அத்தியாயம் – 19
“என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா.
“இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது. அதுதான் மீராவை கோபமடையச் செய்திருந்தது.
“நைட் ஒரு யோசனை தோணுச்சு. அந்த நேரத்துக்கு உன்னை எழுப்ப முடியாதில்ல அதுதான் இந்த வாயிலில் கொஞ்சம் நிரப்பி வச்சுக்கிட்டா டெஸ்டிங் பண்ண சுலபமா இருக்கும்” என்றது ஓரளவே மீராவை சமாதானப் படுத்தியது.
“இருந்தாலும் நம்ம கிட்ட இந்த பாட்டில் மட்டும்தான் இருக்கு. அதை வீணாக்கிடக் கூடாது” என்றவண்ணம் அந்த பாட்டிலை பத்திரமாக லாபில் இருக்கும் பீரோவில் எடுத்து வைத்தாள்.
தோளைக் குலுக்கியபடி தனது வேலையைத் தொடர்ந்தான் சஷ்டி.
மீராவை சந்திக்க யாரோ ஒருவர் வந்திருப்பதாக சொல்ல யாராயிருக்கும் என்று வியந்தாள் மீரா.
“குட் மார்னிங் மீரா” என்ற அந்த நபரை சந்தித்த நினைவே இல்லை மீராவிற்கு.
“நீங்க”
“நான் தீபக்… உங்களுக்கு ரொம்ப அவசரமா ஒரு பெர்ஃப்யூமர் தேவைன்னு சொன்னாங்க. அதனால உங்களை சந்திக்க வந்தேன்”
வியந்தபடி “யார் சொன்னாங்க”
“உங்க வருங்காலக் கணவர் மிஸ்டர் கண்ணன். அவர்தான் உங்களுக்கு சரியான ஆள் கிடைக்காம வேலைங்க எல்லாம் பாதில நிக்குறதா வருத்தபட்டார். நான் பாங்களூரில் வேலை பாக்குறேன். இங்க விடுமுறைக்கு வந்திருந்தேன். அப்ப உடனடியா காண்டாக்ட் பண்ணி உங்களைத் தொடர்பு கொள்ள சொல்லி ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணார்”
“மீரா சார்கிட்ட பேசிட்டு சொல்லுங்க. நான் ஒரு வாக்கிங் போயிட்டு வரேன்” என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் சஷ்டி.
“ஓ சாரி தீபக் உங்க ஹாலிடேல தொந்திரவு பண்ணதுக்கு அப்பாலஜிஸ்… எங்களுக்கு பெர்ஃப்யூமர் இருக்கார். இன்னும் சில மாதங்கள் கழித்துதான் தேவைப்படும். நீங்க உங்க காண்டாக்ட் டீடெயில்ஸ் தந்தால் உங்களுக்கு விவரங்களை அனுப்பி வைக்கிறேன்”
“நிஜமாகவா… உங்க வருங்காலக் கணவர் அப்படி சொல்லலையே”
வருங்காலக் கணவரா பல்லைக் கடித்தாள் மீரா. “ஒரு கரெக்ஷன் கண்ணன் எனக்கு தெரிஞ்சவர். அவ்வளவுதான் அப்படியே குறிப்பிடுவதைத்தான் நானும் விரும்புறேன்”
“ஐ ஆம் சாரி மிஸ்.மீரா. நான் இனி அப்படியே குறிப்பிடுறேன்”
“வேற என்ன சொன்னார்”
“இரண்டு மடங்கு சம்பளம் தர்ரேன்னு பிராமிஸ் பண்ணிருந்தார்”
கண்ணனின் அதிகப் பிரசங்கித்தனத்தை மீரா ரசிக்கவில்லை என்பதை அவளது முகமே காட்டியது. குமரேசனுக்கும் அது சங்கடத்தைத் தர
“அங்கிள் இவருக்கு டீ போட்டு அனுப்புறேன்” என்றாள் மீரா. அவளது கண்களோ தூரத்தில் நடந்து சென்று புள்ளியாய் மறைந்துக் கொண்டிருக்கும் சஷ்டியின் மீதே நிலை பெற்றிருந்தது.
அவளது கண்கள் சென்ற திசையைக் கண்ட குமரேசன். “மீரா அந்த கான்பரென்ஸ் காலை கண்டினியூ பண்ணு. நான் தீபக் கிட்ட பேசுறேன்” என்று விடுவித்ததும் பெரிய நிம்மதி ஏற்பட்டது.
காற்றைக் கட்டி வைத்தால் எப்படி வேகத்தோடு வெளிவர முயலுமோ அத்தனை வேகத்தோடு சஷ்டியும் அந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடத் துடித்தான். கோவமாய் தரையில் கிடந்த கோக் கேன் ஒன்றினை ஓங்கி உதைத்தான். பின்னர் அது சென்ற திசை எல்லாம் உதைத்துக் கொண்டே நடந்தான்.
சுயமரியாதையை இழந்து எதற்காக இந்த மீராவின் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் சாப்பிடப் பிடிப்பதில்லை, தூங்க முடிவதில்லை. அதையும் மீறித் தூங்கினால் கனவில் மீரா தங்கச் சிலையாக வந்து நிற்கிறாள். அதுவும் அவனது ஊர் பாணியில் பின் கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு.
முதன் முறையாக கலர் கலராய் அவன் மனதில் கனவுகள். கண்விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமாய் மாற்றியது அவளது எதிர்காலக் கணவன் என்னும் ஒரு சொல்.
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட அதற்காய் விடக் கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை…
“க்கும்… “ யாரோ தொண்டையைச் செருமிய ஓசையில் யோசனை களைந்து திரும்பிப் பார்த்தான் சஷ்டி.
“இங்கென்ன யாரோ சோககீதம் பாடுற சத்தம் கேட்டது” வெளுத்துப் போயிருந்தவனின் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள்.
“ஏன் நான்தான் பாட்டுப் பாடுனேன்… ஆமாம், உனக்குத்தான் வேற பெர்ஃப்யூமர் கிடைச்சாச்சே… நான் நாளைக்கே ஊருக்குக் கிளம்புறேன்”
“கிடைச்சாச்சு நீங்க வேண்டாம்னு நான் சொன்னேனா”
“நீ சொன்னா என்ன இல்லை உன் வருங்கால கணவன் சொன்னா என்ன? அது வேற அந்தக் கண்ணனுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது”
“வருங்காலக் கணவன்னு நான் சொன்னேனா… “
“அந்த பெர்ஃப்யூமர் சொன்னானே… பிங்கு கூட ஒரு தடவை சொல்லிருக்கான்”
“கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு நான் சொன்னேனா அவன்தான் என் வருங்காலக் கணவன்னு. அவங்களே ஏதாவது முடிவு செஞ்சா நான் எப்படி பொறுப்பாக முடியும் சொல்லு”
“என்ன சொல்ற? உங்க வீட்டில் சொன்னா எப்படி மாட்டேன்னு சொல்லுவ? பெத்தவங்க சொல்றதைத் தட்டலாமா? அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்”
“சஷ்டி இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல… நீ எப்படியெல்லாம் அடங்காப்பிடாரியா இருந்த, மெடிஸின் படிக்கிற குரூப் எடுத்துட்டு வீட்டை ஏமாத்தி பாட்டினி சேர்ந்தேன்னு உங்கப்பா ஏற்கனவே புட்டு புட்டு வச்சுட்டார். பெத்தவங்க சொல்லைத் தட்டுறதைப் பத்திப் பேசுறதுக்கு முன்னாடி இதெல்லாம் நீ மனசுக்குள்ள ரீவைண்ட் பண்ணிப்பாரு”
“டாபிக் இப்ப நான் இல்லை. நீதான். நீ உங்கம்மா சொல்றவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்”
“வேண்டாம்னு சொல்ற உரிமை எனக்கும் இருக்கு”
“அப்ப வேண்டாம்னு சொல்லப் போறியா”
“நான் கண்ணனை வேண்டாம்னு சொன்னா உனக்கேன் முகம் பளிச்சுன்னு ஆகுது?”
“வந்து… கண்ணன் உனக்கு செட் ஆக மாட்டான் மீரா. சில தடவை அவனை சந்திச்சிருக்கேன். எங்க சந்திப்பு அந்த அளவு சுமூகமா இல்லை. என்னைக் காட்டான் காட்டான்னு தான் கூப்பிடுவான். ஒரு நாள் குமரேசன் சார் அவனை கண்டிச்சார்.அதிலிருந்து அவனுக்கு என்னைப் பிடிக்காது. அதுமட்டுமில்லாம என்னோட கணிப்பு கண்ணன் கொஞ்சம் பணம், பதவி ஆசை இருக்கவன்”
“எல்லாத்தையும் விடு… அதுமட்டும்தான் காரணமா”
“அதுதான் மீரா”
“அப்பறம் ஏன் தருகின்ற பொருளாய் காதல் இல்லைன்னு பாடிட்டு உக்கார்ந்திருந்த?”
“வந்து… எனக்கு வாயில் வந்த சோகப் பாட்டைப் பாடினேன். அதுக்கெல்லாம் பெருசா மீனிங்க் இல்லை”
“இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாரு சஷ்டி” என்ற மீராவின் கொஞ்சல் குரலில் இளகிய சஷ்டி.
“மீரா இப்படி பேசாதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இப்போதைக்கு நம்ம செய்ய வேண்டிய வேலையை மட்டும் கான்சென்டிரேட் பண்ணலாமா?”
இந்த மரமண்டைக்கு காதலை என்கிட்ட சொல்ல தைரியம் வர மாதிரி புதுசா ஒரு பெர்ஃப்யூம் கண்டுபிடிக்கணும். புன்னகைத்தபடியே “நீ சொன்னா சரி செல்லம்” என்றாள் மீரா.
அதே சமயத்தில் மீராவின் அலமாரியைத் திறந்த பிங்கு அவள் உயிரிலும் மேலாகப் பாதுகாத்து வைத்திருந்த செண்ட்டு பாட்டிலை மாற்றி, அச்சு அசலாக அதே போலிருந்த போலி பாட்டிலை அந்த இடத்தில் வைத்தான்.
வியர்க்க விறுவிறுக்க வண்டியை எடுத்துக்கொண்டு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த தீபக்கிடம் அந்த பாட்டிலை சேர்த்தான்.
பிங்குவின் மனசாட்சியின் குத்தலை சமாளிக்க
“இது நடந்தால்தான் மீராக்கா எங்க கண்ணன் அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்குவாங்க. இந்த சஷ்டி வேற மீராவுக்கு ரூட்டு விடுறான். மீரா வேற அவனைப் பாக்குற பார்வையே வேற மாதிரி மாறிட்டு இருக்கு.
இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சீக்கிரம் பிரியுறாங்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. இந்த போலி பாட்டிலை மாத்தி வச்சாதால தப்பான ப்ராடக்ட்ட கண்டுபிடிப்பாங்க. அதனால மீராக்கா தோத்து போவாங்க. சஷ்டியை விட்டு விலகிடுவாங்க” என்று சொல்லிக் கொண்டான்.