஃபார்முலா சப்மிட் பண்ணிட்டா”

“அப்ப ரே தான் ராஜீவின் மகளா. மீரா இந்தப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாம ஓடிட்டதா உன் மனைவி சுஷ்மா அம்மாகிட்ட சொன்னதா கேள்விப்பட்டேன்”

“இல்லப்பா, மீராவுக்கும் இந்த பெர்ஃப்யூம் துறைக்கும் சம்பந்தமே இல்லை. அப்படி இருக்கும்போது அவளால் எப்படிப்பா சரியா கண்டுபிடிக்க முடியும். ஒரே மாதிரி போட்டி ஒரு மாதிரியான தகுதி இருக்கும் ஆட்களுக்குத்தானே வைக்க முடியும்”

“இந்தக்கேள்வி எல்லாம் இந்தப் போட்டி வைக்கிறதுக்கு முன்னாடி நீ என்கிட்ட சொல்லியிருக்கணும். நாளைக்கு முடிவுன்னு நிக்கிற கடைசி சமயத்தில் சந்தேகத்தை எழுப்பி குழப்ப ட்ரை பண்ணக்கூடாது. மீரா அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசச் சொன்னாளா?”

“இல்லைப்பா… அவளை நான் போட்டி ஆரம்பிச்ச அன்னைக்குப் பார்த்ததோட சரி. தொடர்பே இல்லை. என் மனசுக்கு தோன்றினதை சொன்னேன். ராஜீவின் மகள் ராஜீவின் துறைலையே இருக்கணும்னு அவசியமில்லையே”

“என்கிட்ட பூடகமா எதுவும் சொல்லாம டைரெக்டா சொல்லு. உனக்கு உன் தம்பி பத்தின உண்மை என்னன்னு தெரியுமா? இதில் யாரு சட்டப்படியான வாரிசு, யாரு முறையில்லாம பிறந்த வாரிசு?”

பேசிக்கொண்டிருந்த போதே “சார், மைக்கேல் கிட்டேருந்து அழைப்பு வந்திருக்கு” என்றபடி வந்து நின்றான் உதவியாளன்.

மைக்கேல் தான் மறுநாள் தீர்ப்பு சொல்லப் போகும் நீதிபதி. அவர் அழைக்கிறார் என்றால்

“நீ குழப்பிக்காம போயி தூங்கு. நானும் தூங்கணும்” என்றபடி எழுந்து சென்ற தகப்பனைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் ரஞ்சித்.

 

படுக்கை அறையின் கண்ணாடி முன்பு அமர்ந்து இளமையை மீட்டுத்தரும் கிரீமை முகத்தில் பூசிக் கொண்டிருதாள் சுஷ்மா.

“நாளைக்கு இந்நேரம் தீர்ப்பு வெளி வந்திருக்கும்” என்றவளை வெறித்தான் ரஞ்சித்.

“நான் சொன்னது சரியாயிடுச்சு பாருங்க. அந்தப் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நம்ம குடும்ப டிஎன்ஏ இருக்குன்னா என்ன அர்த்தம். ராஜீவுக்கு ரெண்டு பொண்டாட்டின்னுதானே… அடேங்கப்பா என்னம்மா அனுமான் வேஷம் போட்டிருக்கான் உங்க தம்பி”

“அவனைப் பத்தித் தப்பா பேசாதே. அவன் எவ்வளவு பெரிய தியாகி தெரியுமா”

“ஆமாம், ஆமாம் ரெண்டு பொண்டாட்டியையும் தியாகம் செஞ்சிருக்கானே… நீங்களே அந்த ஒழுக்கம் கெட்டவனைத் தூக்கி வச்சு கொண்டாடுங்க”

“இந்த டாபிக் வேண்டாம் சுஷ்மா”

“எப்போதும் அவனை ஒரு வார்த்தை கூட சொல்ல விடாதீங்க. அவனை சுதந்திரமா வளர்த்ததுதான் உங்க குடும்பத்துத் தப்பு. சொன்ன பேச்சை தட்டாத பிள்ளையா, அப்பா பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத பிள்ளையா நீங்க இருந்து என்ன பிரோஜனம்? அவனைத்தானே எல்லாருக்கும் பிடிக்குது”

அவளது தொணதொணப்பு நிற்கப் போவதில்லை… நைட் டிரெஸ் மேல் போடும் கோட்டை போட்டபடி எழுந்தார்.

“எங்க போறீங்க”

“இப்போதைக்கு உன் தொணதொணப்பு நிக்கப் போறதில்லை… வெளிய போயி எங்கப்பாவுக்குத் தெரியாம ஒரு தம் அடிச்சுட்டு வரேன்” என்று எழுந்தார்.

“இந்த வயசிலும் உங்கப்பாவுக்கு பயம்”

“அப்பா மேல மரியாதை மட்டுமே. பயம் எல்லாம் உன் மேலதான்” என்றபடி நடந்தார்.

“அப்படி பயப்படுற மாதிரி என்ன செஞ்சுட்டேன். உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு… “ சுஷ்மாவின் புலம்பல் ஆரம்பிக்க எரிச்சலோடு கதவை சாத்திவிட்டு கார்டன் ஏரியாவை நோக்கி நகர்ந்தார்.

நள்ளிரவு, பங்களாவை இருள் கம்பளி போர்த்தி இருக்க, சிகரட்டைப் பிடித்தபடி வெறித்தார். நல்ல தூக்கம் தூங்கி பல வருடங்களாகிவிட்டது. ராஜீவ் இருந்த வரை கோழித் தூக்கம் தூங்கினார். அவனுடன் சேர்ந்து அவரது தூக்கமும் மறைந்து போனது.

“ஆம் துரோகிகளுக்குத் தூக்கம் எட்டாக்கனிதான் ரஞ்சித்” என்று நகைத்தது மனசாட்சி.

“எப்பவோ மனைவி மக்களோட சேர்ந்து வாழ்ந்து இருக்க வேண்டியவன் ராஜீவ். அவனை ரகசிய வாழ்க்கை வாழ வச்சது யாரு? உங்கப்பா சொன்னதா சொல்லி ஆட்களை அனுப்பி தீர்த்துக் கட்ட நினைச்சது யார்? இந்தப் பாவமெல்லாம் செய்தது பத்தாதுன்னு நீ செஞ்ச தவறுக்கு மறைஞ்ச பின்னும் கெட்ட பெயரை சுமத்தி இருப்பது எவ்வளவு பெரிய துரோகம்”

அலைபேசி ஒரு மிஸ்டு கால் வந்து சென்றது. ரேச்சல்தான் அது. உடனே அழைத்தார்.

“வழக்கம் போல தூங்கிருக்க மாட்டீங்கன்னு தெரியும் ரஞ்சித். அங்க நிலமை எப்படி போயிட்டு இருக்கு?”

“கட்டுக்குள்ளத்தான் இருக்கு. ஆனாலும்… சுமித்ராவையும் மீராவையும் பத்தின உண்மையை… “

“என்ன வழக்கம் போல உங்க மனசாட்சி முழிச்சுகிச்சா”

“ரேச்சல்… ராஜீவ் என் குடும்பம் கலையக் கூடாதுன்னு நம்ம பிள்ளைக்கு ஒரு அப்பாவா இருந்திருக்கான். அந்த நன்றி கூட நமக்கில்லைன்னா எப்படி?”

“அவன்தான் என் வாழ்க்கையைக் கெடுத்தான். உங்களுக்கு அவன் தியாகின்னா எனக்கு வேண்டியதை சேர விடாம தடுத்தவன்”

 

“நீயும் ஒத்துக்கிட்டதுதானே ரேச்சல்”

“அப்ப வேற வழியில்லை. நீங்க உங்க மனைவியை டைவெர்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டீங்க. அதனால கிடைச்சதுக்கு சம்மதிக்க வேண்டியதாயிடுச்சு”

“தங்க முட்டை இடும் வாத்து மாதிரி எங்க குடும்பத்துகிட்டருந்து எவ்வளவோ வாங்கிட்டியே… “

“அது இப்ப பேச்சில்லை. என் பொண்ணுக்கு உரிமையை தாங்க நான் விலகிடுறேன்”

“வந்து… “

“அவ்வளவு பயம் இருக்குற நீங்க என் கூட பழகிருக்கக் கூடாது. இந்த குடும்பத்துக்கு வாரிசா ரேவைக் கொண்டு வர எவ்வளவோ செஞ்சிருக்கேன். ராஜீவ் என்ன உங்கம்மா பேரையா அவன் பொண்ணுக்கு வச்சான். நானோ பிறந்ததும் உங்கம்மா பேரை அவளுக்கு வச்சேன்”

“ரீமா அப்படின்னுற எங்க நிறுவனத்தின் பேரை பிரதிபலிக்கிற மாதிரிதான் அவன் தான் பெண்ணுக்கு மீரான்னு பேர் வச்சான். அவன் என் தம்பி, எங்க குடும்பத்தை சேர்ந்தவன். அதை சின்ன சின்ன விஷயங்களில் கூட நிரூபிக்கணும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை”

“பெயரை விடுங்க. என் பொண்ணு ரேவை கொஞ்சம் கொஞ்சமா உங்கம்மாவோட ஜாடைக்கு மாத்திருக்கேன், ராஜீவின் பொன்னுன்னு அவ மனசில் ஏத்தி வச்சிருக்கேன். ராஜீவ்தான் தகப்பன்னு எல்லா இடத்திலும் முறைப்படி பதிவு பண்ணிருக்கேன்.

ராஜீவ் அதுக்கு மறுத்து எதிர்ப்பு தெரிவிச்சப்ப உங்க குடும்பத்தில் குழப்பம் செய்வேன்னு சொல்லி பலமுறை அவனை அடக்கி வச்சிருக்கேன். உன் அண்ணன் பொண்ணு அப்பன் பெயர் தெரியாத பொண்ணான்னு எமோஷனல் பிளாக் மெயில் பண்ணிருக்கேன்.

இப்ப ரேவோட டிஎன்ஏ டெஸ்ட் பண்ண டாக்டர் வரை என் பணம் பாய்ஞ்சிருக்கு. நாளைக்கு என் மகள் உங்க குடும்பத்தின் வாரிசா ஏத்துக்கப் படணும். முறையில்லாத தகாத முறையில் பிறந்த பொண்ணா இல்லாம ராஜீவின் மகளா அடையாளம் காணப்படணும்”

“இதனால ராஜீவின் பொண்ணு தப்பா அடையாளம் காணப்பட மாட்டாளா?”

“அதைப் பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. இருட்டில் இதுவரை வாழ்ந்த அவங்களுக்கு இப்ப மட்டும் ஏன் வெளிச்சத்துக்கு வரும் ஆசை. அப்படியே இருந்துட்டுப் போயிடலாமே”

“ராஜீவ் வாழும் வரைதான் அவனை குடும்பத்தோட வாழ விடல. இப்பவாவது அவனோட குடும்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடாதா? அதைத் தடுக்குறது பெரிய பாவம்”

“உன் தம்பி பாவம், அவனோட பொண்டாட்டி பொண்ணு பாவம். ஆனால் கல்யாணம் ஆன உன் கூட குடும்பம் நடத்தி ஒரு பெண்ணைப் பெத்து அவளுக்கு இவர்தான் தகப்பன்னு சொல்ல முடியாம நிக்கிற நான் பாவம் இல்லையா?”

“என்னை என்ன செய்ய சொல்ற ரேச்சல். பிடிவாதமா குழந்தை பெத்துக்கிட்டவ நீ”

“ஓ உங்க பெண்ணைக் கருவிலேயே ஏன் கொல்லலைன்னு கேக்க உங்களுக்கு வெட்கமாயில்லை?”

“நான் அப்படி சொல்லவே இல்லை. அதற்கான சந்தர்ப்பத்தை குடுத்திருக்க வேண்டாம். சரி விடு அதைப்பத்தி இப்ப பேசிப் பயனில்லை. நம்ம செஞ்ச தப்புக்கு மீராவை ஏன் பலிகடாவாக்குற?”

“சரி மீரா தான் ராஜீவ் பொண்ணுன்னு உண்மையை சொல்லி அங்கீகாரம் வாங்கித் தரணும்னு நினைக்கிற உங்க சகோதர பாசத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அது நடக்கணும்னா நீங்க உங்க பொண்டாட்டியை டைவெர்ஸ் பண்ணிட்டு எங்களுக்கு உரிய அங்கீகாரம் தருவிங்களா?”

பலத்த மௌனம் மறுமுனையில்.

“உங்களால் முடியாது. ஒண்ணு உங்க பொண்ணு, இல்லை ராஜீவின் பொண்ணு, இந்த ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் அங்கீகாரம் இல்லாம அலைய வேண்டியது அவங்க விதி. அது ஏன் உங்க பொண்ணா இருக்கணும். அவளுக்கு கிடைக்கப்போற வாழ்க்கைல குறுக்கிடாம, உண்மையைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு, வாயை மூடிட்டு இருக்க வேண்டியதுதான் நீங்க உங்க பொண்ணுக்கு தகப்பனா செய்யப்போற மிகப்பெரிய உதவி”

குற்ற உணர்ச்சியில் கையறு நிலையில் தலையில் கை வைத்து அப்படியே ரஞ்சித் குளிரில் அமர்ந்திருந்தார். கழிவறைக்கு எழுந்து சென்ற நரேஷ் தன் மகன் தோட்டத்தில் தலையில் கை வைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்து தனக்குள் சொல்லிக் கொண்டார் “முட்டாள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’

அத்தியாயம் – 13 ஊட்டி, குமரேசனின் வீடு.  “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு.  “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 25 மூன்று மாதங்கள் கழித்து ஜல்லிப்பட்டியில் ஊரையே அடைத்துப் பந்தல் போட்டுத் திருமண விழா ஒன்று அரங்கேறியது. நரேஷ் மல்கோத்ரா தனது மகனுக்கு செய்யும் பிராயச்சித்தமாக எண்ணி கல்யாணத்தை மிக மிக விமர்சயாக நடத்தினார். சுஷ்மாவுக்கும் ரஞ்சித்துக்கும் பஞ்சாயத்து

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’

அத்தியாயம் – 2   “மீரா… சஷ்டி கொஞ்சம் கரடு முரடானவன்தான். ஆனால் எப்படியாவது அவன்கிட்ட முதலில் உன் நிலையைப் பத்தி சொல்லு. அவனால உனக்குக் கண்டிப்பா உதவி பண்ண முடியும்னு நான் நம்புறேன்” என்று குமரேசன் சொல்லியே அனுப்பிருந்தார்.  முதல்