அத்தியாயம் – 21
காலையில் பிங்கு எழுந்து உடையை மாற்றிக் கொண்டு பூனை போல வந்த பொழுது அதிர்ச்சி. களைப்பான கண்களுடன் அப்போதுதான் உறங்க வந்தான் சஷ்டி. அவனைக் கண்டதும்
“என்னடா பிங்கு ஆளையே பாக்க முடியல”
“ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் க்ரூப் 1 எக்ஸாமுக்குப் படிக்கணும்” சஷ்டியின் முகத்தைப் பார்க்காமலேயே பதில் சொன்னான். இது வரைக்கும் சிறுபிள்ளைத்தனமாக எத்தனையோ சேட்டைகளை செய்திருக்கிறான். ஆனால் இந்த முறை கண்ணனின் பேச்சைக் கேட்டு செய்தது மிகப்பெரிய தவறு.
மீராவும் சஷ்டியும் தவறான முயற்சியினை செய்வதை பார்த்துக் கொண்டு கல்லென நிற்பதற்கு தாமதமாக விழித்துக் கொண்ட அவனது மனசாட்சி இடம் தரவில்லை. அதனாலேயே இருவரின் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறான்.
“எக்ஸாமுக்கு படிக்கப் போறியா? நில்லுடா டீ போட்டுத் தரேன்” அதே சோர்வுடன் சமயலறைக்குள் நுழைந்தான் ஷஷ்டி.
“இல்ல வேணாம் வெளில போயி குடிச்சுக்குறேன்”
“நாலு மணியாகப் போகுது. எங்கிருந்து டீ குடிப்ப? வெளில அடிக்குற குளிருக்கு சூடா ஏதாவது குடிச்சால்தான் உன் மூளை வேலை செய்யும்”
சூடாக டீ போட்டுக் கொண்டே பேசிய சஷ்டியை பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது பிங்குவுக்கு.
இந்த ஷஷ்டி விக்ரமன் பட அண்ணன் மாதிரி டீயெல்லாம் போட்டுத் தந்து மனசைக் குடையுறானே…
முத்தாய்ப்பாக ஷஷ்டி “க்ரூப் 1 தமிழ் நாடு சிவில் சர்விஸ்ல டெபுடி கலெக்டர், டெபுடி கமிஷ்ணர் இந்த மாதிரி போஸ்ட் தானே. நம்ம குமரேசன் சார் மாதிரி நேர்மையான மனுஷனோட மகன். அவரோட நேர்மைல பாதி இருந்தாக் கூட இந்தப் பதவிக்குப் போதும்”
அய்யோ ஷஷ்டி இந்த மாதிரி பேசி என்னை டார்ச்சர் பண்ணாதேடா என்று கத்த வேண்டும் போல இருந்தது.
“மீராக்கா தூங்க போயிட்டாங்களா?”
“எங்கடா… உங்க அக்கா தூங்குற மாதிரியே தெரியல. அவங்களோட அப்பாவை அடையாளம் காட்டனும்னு ஒரு கவலைலயே இருக்கா… இன்னும் ரெண்டு மூணு பொருட்கள் வேற தெரியல. அதனால ராப்பகலா லேப்லயே தவமிருக்கா. இது சரியா கண்டுபிடிக்கலைன்னா மீரா மனசு என்னாகும்னு எனக்கே தெரியலடா பிங்கு. அவங்க அம்மா வந்தா நல்லாருக்கும். யாராவது அவ கூடவே இருக்கணும்”
“தப்பான ரிசல்ட் கண்டுபிடிச்சா என்னாகும்”
“தெரியலடா… இது ஒரு போர்க்களம். இதில் மீரா மட்டும் தனியா நின்னு சண்டை போட்டுகிட்டிருக்கா. இதில் நியாயத்துக்கு போராடுற அவளுக்குத் தோல்வி கிடைக்கக் கூடாது. அப்படி நடந்தது மீரா மனசு உடைஞ்சு போயிரும். அதை நடக்காம பாத்துக்குறது என்னோட பொறுப்புன்னு படுது”
பாருடா பிங்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பழக்கமான இந்த சஷ்டி, மீரா கூட துணையா இந்த போரில் நிக்கிறான். நீயோ தூ நாயே என்று காரி துப்பியது.
“இந்தா டீயும் பிரட் டோஸ்டும் சாப்பிட்டுட்டு போயி தெம்பா படி” என்று முத்தாய்ப்பாக சாப்பாட்டை அவனுக்குத் தந்துவிட்டு சென்றவனைக் கண்டு அவனது மனம் முழுவதுமாக சரண்டரானது.
டேய் மனசாட்சி கடைசியா இந்தக் குரங்குக்கு எல்லாம் சப்போர்ட் செய்றியே என்று திட்டிக் கொண்டே சஷ்டியைப் பார்த்தான்.
அறைக்கு சென்ற சஷ்டி “டேய் பிங்கு, மக்குப்பயலே. ஒரு சில நிமிஷங்களில் வீட்டுக்குள்ள குறிப்பா மீராவின் பெர்சனல் அறைக்கு நுழைஞ்சு, அந்த பீரோ சாவியை கரெக்டா திறந்து பாட்டிலை மாத்தி வைக்குற அளவுக்கு பரிட்சியம் இப்போதைக்கு குமரேசன் சாருக்கும் உனக்கும் மட்டும்தான் இருக்கு. உங்கப்பா அதெல்லாம் செய்ய மாட்டார். ஆனால் நீ செய்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. உண்மையை உன் வாயாலேயே கக்குவ பாரு”
சஷ்டி தூங்கி எழுந்து காலை உணவுக்கு வந்த பொழுது மீராவுடன் குமரேசனும் அவனுக்காகக் காத்திருந்தார்.
“உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன நிகழ்ச்சியை சொல்லப்போறேன்”
உதகையில் ஒரு காட்டுப் பகுதியில் நிலம் வாங்கியிருந்தார் ராஜீவ். வாங்கி சில நாட்கள் கழித்து நிலத்தைப் பார்வையிட வந்தவரை வழி மறித்தனர் சில நபர்கள்.
“உங்களுக்கு என்ன வேணும்? பணம் வேணும்னா இந்த பர்ஸ்ல இருக்குறதை எடுத்துட்டு விடுங்க”
“அய்யா… இந்த மலைத்தாயையே தேவைக்கு மேல தொந்திரவு பண்ணாத காட்டு சனங்க நாங்க. உங்க காகிதத்தை வச்சுட்டு என்னங்க பண்றது”
வியப்போடு பார்த்தார் “அப்பறம் வேற என்னதான் வேணும்”
“நீங்க வாங்கிருக்குற நிலம் எங்க மக்களோட வழித்தடமுங்க… அந்தத் தடத்துலதான் தேனெடுக்க கிழங்கெடுக்க போவுமுங்க. ராத்திரி ஜனங்க வேட்டைக்குப் போறதும் அந்த வழியாத்தானுங்க. அதை விக்கக் கூடாதுன்னு அதிகாரிங்க கிட்ட மனு கொடுத்திருக்கோமுங்க. அதையும் மீறி யாரோ உங்ககிட்ட வித்திருக்காங்க”
யோசனையுடன் புருவத்தை சுருக்கினார் ராஜீவ் “பத்திரம் சரியா இருக்கே. வக்கீல்கிட்ட செக் பண்ணிட்டுத்தான் வாங்கினேன்”
“உங்க நிலத்து வழிய மூடிட்டா நாங்க மலைப்பதையை சுத்தி பத்து மைல் நடக்கணுமுங்க… அப்பால மண்சரிவு வேற அந்தப்பாதைல அதிகமுங்க” அப்பாவிகள் முறையிட்டனர்.
அரசாங்கம் கட்டித் தந்த குடியிருப்பிலிருந்து இடம் மாற அவர்களால் முடியாது. அவர்களது வாழ்விற்கே தனது நிலம் ஒரு சோதனையாக இருப்பதைக் கண்டு விரைவில் ஒரு தீர்வுடன் வந்தார் ராஜீவ்.
“இந்த நிலத்தில் ஒரு பகுதியில் ரோஜாப்பூந்தோட்டம் போடுறேன். அந்தப்பக்கம் மரமெல்லாம் இருக்கு அதை ஒட்டியே இந்தப் பூந்தோட்டம் இருக்கட்டும். உங்களுக்கு தேனி வளர்ப்புக்கும் வங்கிக் கடன் வாங்கலாம். அதுக்கு குமரேசன் ஏற்பாடு செய்வார். இதுக்கு அந்தப்பக்கம் இருக்குற நிலத்தில் குளிர் பகுதியில் விளையற பழம் செடிகளை நட்டு பராமரிக்க உங்க வீட்டுப் பெண்களுக்கு பயிற்சி தரோம்”
“அய்யா காட்டுப் பாதை… “
“நடுவில் இருக்குற இடம் உங்க காட்டுப் பாதைதான். அதுக்கு ரெண்டு பக்கமும்தான் பூந்தோட்டமும் பழத்தோட்டமும் உருவாக்கப் போறோம்”
“இவ்வளவு பெரிய உதவி செய்வீங்கன்னு நாங்க நினைக்கலையா… பாதை கூட இவ்வளவு நிலம் ஒத்தையடிப் பாதை போதும். எங்களுக்குக் குறுகலான பாதையில் போயிப் பழக்கம் இருக்குங்கய்யா”
“உங்களுக்கு இருக்கு. பழம் பறிக்க பூப்பறிக்க போறவங்களுக்கு கஷ்டமா இருக்குமே” என்ற ராஜீவ் அந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழிகாட்டி. பலவகை பூ, காய், மூலிகை மரங்களோடு வளர்ந்து நிற்கிறது ராஜீவ் என்று செய்த சிறு செயல். அதுமட்டுமின்றி வருடம் தோறும் கொண்டாடும் கிராமத்து விழாவில் ஊட்டியில் இருக்கும்போது அவரும் கலந்து கொள்வார். ஏதோ அவர்களுக்கும் ராஜீவுக்கும் அப்படி ஒரு புரிதல்.
குமரேசன் இந்தக் கதையை மீராவிற்கும் சஷ்டிக்கும் சொல்லி முடித்ததும் “இயற்கை காதலர்களுக்கு இணைப்பு உருவாகுறது அதிசயம் இல்லையே சார்” என்றான் சஷ்டி.
“இப்ப அதுக்கு என்ன அங்கிள்”
“நாளைக்குத்தான் அந்த மலைவாசிகள் பண்டிகை. வழக்கமா ராஜீவ் அவங்க கூட போயி சில நாட்கள் தங்கிட்டு வருவான். வரும்போது ஏதாவது செடி கொடி எல்லாம் எடுத்துட்டு வருவான். அவன் சார்பா நீ கலந்துக்கிட்டா நல்லாருக்கும்னு அந்த கிராமத்துத் தலைவர் ஆசைப்படுறார். போயிட்டு வாயேன். உனக்கும் இந்த டென்சன்லெருந்து ஒரு பிரேக் கிடைக்கும்”
“ஆனா… இன்னும் சில பொருட்களைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கே அங்கிள்”
“இன்னொரு முக்கியமான விஷயம் மலைஜாதி மக்கள் கூட சில வாசனைப் பொருட்களை உபயோகிப்பாங்க… நீ அவங்க கிட்ட கூட கேட்டுப் பாக்கலாமே” என்றும் ஒரு யோசனை சொன்னார்.
குமரேசனின் யோசனையை செயல்படுத்திப் பார்க்க முடிவு செய்தாள் மீரா. அதுவரை கண்டுபிடித்த சாம்பிள்கள், அவளது தந்தையின் சென்ட் மாதிரி ஆகியவற்றைக் பாக் செய்தாள்.
மீராவும் சஷ்டியும் கிளம்ப “இந்த பொருளை எல்லாம் வாசம் பிடிச்சு சரியா கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். கெமிக்கல் பிராசஸ் பண்ண இதை அவங்க எந்த அளவுக்கு பிரிச்சு பாக்க முடியும்னு தெரியல சஷ்டி”
“புலம்பாதே மீரா… ஒரு எண்பது சதவிகிதம் கண்டுபிடிச்சுட்டோம். மீதி இருபது தானே சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்”
“இருதாலும். யோசிச்சு பாருங்க ரே க்கு ஒரு படையே வேலை செய்யுது. லேடெஸ்ட் எகியூப்மெண்ட்ஸ் வச்சு டெஸ்ட் பண்ணலாம். எல்லாத்துக்கும் மேல அவளே ஒரு பெர்ஃப்யூமர். அவங்க அம்மா இதிலேயே ஊறினவங்க. இத்தனை பேரை எதிர்க்கிற அளவுக்கு எனக்கு பலமில்லையே சஷ்டி”
“உன்கிட்ட இருக்குற உண்மைதான் இது எல்லாத்தையும் விட பெரிய பலம் மீரா. உன்னை எதிர்த்து நிக்கிற அத்தனை பேரையும் அது தூள் தூளாக்கிரும். பஞ்ச பாண்டவர்களை எதிர்த்து நின்ன நூறு அண்ணன் தம்பிகள் என்னவானாங்க?”
“உங்க ஓவர் காண்பிடென்சைப் பாத்தா நம்பிக்கையும் வருது பயம்மாவும் இருக்கு” என்று புலம்பிக் கொண்டே வந்தவளை உலகையே மறந்து மகிழ்ச்சியுறச் செய்தது அந்தப் பயணம்.